
சித்தார்த்தன் சுந்தரம்
அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட் - இது, சீனாவை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஆன்லைன் மின்வணிக (இ-காமர்ஸ்) நிறுவனமாகும். 1999 - ம் ஆண்டு ஜாக் மா என்கிற ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இன்றைக்கு ஆன்லைன் வர்த்தக உலகின் கோலியாத்தாக வலிமை பெற்றிருக்கிறது.

ஆன்லைன் வர்த்தகத்தில் இ-காமர்ஸ் நிறுவனங்களிடையே கடும் போட்டி இருப்பது நாம் அறிந்த விஷயம்தான். ஃப்ளிப்கார்ட்டின் `பிக் பில்லியன் டே’, அமேசான் இந்தியாவின் `க்ரேட் இண்டியன் சேல்’ போல, அலிபாபாவும் 2009-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11-ம் தேதியை `ஒற்றையர் நாளாக’ (திருமணமாகாதவர்கள் தினம்) கொண்டாடத் தீர்மானித்தது. வருடத்தின் மற்ற நாள்களைவிட இந்த நாள் மட்டும் பொருள்களின்மீதான தள்ளுபடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.
கடந்த 7 ஆண்டுகளைப்போல இந்த ஆண்டும் நவம்பர் 11 ஆரம்பித்ததிலிருந்து, நள்ளிரவு 12 மணிவரை, அதாவது 24 மணிநேரத்தில் இந்த நிறுவனம் விற்ற பொருள்களின் மதிப்பு சுமார் 25.4 பில்லியன் டாலர்கள் (ரூ.1,65,100 கோடி). இந்த நாள் ஆரம்பித்த முதல் இரண்டு நிமிடங்களில் மட்டும் விற்பனை 1 பில்லியன் டாலரைத் தொட்டது. முதல் ஒரு மணி நேரத்தில் அது 10 பில்லியன் டாலருக்கு எகிறியது. இந்தியாவில் இயங்கி வரும் ஃப்ளிப்கார்ட், அமேசான், ஸ்நாப்டீல் ஆகிய மூன்று ஆன்லைன் வணிகத்தளங்களின் மூலம் கடந்த ஆண்டு முழுவதும் விற்ற பொருள்களின் மதிப்பு சுமார் 7.9 பில்லியன் டாலர்கள்தான்.
2016-ம் ஆண்டு இந்தக் குறிப்பிட்ட தினத்தில் அலிபாபா விற்ற பொருள்களின் மதிப்பைவிட இது சுமார் 39 சதவிகிதம் அதிகமாகும். இவ்வருடம் சுமார் 140,000 பிராண்டுகளின் 15 மில்லியன் பொருள்கள் இந்த இணையதளம் மூலம் தள்ளுபடியில் விற்பதற்குப் பட்டியலிடப்பட்டிருந்தது.
அலிபாபா ஒரு வருடம் முழுவதும் விற்பனை செய்யும் (சுமார் 502 பில்லியன் டாலர்) பொருள்களின் மதிப்பில், இந்த ஒரு நாள் மட்டும் விற்பனை செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு சுமார் 20 சதவிகிதமாகும்.
இதுகுறித்து இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்ப்போம். 1993-ம் ஆண்டு நான்ஜிங்க் (Nanjing) பல்கலைக்கழகத்தில் `ஒற்றையாக’ (பேச்சிலர்ஸ்) இருப்பவர்களின் நலன் கருதி இந்த நாள் கொண்டாடப் பட்டது. அதை 2009-ம் ஆண்டிலிருந்து அலிபாபா தனது வணிக நோக்கத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தது.

இந்த ஒரு நாள் விற்பனையின் மதிப்பு ஐஸ்லேண்ட் அல்லது கேமரூன் நாடுகளின் ஜி.டி.பி–யைவிட அதிகம். கடந்த ஆண்டு இதேநாளில் விற்பனை செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பை, இந்த ஆண்டு 13 மணிநேரங்களில் தொட்டது.
இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க ஒரு பொருளாகத் தானியத்திலிருந்து தயாரிக்கப்படும் `பெய்ஜு’ ஆல்கஹால் விற்கப்பட்டது. 11,111 யுவான் அல்லது 1,700 அமெரிக்க டாலரைச் செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் இந்த ஆல்கஹால் வீடு தேடி வருமாம்.
2016-ம் ஆண்டில் உலக அளவில் மிகப்பெரிய ஷாப்பிங் தினங்களாகக் கருதப்பட்டவை அமெரிக்காவின் `Black Friday.’ இதன்மூலமான விற்பனை 3.3 பில்லியன் டாலர். அமெரிக்காவின் `Cyber Monday’ மூலமான– விற்பனை 1.9 பில்லியன் டாலர். அமேசானின் `Prime Day’ மூலமான விற்பனை 525 மில்லியன் டாலர். முந்தைய ஆண்டுகளில் அலிபாபாவின் `Singles Day’ மூலமான விற்பனை 17.8 பில்லியன் டாலர். இவையெல்லாவற்றையும் இந்த ஆண்டு சிங்கிள்ஸ் டே விற்பனை அதகளம் செய்துவிட்டது.
இணையத்தில் விற்பனை ஆரம்பமாவதற்கு நான்கு மணிநேரத்துக்கு முன்பாக உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலருடன் ஜாக் மா கலந்துகொண்ட கலைநிகழ்ச்சி அலிபாபா வீடியோ சர்வீஸ் மூலமும், சீனாவைச் சேர்ந்த மூன்று தொலைக்காட்சி நிலையங்கள் மூலமும் ஒளிபரப்பப்பட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது.

பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் ஷாண்டோங்க் (Shandong) பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, ஏறக்குறைய 4,00,000 வாத்து முட்டைகளை அன்றைய தினம் அலிபாபா மூலம் விற்றிருக்கிறார். அன்று நடந்த பரிவர்த்தனையில் சுமார் 90 சதவிகிதம் மொபைல் போன்மூலம் நடந்திருக்கிறது. 2016-ம் ஆண்டு இது 82 சதவிகித மாகவும், 2015-ம் ஆண்டு 69 சதவிகிதமாகவும் இருந்திருக்கிறது. இதில் பட்டியலிடப்பட்ட 167 வணிக நிறுவனங்கள் தலா 15.1 மில்லியன் டாலருக்கும், 17 நிறுவனங்கள் தலா 75.4 மில்லியன் டாலருக்கும், 6 நிறுவனங்கள் தலா 150.9 மில்லியன் டாலருக்கும் பொருள்களை விற்றிருக்கிறார்கள்.
விற்பனை நடந்த 24 மணிநேரத்தில், மிகவும் அதிகமாக விற்பனை நடந்த சமயத்தில் வினாடிக்கு 2,56,000 ஆர்டர்களை நிறுவனத்தின் பிராசஸர் கையாண்டிருக்கிறது. 24 மணிநேரத்தில் இது கையாண்ட ஆர்டர்கள் 812 மில்லியன். இதனுடைய துணை நிறுவனமான `அலி பே (Ali Pay - பணம் செலுத்துவதை பிராசஸ் செய்யக்கூடியது) சுமார் 1.5 பில்லியன் (150 கோடி) பரிவர்த்தனைகளைக் கையாண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட அபரிமிதமான நுகர்வுக்கும், விற்பனைக்கும் இந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜோசப் சாய் (Joseph Tsai) சொல்லும் காரணங்கள்...
1. நடுத்தர வகுப்பைச் சேர்ந்த 300 மில்லியன் மக்களின் வருமான அதிகரிப்பு.
2. 1,00,000 ஆஃப்லைன் கடைகளை `ஸ்மார்ட் கடைகளாக’ மாற்றி வாடிக்கையாளர்கள் பொருள்களைத் தேர்வு செய்யவும் அதன்மூலம் ஆர்டர் செய்யவும் ஏற்பாடு செய்தது.
3. `Ling Shou Tong’ (இதன் அர்த்தம் `கனெக்ட் ரீடெயில்’) என்கிற செயலியை உருவாக்கி அதன் மூலம் 6 லட்சம் கடைகளை இணைத்தது.
நம்மை கிறங்கடிக்கக்கூடிய அலிபாபாவின் இந்த ஆண்டு `ஒற்றையர் நாள்’ விற்பனைச் சாதனை 2018-ல் தோற்கடிக்கப்படலாம். ஆனால், அதுவும் அலிபாபாவினால்தான் முடியும்.