
செல்லமுத்து குப்புசாமி
நீங்கள் பிசினஸ் சம்பந்தமாக நிறைய வாசிக்கிறவர் என்றால் ரிட்டர்ன் ஆன் இன்வெஸ்ட்மென்ட் (return on investment - ROI) என்ற விஷயத்தைக் கேள்விப்பட்டிருக்க வாய்ப்புண்டு.

நாம் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யும்போது நமக்கு என்ன திரும்பக் கிடைக்கும்? நமது முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம் பணமாக இருக்கலாம்; நேரமாக இருக்கலாம்; உழைப்பாக இருக்கலாம். நம் முதலீட்டை ஈர்க்கிற விஷயம் ஒரு பிசினஸாக இருக்கலாம்; கல்வியாக இருக்கலாம்.
புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடும் மருந்து கம்பெனியில் தொடங்கி கல்விக்கடன் வாங்குவது வரைக்கும் இந்த ஆர்.ஓ.ஐ என்கிற கருத்தாக்கம் நீடிக்கிறது.
பங்கு முதலீட்டாளர்களாக நமக்கு இந்த ஆர்.ஓ.ஐ கான்செப்ட் மிக நெருக்கமானது. பங்கு விலை உயர்வதனாலும், டிவிடெண்ட்
கிடைப்பதனாலும் ஆர்.ஓ.ஐ அதிகரிக்கும். 100 ரூபாய்க்கு நாம் வாங்கும் பங்கு ரூ.4 டிவிடெண்டாகக் கொடுக்கிறது. மேலும், அடுத்த வருடம் அதன் விலை 120 ரூபாயாக உயருகிறது. அப்படியானால் ஓராண்டில் நமக்குக் கிடைக்கும் லாபம் ரூ.4+20=24. ரிட்டர்ன் ஆன் இன்வெஸ்ட்மென்ட் = 24/100=24%.
ஒரு வருடம் என்பது பங்கு முதலீட்டைப் பொறுத்தமட்டில் குறுகிய காலம் என்பார்கள். அதனால் பங்கு விலையை ஒரு வருட கால இடைவெளியில் கணக்கிடுவது முறையாக இல்லாமல் போகலாம். ஆனால், நாம் முதலீடு செய்திருக்கும் கம்பெனி, தான் ஈடுபடும் பிசினஸில் வருடா வருடம் எவ்வளவு ஈட்டுகிறது என்பது கவனிக்கத்தக்க அம்சம்.

ரிட்டர்ன் ஆன் நெட் (Return on net worth) மற்றும் ரிட்டர்ன் ஆன் கேப்பிட்டல் எம்ப்ளாய்டு (Return on Capital Employed - RoCE) என்ற இரு விஷயங்கள் மூலமாக அதனைக் கணக்கிடுகிறார்கள். முதலில், நெட்வொர்த் எனப்படும் நிகர மதிப்பைப் பற்றிப் பார்ப்போம்.
ஒரு நிறுவனம் உருவாக்கி வைத்திருக்கும் சொத்துகள் ஒருபக்கம்; கடன்கள் அல்லது பொறுப்புகள் இன்னொரு பக்கம். கடன்களையெல்லாம் கழித்துவிட்டு கம்பெனியின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு என்று கணக்கிட வேண்டும். ஒருவேளை நாளையே கம்பெனியை இழுத்துமூட வேண்டிய நிலை ஏற்பட்டால் இருப்பதை விற்று, பங்குதாரர்கள் ஆளுக்குக் கொஞ்சமாகப் பிரித்து எடுத்துக்கொள்வார்கள் இல்லையா? அந்த மதிப்பே நிகர மதிப்பு. இன்னும் சுருக்கமாகச் சொன்னால், ஒரு கம்பெனி தனது பிசினஸ் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, அதில் முடக்கி வைத்திருக்கும் பணத்தின் மதிப்பு.
உதாரணத்துக்கு, நகரின் மையப்பகுதியில் கம்பெனிக்கு ஒரு கட்டடம் உள்ளது. அதன் மதிப்பு பல கோடி ரூபாய் பெறும். அந்த இடத்தில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தினால் அறிவீனம் என்போமல்லவா! அப்படித்தான் இதுவும். பல்லாண்டு கால பாரம்பர்யம் கொண்ட சினிமா ஸ்டுடியோக்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக ஏன் மாறுகின்றன என யோசித்தால் இது புரியும். ரிட்டர்ன் (லாபம்) கொடுக்காத நெட்வொர்த் (நிகர மதிப்பு) இருப்பதால் என்ன பயன்? ஒன்று, பிசினஸில் தேவையில்லாமல் முடங்கிக் கிடக்கும் அந்த நிகர மதிப்பை விடுவிக்க வேண்டும். அல்லது அதே நிகர மதிப்பை வைத்து அதிக லாபம் ஈட்ட வேண்டும்.
ரிட்டர்ன் ஆன் நெட்வொர்த் (Return on networth) மதிப்புக் கூடுதலாக உள்ள நிறுவனங்கள் திறம்பட இயங்குவதாகப் புரிந்துகொள்ளலாம். அல்லது அதற்கேற்ற துறையில் இயங்குவதாகவும் புரிந்துகொள்ளலாம்.
உதாரணத்துக்கு, மார்ச் 2017 உடன் முடிவடைந்த நிதியாண்டில் இன்ஃபோசிஸ் கம்பெனியின் ரிட்டர்ன் ஆன் நெட் வொர்த் 20.31%. அதற்கு முந்தைய நான்கு ஆண்டுகளில் இது 27.61% (2016), 25.30% (2015), 24.21% (2014), 25.28% (2013) என நிலவி வந்திருக்கிறது. ஆக, கடந்த ஆண்டு அதன் ரிட்டர்ன் ஆன் நெட்வொர்த் வெகுவாகச் சரிந்திருக்கிறது. அதனால்தான் பைபேக் (buyback) மாதிரியான நடவடிக்கை களில் நிறுவனம் இறங்கியிருக்க வேண்டும்.
இந்த ரிட்டர்ன் ஆன் நெட்வொர்த் வேறு சில கம்பெனிகளுக்கு எப்படியிருக்கிறது என ஆராய்ந்து பார்த்ததில், ஐ.சி.ஐ.சி.ஐ 10.11%, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 6.69%, மாருதி சுஸூகி 20.28% (2013-ல் 12.87%, 2014-ல் 13.26, 2015-ல் 15.65, 2016-ல் 16.92% என வருடா வருடம் மேம்பட்டு வந்திருக்கிறது), ஐ.டி.சி-க்கு 22.49% (கடந்த ஐந்தாண்டுகளில் குறைந்து வந்திருக்கிறது), சன் டிவி 24.35% என இருக்கிறது.
இருக்கிற வளங்களை வைத்துக்கொண்டு ஒரு நிறுவனம் எவ்வாறு இயங்குகிறது என்பதற்கு ரிட்டர்ன் ஆன் நெட்வொர்த் ஓர் அளவுகோல். ஒரு கார் கம்பெனியை சாஃப்ட்வேர் கம்பெனியோடு ஒப்பிடுவது தவறாக இருக்கலாம். ஒரு பேப்பர் கம்பெனியை மருந்து தயாரிக்கும் கம்பெனியோடு ஒப்பிடுவது தவறாக இருக்கலாம்.

ஆனால், ஒரே துறையில் இயங்கும் பல்வேறு நிறுவனங்களின் செயல்திறனை ஒப்பிட்டுப் பார்க்க இந்த அளவுகோல் பேருதவியாக இருக்கிறது. ஆயிரம் சதுர அடி இடத்தில், ஓர் உணவகம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறது. அதே லொக்கேஷனில் அதே சதுரடி இடமுள்ள இன்னொரு உணவகம் வெறும் 500 ரூபாய்க்கு மட்டும் வியாபாரம் செய்கிறது. எனில், எந்த நிறுவனம் திறம்பட இயங்குகிறது என நாமே புரிந்துகொள்ளலாம்.
கூடுதலான முதலீடுகள், வளங்கள் இல்லாமல் எவ்வளவு திறம்பட பிசினஸ் இயங்குகிறது என்பதை நமக்கு அறிவிக்கும் இந்த ரிட்டர்ன் ஆன் நெட்வொர்த் அளவுகோல், ரிட்டர்ன் ஆன் ஈக்விட்டி (Return on Equity) எனவும் அறியப்படுகிறது. அம்மாவின் நகையை விற்றுப் படிக்க வைத்தார்கள். வேலைக்குப் போய் சம்பாதித்தபிறகும் பெற்றோரிடம் கையேந்தி நின்றால்? பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள் இந்த விஷயத்தில் பலவீனமாகவே உள்ளன. சமீபத்தில், பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு மறுமூலதனம் செய்யும் நடவடிக்கையை நாம் கவனித்தோம்.
பங்குகளை ஆராயும்போது சிலர், ரிட்டர்ன் ஆன் நெர்வொர்த்தோடு நிறுத்திக் கொள்கிறார்கள். சிலர் ரிட்டர்ன் ஆன் கேப்பிட்டல் எம்ப்ளாய்டு (ROCE) என்னும் கூடுதல் அளவுகோலையும் பயன்படுத்துகிறார்கள். கேப்பிட்டல் எம்ப்ளாய்டு (Capital employed) என்பது கடன்கள் வாயிலாக பிசினஸில் போட்டிருக்கும் மூலதனத்தையும் குறிப்பதாகும். கடன்களைப் பற்றி இன்னொரு வாரம் பேசலாம்.
வாரன் பஃபெட், ஆர்ஓ.இ. எனப்படும் ரிட்டர்ன் ஆன் நெட்வொர்த் பற்றி பெருமளவு அக்கறைப்பட்டார். அவர் ஆண்டுதோறும் பங்குதாரர்களுக்கு அனுப்பும் கடிதம் மிகவும் பிரபலம். பங்கு முதலீட்டுக்கு நிறுவனங்களை வடிகட்டி எடுக்கும்போது என்ன மாதிரியான காரணிகளைக் கடைப்பிடிக்கிறார் என்பதைத் தனது கடிதமொன்றில் ஒரு வருடம் குறிப்பிட்டிருந்தார். அதில் ஓர் அளவுகோல், “கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு வருடமும் ஆர்.ஓ.இ 15 சதவிகிதமோ அல்லது அதற்கு மேலோ நிலவி வந்திருக்கும் பிசினஸ்கள்” எனக் குறிப்பிட்டிருப்பார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இந்த வடிகட்டும் காரணி அவரது பெர்க்ஷையர் கம்பெனி மற்ற கம்பெனிகளை வாங்குவதற்காக வரையறுக்கப்பட்டது என்றாலும்கூட, தனி முதலீட்டாளராகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது நாமும் கவனத்தில்கொள்ள ஏதுவான காரணி என்பதில் சந்தேகமே கிடையாது.
இனி எந்தப் பங்கு நிறுவனம் பற்றிப் படிக்க நேர்ந்தாலும் அதன் ஆர்.ஓ.சி என்ன என்பதைப் பார்க்கத் தவறாதீர்கள்.
(ஜெயிப்போம்)