
நாணயம் புக் செல்ஃப்
புத்தகத்தின் பெயர் : புத்தா அட் வொர்க் (Buddha at Work)
ஆசிரியர் : கீதாஞ்சலி பண்டிட் (Geetanjali Pandit)
பதிப்பாளர் : Hachette India

வேலை பார்க்கும் சூழலில் ஏற்படும் பிரச்னைகளை எப்படி எதிர்கொண்டு ஜெயிப்பது, மகிழ்ச்சியான பணியிடச் சூழலை எப்படி அமைத்துக்கொள்வது என்று சொல்லும் புத்தகம்தான் ‘புத்தா அட் வொர்க்.’ கீதாஞ்சலி பண்டிட் என்பவர் தன் சொந்த வாழ்க்கை அனுபவங்களைச் சுவாரஸ்யமாக இந்தப் புத்தகத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
‘‘எல்லா இந்திய குழந்தைகளைப் போலவே, நானும் வளர்க்கப்பட்டேன். கஷ்டப்பட்டுப் படி, நல்ல மார்க் வாங்கு, போட்டித் தேர்வுகளை எழுது, ஒரு நல்ல வேலையைப் பெற்று செட்டிலாகி விடு என்பதே அந்தத் தாரக மந்திரம். செட்டிலாவது என்றால் சும்மாவா? நன்றாக ஆங்கிலம் பேசத் தெரிய வேண்டும், இங்கிதமான ஆளுமை (pleasing personality) வேண்டும் எனப் பல தேவைகள். ஆனால், இவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு பிழைக்க முடியாது’’ என்று காரசாரமாக ஆரம்பிக்கிறார் ஆசிரியை.
அமெரிக்காவில் பார்த்துவந்த நல்ல வேலையை சிலபல சொந்தக் காரணங்களுக்காக (ஆசிரியரின் அம்மாவுக்கு ஏற்பட்ட புற்றுநோய் உள்பட) விட்டுவிட்டு, அந்தப் பிரச்னைகளையெல்லாம் ஒருவழியாகத் தீர்த்தபின் மீண்டும் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தார் ஆசிரியர். ஆனால், வேலை கிடைக்கவில்லை.
டெல்லியில் ஒரு நிறுவனத்தின் நேர்காணலை முடித்தார். இறுதியாக அந்த நிறுவனத்தின் எம்.டி-யைச் சந்தித்தார். ‘‘என்ன சம்பளம் வேண்டும்?’’ என்று கேட்டார் எம்.டி. வேலை கிடைக்காமல் போய்விடலாம் என்கிற பயத்தில் குறைந்த தொகையைச் சொன்னாராம் ஆசிரியை. ‘‘இதெல்லாம் ரொம்ப அதிகம்’’ என்று கொதித்த எம்.டி-யிடம் தன் உண்மை நிலையை எடுத்துச்சொல்ல, ‘‘சாரி, உனக்கு வேலை இல்லை’’ என்று சொல்லிவிட்டாராம்.

கண்ணீர்வராத குறையாக அலுவலகத்தை விட்டு வெளியேறி, தன் காரில் ஏறி உட்கார்ந்து அழத் தொடங்க, இளைஞர் ஒருவர், ‘‘உங்களுக்கு நான் உதவலாமா?’’ என்று கேட்டுப் பேச ஆரம்பித்தாராம்.
ஆரம்பத்தில் சந்தேகத்துடன் அவருடன் பேசத் தொடங்கிய ஆசிரியை, பிற்பாடு தன்னைப் பற்றிய முழுவிவரத்தையும் அந்த இளைஞரிடம் சொல்ல, ‘‘மேடம் நீங்கள் கஷ்டத்தில் இருக்கிறீர்கள். உங்கள் கஷ்டம் தீர்ந்தபின், கஷ்டத்தில் இருக்கும் இன்னொருவருக்கு மனதார உதவினாலே போதும்’’ என்றாராம்.
அந்த இளைஞரே ஆசிரியையின் குருவானார். புத்தரின் போதனைகளையும் அறிவுரைகளையும் வழங்கிய அந்த இளைஞர், ‘‘நீங்கள் மிகவும் கவலைப்படுகிறீர்கள். வேலைக்கான நேர்காணலுக்குச் செல்லும்போதுகூட கவலையை உங்களுடனே கொண்டு செல்கிறீர்கள். நிர்வாகங்களோ, உங்களிடமிருந்து உற்சாகத்தை எதிர்பார்க்கிறது. உங்களுக்கு அதிக கோபம் வருகிறது. சினிமாவில் வேண்டுமென்றால் கோபத்தினால் சபதமேற்று வெற்றி பெற்றமாதிரி ஹீரோக்களைக் காட்டுவார்கள். ஆனால், நிஜவாழ்வில் கோபம் என்பது முன்னேற்றத்தைத் தராது. கோபத்தை விட்டு வாழ்க்கையை எப்படி முன்னேற்றப் பாதையில் செலுத்துவது என்பதைக் கொஞ்சம் தீவிரமாகச் சிந்தியுங்கள். தினமும் மனஅமைதிக்குத் தியானம் செய்யுங்கள். கோபம் குறையும். அதனால் நல்லது நடக்கும். இந்தப் பாதையில் நீங்கள் முயற்சி செய்தால், 100 நாள்களில் வேலை உறுதியாகக் கிடைக்கும்’’ என்றாராம் அவர்.
புத்தரின் வழிநடக்கத் தீர்மானித்தாராம் ஆசிரியை. தன் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்து பல விஷயங்களைப் புரிந்து கொண்டாராம். தன் தோல்விக்குத் தானே காரணம். யாரும் தன்னைத் தோற்கடிக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்ட ஆசிரியை, புத்த மத சித்தாந்தங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்ததால் பல விஷயங்கள் பற்றித் தெளிவுபெற ஆரம்பித்தார்.
‘‘என் எல்லா பிரச்னை களுக்கும் காரணம், வேறு யாருமல்ல; நான்தான் என்பதைப் புரிந்துகொண்ட தருணத்தில் ஒரு உண்மை எனக்குப் புரிந்தது. நான் அதிர்ஷ்டமில்லாதவளோ, ராசியில்லாதவளோ இல்லை. என் வாழ்க்கை என்பதன் திரைக்கதை மற்றும் வசனத்தை நான் மட்டுமே எழுதுகிறேன். என் எண்ணங்களும், செயல்களுமே அந்தத் திரைக்கதையின் போக்கை மாற்றியமைக் கின்றன. நான் நினைத்தால் என்னைச் சுற்றி யிருக்கும் விஷயங்களை மாற்றியமைக்கலாம். அதேபோல், என் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் நானே முடிவு செய்யலாம்.
முதலில் ஒவ்வொரு பிரச்னையாக அணுகுவோம் என்று எண்ணி, வேலையை முதலில் தேடி முடித்தேன். அடுத்த பத்து வருடங்களில் பெரியதொரு வளர்ச்சியைப் பணிரீதியாகக் கண்டேன். ஒரு வேலையில் இருந்து இன்னொன்று, அதிலிருந்து மற்றொன்று என மாறினேன்.

வெற்றியைப்போல் மகிழ்ச்சி தருவது எதுவுமில்லை என்று சொல்வது மகா தவறு என்பதைப் புரிந்துகொண்டேன். பல்வேறு வெற்றிகளைத் தொழில் ரீதியாகவும், பணிரீதியாகவும் கண்டவர் களுமே மனஅழுத்தத்தில் வாழ்வதை நாம் பார்க்கும்போது, மகிழ்ச்சிக்கு வெற்றி மட்டுமே காரணமில்லை எனத் தெரிகிறது.
எமர்சன் சொன்னதுபோல், உங்கள் பிரச்னைகள் உங்களைத் தள்ளிவிட விட்டுவிடாதீர்கள். உங்கள் கனவுகள் உங்களை வழிநடத்திச்செல்லுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
‘சுத்தமான மனதுடன் நீங்கள் பேசவும், செயலாற்றவும் ஆரம்பித்துவிட்டால் மகிழ்ச்சி என்பது நிழல்போல் உங்களைத் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும்’ என்றார் புத்தர். எனவே, இப்படிச் செய்து இப்போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நாம் நினைத்தால், அந்த மகிழ்ச்சியின் தொடர்ச்சி நீண்ட பல நாள்களுக்கு நம்மைத் தொடர்ந்து வரவே செய்யும்’’ என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கீதாஞ்சலி பண்டிட்.
‘‘மகிழ்ச்சியைத் தக்கவைக்க முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். டிவிக்கு ரிமோட் இருப்பதைப்போல், நம் அனைவருக்கும் ரிமோட் ஒன்று இருக்கவே செய்கிறது. அதை நாம் நம்மிடத்தில் வைத்துக்கொள்ளாமல் எதிரே இருப்பவர் கையில் அகப்படும்படி இருந்துவிட்டோ மென்றால், அவர்கள் அதை வைத்து நம்மை வேகப்படுத்தவும், கோபப் படுத்தவும், கட்டுப்பாட்டைக் குலைக்கவுமே உபயோகிப்பார்கள். எனவே, உங்கள் ரிமோட் உங்கள் கையிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
உதாரணமாக, அலுவலகத்திலிருக்கும் சகபணியாளர்கள் பாஸைப் பற்றிக் கொதித்துக்கொண்டிருந்தால் அவர்களுடன் சேர்ந்து நீங்களும் கொதிக்க முற்படாதீர்கள். இது ஒரு நெகட்டிவான விஷயம். இது எந்தவிதத்திலும் பாஸுக்கும், நிறுவனத்துக்கும் நல்லது செய்யப் போவதில்லை. மகிழ்ச்சியுடன் அலுவலகத்தில் செயல்படத் தொடங்கி, மன அழுத்தம் தரும் நிகழ்வுகளிலிருந்து விலகிச் செல்லுங்கள். அந்த நிகழ்வுகளை மாற்ற வேண்டும் அல்லது அந்த நிகழ்வுகளுக்கு நாம் கற்பிக்கும் அர்த்தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்’’ என்கிறார் ஆசிரியர்.
‘‘அலுவலகம் சார்ந்த ஒவ்வொரு விஷயத்திலும் மன அழுத்தங்களுக்கு இரண்டு முக்கியக் காரணங்களே உள்ளன. ஒன்று, எந்தவொரு விஷயம் குறித்தும் நம் எதிர்பார்ப்பு. மற்றொன்று, நாம் எதிர்பார்த்தமாதிரி நடக்காமல் போனால், நாம் செய்யும் புகார்கள் மற்றும் புலம்பல்கள். எதிர்பார்ப்பைச் சரியாக அமைத்துக் கொண்டால், நீங்கள் புலம்ப வேண்டிய அவசியமே இருக்காது.
உங்களுக்குப் பிடித்ததைச் செய்ய, எதுவுமே செய்யாமல் இருக்க என அனைத்துக்கும் நேரம் ஒதுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழவேண்டுமெனில், நீங்கள் இந்த நொடிப்பொழுதில் வாழவேண்டும். நாளைக்கு என்ன ஆகுமோ, நேற்றைக்கு அப்படி நடந்ததே என்றெல்லாம் யோசித்தால், மகிழ்ச்சி என்பது பக்கத்தில்கூட வராது’’ என்று முடிக்கிறார்.
பரபரப்பாக, நிம்மதியின்றி இயங்கும் இந்த இயந்திரச் சூழலில், அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்கலாம்.
-நாணயம் டீம்