
செல்வத்தைப் பெருக்க உதவும் அஸெட் அலோகேஷன்!
நாணயம் விகடன், இன்டகிரேட்டட், என்.எஸ்.டி.எல், என்.எஸ்.இ மற்றும் சிட்டி யூனியன் பேங்க் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய `செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்’ முதலீட்டு விழிப்பு உணர்வுக் கூட்டங்கள், கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொங்கு மண்டலத்தின் முக்கிய நகரங்களான கோவை மற்றும் திருப்பூரில் நடந்தன. அவ்வப்போது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் முதலீட்டாளர்கள் இந்தக் கூட்டங்களில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டங்களில் முதலில் பேசிய என்.எஸ்.டி.எல் நிறுவனத்தின் உதவி மேலாளர் சிவப்பழம், என்.எஸ்.டி.எல் நிறுவனத்தின் முக்கியப் பங்கு என்ன, என்னென்ன சேவைகளை வழங்குகிறது என்பவற்றை விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
அடுத்து பேசிய என்.எஸ்.இ அமைப்பின் துணை மேலாளர் செந்தில்முருகன், ``பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும்முன் நம்முடைய இலக்கு என்ன என்பதைத் தீர்மானித்துக்கொண்டு முதலீடு செய்தால், நம்மால் சரியான முதலீட்டு முடிவுகளை எடுக்க முடியும்’’ என்று பங்கேற்பாளர் களிடம் கேட்டுக்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து இன்டகிரேட்டட் உதவிப் பொது மேலாளர் ஆர்.ரவிச்சந்திரன், மியூச்சுவல் ஃபண்ட் குறித்துப் பேசினார். பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீடுகள், நீண்ட கால அடிப்படையில் எந்த மாதிரியான மேஜிக்குகளை நிகழ்த்துகின்றன என்று பேசிய அவர், மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதாமாதம் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டமான எஸ்.ஐ.பி திட்டத்தின் மூலம் யார் வேண்டுமானாலும் கோடீஸ்வரர் ஆகலாம் என்பதைப் புள்ளி விவரத்துடன் எடுத்துக் கூறினார். அவர் காட்டிய புள்ளிவிவரக் கணக்குகளைப் பார்த்து முதலீட்டாளர்கள் பலரும் ஆச்சர்யப்பட்டனர். அவர் கூறியவற்றைக் கவனமாகக் கேட்ட பலரும், உடனே ஒரு எஸ்.ஐ.பி-யைத் தொடங்கிவிட வேண்டுமென்று உற்சாகமடைந்தனர்.
அடுத்ததாக பேசிய இன்டகிரேட்டட் இன்ஷூரன்ஸ் உதவிப் பொது மேலாளர் குருராஜன், ‘‘கோடீஸ்வரர் ஆவதற்கு முதலீடு எந்த அளவுக்கு அவசியமோ, அந்த அளவுக்கு நாம் நேசிக்கும் நம் குடும்பத்தாருக்கு எதிர்காலத்தில் எந்தவித நிதிச் சிக்கல்களும் ஏற்படாமல் இருக்க காப்பீடும் அவசியம்’’ என்றார்.

``இன்ஷூரன்ஸ் குறித்துப் பலரும் தவறாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். நாம் நன்றாக இருக்கிறோம், நமக்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். ஆனால், குடும்பத்தின் நிதித் தேவை களைப் பூர்த்தி செய்யும் நபருக்கு எதிர்பாராத விதமாக ஏதேனும் நேர்ந்தால் அந்தக் குடும்பத்தைக் காப்பது யார்? இன்ஷூரன்ஸை முதலீடாகப் பார்க்க வேண்டாம். முதலீடுகளுக்கு மியூச்சுவல் ஃபண்டில் பல திட்டங்கள் உள்ளன. இன்ஷூரன்ஸ் உங்களுடைய குடும்பத்துக்கான பாதுகாப்புக்காக மட்டுமே என்பதைத் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்” என்று விளக்கினார்.

இறுதியாக, கோவை கூட்டத்தில் அஸெட் அலோகேஷன் குறித்துப் பேசிய நிதி ஆலோசகர் பத்மநாபன், ‘‘நம்முடைய இலக்குகளைத் தெளிவாக நிர்ணயித்து அதற்கேற்ப முதலீட்டுத் திட்டங்களை நாம் செயல்படுத்த வேண்டும். இதுவரை தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட், ரியல் எஸ்டேட் போன்றவற்றில்தான் நம்மில் பெரும்பாலானோர் முதலீடு செய்தோம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த முதலீடுகளில் வளர்ச்சியே இல்லை. மேலும், பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தை இவற்றால் கொடுக்கவும் முடியாது. பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தை மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை முதலீடுகளால் மட்டுமே தர முடியும்’’ என்றார்.

திருப்பூர் கூட்டத்தின் இறுதியில் அஸெட் அலோகேஷன் குறித்துப் பேசிய முதலீட்டு ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி, ``முதலீடு செய்யும் ஒவ்வொருவரும் இந்த அஸெட் அலோகேஷனில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நம் செல்வத்தைப் பெருக்க இது கைகொடுக்கும். எதில், எவ்வளவு, எப்போது முதலீடு செய்கிறோம் என்பதைத் திட்டமிட்டு முதலீடு செய்தால் லாபம் நிச்சயம்’’ என்றார்.
கூட்டத்துக்கு வந்திருந்த முதலீட்டாளர்கள், நிபுணர்கள் பேசிய அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்டதோடு, கேள்விகளைக் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்டனர். சேமிக்கும் பழக்கத்தைக் குழந்தைகளிடம் வளர்க்கும் விதமாக, கூட்டத்துக்கு வந்திருந்த குழந்தைகளுக்கு உண்டியல் வழங்கி உற்சாகப்படுத்தியது இன்டகிரேட்டட் நிறுவனம்.
ஜெ.சரவணன்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி, விக்னேஷ்வரன்