நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

தொழில் செய்ய ஏற்றச் சூழல்: முன்னேறும் இந்தியா!

தொழில் செய்ய ஏற்றச் சூழல்: முன்னேறும் இந்தியா!
பிரீமியம் ஸ்டோரி
News
தொழில் செய்ய ஏற்றச் சூழல்: முன்னேறும் இந்தியா!

தொழில் செய்ய ஏற்றச் சூழல்: முன்னேறும் இந்தியா!

தொழில் செய்ய ஏற்றச் சூழல் குறித்த பட்டியலில் இந்தியா 130-வது இடத்திலிருந்து 100-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. ஒரே ஆண்டில் 30 இடத்தில் இந்தியா முன்னேறியிருப்பது ஆச்சர்யமே. எப்படி இது சாத்தியமானது?    

தொழில் செய்ய ஏற்றச் சூழல்: முன்னேறும் இந்தியா!

பத்துக் காரணிகள்

‘தொழில் செய்ய ஏற்றச் சூழல்’ குறித்த  பட்டியல் பத்துக் காரணிகளின் அடிப்படையில் எடுக்கப்படுவது. மொத்தம் 190 நாடுகளிலிருந்து முக்கிய நகரங்களை எடுத்துக்கொண்டு, இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டிருக்கிறது. நம் நாட்டில் டெல்லி, மும்பை ஆகிய  நகரங்களில் பத்துக் காரணிகள் எப்படியிருக்கின்றன என ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்தப் பத்துக் காரணிகளில் மின்சார வசதி, கடன் கிடைப்பது மற்றும் சிறு முதலீட்டாளர்களின் பாதுகாப்பு ஆகிய மூன்று காரணிகளில் நம் நாடு குறிப்பிட்ட அளவு புள்ளிகளைப் பெற்று, 100-வது இடத்துக்கு முன்னேற மிகவும் உதவியாக இருந்திருக்கிறது. ஆனால், மற்ற காரணிகளில் நம் நாடு இன்னும் பின்தங்கியே இருக்கிறது.

அரசு செய்தது என்ன?


மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்துள்ளதைத் தொடர்ந்தே இந்த மாற்றங்களும் முன்னேற்றங் களும் நடந்துள்ளன. திவால் சட்டம், சரக்கு மற்றும் பொருள் வரி, பணமதிப்பிழப்பு, ரெரா ரியல் எஸ்டேட் சட்டம், வாராக் கடன்களை மீட்பதில் தீவிர நடவடிக்கை எனப் பல முக்கியமான சீர்திருத்தங்கள் கடந்த சில ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

கடன் மீட்புத் தீர்ப்பாயம் மூலமாக வாராக் கடன் 28% குறைக்கப்பட்டிருக்கிறது. பெரிய கடன் களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. கடன் மீட்பு நடவடிக்கைகளையும் வேகமாகச் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரிக் கணக்கு மற்றும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது ஆன்லைன் மூலம் எளிமையாக்கப்பட்டிருக்கிறது. மேலும், பான் எண், வரி எண் போன்றவற்றை ஆன்லைன் மூலம் எளிதில் கிடைக்கும்படியான வசதியை ஏற்படுத்தி, தொழில் தொடங்குவது எளிமையாக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான நடைமுறைகளை எளிமையாக்கப்பட்டிருக்கிறது. துறைமுகங்களில் நேரத்தையும், செலவையும் குறைப்பதற்காக எலெக்ட்ரானிக், மொபைல் தளங்கள் மூலம் செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.  

தொழில் செய்ய ஏற்றச் சூழல்: முன்னேறும் இந்தியா!

முன்னேற வேண்டிய விஷயங்கள்

பிசினஸ் தொடங்குவதில் இன்னும் நாம் உலக அரங்கில் 156-வது இடத்தில் இருக்கிறோம். தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியமான கட்டுமான அனுமதி பெறுவதில் 181-வது இடத்திலும், சொத்துப்பதிவு செய்வதில் 154-வது இடத்திலும் இருக்கிறோம். வரி செலுத்துதல் நடைமுறைகளில் 119-வது இடத்திலும், ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதில் 164-வது இடத்திலும், திவால் பிரச்னைகளைச் சரிசெய்வதில் 103-வது இடத்திலும் இந்தியா உள்ளது. தொழில் செய்ய ஏற்றச் சூழல் குறித்த பட்டியலில் நம் நாடு, 30 இடங்களைக் கடந்து முன்னேறியிருப்பது குறித்து இந்தியத் தொழில் சம்மேளனத்தின் தமிழகப் பிரிவின் தலைவர் ரவிசந்திரன் புருஷோத்தமனிடம் கேட்டோம்.

பாசிட்டிவான விஷயம்


‘‘இது நம் நாட்டுக்கு பாசிட்டிவான விஷயம். இதனால் முதலீடுகள் அதிகரிக்கும். புதிய தொழில்கள் வளரும். ஸ்டார்ட் அப் தொழில்கள் விரைவில் தொடங்கப்படும். நம் நாட்டில் தொழில் தொடங்கி, அதைத் தொடர்ந்து செய்வதில் பல்வேறு சவால்கள் இருந்துவருகின்றன.அரசு எடுத்துவரும் சீர்திருத்தங்கள் மூலம் அந்தச் சவால்களை நம்மால் எதிர்கொள்ள முடிகிறது. அரசு எடுத்துவந்த சீர்திருத்தங்கள் அனைத்துமே மிக முக்கியமானவை, அவசியமானவையும்கூட.

சீர்திருத்தங்கள் அனைத்துமே பழைய விஷயங்களைப் பாதிக்கவே செய்யும். அந்தப் பாதிப்புகளிலிருந்து வெளிவர சில காலம் ஆகலாம். இந்தச் சீர்திருத்தங்கள் இப்போது டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் மாற்றத்தை             ஏற்படுத்தியதுபோலவே, நாடு முழுவதும் மாற்றங்கள் நடக்கும். அதற்கு அந்தந்த மாநில அரசுகள், உள்ளூர் அமைப்புகள் ஒத்துழைக்க வேண்டும். ஏனெனில், உலக வங்கி சொல்லும் இந்தப் பத்துக் காரணிகளும் மாநில மற்றும் உள்ளூர் நிர்வாக அமைப்புகளின் கைகளில்தான் உள்ளன. மத்திய அரசு நிறையவே செய்துவருகிறது. அதற்கு நாம் ஒத்துழைப்பு தரவேண்டும்’’ என்றார்.

நடைமுறைச் சிக்கல்களைச் சரிசெய்ய வேண்டும்

இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மஹாவீர்சந்த் துகருடன் பேசினோம். 

‘‘இந்த முன்னேற்றம் பாராட்டத்தக்கது. அரசின் பல்வேறு நடவடிக்கைகள்தான் இதற்குக் காரணம். ஆனாலும், புதிய சீர்திருத்தங்கள், நடைமுறைகளால் பல ஆயிரம் தொழில்களும், தொழில்முனைவோர்களும் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். அரசு தன்னுடைய சீர்திருத்தங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும். தொழில் வளர்ச்சிக்கேற்ப சீர்திருத்தங்களில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். நடைமுறைச் சிக்கல் களைச் சரிசெய்ய வேண்டும். புதிய நடைமுறை களைப் பற்றி தொழில்முனைவோர்களுக்குப் புரியவைக்க வேண்டும்’’ என்றார்.

ஆனால், சிறு, குறு நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் இந்த மாற்றம் பற்றிய கருத்தை அறிய கோவை சிறு, குறு தொழில் முனைவோர்கள் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸுடன் பேசினோம். 

தொழில் செய்ய ஏற்றச் சூழல்: முன்னேறும் இந்தியா!

இது நிஜமல்ல

‘‘உலக வங்கியின் கணக்கீடுகள் எதுவுமே நம் ஒட்டுமொத்த நாட்டின் நிலையைப் பிரதிபலிப்பதல்ல.  டெல்லி, மும்பை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களும் அரசுத் தரப்பிலிருந்து பெறப்பட்டுள்ளன.  இந்த இரு நகரங்களைத் தாண்டி இரண்டாம் மற்றும் மூன்றாம் நகரங் களுக்கு வந்து பார்த்தால்தான் உண்மை நிலை புரியும். இன்றைக்கு இந்தியா முழுக்க சிறு, குறு தொழில்கள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. நமது                       பொருளாதாரத்தின் முதுகெலும்பே சிறு, குறு தொழில்கள்தான். அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுக்காமல், நம் நாடு எப்படி முன்னேறும்? தொழில் செய்ய ஏற்றதாக நம்நாடு இருக்கிறது என உலக வங்கி சொல்வது நிஜமல்ல. அது, பத்து பன்னாட்டு நிறுவனங்களுக்கே பொருந்தும்’’ என்றார்.

வளர்ச்சி குறைந்துள்ளது

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியர் ஜோதி சிவஞானத்துடன் பேசினோம். ‘‘தொழில் செய்ய ஏற்றச் சூழல் எங்கிருக்கிறது என்பதை உலக வங்கி ஆய்வு செய்து வெளியிடுவது எதற்காகவெனில், முதலீடு செய்வதற்கான இடம் எது என்பதை எடுத்துச் சொல்லத்தான். ஆனால், இப்போது வந்து பட்டியலின்படி பார்த்தால், எவ்வளவு வெளிநாட்டு முதலீடு நம் நாட்டுக்குள் வந்திருக்கிறது? சொல்லப்போனால் நம் ஜி.டி.பி 5.7 சதவிகிதமாகக் குறைந்துள்ளது’’ என்றார். 

இதுபற்றி சில விமர்சனங்கள் இருந்தாலும், தற்போது மும்பை, டெல்லியில் நடந்திருக்கும் மாற்றங்கள் இனி நம் நாட்டின் அனைத்து நகரங்களிலும் வரும். அப்போது தொழில் செய்ய ஏற்றச் சூழலில் நம் நாடு 50-வது இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்ப்போமாக!

- ஜெ.சரவணன்

தொழில் செய்ய ஏற்றச் சூழல்: முன்னேறும் இந்தியா!

தொழில் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் ஒற்றைச் சாளர முறை!

மிழகத்தில் தொழில் வளர்ச்சியைத் துரிதப்படுதற்காக ஒற்றைச் சாளர (Single Window System) முறை கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதற்கான இணையதளத்தை நவம்பர் 2-ல் தொடங்கி வைத்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. இது குறித்து இந்தியத் தொழில் நிறுவனங்களின் சம்மேளத்தின் தமிழகப் பிரிவின் துணைத் தலைவர் எம்.பொன்னுசாமியுடன் பேசினோம்.

“தமிழ்நாட்டில் சிங்கிள் விண்டோ சிஸ்டத்தை ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி இருந்தாலும், அது, நடைமுறையில் அவ்வளவாக இல்லாமலேயே இருந்தது. தற்போது ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் உள்ளதைவிட சிறப்பான ‘சிங்கிள் விண்டோ சிஸ்ட’த்தை வடிவமைத்திருக்கிறது தமிழக அரசின் தொழில் துறை. இதன் மூலம் தொழில்முனைவோர்கள் திட்ட அனுமதி, தொழிலாளர் துறை, நிறுவன ஆய்வு, மாசுக் கட்டுப்பாட்டு பிரிவின் அனுமதி போன்றவற்றுக்காக நாள் கணக்கில் அலைய வேண்டிய தில்லை. விண்ணப்பித்த ஐந்து நாள்களுக்குள் துறை சார்ந்த சந்தேகமோ அல்லது கூடுதல் விளக்கமோ, தகவலோ தேவைப்பட்டால், அதைத் தெரிவிக்க வேண்டும். கூடுதல் தகவல் கேட்டு, அதற்குரிய விளக்கம் கொடுத்த 14 நாள்களில் அனுமதி வழங்க வேண்டும். எந்த விளக்கமும் அரசுத் தரப்பில் கேட்கவில்லை என்றால் 14-வது நாள் அனுமதி கிடைத்தாக எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் இனி தமிழ்நாட்டில் நிறைய முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க முன்வருவார்கள்” என்றார் பொன்னுசாமி. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான இந்த நடவடிக்கையை எடுத்ததற்காகத் தமிழக அரசைப் பாராட்டுவோம்!