நடப்பு
Published:Updated:

ஃபண்ட் கார்னர் - வரி சேமிப்புக்கு ஏற்ற முதலீட்டுத் திட்டம் எது?

ஃபண்ட்  கார்னர் - வரி சேமிப்புக்கு ஏற்ற முதலீட்டுத் திட்டம் எது?
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபண்ட் கார்னர் - வரி சேமிப்புக்கு ஏற்ற முதலீட்டுத் திட்டம் எது?

சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

‘‘பெங்களூருவில் பணிபுரிந்து வரும் எனக்கு 29 வயது. நான் மாதம் 5,000 ரூபாயை மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். நான் வரி சேமிப்புக்காக மாதம் 7,000 ரூபாயை இன்ஷூரன்ஸ் திட்டத்தில் ஏற்கெனவே முதலீடு செய்துவருகிறேன்.  வரி சேமிப்புக்காக முதலீடு செய்ய உள்ள 5,000 ரூபாய்க்கு நல்ல திட்டங்களைச் சொல்லவும்.’’ 

@ எம்.சிவலிங்கம்   

ஃபண்ட்  கார்னர் - வரி சேமிப்புக்கு ஏற்ற முதலீட்டுத் திட்டம் எது?

“மியூச்சுவல் ஃபண்டு களில் 80சி பிரிவின் கீழ் வரிவிலக்கு கிடைக்கும் திட்டங்களுக்கு இ.எல்.எஸ்.எஸ் (ELSS – Equity Linked Savings Scheme) அல்லது டாக்ஸ் சேவர் திட்டங்கள் எனப் பெயர். இந்தத் திட்டங்கள் பங்குச் சந்தை யில் முதலீடு செய்கின்றன. இந்த வகை ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யும் போது, மூன்று வருடங் களுக்கு லாக்-இன் உள்ளது. அதாவது, இந்த மூன்றாண்டு காலத்தில் முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுக்க முடியாது. அதற்குப் பிறகு நீங்கள் எப்போது வேண்டு மானாலும் எடுத்துக் கொள்ளலாம். குறைந்த பட்சமாக நீங்கள் ஐந்து வருடங்களுக்கு இந்த வகை ஃபண்டுகளில் செய்த முதலீட்டை எடுக்காமல் இருப்பது நல்லது. உங்களுக்குப் பணம் தேவையில்லையெனில், அதற்குமேலும் வைத்திருப்பது நல்லது. இந்த ஃபண்டுகள் நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தை இதுவரை தந்துள்ளன; இனிமேலும் தரும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு மாத முதலீடும், முதலீடு செய்த தேதியிலிருந்து மூன்று வருடங்களுக்கு லாக்-இன் செய்யப்படும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். மாதம் ரூ.5,000 முதலீட்டை ஐ.டி.எஃப்.சி (IDFC) டாக்ஸ் அட்வான்டேஜ் (இ.எல்.எஸ்.எஸ்) ஃபண்டில் செய்துகொள்ளுங்கள்.” 
   
‘‘என் மகன் இப்போது எட்டாம் வகுப்பு படிக்கிறான். அவன் மேற்படிப்புக்கு ரூ.5 லட்சமும், திருமணத்துக்கு 13 வருடங்கள் கழித்து (இன்றைய மதிப்பில்) ரூ.7 லட்சமும் தேவை. மாதம் ரூ.30,000 முதலீடு செய்ய முடியும். நான் எந்தெந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்?’’

ஜெனிபர் ஜேசுதாசன், மார்த்தாண்டம்.


“உங்களுடைய மகன் கல்லூரி செல்ல இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன. இப்போது ரூ.5 லட்சம் தேவையெனில், நான்கு ஆண்டுகள் கழித்து ரூ.6.55 லட்சமாக (ஆண்டுக்கு 7% பணவீக்க அடிப்படையில்) இருக்கும். அந்த இலக்கை அடைய நீங்கள் சுமார் 12,000 ரூபாயை மாதந்தோறும் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். சராசரியாக ஆண்டுக்கு 9% வருமானம் கிடைக்கும் என்ற அடிப்படையில், உங்கள் மகன் கல்லூரி நுழையும்முன் உங்களுக்கு ரூ.6.58 லட்சம் கிடைக்கும். இதற்காக நீங்கள் கோட்டக் ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாம். 

ஃபண்ட்  கார்னர் - வரி சேமிப்புக்கு ஏற்ற முதலீட்டுத் திட்டம் எது?


   
உங்களின் மகனின் திருமணத்துக்கு 13 வருடங்கள் கழித்து இன்றைய மதிப்பில் ரூ.7 லட்சம் தேவை என்று கூறியுள்ளீர்கள். அன்றைய தினத்தில் ரூ.14.93 லட்சம் (6% பணவீக்க அடிப்படையில்) தேவைப்படும். அதற்காக நீங்கள் மாதம் 4,500 ரூபாயை அடுத்த 13 வருடங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். இந்தத் தொகையை டாடா ஈக்விட்டி பி/இ ஃபண்டில் முதலீடு செய்யலாம்.  மீதமுள்ள 13,500 ரூபாயை ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்துகொள்ளுங்கள். இது உங்களின் பிற தேவைகளுக்கு நீண்ட காலத்தில் உதவும்.”
   
“எனக்கு வயது 20. நான் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, சொந்தமாக ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறேன். ஓட்டல் நன்றாக நடக்கிறது. நான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா, எந்த ஃபண்டில் முதலீடு செய்வது. நீண்ட கால முதலீட்டில் ஆர்வமாக உள்ளேன். ஆலோசனை வழங்கவும்.’’

@ ராஜேஷ்,


‘‘இந்த இளம் வயதில் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்தால், இன்னும் 20 – 30 வருடங்களில் உங்களின் முதலீடு அபார வளர்ச்சியைக் கண்டிருக்கும். ஆகவே, தாராளமாக நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். உங்களின் உபரியை இரண்டாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒருபகுதியை ஐ.சி.ஐ.சி.ஐ புரூ சேவிங்ஸ் ஃபண்டில் முதலீடு செய்து கொள்ளுங்கள். இதன் வருமானம், வங்கியில் ஒரு வருட டெபாசிட்டுக்குக் கிடைக்கும் வட்டிக்கு நிகராக இருக்கும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் உங்களின் குறுகிய காலத் தேவைகளுக்காக இதில் முதலீடு செய்யும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மற்றொரு பகுதியை உங்களின் நீண்ட நாள் தேவைகளுக்காக ஒதுக்கிவிடுங்கள். அந்தத் தொகையை டாடா ஈக்விட்டி பி/இ ஃபண்டில் முதலீடு செய்துகொள்ளுங்கள்.”    

‘‘நான் மியூச்சுவல் ஃபண்ட் துறைக்குப் புதிது. நாணயம் விகடனில் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த கட்டுரைகளைப் படித்தபிறகுதான், மாதம் ரூ.1,000 நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். இதில் முதலீடு செய்யும்போது என் தகுதிக்கேற்ப முதலீட்டுத் தொகையை அதிகரிக்க முடியுமா, டீமேட் கணக்கு அவசியமா? மேலும், என் மாத வருமானம் பிடித்தம்போக ரூ.38,000. இதில் ரூ.10,000 வீடு கட்டுவதற்குச் சேமித்து வைக்கிறேன். ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்யும்போது வருமானம் எவ்வளவு வரும்?’’

அங்குராஜ், திருப்பூர்


“எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதை மொத்த முதலீடு அல்லது பல்க் (Bulk) முதலீடு என அழைக்கிறோம். மற்றொன்று மாதாமாதம் செய்யும் முதலீடு. இதை எஸ்.ஐ.பி (SIP – Systematic Investment Plan) என அழைக்கிறோம். இந்த முறையில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் ஒப்புக்கொண்ட ஒரு குறிப்பிட்ட தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஆட்டோமேட்டிக்காக முதலீட்டுக்காக எடுத்துக்கொள்ளும். இந்த இரண்டு முறைகளையும் கலந்தும் நீங்கள் செய்துகொள்ளலாம்.
   
பொதுவாக, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு எந்த உச்சவரம்பும் கிடையாது. குறைந்தபட்ச முதலீட்டு அளவு உள்ளது. பெரும்பாலான ஃபண்டுகளில் மொத்த முதலீட்டில் குறைந்தபட்சமாக 5,000 ரூபாயும், எஸ்.ஐ.பி முறையில் குறைந்தபட்ச முதலீடாக மாதத்துக்கு 1,000 ரூபாயும் ஏற்றுக்கொள்ளப் படுகிறது. சில ஃபண்டுகள் குறைந்தபட்சமாக மாதத்துக்கு 500 ரூபாயும் ஏற்றுக்கொள்கின்றன. ஆகவே, நீங்கள் உங்கள் தகுதிக்கு ஏற்ப மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ளலாம்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு டீமேட் கணக்கு அவசியம் இல்லை. டீமேட் கணக்குகள் மூலம் அல்லாமல், நேரடியாக முதலீடு செய்வது உங்கள் முதலீட்டை சிம்பிளாக வைத்திருக்க உதவும். அதேபோல், ஏதேனும் பிழைகள் ஏற்பட்டாலும் இலகுவாகச் சரிசெய்து கொள்ளலாம். உங்கள் விருப்பத்துக்கிணங்க எத்தனை ஃபண்டுகளில் வேண்டுமானாலும் முதலீடு செய்துகொள்ளலாம். நீங்கள் மாதம் ரூ.1,000 முதலீட்டை பிரின்சிபல் குரோத் ஃபண்டில் செய்யலாம்.’’ 

ஃபண்ட்  கார்னர் - வரி சேமிப்புக்கு ஏற்ற முதலீட்டுத் திட்டம் எது?