
ஐ.பி ஓ - வில் முதலீடு செய்வது எப்படி?
அண்மைக் காலத்தில் ஏகப்பட்ட புதிய பங்கு வெளியீடுகள் (ஐ.பி.ஓ-கள்) வெளிவந்து கொண்டிருக்கின்றன. அனைவரும் அதிக ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகிறார்கள். சந்தை தொடர் ஏற்றத்தில் இருப்பதால், புதிய வெளியீடுகளும் நல்ல லாபம் தந்து வருகின்றன. பல பங்குகள் பட்டியலிடப்பட்ட அன்றே 50 சதவிகிதத்துக்குமேல்கூட விலை உயர்ந்திருக்கின்றன.
இந்த நிலையில், பலரும் ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அவர்களுக்கான வழிகாட்டல் இதோ...

2016 ஜனவரி 1-க்குப் பிறகு, ஐ.பி.ஓ-க்கு விண்ணப்பம் செய்பவர்கள் அஸ்பா (ASBA - Application Supported by Blocked Amount) முறையைப் பின்பற்றுவது அவசியமாகும். இம்முறையில், ஐ.பி.ஓ-வுக்கு விண்ணப்பம் செய்யும் தொகை உங்களின் வங்கிக் கணக்கில் ‘லாக்’ செய்யப் பட்டிருக்கும். ஐ.பி.ஓ-வில் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே, பணம் கணக்கிலிருந்து எடுக்கப்படும்.
அஸ்பா முறையில் விண்ணப்பிக்க, நீங்கள் ஷேர் டிரேடிங் கணக்கில் எந்த வங்கி கணக்கை இணைத்திருக்கிறீர்களோ, அதன் காசோலையை விண்ணப்பித்துடன் இணைத்துக் கொடுக்க வேண்டும். ஆன்லைன் மூலமும் அஸ்பா முறையில் விண்ணப்பிக்க முடியும். இதற்கு ஷேர் டிரேடிங் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் உங்கள் வங்கிக் கணக்கின் ஆன்லைன் பேங்கிங் மூலம் விண்ணப்பிக்கலாம். Invest online என்கிற பகுதியில் e - IPO என்று இருப்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
உங்கள் பெயர், பான் எண், டீமேட் கணக்கு எண், எத்தனை பங்குகளுக்கு விண்ணப்பம் செய்கிறீர்கள் என்பது போன்ற விவரங்களைக் கொடுக்க வேண்டும். ஐ.பி.ஓ-வில் விண்ணப்பிக்க சுமார் ரூ.15,000 தேவைப்படும். ஐ.பி.ஓ வரும் நிறுவனமே குறைந்தபட்சம் எத்தனைப் பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கும்.
பங்கு வெளியீட்டுக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதைப் பொறுத்து, பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும். மிக அதிகம் பேர் விண்ணப்பித்திருந்தால், பங்கு ஒதுக்கீடு கிடைக்காமல் போகலாம் அல்லது குறைந்த எண்ணிக்கையில் பங்குகள் ஒதுக்கப்படலாம்.
- சேனா சரவணன்