நடப்பு
Published:Updated:

தமிழ்நாட்டில் ஆன்லைன் பத்திரப்பதிவு பின்னடைவைச் சந்தித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ஆன்லைன் பத்திரப்பதிவு பின்னடைவைச் சந்தித்தது ஏன்?
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ்நாட்டில் ஆன்லைன் பத்திரப்பதிவு பின்னடைவைச் சந்தித்தது ஏன்?

ஆ.ஆறுமுக நயினார், முன்னாள் கூடுதல் பதிவுத் துறை தலைவர்

“எங்கிருந்தும் பத்திரம் பதிவு செய்யலாம், எந்தப் பத்திரப் பதிவு அலுவலகத்திலும் பதிவு செய்யலாம்” என்பதே ஆன்லைன் பத்திரப் பதிவின் தாரகமந்திரமாகும். பத்திரப் பதிவை எளிமைப்படுத்தும் நோக்குடனும், மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, ஊழலற்ற இந்தியா என்ற முழக்கத்தை நிறைவு செய்யும் விதத்திலும்  தமிழகத்தில் பத்திரப் பதிவை இணையமயமாக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பத்திரப் பதிவை இணையமயமாக்கும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பு டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப் பட்டது. அதன்படி, இதற்குரிய மென்பொருளை உருவாக்குவது முதல் இணையமயமாக்கத் தேவையான கணினி வன்பொருள்களை நிறுவுவது வரை முழுப் பொறுப்பையும் அந்த நிறுவனமே கவனித்துக்கொண்டது.    

தமிழ்நாட்டில் ஆன்லைன் பத்திரப்பதிவு பின்னடைவைச் சந்தித்தது ஏன்?

தமிழகத்தை மொத்தம் ஒன்பது மண்டலங்களாகப் பிரித்து, மண்ட லத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் மொத்தம் ஒன்பது அலுவலகங்களில் இந்த ஆன்லைன்  பத்திரப் பதிவு, சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் மொத்தம் 480 சார்பதிவாளர் அலுவலகங்கள் இருக்கின்றன. அவற்றில், ஒன்பது அலுவலகங்களில் மட்டும் கொண்டு வரப்பட்ட ஆன்லைன்  பத்திரப் பதிவானது, முழுமையாகச் செயல்படுத்தப்பட்டு, அதன் நிறை குறைகளைக் கண்டறியும் முன்னரே, மேலும் 150 அலுவலகங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்த 150 அலுவலகங்களில் நிறைய நடைமுறைச் சிக்கல்களைப் பொது மக்கள் சந்திக்கத் தொடங்கினார்கள்.

முன்பிருந்த பழைய பதிவு முறையில், பத்திரப் பதிவு செய்ய ஆகும் நேரத்தைவிட, இந்த இணைய வழிப் பத்திரப்பதிவு முறை, அதிக நேரம் பிடித்தது. காரணம் என்ன வெனில், பழைய முறையில், ஒரே ஒரு முறை மட்டும் பத்திரங்கள் எழுதி, பதிவு செய்யப்பட்டது. ஆனால், ஆன்லைன் முறைக்கு மாறியபின், அனைத்து பத்திரங்களும் இணையம் வழியாக முழுமையாகப் பதிவு செய்யப்படுவதுடன், இரண்டாவதாக பழைய முறைப்படி, காகித நகல்களாகவும் பதிந்து பாதுகாக்கப்படுகிறது. ஆக, இரட்டைப் பத்திரப்பதிவு நடக்கிறது. எனவே, இந்த முறையில் ஒரு பத்திரம் பதிவேற்றி முடிக்கவே மூன்று முதல் ஐந்து மணி நேரம் ஆகிறது.

பேருந்து, ரயில் பயணச்சீட்டுக்காக இணையத்தின் வழியாக முன்பதிவு செய்யும்போது சில நிமிடங்களிலேயே அந்த வேலை முடிந்துவிடுகிறது. எல்லா சேவைகளையும் இணைய மயமாக்குவதன் நோக்கமே நேரத்தை மிச்சப்படுத்தத்தான். ஆனால், ஆன்லைன் பத்திரப் பதிவு விஷயத்தில் இது தலைகீழாக மாறிவிட்டது. பழைய முறையைவிட புதிய ஆன்லைன் பத்திரப் பதிவுக்கு அதிக நேரம் ஆகிறது.

பழைய பத்திரப் பதிவு முறையில், பத்திரத்தில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமெனில்,  சார் பதிவாளர் அதனைச் சரிபார்த்தபின்  தேவையான திருத்தங்களை மேற்கொள்வார். ஆனால், இணையவழிப் பத்திரப் பதிவில், ஆவணங்கள் அனைத்தையும் அப்லோடு செய்தபிறகுதான் சார்பதிவாளர் அதனைச் சரிபார்த்துத் தேவையான திருத்தங்களைச் சொல்லும்படி உள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் பத்திரப்பதிவு பின்னடைவைச் சந்தித்தது ஏன்?பின்னர் அந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டு, மீண்டும் ஒருமுறை ஆவணங்கள் அப்லோடு செய்யப்படும். இதனால், மேலும் காலதாமதம் ஏற்பட்டது. பத்திரப் பதிவுக்காக வரும் முதியவர்களும், குழந்தைகளோடு வரும் பெண் களும், கர்ப்பிணிப் பெண்களும் பல மணி நேரங் களாக சார்பதிவாளர் அலுவலக வாசலிலும், பத்திர எழுத்தர் அலுவலகங்களிலும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

ஆன்லைன் பத்திரப் பதிவில் இருக்கும் இன்னொரு சிக்கல் என்னவென்றால், பத்திரத்தில் கையெழுத்து போடும் சாட்சிகளாக இருவர் இருப்பார்கள். அதேபோல, அலுவலக சாட்சியாக இருவர் இருப்பார்கள். அலுவலக சாட்சிகளில் யாரேனும் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக வரவியலாமல் போனால், அவருக்கு மாற்றாக இன்னொருவர் சாட்சிக் கையெழுத்து போட பழைய முறையில் அனுமதிப்பார்கள். ஆனால் ஆன்லைன் முறையில், ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளவர்கள் சாட்சிக் கையெழுத்துப் போட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே, உடல்நலக்குறைவோடு இருந்தாலும் சாட்சிக் கையெழுத்துப்போட வந்தேயாக வேண்டும்.   

தமிழ்நாட்டில் ஆன்லைன் பத்திரப்பதிவு பின்னடைவைச் சந்தித்தது ஏன்?

இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம், பழைய பத்திரப் பதிவு முறையில் ஆவண எழுத்தர்களால் ஆவணம் தயாரிக்க மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், இணையமுறையில் ஆவண எழுத்தர்கள், ஆவணம் தயாரிப்பதோடு, ஆவணத்தை அப்லோடு செய்வது, பிழை திருத்திய ஆவணங் களை அப்லோடு செய்வது போன்ற பணிகளையும் சேர்த்துக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இப்படி அப்லோடு செய்வதற்கான கட்டணம், தமிழக அரசினால்  இன்னமும் வரையறுக்கப்படவில்லை. எனவே பொது மக்கள் கூடுதலாகப் பணத்தை   செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி யிருக்கின்றனர்.

பத்திரப்பதிவு என்பது எதிர்காலத்தில் எந்த வில்லங்கமும் இல்லாதபடிக்கு நடக்க வேண்டிய விஷயம். எனவே, இந்த விஷயத்தில் அரசாங்கம் கூடுதல் எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது!

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு!

நா
ட்டிலுள்ள ஒவ்வொரு துறையும் இணையவழிப் பயன்பாட்டுக்கு மாறும்போது காகிதங்கள் பயன்படுத்தப்படுவது அறவே நீக்கப்படும். ஆனால், பத்திரப்பதிவு இணையமயமாக்கப்பட்டபின்னும், பழைய முறைப்படிக் காகிதத்தில் பத்திரப்பதிவு செய்வதும் தொடர்வதால் ஆயிரக்கணக்கான டன் காகிதங்கள் வீணடிக்கப்படுகின்றன. இப்படிக் காகிதங்கள் பயன்படுத்தப்படுவது, பசுமைச்சூழல் பாதுகாப்புக்கு எதிரான செயலாகும். உலகம் முழுவதும் ‘பசுமையைக் காப்போம், காகிதப் பயன்பாடு ஒழிப்போம்’ என்று குரல் எழுப்பப்படும் சூழலில், காகிதங்களைப் பத்திரப்பதிவுக்குப் பயன்படுத்துவது, சுற்றுச்சூழலுக்கு ஊறுவிளைவிக்கும் செயலாகும்!

உண்மையில் ‘ஸ்டார்’ தானா?

150
அலுவலகங்களில் நடைபெற்றுவந்த இணையவழிப் பத்திரப்பதிவை, மொத்தமுள்ள 480 அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தினார்கள். ஏற்கெனவே பத்திரப்பதிவு தாமதமாக நடந்துவந்த நிலையில், ‘ஓவர்லோடு’ பிரச்னையால் அடிக்கடி ‘சர்வர்டவுன்’ ஆகத் தொடங்கியது. கணினி இயக்கம் அடிக்கடி தடைபட்டதால், ஆவணங்களைக் கணினியில் ஏற்றுவதில் நிறைய பிரச்னைகள் ஏற்பட்டன. இத்தகைய குற்றச்சாட்டுகள், குழப்பங்களையடுத்து, 480 அலுவலகங்களில் இருந்த ஆன்லைன் பத்திரப்பதிவு முறை, மீண்டும் 150 இடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் பத்திரப் பதிவை ஆங்கிலத்தில் STAR என்ற வார்த்தையில் குறிப்பிடுவார்கள். Simplified and Transparent Administration of Registration என்பதே இதன் விரிவாக்கம். உண்மையில் இதன் விரிவாக்கமானது, Stressful and Torturous Administration of Registration என்று இருப்பதே பொருத்தமாக இருக்கும். இந்த நிலையை மாற்ற இந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாகக் களத்தில் இறங்கி, பிரச்னைகளைக் களைய வேண்டும்!