
BIZ பாக்ஸ்

விவசாயிகள் அடையும் நஷ்டம் அதிகரிப்பு!
வருகிற 20-ம் தேதி, புது டெல்லியில் அகில இந்திய அளவிலான விவசாயிகள் பேரணி நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், முக்கியமான ஏழு விவசாய விளைபொருள்களின் விலை, குறைந்தபட்ச ஆதார விலையைவிடக் குறைந்ததால், விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்திருப்பதாக ஆல் இந்தியா கிஷான் சங்கார்ஷ் கோஆர்டினேஷன் கமிட்டி தெரிவித்துள்ளது. நெல்லுக்குக் குறைந்தபட்சம் தரவேண்டிய ஆதார விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,550 ஆகும். ஆனால், சந்தையில் சராசரியாக ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,397 மட்டுமே விலை போயிருக்கிறது. இதனால் நெல் உற்பத்தி செய்து விற்கும் விவசாயிகளுக்கு சுமார் ரூ.12,218 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மக்காசோளம், சோயாபீன், கடலை, பருத்தி, உளுத்தம் பருப்பு என ஏழு முக்கிய விளைபொருள்கள் மூலம் விவசாயிகள் அடைந்த நஷ்டம் ரூ.35,968 எனச் சொல்லப்படுகிறது. என்ன கொடுமை சார் இது!

தெரிந்தே ஏமாற்றினாரா விஜய் மல்லையா?
ஏறக்குறைய ரூ.9,000 கோடி வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்தாமல், லண்டனுக்குப் போய்விட்டார் விஜய் மல்லையா. ஏமாற்ற வேண்டுமென்கிற உள்நோக்கத்துடன் இப்படிச் செய்தார் என அவர்மீது வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அவரை விசாரிக்க நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் வந்தபாடில்லை. வருகிற 18-ம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராகக் கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த முறையும் அவர் ஆஜராகவில்லை எனில், தெரிந்தே ஏமாற்றினார் என்று அறிவிக்க வேண்டிய கட்டாயம் உருவாகுமாம். நாடு திரும்புவாரா விஜய்?

பிசினஸ் ஆப்டிமிஸத்தில் சறுக்கிய இந்தியா!
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில், தொழில் செய்வதற்கான சூழல் குறித்து உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட பட்டியலில் இந்தியா 30 இடங்களைத் தாண்டி 100-வது இடத்தைப் பிடித்து, எல்லோரது பாராட்டையும் பெற்றது. இந்த நிலையில், தொழில் செய்வதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தும் பிசினஸ் கான்ஃபிடன்ஸ் தர வரிசைப் பட்டியலை, கிரான்ட் த்ரோன்டன் நிறுவனம் ஒவ்வொரு காலாண்டிலும் வெளியிடுகிறது. சமீபத்தில் வெளியான இந்தப் பட்டியலின்படி, இரண்டாவது இடத்திலிருந்து ஏழாவது இடத்துக்குச் சறுக்கியிருக்கிறது இந்தியா. முதலிடத்தில் பின்லாந்தும், இரண்டாமிடத்தில் நெதர்லாந்தும் உள்ளன. பிலிப்பைன்ஸ், ஆஸ்திரியா, நைஜீரியா நாடுகள் இந்தியாவுக்கு முந்தைய இடங்களில் உள்ளன.

சீனாவுடன் அமெரிக்கா மெகா ஒப்பந்தம்!
சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் சமீபத்தில் தேர்வானபின் அமெரிக்கத் தொழிலதிபர்கள் அங்கு சென்று புதிய பிசினஸ் ஒப்பந்தங்களை மேற்கொண்டனர். அவர்களைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவுக்குச் சென்று, அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து 250 பில்லியன் டாலர் மதிப்பில் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.16,25,000 கோடி) மெகா ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டுள்ளார். மோடிஜி, அடுத்து சீனா ஜியைச் சந்திக்கக் கிளம்புவாரா?
குறையும் தங்கம் இறக்குமதி!
இந்த அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் வெளிநாடுகளிலிருந்து நாம் செய்யும் தங்கம் இறக்குமதி சுமார் 25% குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும்போது தங்கம் இறக்குமதி அதிகம் என்றாலும், இந்த ஆண்டின் கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவுதான். இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 236 டன் தங்கமும், இரண்டாம் காலாண்டில் 271 டன் தங்கமும் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், மூன்றாம் காலாண்டில் 175 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி ஆகுமாம்!

இன்ஃபோசிஸுக்கு ‘நோ’ சொன்ன வெமூரி!
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவிக்குப் போட்டியிட விரும்பவில்லை என்று சொல்லியிருக்கிறார் அசோக் வெமூரி. காண்டூவன்ட் (Conduent) நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கும் வெமூரி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் 2014 வரை இருந்தவர். எனவே, அவரை அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக ஆக்க தற்போதைய தலைவரான நந்தன் நிலகேணி முயற்சி செய்தார்.
ஆனால், இப்போது இருக்கும் நிறுவனத்தை முன்னேற்றுவதில், தான் உறுதியாக இருப்பதால், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பதவியைப் பெற விரும்பவில்லை என்று சொல்லிவிட்டார் வெமூரி.
இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்குத் திறமையானதொரு ஆள் கிடைக்கும் வரை நந்தன் நிலகேணிக்கு நிம்மதி இல்லை!
தொழில் முதலீட்டில் முதலாவது இடத்தில் கர்நாடகா!
ரூ.1,47,625 கோடி மதிப்பில் தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கான புரபோசல்களைப் பெற்று இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கிறது கர்நாடகா. குஜராத் ரூ.65,741 கோடி, மகாராஷ்ட்ரா ரூ.25,018 கோடி, ஆந்திரா ரூ.24,013 கோடி, தெலங்கானா ரூ.12,567 கோடி தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கான புரபோசல்களை அளித்திருக்கிறது. இந்த விஷயத்தில் தமிழகமும் கவனத்துடன் இருப்பது நல்லது!
“எல்லா இன்ஷூரன்ஸ் பாலிசிகளுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.”
- ஐ.ஆர்.டி.ஏ.ஐ