
நாணயம் புக் செல்ஃப்
புத்தகத்தின் பெயர்: ஆன் ஃபயர் (On Fire)
ஆசிரியர் : ஜான் ஓ லேரி (John O’Leary)
பதிப்பாளர்: North Star Way

இந்த வாரம் நாம் பார்க்கப் போகும் புத்தகம் கொஞ்சம் வித்தியாசமானது. ‘ஆன் ஃபயர்’ என்கிற புத்தகத்தை எழுதிய ஜான் ஓ லேரிக்கு ஒன்பது வயதில், அவருடைய வீட்டில் நடந்த தீ விபத்தில் கடும் தீக்காயம் ஏற்பட்டதாம். அவருக்கு மருத்துவ சிகிச்சை செய்த டாக்டர்கள், இவர் பிழைக்க மாட்டார் என்று கைவிட்டுவிட்டனர். சில நம்பிக்கை மிகுந்த நபர்களின் அனுசரணையால் ஐந்து மாதங்கள் மருத்துவமனையில் போராடி மீண்டுவந்தார். அதற்குப் பின்னால் தீப்புண்களிலிருந்து மீண்டுவருவதற்கான புனர்வாழ்வு பயிற்சிகளை (rehabilitation) மேற்கொண்டு, பின்னர் உடலைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்து, தானே நடந்து செல்லப் பழகி, பல்வேறு படிநிலைகளைக் கடந்து, சாதாரண மனிதரைப்போல் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கிய தன் நிஜ அனுபவங்களை சுட்டெரிக்கிற மாதிரி சொல்லியிருக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் ஜான்.
வாழ்க்கையில் நம்மைத் தேடிவரும் பெரும் துயரங்களிலிருந்து மனம் தளராமல் மீள்வது எப்படி, எது இதைச் சாத்தியமாக்குகிறது, சிலர் சின்னச் சின்ன தோல்விகளுக்கும் துயரங்களுக்குமே துவண்டு போகும்போது இப்படிப் பெரும் துயர்கள் தாக்கிய பின்னரும் தன்னம்பிக்கையுடன் வாழ்வதும் மீள்வதும் எப்படி, ‘இனி இவர் தாங்க மாட்டார்’ என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்ட ஜான், இன்றைக்கு மனிதர்களுக்கு வெற்றிகரமாக வாழ்வது எப்படி என்று பயிற்சியளிக்கும் பயிற்சியாளராக இருக்கிறார். ‘‘உங்களுடைய வாழ்க்கைப் பயணத்துக்கான பாதையை உங்களால் தேர்வு செய்ய முடியாது. ஏனென்றால், அது பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், அந்தப் பாதையில் எந்த மாதிரியான பயணத்தை மேற்கொள்ளப்போகிறீர்கள் என்பதை நீங்கள் மட்டுமே முடிவு செய்ய முடியும்’’ என்று ஆரம்பிக்கிறார் ஜான்.
ஹாங்காங்கில் ஒரு கூட்டத்தில், தன்னுடைய போராட்டமான வாழ்க்கையை வென்றெடுத்தது எப்படி என்று பேசிமுடித்த பின்னர், அதில் பங்கேற்ற ஒருவர், ‘‘ஜான்... உங்களுடைய ஒன்பது வயதில் தீ விபத்து நடந்த நேரத்துக்கு நீங்கள் மீண்டும் திரும்பச் செல்ல முடிந்தால், பேசாமல் மரணமடைந்துவிடலாம் என்று நினைப்பீர்களா அல்லது இதே மாதிரி வாழ்வதற்காகப் போராடி வெல்லலாம் என நினைப்பீர்களா?’ என்று கேட்டாராம். சற்றும் சிந்திக்காமல், ‘‘போராடி வாழலாம் என்றே நினைப்பேன்’’ என்றாராம் ஜான்.
‘‘என்ன ஜான் இது? 100% தீக்காயம் ஏற்பட்டு, உயிர்பிழைத்து மீண்டு வந்து, அல்லல் பல கடந்து (தீக்காயங்கள் ஆறினாலும் ஆங்காங்கே வெளிப்படையாக விகாரமாக தெரிகிறது, கைவிரல்கள் அறுவை சிகிச்சையால் நீக்கப்பட்டுள்ளன, என்னதான் இருந்தாலும் தீக்காயம்பட்டு தேறியவர்களைத் தோற்றம் காரணமாக மற்றவர்கள் குறுகுறுவென பார்ப்பது போன்ற பல்வேறு இடைஞ்சல்கள் உண்டல்லவா!) வெற்றி பெறுவதைவிட இறந்து போவதே சிறந்த மாற்று இல்லையா?’’ என்றாராம் கேள்வி கேட்ட அந்த நபர்.

அதற்கு ஜான், ‘‘இன்றைக்கு என்னைச் சுற்றி இருக்கும் பல நல்ல விஷயங்களை நான் பெறுவதற்குத் தீயே காரணமாக இருந்தது. தீ பல நல்ல விஷயங்களை என்னிடமிருந்து எடுத்துச் சென்றது என்றாலும், பல நல்ல விஷயங்களை எனக்குத் தரவும் செய்தது. தீயில் நான் வீழாது இருந்திருந்தால், இத்தனை நாள்கள் நான் பட்ட கஷ்டங்களை நான் படாமலே போயிருப்போம். என் வாழ்வில் எனக்குக் கிடைத்திருக்கும் பல விஷயங்களை நான் புரிந்துகொள்ளாததும் போயிருப்பேன். என்னைத் தாக்கிய தீ, என் கூடப் படித்தக் குழந்தைகளை, அடுத்தவரின் கஷ்டம் என்ன என்பதைப் புரியவைத்தது.
விபத்துக்கு உள்ளான என்னை உள்ளங்கையில் வைத்துப்பார்த்துக்கொள்வதைபோன்ற அரவணைப்பைச் சகமாணவர்கள் தந்தனர். மேற்படிப்புகளை நான் தொடர்ந்தேன். படிக்கும் இடத்தில் சந்தித்த பெண் என் மனைவியானாள். இன்றைக்கு ஒரு சந்தோஷமான குடும்பமாக குழந்தைகளுடன் வாழ்கிறேன். வாழ்வின் மீது ஒரு தீவிர ஈடுபாட்டுடன் வாழ அந்தத் தீ விபத்தே எனக்கு உதவியது. தடைகளைத் தாண்டி வாழவேண்டும் என்ற உத்வேகத்தை அந்தத் தீ விபத்தே எனக்குத் தந்தருளியது.
ஆறாத வடுவாக தீக்காயம் இருக்கிறதா? ஆம், என் உடல் முழுவதும் இருக்கிறது. விரல்கள் சில எனக்கு இல்லையா? ஆம்,அவை எடுக்கப்பட்டு விட்டது. என் குடும்பமே அந்த நிகழ்வுக்குப்பின் அதிர்ந்து போனாதா? நிச்சயமாக! ஆனால் நாங்கள் அனைவருமே அதிலிருந்து மீண்டுவந்தோம். இன்றைக்கு அந்த விபத்தை ஒரு கோர நிகழ்வாகப் பார்க்கவில்லை. என்னுடைய வாழ்க்கையை மாற்றியமைக்க வந்த ஒரு நிகழ்வாகவே அதை நான் பார்க்கிறேன்’’ என்று பதில் சொன்னார்.
‘‘இதுபோன்ற கஷ்டங்களே உங்கள் வாழ்வின் திசையை மாற்றியமைக்கும் வல்லமைபெற்ற திருப்புமுனைகள். தீராவியாதியைப் பெற்ற குழந்தை, குடும்பத்தில் ஏற்படும் திடீர் மரணம், படுதோல்வியைக் கொண்டுவந்த வியாபார முயற்சி என்பது போன்ற பல நிகழ்வுகள் வாழ்வின் பெரிய சோகமாக இருந்தாலும், நம் வாழ்க்கையை மாற்றியமைப்பும் திருப்புமுனையாகவும் மாற வாய்ப்புண்டு என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள்’’ என்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் ஜான்.
இயற்கை நமக்குத் தரப்போவது எந்தப் பாதை என்பதை நம்மால் தேர்வு செய்ய முடியாது. அதே சமயம், நம்முடையது எந்த மாதிரியான பயணம் என்பதை நிச்சயமாகத் தேர்வு செய்யமுடியும் என்று சொல்வதுதான் இந்தப் புத்தகத்தின் சாராம்சம்.
‘‘மரணத்திலிருந்து தப்பிப்பது வாழ்க்கையில்லை. வாழ்வதே வாழ்க்கை. சந்தோஷங்கள் பலவற்றையும் வாழ்க்கை நமக்குத் தருகிறது. அதே போல்தான் துயரங்களையும் தருகிறது. இதில் சந்தோஷம் மட்டுமே வேண்டும் என்று நாம் சிறு குழந்தையைப்போல் அடம்பிடித்தால் எப்படி அது சாத்தியமாகும்?’’ என்று கலாய்க்கிறார்.
‘‘நீங்களெல்லாம் பள்ளிப்படிப்பு முடிந்த பின்னர், வேலை கிடைத்து, திருமணம் நடந்து வாழ்க்கையில் திருப்தி கலந்த மகிழ்ச்சியைப் பெற்றிருப்பீர்கள். ஆனால், என்னைக் கேட்டீர் களென்றால், ‘‘ஒருவழியாய் உயிர்பிழைத்தேன்’ என்ற தருணத்தை நான் ஒன்பது வயதிலேயே பெற்றேன் என்பதுதான் நிஜம். வெற்றியா அது? உயிர் பிழைத்தேனே தவிர, வலி தொடர்ந்தது. டஜன் கணக்கில் அறுவை சிகிச்சைகள், கைவிரல்களை நீக்கி, பேண்டேஜ் போட்டு, தழும்புகளுடன் வீல் சேரில் பிழைத்துக் கிடந்தேன். ஆனாலும் உயிர் இருக்கிறது என்பது சந்தோஷமான விஷயம்தானே?’’ என்கிறார் ஜான்.
‘‘உங்கள் வாழ்வில் எதுவும் நல்லதே நடக்கவில்லை என்று பொய் சொல்லாதீர்கள். என்னைவிட பல நல்ல விஷயங்கள் உங்கள் வாழ்வில் நடந்துள்ளன’’ என்று கிண்டலடிக்கும் ஆசிரியர், தன்னைச் சிரிக்க வைக்க முடியுமா என்பதற்கே ஒரு மெடிக்கல் மிராக்கிள் தேவைப்பட்டது என்று சொல்லி அந்த சம்பவத்தை விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்.
‘‘பிழைப்பதற்குத் தவித்த தருணத்தில், தீ விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் சிறுவனாகிய என்னைப் பார்க்க, ஜேக் பக் எனும் பிரபல பேஸ்பால் விளையாட்டு விமர்சகர் (sportscaster) மருத்துவமனைக்கு வந்தார். நோய்த் தொற்று ஏற்படும் என்ற போதிலும் பெற்றோர்களின் அனுமதியுடன் என்னப் பார்த்துத் தேறுதல் சொல்லவந்த அவருக்கு என்னுடைய நிலைமையைப் பார்த்ததும் வார்த்தையே வரவில்லை. வெளியே சென்று செவிலியரிடம், ‘எப்போது சரியாகும்?’ என்று அவர் கேட்க, அவர்களோ ‘எப்போது சாவார் என்று கேட்டால் சரியான கேள்வியாக இருக்கும்’ என்று சொல்லியுள்ளனர்.
மிகவும் வருத்தப்பட்ட அவர், அவருடைய விமர்சனங்களின் இடையே என்னைப் பற்றிப் பேச, பல்வேறு பேஸ்பால் விளையாட்டு பிரபலங்கள் தேடி வந்து என்னைப் பார்த்து ஆறுதல் சொல்ல ஆரம்பித்தனர். அவரும் பலமுறை மருத்துவமனைக்கு வந்து என்னைத் தேற்றினார்.
நினைவிருக்கட்டும், அவர் எங்களுக்கு முன்பின் பழக்கமில்லாதவர். என்னுடைய நிலைமையை யாரோ சொல்லக் கேட்டு, என்னைத் தேடி வந்து பார்த்தார். பின்னர் என்னுடைய வாழ்க்கையை மாற்றியமைக்க அவர் பெரிதும் உதவினார். நெருப்பு பொசுக்கியது என்னுடைய உடம்பை மட்டுமே. ஏனைய மனிதர்களின் அன்பை அல்ல என்பதை நான் அப்போது புரிந்துகொண்டேன்’’ என்கிறார் ஜான்.
கஷ்டம், கஷ்டம் என்று சொல்லித் திரியும் நாம் அனைவரும், ‘நெருப்புடா... நெருங்குடா பார்ப்போம்’ என்று நம்மை நோக்கி வரும் கஷ்டத்தை நோக்கி சவால்விட வேண்டுமெனில், நெருப்பில் வெந்து மீண்ட இந்த மனிதரின் கதையை ஒருமுறை நிச்சயமாகப் படிக்கலாம்.
- நாணயம் டீம்