நடப்பு
Published:Updated:

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 20 - கையில் பணம்... மனதில் குழப்பம்... கவலையைப் போக்கும் தீர்வுகள்!

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 20 - கையில் பணம்... மனதில் குழப்பம்... கவலையைப் போக்கும் தீர்வுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நிம்மதி தரும் நிதித் திட்டம் - 20 - கையில் பணம்... மனதில் குழப்பம்... கவலையைப் போக்கும் தீர்வுகள்!

ஓவியம்: பாரதிராஜா

“வருமானம் என்னவோ நிறைய வரத்தான் செய்கிறது; ஆனால், அது எப்படி செலவாகிறது  என்பதுதான் தெரியவில்லை” என்கிறார் சேலத்தைச் சேர்ந்த மணிமாறன். 

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 20 - கையில் பணம்... மனதில் குழப்பம்... கவலையைப் போக்கும் தீர்வுகள்!

இவருக்கு மட்டுமல்ல, நூற்றுக்கு 75 பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். பட்ஜெட் போட்டு, அந்த பட்ஜெட் வரம்புக்குள் செலவு செய்கிறவர்களுக்கு இந்தப் பிரச்னை வருவதில்லை. மனம் போன போக்கில் செலவு செய்கிறவர்களுக்குத்தான் சம்பாதிக்கும் தொகை எங்கே போகிறது என்று தெரியாது. இனி, மணிமாறன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

“நான் தனியார் கல்லூரி ஒன்றில் வேலை பார்க்கிறேன். என் வயது 35. என் மனைவி தனியார் பள்ளி யொன்றில் ஆசிரியர். எனக்கு ஆறு வீடுகள் அடங்கிய ஃப்ளாட் சொந்தமாக உள்ளது. அதன் மதிப்பு இன்றைக்கு 1.3 கோடி இருக்கும். 2011-ல் கையிலிருந்த சேமிப்புகள் மொத்தத்தையும் போட்டு, நகைகளை அடகு வைத்து, ரூ.20 லட்சம் வீட்டுக் கடன் வாங்கித்தான் அந்த வீட்டைக் கட்டினேன். பாக்கியிருக்கும் வீட்டுக் கடன் ரூ.17 லட்சத்தை 14 வருடங்களில் செலுத்த வேண்டும். நகைக் கடன் வாங்கியதில் இன்னும் ரூ.10 லட்சம் செலுத்த வேண்டியுள்ளது. 

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 20 - கையில் பணம்... மனதில் குழப்பம்... கவலையைப் போக்கும் தீர்வுகள்!ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள சீட்டுத் திட்டத்தில் மாதம் ரூ.25,000 செலுத்தி வருகிறேன். மகனின் பள்ளிக் கட்டணம், இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்ட எனப் பல செலவுகளுக்குத் தேவைப் பட்டதால், சீட்டுப் பணத்தைத் தள்ளியெடுத்து செலவு செய்துவிட்டேன். இந்தச் சீட்டு முடிய இன்னும் 11 மாதங்கள் உள்ளன.

தெரிந்தோ, தெரியாமலோ நான் 11 எண்டோவ்மென்ட் பாலிசிகளை எடுத்து விட்டேன். இதற்கான பிரீமியத்துக்கு மட்டுமே  ஆண்டுக்கு ரூ.1,05,000 ஆகிறது. 64 வயதாகும் என் அம்மா என்னுடன் இருக்கிறார். அவருக்கு ஹெல்த் பாலிசி எதுவும் இல்லை. எனக்கும், என் மனைவி மற்றும் மகனுக்கும் சேர்த்து ரூ.3 லட்சத்துக்கு ஃப்ளோட்டர் பாலிசி உள்ளது. நான் டேர்ம் இன்ஷூரன்ஸ் இதுவரை எடுக்கவில்லை. எவ்வளவுக்கு எடுக்கலாம்? 

எங்களுக்கு பென்ஷன் இல்லையென்பதால், ஓய்வுக்காலத்துக்குத் தேவையான தொகையைச் சேர்க்க வேண்டும். இன்றைய நிலையில் மாதம் ரூ.20,000 தேவையெனில், நான் எவ்வளவு பணத்தைச் சேர்க்க வேண்டும்?

என் மகனின் படிப்புக்காக, பள்ளிக்கூட வசதியை முன்னிட்டு வாடகை வீட்டில் இருக்கிறேன். என் மகன் தற்போது மூன்றாம் வகுப்பு படிக்கிறான். அவனுடைய மேற்படிப்புக்கு அடுத்த ஒன்பது ஆண்டுகளில் ரூ.10 லட்சம் தேவை. மகனுடைய திருமணத்துக்கு, அடுத்த 17 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் தேவை (தொகைகள் அனைத்தும் இன்றைய மதிப்பில்). இந்தப் பணத்தை எப்படிச் சேர்ப்பது என்று சொன்னால், நான் நிம்மதியடைவேன்” என்றவர், தன் வரவு செலவு விவரங்களை மெயிலில் அனுப்பி வைத்தார்.

வரவு செலவு விவரங்கள்  (ரூ)

என் சம்பளம்             : 36,000

என் மனைவி சம்பளம்         : 34,000

வாடகை வருமானம்         : 30,000

அம்மாவின் பென்ஷன்         : 20,000

மொத்தம்  : 1.20 லட்சம்

வாடகை மற்றும் குடும்பச் செலவுகள்: ரூ.15,000

வீடு இ.எம்.ஐ: ரூ.20,600

நகைக் கடன்: மாதம் ரூ.10,000

சீட்டு    : ரூ.25,000

பாலிசி பிரீமியம்: ரூ.9,000

பள்ளிக் கட்டணம்: ரூ.10,000

மியூச்சுவல் ஃபண்ட்: ரூ.7,000

இதர செலவுகள்: 3,400

மொத்தச் செலவுகள்: ரூ.1,00,000

மீதம்: ரூ.20,000

இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.   

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 20 - கையில் பணம்... மனதில் குழப்பம்... கவலையைப் போக்கும் தீர்வுகள்!

“நீங்கள் கவலைப்படுகிற அளவுக்கு உங்களுக்குப் பெரிய பிரச்னை எதுவுமில்லை. எவ்வளவு பணம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்பதில் தெளிவு இல்லையெனில், கவலையும் குழப்பமும் இருக்கத்தான் செய்யும். வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்ட முடிவு செய்து, வீடும் கட்டி முடித்து வாடகை வருமானமும் கணிசமாகப் பெற்றுவரும் நிலையில், கடன் இருக்கிறதே எனக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

உங்கள் கவலைக்குக் காரணம், அவசர கால நிதியை உருவாக்கி வைக்காததே. தற்போது மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் முதலீடு செய்துவரும் 7,000 ரூபாயை ரூ.4 லட்சம் சேரும் வரை தொடர்ந்து செய்து, அதனை அவசர கால நிதியாக வைத்துக்கொள்ளுங்கள்.

11 மாதங்களில் சீட்டு முடிந்ததும் சீட்டுக்காகச் செலுத்தும் ரூ.25 ஆயிரத்தை நகைக் கடனை அடைக்கப் பயன்படுத்திக்கொள்ளவும். இப்படிச் செய்தால் நான்கு ஆண்டுகளில் நகைக் கடனை அடைத்து முடித்துவிடலாம்.  உங்கள் மகனுடைய மேற்படிப்புக்கு அடுத்த ஒன்பது வருடங்களில் ரூ.18.4 லட்சம் தேவை. அதற்கு மாதம் ரூ.9,500 முதலீடு செய்ய வேண்டும். அல்லது ரூ.6,800 முதலீட்டில் தொடங்கி, ஒவ்வோர் ஆண்டும் படிப்படியாக 10% அதிகரித்துக்கொள்ளலாம்.

அடுத்து, உங்கள் மகனுடைய திருமணத்துக்கு இன்றைய மதிப்பில் ரூ.15 லட்சம் எனில், உங்கள் மகனின் திருமணத்தின்போது ரூ.47.4 லட்சம் தேவைப்படும். அதற்கு மாதம் ரூ.7,200 முதலீடு செய்ய வேண்டும். அல்லது ரூ.3,900 முதலீட்டில் தொடங்கி, ஒவ்வோர் ஆண்டும் 10% அதிகரித்துக்கொள்ளலாம்.

தற்போது குடும்பச் செலவுகளுக்கு மாதம் ரூ.20,000 தேவையெனில், உங்களின் ஓய்வுக்காலத்தில் ரூ.71,000 தேவை. இதற்கு ரூ.2 கோடி கார்ப்பஸ் தொகை சேர்க்க வேண்டும். உங்களுக்கான பி.எஃப் மூலம் ரூ.23 லட்சம் கிடைக்கக்கூடும். மீதம் 1.77 கோடி சேர்க்க மாதம் ரூ.12,100 முதலீடு செய்ய வேண்டும். அல்லது ரூ.8,500 முதலீட்டில் தொடங்கி, ஆண்டுக்கு 5% அதிகரித்துக்கொள்ளலாம்.

11 எண்டோவ்மென்ட் பாலிசிகளை எடுத்திருக்கிறீர்கள். இவற்றை குளோஸ் செய்ய வேண்டாம். 2018-ல் இரண்டு பாலிசிகள் முதிர்வடைகின்றன. அந்தத் தொகையை உங்கள் அம்மாவுக்கு அவசர கால மருத்துவச் செலவுகளுக்கு வைத்துக்கொள்ளவும். அதன்பிறகு அந்த பிரீமியத்தைப் பயன்படுத்தி, உங்கள் அம்மாவுக்கு ரூ.3 லட்சத்துக்கு ஹெல்த் பாலிசி எடுத்துக்கொள்ளவும். உங்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் ரூ.75 லட்சத்துக்கு எடுத்துக்கொள்ளவும். உங்களிடமுள்ள மற்ற இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் முதிர்வுத் தொகையை உங்கள் ஓய்வுக்காலத்துக்கான அவசர கால நிதியாக வைத்துக்கொள்ளவும். ஓய்வுக்காலத்தில் வரும் வீட்டு வாடகையைச் சுற்றுலா செல்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளவும்.

பரிந்துரை: பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி - ரூ.4,000, ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ப்ளஸ் -ரூ.4,000, மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் -ரூ.4,000, ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு -ரூ.2,200, எடெல்வைஸ் ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் -ரூ.5,800.”
   
குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்கு மானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878    

- கா.முத்துசூரியா 

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 20 - கையில் பணம்... மனதில் குழப்பம்... கவலையைப் போக்கும் தீர்வுகள்!