
ஜி.எஸ்.டி கேள்வி பதில்கள்ஜி.கார்த்திகேயன் ஆடிட்டர், கோவை
நான் கோவையில் நகை வியாபாரம் செய்து வருகிறேன். தற்போது 50,000 ரூபாய்க்கு மேல் நகை வாங்கும் எல்லா வாடிக்கையாளர்களிடமும் பான் கார்டு மற்றும் ஆதார் எண் வாங்கி வருகிறோம். இது அவசியமா?
-பிரசாத், கோவை

“ரூ.50,000 மதிப்புக்கு மேல் நகை வாங்குவோருக்கு பான் மற்றும் ஆதார் கட்டாயம் என்று அரசு முன்பு அறிவித்திருந்தது. இந்த வரம்பு இப்போது தளர்த்தப்பட்டு, புதிய வரம்பு அறிவிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. ஆகையால், தற்போது பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண் வாங்க வேண்டிய அவசியமில்லை.”
ஜி.எஸ்.டி பதிவுப் பெற்ற நாங்கள் இதுவரை எந்த ரிட்டர்னும் தாக்கல் செய்யவில்லை. இதனால் ஏதேனும் பாதகம் ஏற்படுமா?
–சௌந்தர்யா, மேல்மருவத்தூர்.
“பொதுவாக, ஜி.எஸ்.டி-யில் தாமதமாகத் தாக்கல் செய்யப்படும் ரிட்டர்ன்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.200 அபராதம் எனக் கூறப்பட்டது. இது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜி.எஸ்.டி ரிட்டர்ன் தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாத கணக்குகளைத் தாக்கல் செய்யும் இறுதித் தேதி, நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மூன்றாவது காலாண்டு கணக்குகளைத் தாக்கல் செய்யும் தேதியும் நவம்பர் 10-ம் தேதியிலிருந்து டிசம்பர் 11-ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, நீங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இதுவரை தாக்கல் செய்யாத ரிட்டர்ன்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம்.”

நான் வங்கிகள் மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பிரின்டர் மற்றும் டோனர்களை ரீஃபில் செய்துவருகிறேன். எனது மொத்த ஆண்டு விற்பனை ரூ.20 லட்சத்துக்குக் குறைவாக உள்ளதால், என்னிடம் வியாபாரம் செய்யத் தயங்கு கிறார்கள். தற்போதைய ஜி.எஸ்.டி-யில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா?
– ஆர்.குணசேகரன், குடியாத்தம்.
“ஜி.எஸ்.டி சட்டப்படி, பதிவு செய்யாத நபரிடமிருந்து பெறப்படும் சேவைக்குப் பதிவு பெற்ற நபர் எதிர்முறை வரிவிதிப்பு (Reverse Charge Mechanism) முறையில் வரி செலுத்த வேண்டும்.
தற்போது இந்த முறைக்கு 31.03.2018 வரை ஜி.எஸ்.டி-யில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், இது ஒரு தற்காலிக அறிவிப்பு மட்டுமே. இனிவரும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தொடரில் இதில் மாற்றம் ஏற்படலாம்.”
என் மொத்த விற்பனை ரூ.20 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. இருப்பினும், நான் மற்ற மாநிலங்களுக்குப் பொருள்களை சப்ளை செய்யலாமா?
– பாண்டுரங்கன், திருச்சி
“ஜி.எஸ்.டி சட்டப்படி ரூ.20 லட்சம் வரை மொத்த விற்பனை உள்ளவர்கள் பதிவு செய்ய வேண்டியதில்லை. ஆனால், வெளிமாநிலங்களில் வர்த்தகம் செய்பவராக இருந்தால், இந்த வரம்பு பொருந்தாது என ஏற்கெனவே குறிப்பிடப் பட்டிருந்தது.
ஆனால், இந்த விதி தற்போது தளர்த்தப்பட்டு இந்தியாவுக்குள் எந்த மாநிலத்துக்கு விற்பனை செய்தாலும் மொத்த விற்பனை ரூ.20 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால் பதிவு செய்ய வேண்டியதில்லை என்று மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
எனவே, நீங்கள் தாராளமாக மற்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்யலாம்.”
