நடப்பு
Published:Updated:

கனெக்ட் 2017... ஐ.டி துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தமிழகம் தயார்!

கனெக்ட் 2017... ஐ.டி துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தமிழகம் தயார்!
பிரீமியம் ஸ்டோரி
News
கனெக்ட் 2017... ஐ.டி துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தமிழகம் தயார்!

கனெக்ட் 2017... ஐ.டி துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தமிழகம் தயார்!

சி.ஐ.ஐ எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பானது தகவல் மற்றும் செய்தித் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) குறித்த இரண்டு நாள் மாநாட்டை ‘கனெக்ட் 2017’ என்ற பெயரில் கடந்த வாரம் சென்னையில் நடத்தியது. 16-வது ஆண்டாக நடைபெற்றுவரும் இந்த மாநாட்டை, தமிழக அரசின் எல்காட் நிறுவனமும், எஸ்.டி.பி.ஐ நிறுவனமும் இணைந்து நடத்தின.  

கனெக்ட் 2017... ஐ.டி துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தமிழகம் தயார்!

இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில், தமிழகத் தொழில் துறை அமைச்சர்  எம்.சி.சம்பத், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளி லிருந்து தொழிலதிபர்களும், தொழில்முனைவோர் களும் கலந்துகொண்டனர்.

தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை இனிவரும் காலத்துக்கேற்ப பயன்படுத்துவது எப்படி என்பதை மையக் கருத்தாகக்கொண்ட இந்த இரண்டு நாள் மாநாட்டில், தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பச் சூழலமைப்பை ஊக்குவிப்பது குறித்தும், அதன்மூலம் தொழில் துறை சார்ந்த முதலீடுகளை அதிகரிப்பதற்கேற்ப செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கமே தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால், அதன் செயல்திட்டத்தை விரைவுபடுத்துவதையும் இந்த மாநாடு கருத்தில் கொண்டு செயல்பட்டது.

இந்த மாநாட்டுக்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசினார் சி.ஐ.ஐ-யின் தமிழகப் பிரிவின் தலைவர் ரவிச்சந்திரன். தொடக்கத்தில் நடந்த அமர்வில் மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணகுமார் நடராஜன், காக்னிஷன்ட் நிறுவனத்தின் நிர்வாகத் துணை தலைவர்  ஆர்.சந்திரசேகரன், எஸ்.டி.பி.ஐ அமைப்பின் இயக்குநர் ஓம்கார் ராய் உள்பட பலரும் கலந்து கொண்டு பேசினர்.    

வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்பச் சூழலமைப்பை ஒழுங்குப்படுத்தி, சாதகமான கொள்கை முடிவுகளை எடுத்து, தமிழகத்தில் ஐ.டி துறையை மேலும் வலுப்படுத்தக்கூடிய புத்தாக்கச் சிந்தனைகளைச் செயல்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் கருத்து பரிமாறப்பட்டது.

கனெக்ட் 2017... ஐ.டி துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தமிழகம் தயார்!

‘கனெக்ட் 2017’ மாநாட்டின் தலைவர் ரவி விஸ்வநாதன், இந்த மாநாடு குறித்துப் பேசினார். “இந்த மாநாட்டின் வாயிலாக, பல முனைப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டிருக்கின்றன. இந்த மாநாடுகளை நாடு முழுக்க நடத்துவதன் மூலம், இந்திய தொழில் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்ட முடிந்திருப்பதால், இந்திய தொழில் துறை சார்ந்தவர்களின் மத்தியில், இந்த மாநாட்டுக்குக் கெளரவமும், நம்பகத்தன்மையும் ஏற்பட்டிருக்கிறது.

இந்திய தகவல் தொழில்நுட்பக் கொள்கை, இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் ஐ.டி பூங்காக்கள் உருவாக்கம், ஐ.டி தொழில் அமைவிடங்கள் மற்றும் சிறப்பு ஏற்றுமதி மண்டலங்கள் உருவாக்குதல் போன்ற
முக்கியமான முனைப்புத் திட்டங்களுக்குத் தொழில் துறைக்கும் அரசுக்கும் இடையே பாலமாக அமைந்து நல்லுறவை வளர்ப்பதற்கு, இந்த மாநாடு காரணியாக விளங்குகிறது. தொழில் துறைக்கும் அரசுக்குமான பிணைப்பை வெளிக்காட்டும் விதமாகத்தான் ‘கனெக்ட்’ என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது’’ என்றார் அவர்.

‘கனெக்ட் 2017’ மாநாட்டின் அமர்வுகள், எதிர்காலத் தொழில்நுட்பம், தொழில்நுட்பத்தின் ஆளுகை, ஆட்டோமோட்டிவ் மற்றும் சுகாதாரச் சேவைப் பிரிவுகளில் தொழில்நுட்பத்தின் போக்குகள் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தியது.
இரண்டாம் நாள் முற்பகல் நடந்த அமர்வில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ.வும், சி.ஐ.ஐ அமைப்பின் முன்னாள் தலைவருமான கிரிஷ் கோபாலகிருஷ்ணன், சி.ஐ.ஐ-யின் தென்னிந்தியாவின் முன்னாள் தலைவரான எஸ்.மகாலிங்கம் உள்பட பலரும் பேசினர்.

 ‘‘இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதிலும், இந்திய அரசுக்கு வருமானத்தை ஏற்படுத்தித் தருவதிலும் தகவல் தொழில்நுட்பத் துறை சிறந்து விளங்குகிறது. இந்தத் துறையில் இந்திய அளவில் தமிழகம் ஏற்கெனவே சிறந்து விளங்குகிறது. இந்தத் துறைக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதன் மூலம் தமிழகம் இந்தத் துறையில் மேலும் வளர்ச்சி காணும்’’ என்றார் கிரிஷ் கோபால கிருஷ்ணன்.

இந்த மாநாட்டின் இரண்டாம் நாளின் இறுதியில், பல்வேறு தொழிற்பிரிவுகளில் சாதனை செய்த எட்டு தொழில் முனைவோர்களுக்கு, தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் விருதுகள் வழங்கி கெளரவித்தார்.

2017-ம் ஆண்டுக்கான வளர்ந்துவரும் தொழில் முனைவோர் விருது, கியான் டேட்டா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சங்கர் நரசிம்மனுக்கும், க்ளவுட்செர்ரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிரேம் கே.விஸ்வநாத்துக்கும் வழங்கப்பட்டது. சேவைப் பிரிவில் வளர்ந்துவரும் தொழில்முனைவோர் விருது, ஆக்ஸஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் ஷாஜி ரவிக்கும், உற்பத்தித் துறையில் வளர்ந்துவரும் தொழில்முனை வோர் விருது, அவலான் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் குன்ஹமத் பிஸாவுக்கும் வழங்கப் பட்டன.

தன்னுடைய துறையில் ஐ.டி. தொழில் நுட்பத்தைச் சிறந்த முறையில் பயன் படுத்தியதற்கான விருது, ஆம்பியர் நிறுவனத்தின் ஹேமலதா அண்ணாமலைக்கு அளிக்கப்பட்டது. அரசு சேவைகளை இணையதளம் அளிப்பதில் சிறப்பாக பணியாற்றியதற்கான இ-கவர்னன்ஸ் விருது, தமிழக அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரி மோகன் பியாரேவுக்கு அளிக்கப்பட்டது. ஐ.டி. ஈக்கோ சிஸ்டம் விருது, சிப்காட் நிறுவனத்தின் ஐ.ஏ.எஸ் அதிகாரி வாசுகிக்கு அளிக்கப் பட்டது. குளோபல் இன்புளுவன்சியர் விருது,   ஐ.பி.எம் நிறுவனத்தின் தலைவர் வனிதா நாராயணனுக்கு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் ஐ.டி. தொழில் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத்  தயார் என்பதைப் பறைசாற்று வதாக இருந்தது சி.ஐ.ஐ நடத்திய இந்த ‘கனெக்ட் 2017.’

தெ.சு.கவுதமன்

படம்: க.பாலாஜி