
நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: பணமதிப்பு நீக்கம்... ஓராண்டுக்குப் பிறகு..?
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி... இந்தியாவிலுள்ள அனைவரும் இந்த நாளை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில் 90 சதவிகிதத்தைச் சில நிமிடங்களில் மதிப்பிழக்கச் செய்தது மோடி தலைமையிலான மத்திய அரசு. செல்லாமல் போன 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி, புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற வேண்டிய கட்டாயம் மக்களுக்கு. என்றாலும், பெருவாரியான மக்கள் அரசின் இந்த நடவடிக்கையை ஆரம்பத்தில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு ஒத்துழைத்தனர். காரணம், இதன் மூலம் கறுப்புப் பணம் ஒழியும் என்று நம்பினர். அதுமட்டுமின்றி, கள்ளப்பணம், லஞ்சம் மற்றும் தீவிரவாதம் அனைத்தும் இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் ஒழியும் என நினைத்து வரவேற்றனர்.

ஆனால், கடந்த ஓராண்டு காலத்தில் நடந்தது என்ன? கறுப்புப் பணம் ஒழிந்ததா, கள்ளப்பணம் அழிந்ததா என்கிற கேள்விகளுக்கு யாரிடமிருந்தும் தெளிவான பதில் எதுவுமில்லை. அரசுத் தரப்பில் இந்த நடவடிக்கை மாபெரும் சாதனை என்று சொல்லப்பட்டாலும், எதிர்க்கட்சிகள் இந்த நாளைக் கறுப்புத் தினமாக அறிவித்தன.
கறுப்புப் பணம் ஒழிந்ததா?
இந்த நடவடிக்கை மூலம் மத்திய அரசாங்கம் எதிர்பார்த்தது வேறு; நடந்தது வேறு. பணமதிப்பை நீக்கிவிட்டதால் 500, 1,000 ரூபாயில் 98.26% வங்கியில் டெபாசிட் ஆனது. பெருமளவில் கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்கள் வங்கியில் மாற்றமுடியாமல் திணறுவார்கள் என்றுதான் மத்திய அரசாங்கம் நினைத்தது. ஆனால், மொத்த பணமும் வங்கிக்கு வந்துவிட்டதால் கறுப்புப் பணம் இல்லை என்கிற நிலை உருவானது. அல்லது, வங்கி அதிகாரிகளுக்கு ‘கையூட்டு’ கொடுப்பதன் மூலம் கறுப்புப் பணத்தை எளிதில் ‘வெள்ளை’யாக மாற்ற முடியும் என்பதை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஏறக்குறைய 1.48 லட்சம் கணக்குகளில் தலா ரூ.80 லட்சத்துக்கும் அதிகமான பணம் டெபாசிட் செய்யப்பட்டது. 1.09 கோடி கணக்குகளில் ரூ.2 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை வரவு வைக்கப்பட்டது. ஆக, இந்த நடவடிக்கைக்குப் பின் ரூ.1.75 லட்சம் கோடி, 18 லட்சம் கணக்குகளில் டெபாசிட்டானது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த 18 லட்சம் கணக்குகளும் வருமான வரித் துறையினரின் சோதனைக்கு ஆளாகவிருக்கிறது. இந்த விசாரணைக்குப் பின்புதான் உண்மையிலேயே எவ்வளவு கறுப்புப் பணம் சிக்கியிருக்கிறது என்பது தெரியவரும்.

விளைந்த நன்மைகள்
அரசின் இந்த நடவடிக்கையினால் சில நன்மைகள் ஏற்பட்டுள்ளன. அவற்றை முதலில் பார்ப்போம்.
ஆன்லைன் பணப் பரிவர்த்தனை
அரசின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு பணமில்லாப் பரிவர்த்தனை கணிசமாக அதிகரித்திருக்கிறது. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் பேமென்ட் வாலட் போன்றவற்றை மக்கள் அதிகம் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது தெளிவாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதியாண்டைக் காட்டிலும் 2016-17-ம் நிதியாண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை நல்ல வளர்ச்சியடைந்துள்ளன.
டெபிட் கார்டு மூலம் நடந்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 117.36 கோடியிலிருந்து 239.93 கோடியாகவும், கிரெடிட் கார்டு மூலம் நடந்த பரிவர்த்தனைகள் 78.57 கோடியிலிருந்து 108.71 கோடியாகவும் அதிகரித்திருக்கின்றன. வாலட் சேவைகளில் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 74.8 கோடியிலிருந்து 196.37 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.71,712 கோடிக்குப் பணப் பரிவர்த்தனை ஆகியிருக்கிறது. வாலட்களின் மூலம் ரூ.7,262 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது. ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் பழக்கம் மக்களிடம் பிரபலமாகிவிட்டதால், இனிவரும் காலத்தில் கறுப்புப் பணமானது பெரிய அளவில் உருவாகாது என்று நம்பலாம்.
குறைந்தது பணப்புழக்கம்
ஆன்லைன் மூலம் பலரும் பணப் பரிமாற்றம் செய்யத் தொடங்கியதையடுத்து பணப்புழக்கம் குறையத் தொடங்கியிருக்கிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு ரொக்கப் பரிவர்த்தனை குறைந்திருப்பதால், புழக்கத்தில் விடப்படும் பணத்தின் அளவு முன்பைவிட 10% குறைந்துள்ளது.
வரிக் கணக்குத் தாக்கல் அதிகரித்துள்ளது
வரிக் கணக்குத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 2016-17-ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், தனிநபர் வரிக் கணக்குத் தாக்கல் 22 லட்சமாக இருந்தது. ஆனால், 2017-18-ம் நிதியாண்டில், அதே ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை யிலான காலத்தில் தனிநபர் வரிக் கணக்குத் தாக்கல், 56 லட்சமாக உயர்ந்திருக்கிறது. ஆன்லைனில் வரிக் கணக்குத் தாக்கல் செய்வதும் அதிகரித்திருக்கிறது. இதனால் நமது ஜி.டி.பி-யில் வரியின் பங்கும் அதிகரித்திருக்கிறது.

ஏற்பட்ட பாதிப்புகள்
அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் சில பாதிப்புகளும் ஏற்பட்டன. செல்லாமல் போன பணத்தை வங்கியில் தந்து மாற்றிக் கொள்ள, மக்கள் படாதபாடுபட்டனர். இதில் ஏறக்குறைய 125-க்கும் அதிகமானவர்கள் இறந்துபோனது கொடுமை.
ஜி.டி.பி குறைந்தது
அரசின் இந்த நடவடிக்கைக்குப் பின், கடந்த ஓராண்டில் இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தியான ஜி.டி.பி 2 சதவிகிதத்தை இழந்துள்ளது. 2016-2017-ம் முதல் காலாண்டில் இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தி 7.9 சதவிகிதமாக இருந்தது. இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு தொழில் துறை பெரும் பாதிப்புக்குள்ளாகியது. 2017-2018-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5.7 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு மட்டு மில்லாமல், ஜி.எஸ்.டி-க்கும் முக்கியப் பங்கு இருக்கிறது.
வரி வருவாய் அதிகரிக்கவில்லை
வரிக் கணக்குத் தாக்கல் அதிகரித்திருந்தாலும், வரி வருவாய் அதிகரிக்கவில்லை. ஐந்தாண்டு களுக்கு முன்பிருந்த வரி வருவாயைக் காட்டிலும் குறைவாக இருக்கிறது. 2011-12-ம் நிதியாண்டில், வரி வருவாய் வளர்ச்சி விகிதம் 19 சதவிகிதமாக இருந்தது. ஆனால், 2017-18-ம் நிதியாண்டில் 16.3 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, கலால் வரி வருவாய் வளர்ச்சி விகிதம் 2015 செப்டம்பரில் 51 சதவிகிதமாக இருந்தது, ஜூன் 2017-ல் 0.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. தற்போது ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்துள்ளது. அடுத்த சில காலாண்டுகளுக்குப்பின் இந்த நிலை நிச்சயம் மாறும் என்று எதிர்பார்க்கலாம்.
வேலைவாய்ப்பும் குறைந்தது
தொழில் துறை வளர்ச்சி இல்லாததால் வேலை வாய்ப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன. ரொக்கப் பரிவர்த்தனைக் குறைந்ததால் முறைப்படுத்தப்படாத துறைகளில் 2017 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கே மாதங்களில் 15 லட்சம் வேலைவாய்ப்புகள் காணாமல் போயிருக்கின்றன.
இனி என்ன?
பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் சில நன்மைகளும், சில பாதிப்புகளும் ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனாலும், இந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதார மற்றும் நிதி சார்ந்த நடைமுறைகளை ஒழுங்குப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அரசு இந்த நடவடிக்கையோடு நிறுத்திவிடாமல் அடுத்தடுத்து திவால் சட்டம், பினாமி தடைச் சட்டம் போன்ற பல சட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது. எனவே, குறுகிய காலத்தில் நமது பொருளாதாரத்துக்கும், தொழில் துறைக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் சரியாகிவிடும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும்.
சில கஷ்டங்களை மக்கள் சந்திக்காமல் மாற்றங்கள் ஏற்படாது. அந்த வகையில், பணமதிப்பு நீக்கம் நல்ல பல விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்புவோமாக!
ஜெ.சரவணன்

மக்கள் பட்ட கஷ்டத்துக்குப் பலன் இன்னும் கிடைக்கவில்லை!
வ.நாகப்பன், பங்குச் சந்தை நிபுணர்
‘‘அரசு இந்த நடவடிக்கையை எடுப்பதற்குமுன் என்னென்ன காரணங்களைக் கூறியதோ, அவையெல்லாம் நிறைவேறியதா என்றால் இல்லை. தீவிரவாதத்துக்குச் செல்லும் பணம் தடுக்கப்பட்டிருக்கிறது என்று அரசு சொல்கிறது. ஆனால், அதற்கு என்ன ஆதாரம்? இந்த நடவடிக்கையில் இரண்டு வகையான நோக்கங்கள் இருக்கின்றன. ஒன்று, அரசியல்; இரண்டாவது, பொருளாதாரம். அரசியல் நோக்கங்கள் பா.ஜ.க-வுக்கு வெற்றியைத் தந்திருக்கின்றன. ஆனால், பொருளாதார நோக்கங்கள் இன்னும் வெற்றியடையவில்லை. இந்த நடவடிக்கையால் ஏழைகள்தான் பாதிக்கப்பட்டார்கள் என்றில்லை; நடுத்தட்டு, மேல்தட்டு மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். ஒட்டுமொத்த குடிமக்களும் பாதிக்கப்பட்டார்கள் எனில், அதற்கான பலன்களை மக்கள் அடைய வேண்டும். ஆனால், மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
சிறு, குறு தொழில்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசு என்ன செய்திருக்கிறது? 90 நாள் கடனுக்கான வட்டியையோ, அசலையோ தராமல் இருந்தால் அது வாராக் கடனாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பெட்டிக் கடை வைத்திருப்பவனுக்கும் இதில் மட்டும் ஒற்றுமை இருந்தால் போதுமா? கறுப்புப் பணம் வெளிவருகிறதோ இல்லையோ, பொருளாதாரம் மீண்டும் பழைய வளர்ச்சியை அடைய வேண்டுமெனில் அரசு அதற்கேற்ப திட்டங்களை வகுக்க வேண்டும். மக்கள் பட்ட கஷ்டத்துக்கான பலனை அவர்களுக்குத் திருப்பித் தர வேண்டும்.
‘பணமதிப்பு நீக்கம்: சொன்னதைச் செய்தாரா மோடி?’ வீடியோவைப் பார்க்க இந்த லிங்குக்குச் செல்லுங்கள்: https://youtu.be/m0DRduADN8g

அரசியல் ஆதாயம்தான் அதிகம்!
ஜோதி சிவஞானம், பொருளாதாரப் பேராசிரியர்
‘‘பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் எந்தக் கறுப்புப் பணமும் வெளிவராது என்று எல்லோருக்குமே தெரியும். ஆனாலும், அதைச் சொல்லி அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. அதையும் நாம் நம்பினோம். இப்போது ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், இந்த நடவடிக்கை வெற்றியடைந்ததாகச் சொல்லப்படுகிறது. தொழில் வளர்ச்சி இல்லை, முதலீடுகள் செய்யப்படுவதில் வளர்ச்சி இல்லை, வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வில்லை. சமீபத்தில் ஆங்கில செய்தித்தாள் ஒன்றில், பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து கிராமப்புறங்கள் இன்னும் மீளவே இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அரசு எடுக்கிற எல்லாத் திட்டங்களிலும் மக்களதான் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. அரசு, மக்களுக்காக என்ன செய்கிறது என்பது கேள்விக்குறி. அரசு ஒரு விஷயத்தைச் செய்யும்முன் பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, திட்டமிட்டுதான் செயல்படுத்த வேண்டும். ஆனால், பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்தபோது மத்திய அரசு அப்படிச் செய்தமாதிரி தெரியவில்லை.’’

நல்ல மாற்றங்கள் நடந்திருக்கின்றன!
அங்குர் தவான், முதன்மை முதலீட்டு அதிகாரி, புராப்டைகர் டாட்காம்.
‘‘பணமதிப்பு நீக்கம் ஆரம்பத்தில் பெரிதாக பலனைத் தராவிட்டாலும் நாளடைவில் குறுகிய கால மற்றும் நீண்ட காலப் பலன்களை அளித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். முக்கியமாக, ரியல் எஸ்டேட் துறையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வீடு வாங்க வேண்டும் என்று விரும்பிய நடுத்தர வர்க்க மக்கள், அவர்களுடைய பட்ஜெட்டில் வீடு வாங்கும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. 2016 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 54 ஆயிரம் யூனிட்டுகள் விற்பனையாகியிருந்தன. 2016 நவம்பர், டிசம்பரில் ரியல் எஸ்டேட் விற்பனை 40% சரிந்தது. இதனால் அனைத்து வங்கிகளும் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 1% வரை குறைத்தது. அதன்பிறகு ஜனவரி 2017-லிருந்து மீண்டும் வீடு விற்பனை சூடுபிடித்தது. 2017 ஜனவரி-மார்ச் காலாண்டில் 51 ஆயிரம் யூனிட்டுகள் விற்பனையாகின. எனவே, பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் பொருளாதாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.’’