
ப.முகைதீன் சேக்தாவூது
ஓய்வுக்கால நிதித் திட்டமிடல் குறித்த அவசியத்தை மீண்டும் நமக்கு உணர்த்தியுள்ளன சமீபத்தில் வெளியான ஐந்து தகவல்கள். அவற்றுள் முதன்மை யானது, ‘ஏழாவது சம்பள கமிஷனிடம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக் கொடை, விடுப்பு நிலுவையின் அளவு, பயணச் சலுகை, மருத்துவ வசதி, படிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், பொது வருங்கால வைப்பு நிதி (General Provident Fund) குறித்து எந்தவொரு கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் முதல் தகவல்.

நம்மில் 75 சதவிகிதத்தினர், நிதி நிர்வாகம் பற்றிய அடிப்படையை அறிந்துகொள்ளாமலே இருக்கிறார்கள் என்பதும், நமது உழைக்கும் மக்களில் 7.4 சதவிகிதத்தினர் மட்டுமே ஓய்வூதியத் திட்டங்களுக்கு உட்பட்டுள்ளனர் என்பதும் இரண்டாவது மற்றும் மூன்றாவது தகவல்கள்.
அஞ்சலகங்களில் மட்டுமே பராமரிக்கப்பட்டுவந்த தேசிய சேமிப்புப் பத்திரம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் போன்றவற்றை வங்கிகளிலும் கிடைக்கச் செய்துள்ளதும், தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளதும் நமது சேமிப்பில் அக்கறை கொண்டு, அரசு மேற்கொண்டுள்ள நான்காவது மற்றும் ஐந்தாவது செய்திகள். இந்த ஐந்து செய்திகளும் நமது ஓய்வுக்கால நிதி நிர்வாகம் தொடர்பானவையே.
பொன்முட்டை
நமக்குக் கிடைத்துள்ள பொக்கிஷம் எத்தனைச் சிறப்புமிக்கது என்பதைத் தெரிந்துகொள்ளாமலே நம்மில் பலர் காலத்தைத் தவறவிட்டுவிடுகிறோம். பொது வருங்கால வைப்பு நிதியும் அத்தகைய பொக்கிஷம் என்பது பலருக்கும் தெரியாமல் இருப்பது வருத்தத்தையே அளிக்கிறது.
31.3.2003 வரை அரசுப் பணிக்கு வந்தவர்களுக்கு மட்டுமே பொது வருங்கால வைப்பு நிதி சந்தாதாராக வாய்ப்பு இருந்தது என்கிற அடிப்படையில் பார்த்தால், மேற்படி வைப்பு நிதியில் இருந்த சந்தாதாரரின் மிகக் குறைந்த வயது இன்றையத் தேதியில் 35-ஆக இருக்கக்கூடும். அதாவது, வேலையில் சேரும்போது வயது 20. இந்தத் திட்டத்தில் சேர்ந்தபிறகு நிறைவு பெற்றது 15 ஆண்டுகள். ஆகமொத்தம், 35 வயது.
அவர் ஒரு பட்டதாரி ஆசிரியராக ஜனவரி 2003-ல் பணியில் சேர்ந்திருப்பார் எனில், அப்போதைய அவரது ஊதியம் + அகவிலைப் படி ரூ.7,950-ஆக இருந்திருக்கும். அவர், தன் வைப்புநிதிச் சந்தாவாக ரூ.1,000 செலுத்தியிருப்பார். அவர் அப்போது செலுத்திய ஒரு மாதச் சந்தாவின் முதிர்வுத் தொகை, அவர் ஓய்வுபெறும் நாளில் ரூ.18,625-ஆக இருக்கும். அப்படியானால் 2003-ம் ஆண்டு முழுதும் 12 மாதங்களுக்கு அவர் செலுத்திய சந்தா தொகைக்கான முதிர்வுத் தொகையின் மதிப்பு ரூ.2,23,500.
இது, அவர் பணியில் சேர்ந்த 2003-ம் ஆண்டில் தரப்பட்ட 8 சதவிகிதக் கூட்டு வட்டியின் படியான கணக்கீடு. பின்னர் வட்டி விகிதம் படிப்படியாக வளர்ந்து, 2012-13-க்கு 8.8 சதவிகிதமானது. 1.4.2016-க்குப் பிறகு குறைய ஆரம்பித்து, நடப்புக் காலாண்டான அக்டோபர் 2017-டிசம்பர் 2017-க்கு குறைக்கப்படாமல் 7.8 சதவிகிதத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

அவர் பணியில் சேர்ந்த மூன்றாவது ஆண்டில் அதாவது, 2006-ல் இவரது சம்பளம் இருமடங்காக உயர்ந்து, 15,900 ரூபாயாக ஆகியிருக்கும். இதற்கான வைப்பு நிதி மாதச் சந்தா ரூ.2,000. இது, 35 ஆண்டுகள் கழித்து அவர் ஓய்வுபெறும்போது, ஆண்டு முதிர்வுத் தொகையாக 3,54,840 ரூபாயைக் கிடைக்கும்.
தற்போது அதாவது, அவர் பணியில் சேர்ந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரது சம்பளம் எட்டு மடங்குக்கு மேல் உயர்ந்து ரூ.63,210-ஆக இருக்கும். இவரது வைப்பு நிதி மாதச் சந்தா ரூ.8,000 அளவுக்கு உயரலாம். இன்னும் 23 ஆண்டுகள் கழித்து ரூ.8,000 மாதச் சந்தா தரப் போகும் ஆண்டு முதிர்வுத் தொகை ரூ.5,63,666- ஆக இருக்கும்.
இப்படிக் கணக்கிட்டுக்கொண்டே சென்றால், அவர் ஓய்வுபெறும்போது, பொது வருங்கால வைப்பு நிதி தரக்கூடிய முதிர்வுத் தொகை, அவரது பணிக்கொடை அளவுக்குச் சமமானதாக இருக்கும். குறைந்தபட்ச சந்தா 12% என்கிற வரம்பை உயர்த்தி, கூடுதல் சதவிகிதத் தொகையை மாதந்தோறும் வைப்பு நிதியில் செலுத்தி வந்திருக்கும்பட்சத்தில், பொது வருங்கால வைப்பு நிதியானது பல பொன் முட்டைகளைத் தரக்கூடும்.
ஈடு இணையற்ற சேமிப்பு
பொது வருங்கால வைப்புநிதியின் சிறப்பம்சங்கள் அளப்பரியவை. அவை...
* சேமிப்புத் தொகை அரசின் பொதுக்கணக்கில் உள்ளது இணையற்ற பாதுகாப்பு.
* ஒரு சேமிப்புக் கணக்கு (Savings Bank Account) போல் பணம் எடுக்கவும், செலுத்தவுமான வசதி கொண்டது. ஆனால், இதே வசதிகொண்ட எந்த வொரு சேமிப்புத் திட்டமும் (தற்போதைய நிலையில்) 7.8% வட்டியை வழங்கவில்லை.
* லட்ச ரூபாயைக்கூட மாதச் சந்தாவாகச் செலுத்தலாம்.
* வட்டிக்கு வரம்பு இல்லாத வரிச் சலுகை
வட்டிக் கணக்கீடு
எந்தவொரு வைப்பு நிதியிலும், தொகை செலுத்தப்பட்ட தேதியிலிருந்துதான் வட்டி கணக்கிடப்படும். பொது வருங்கால வைப்பு நிதி இந்த வகையில் எங்கும் இல்லாத சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது. அதாவது, ஓர் ஊழியரின் ஊதியமானது, உதாரணமாக நவம்பர் 2017-க்கு உரியது என்று வைத்துக்கொள்வோம். அந்த ஊழியர் விடுப்பிலிருந்த காரணத்தாலோ, இட மாறுதலினால் வேறு ஊரில் இருப்பதாலோ, தற்காலிகப் பணிநீக்கம் காரணமாகவோ, அடுத்தடுத்த மாதங்களில் அவரது சம்பளம் வழங்கப்படக்கூடும். ஆனால், அந்தச் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, அந்தச் சம்பளம் எந்த மாதத்துக்கு உரியதோ, அந்த மாதத்தில் இருந்தே கணக்கிடப்படும்.
குறைபாடு
குறையென்று ஏதுமின்றி, நிறைமிகுந்த திட்டத்தைத் தந்துள்ளது அரசு. அதில் குறை இருக்குமெனில், அது சந்தாதாரர் தாமே உருவாக்கிக்கொள்வதாகத்தான் இருக்கும். அரசு ஊழியர் அடிக்கடி கடன் படக்கூடாது; அதிலும் இரண்டு வருடங்களுக்குள் திருப்பித்தர முடியாத அளவுக்குக் கடன்படக் கூடாது என்பது விதிமுறை. இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சலுகைதான் பொது வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் பெறும் சலுகை.
மருத்துவம், கல்வி போன்ற தவிர்க்க முடியாத செலவுகளுக்கு வைப்பு நிதியில் முன்பணம் பெற்றுக்கொண்டு, அதனை மூன்று வருடங்களில் 36 தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம் என்பதே சலுகை. இத்துடன் நில்லாமல், நிதித் தேவை இருப்பின் ஆறு மாதங்களுக்கொரு முறை முன்பணம் பெறலாம்.
இந்தச் சலுகையை நாம் தவறாகப் பயன்படுத்தினால், நஷ்டம் வேறு யாருக்குமல்ல, நமக்குத்தான். எப்படியெனில், 1,08,000 ரூபாயை மாதம் ரூ.3,000 வீதம் 36 தவணைகளில் செலுத்துவ தாக விண்ணப்பித்து முன்பணம் பெற்றுவிட்டு, அடுத்த ஆறு மாதங்களில் வெறும் ரூ.18,000 மட்டுமே திரும்பச் செலுத்தினால், மீதமுள்ள ரூ.90,000 நம்மிடம் தேங்கியிருக்கும். இப்படித் தொடர்ந்து செய்தால், நமது ஓய்வுக்காலத்தில் நமக்குத் தேவையான முதிர்வுத்தொகை நிச்சயம் கிடைக்காது.
‘செலவுக்கு அவசியம் ஏற்படும்போது, வைப்பு நிதியில் முன்பணம் வாங்காமல் வேறென்ன செய்வது?’ என்ற கேள்வி நூறு சதவிகிதம் நியாயம் தான். அதேசமயம், செலவினங்களில் தவிர்க்கக் கூடியதும் உண்டு. செலவானது நிர்பந்தம் செய்தால் தவிர சேமிப்பைத் தொடக்கூடாது என்பது அடிப்படை நியதி. 1.4.2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு, அவர்களது ‘பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் முன்பணம் பெறும் வசதியில்லை’ என்பதையும் கருத்தில் கொண்டுவிட்டால் முன்பணம் பெறுவதை நம்மால் நிச்சயம் தவிர்க்க முடியும். குறைந்தபட்சம் குறைக்கவாவது முடியும். ‘அவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. எங்களுக்கு ஓய்வூதியம் இருக்க பயமேன்’ என்று நினைத்தால், அது தவறான கணிப்பாகவே இருக்கும்.
ஏனென்றால், அவர்கள் செலுத்தும் பங்களிப்பு ஓய்வூதியச் சந்தாவுக்கு இணையாக அரசும், தனது பங்கைச் செலுத்துகிறது. அவ்வாறு இருபுறமும் சந்தா செலுத்தப்பட்டு, நடுவில் திரும்ப எடுக்கப் படாமல் பெரும் விருட்சமாக வளர்ந்து வரும். சொல்லப்போனால், இன்றைய பொது வருங்கால வைப்பு நிதியின் மிகவும் இளைய சந்தாதாரர் ஓய்வு பெறும்போது பெறக்கூடிய ஓய்வூதியப் பலன்களுக்கு இணையாக, பங்களிப்பு ஓய்வூதிய நிதியமும் பணப் பலன்களைத் தரலாம்.
வாழ்க்கை என்பது காலம் சார்ந்தது. காலம் என்பது மாற்றங்களைக் கொண்டுவருவது. பெருகி வரும் மூத்த குடிமக்கள் அனைவருக்கும் பலன் தரும் வகையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் (Social Security Schemes) அரசால் சீரமைக்கப்படலாம். ஓய்வூதியமும் சமூகப் பாதுகாப்புத் திட்டம் சார்ந்ததுதான்.
எந்தவொரு சூழலிலும் நம் சொந்தச் சேமிப்பும், முதலீடுமே நமக்கு முதன்மையான நிதிப் பாதுகாப்பு. எனவே, பொது வருங்கால வைப்பு நிதியைப் போற்றிப் பராமரிப்பது நம் கடமை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்!
வட்டி விகிதம்!
பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 1999-2000 வரை 12 சதவிகிதமாக இருந்தது. அது மட்டுமன்றி மூன்று ஆண்டுகள் நிதியில் முன்பணம் பெறாமல் இருப்போர்க்கு ஒரு சதவிகிதம் ஊக்க வட்டி தரப்பட்டது. இதேபோல் இனி உயரலாம்.