நிம்மதி தரும் நிதித் திட்டம் - 19 - வேலை To சேவை... ஏழு வருடங்களில் எவ்வளவு சேர்க்க வேண்டும்?

ஓவியம்: பாரதிராஜா
அடுத்த ஐந்து வருடங்களில் சொந்த வீடு வாங்க வேண்டும், அடுத்த இரண்டு வருடங்களில் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்றெல்லாம் தங்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கான நிதித் திட்டமிடல் குறித்துக் கேட்டு வருகிறவர்களை நாம் நிறையவே பார்த்திருக்கிறோம்.
இவர்களுக்கு மத்தியில், “நான் அடுத்த ஏழு ஆண்டுகளில் பொதுச் சேவை செய்யத் தொடங்க வேண்டும்; அதுதான் என் லட்சியம். எனவே, இதற்குள் என் குடும்பத்துக்குத் தேவையான பணத்தைச் சம்பாதிக்கும் வழிகளைச் சொல்லுங்கள்’’ என்றார் தருண்குமார். இனி அவர் சொல்வதைக் கேட்போம்.

“எனக்குச் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் சித்தோடு. என் வயது 38. நான் கடந்த நான்கு ஆண்டுகளாக நாணயம் விகடன் படித்து வருகிறேன். நாணயம் விகடன் மூலமாகத்தான் வங்கி அல்லாத முதலீடுகள் பற்றித் தெரிந்து கொண்டேன். அதற்கு என் நன்றி.
எனக்குத் திருமணமாகிவிட்டது. இன்னும் குழந்தைகள் இல்லை. நான் சொந்த வீட்டில் குடியிருப்பதால், வாடகைப் பிரச்னை இல்லை. நான் பொதுச் சேவை அமைப்பு ஒன்றில் தன்னார்வத்துடன் ஈடுபட்டு வருகிறேன். தற்போது வேலை பார்த்துக் கொண்டிருப்பதால், சேவைக்காக அதிக நேரம் ஒதுக்க இயலவில்லை. குடும்பத்தின் எதிர்காலத்துக்கு மொத்தமாகப் பணம் சேர்த்து வைத்துவிட்டு, அதிகபட்சமாக அடுத்த ஏழு வருடங்களில் முழு நேரமாகச் சேவையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளேன். எனவே, அடுத்த ஏழு வருடங்களில் என் பணியை ராஜினாமா செய்யவிருக்கிறேன். அதன்பிறகு, எனக்குச் சம்பளம் எதுவும் கிடைக்காது.

எனவே, எனக்கு அடுத்த ஏழு வருடங்களில் என் குடும்பத்துக்குத் தேவையான ரூ.25 லட்சத்தைச் சேர்க்க வேண்டும். இதற்காக நான் எந்த வகையில் முதலீடு செய்தால், இந்த இலக்கை எட்ட முடியும் என்பதுதான் என் கேள்வி. அடுத்த இரண்டு மாதங்களில் என் மனைவி ஜெராக்ஸ் கடை ஒன்றைத் தொடங்கவிருக்கிறார். அதன் மூலமான வருமானமும், நான் சேர்த்துத் தரும் ரூ.25 லட்சம் தொகை மூலம் கிடைக்கும் வருமானமும் என் குடும்பத்தை நடத்த உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
2017 இறுதிக்குள் நான் இப்போது வேலை பார்த்து வரும் நிறுவனத்தின் மூலம் ரூ.50,000 ஊக்கத்தொகை கிடைக்கும். இதையும் என் எதிர்காலத் தேவைக்காக முதலீடு செய்ய உள்ளேன். தற்போது வங்கி டெபாசிட்டாக ரூ.1.25 லட்சம் உள்ளது. இதனை அவசரத் தேவைக்காக வைத்துள்ளேன்.
என் மைத்துனர் பிசினஸ் செய்வதற்கு ரூ.5 லட்சம் வரை கடன் தந்துள்ளேன். இந்தத் தொகையை 2018-ல் ரூ.1 லட்சம், 2019-ல் ரூ.1.5 லட்சம், 2020-ல் ரூ.1.5 லட்சம், 2021-ல் ரூ.1 லட்சம் எனத் திரும்பக் கொடுத்துவிடுவார்.
நான் மூன்று இன்ஷூரன்ஸ் பாலிசிகள் எடுத்துள்ளேன். எனக்கு நல்ல ஒரு முதலீட்டு ஆலோசனையைத் தந்து, பொதுச் சேவை செய்ய நினைக்கும் என் கனவை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றவர், தன் வரவு செலவு மற்றும் முதலீட்டு, காப்பீட்டு விவரங்களை மெயிலில் அனுப்பி வைத்தார்.
வரவு செலவு விவரங்கள்
மாத வருமானம் : ரூ.23,500
வீட்டுச் செலவு : ரூ.13,700
இன்ஷூரன்ஸ் பிரீமியம் : ரூ.1,800
ஹெல்த் பாலிசி பிரீமியம் : ரூ.1,000
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு : ரூ.3,000
மொத்தம் : ரூ.19,500
மீதம் : ரூ.4,000
இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.
‘‘தன் வீடு, தன் குடும்பம் எனச் சுயநலத்துடன் சிந்திக்கும் மக்கள் பெருகிவிட்ட இந்த உலகில், பொதுச் சேவை அமைப்பில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்கிற உங்கள் எண்ணம் பாராட்டுக் குரியது. ஆனால், இன்றைய பொருளாதாரச் சூழலில் விலைவாசி உயர்வு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இந்தக் குறுகிய காலத்துக்குள் பணம் சேர்த்துவிட்டு, ஓய்வுபெறுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்துக்குத் தேவையான தொகையைச் சேர்த்து விட்டு, சேவையில் முழுநேரமாக ஈடுபடுகிற அளவுக்கு உங்கள் வருமானம் கைகொடுக்காது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
இதற்காக பொதுச் சேவையில் ஈடுபட வேண்டும் என்கிற எண்ணத்தை நீங்கள் மாற்றிக்கொள்ளத் வேண்டியதில்லை. உங்கள் இலக்கு நிறைவேற இன்னொரு வழி இருக்கிறது. அதற்கு உங்களுடைய கூடுதல் உழைப்பும், சிரத்தையும் தேவையாக இருக்கும்.

கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் உங்களுக்குப் புரியும். தற்போது குடும்பச் செலவு களுக்கு ரூ.13,000 ஆவதாகக் குறிப்பிட்டிருக் கிறீர்கள். அப்படியானால் அடுத்த ஏழு ஆண்டு களில், உங்களின் 44-வது வயதில் நீங்கள் ஓய்வு பெறும்போது, குடும்பச் செலவுகளுக்கு ரூ.21,000 தேவையாக இருக்கும். அதற்கு நீங்கள் ரூ.42.5 லட்சம் சேர்க்க வேண்டும்.
உங்கள் பி.எஃப் மூலம் ரூ.7.3 லட்சம் கிடைக்கும். தற்போது செய்துவரும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் ரூ.3.9 லட்சம் வரை கிடைக்கலாம். தவிர, நீங்கள் உங்கள் மைத்துனருக்குத் தந்துள்ள கடனைப் படிப்படி யாகத் திரும்ப வாங்கி, அதை முதலீடு செய்வதன் மூலம் ரூ.7.8 லட்சம் கிடைக்கக்கூடும். இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் ரூ.3.6 லட்சம் கிடைக்கும். ஆகமொத்தம், ரூ.22.6 லட்சம் கிடைக்க வாய்ப்புண்டு. இவை போக இன்னும் ரூ.20 லட்சம் சேர்க்க வேண்டும். அடுத்த ஏழு வருடங்களில் ரூ.20 லட்சம் சேர்க்க வேண்டு மானால் மாதம் ரூ.15,300 முதலீடு செய்ய வேண்டும்.
உங்கள் மனைவி ஜெராக்ஸ் கடை வைக்க உள்ளதாகச் சொல்லியுள்ளீர்கள். கடையில் மாதம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என இப்போதே கணிக்க இயலாது. ஆனாலும், மாதம் ரூ.11 ஆயிரத்துக்கு மேல் வருமானம் கிடைக்கக் கூடிய வகையில், உங்கள் ஓய்வு நேரங்களில் உங்கள் மனைவிக்கு உதவியாக இருந்து திட்டமிட்டு உழைக்க வேண்டும்.
கடையின் மூலம் வரும் வருமானம் மற்றும் உங்கள் சம்பளத்தில் மீதமாகும் தொகை ரூ.4,000 எனச் சேர்த்து மாதம் ரூ.15,300 முதலீடு செய்தீர்கள் என்றால்தான் ரூ.20 லட்சம் சேர்க்க முடியும். உடனடியாக இல்லாவிட்டாலும், ஏழு அல்லது எட்டு மாதங்களுக்குள் கடை வருமானத்தை அதிகரிக்க நீங்கள் வழிவகை செய்ய வேண்டும்.
தற்போது அவசரத் தேவைக்காக ரூ.1.5 லட்சம் வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இதை அடுத்த ஏழு வருடங்களுக்குள் ரூ.5 லட்சமாக அதிகரிக்க முயற்சி எடுக்க வேண்டும். உங்களுக்குக் கிடைக்கும் ஊக்கத் தொகை மற்றும் போனஸ் போன்றவைகளை அவசர கால நிதியாகச் சேர்த்து வாருங்கள்.
நீங்கள் வைத்துள்ள இன்னொரு இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் கிடைக்கும் தொகையை ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்தப் பயன்படுத்திக் கொள்ளவும்.
பொதுச் சேவை செய்ய நீங்கள் செல்லும் நிலையில், பணம் குறித்த சிந்தனை உங்களுக்கு இருந்தால் தொந்தரவாக இருக்கும். எனவே, குடும்பத்துக்குத் தேவையான விஷயங்களை ஓரளவு நிறைவேற்றி வைத்துவிடுவதுதான் நீங்கள் நிம்மதியாக சேவை செய்ய உதவியாக இருக்கும்.
பரிந்துரை : ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் -ரூ.2,000, டி.எஸ்.பி. பி.ஆர் ஸ்மால் அண்டு மிட்கேப் -ரூ.2,000. தற்போது இந்த முதலீட்டைத் தொடங்கவும். கடையில் வருமானம் வர ஆரம்பித்ததும் முதலீட்டு ஆலோசகரின் உதவி யுடன் முதலீட்டை அதிகரித்துக்கொள்ளவும்.”
குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்கு மானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.
Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878
- கா.முத்துசூரியா
