மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 25 - கையிருப்பு எவ்வளவு... லாபம் எவ்வளவு?

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 25 - கையிருப்பு எவ்வளவு... லாபம் எவ்வளவு?
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 25 - கையிருப்பு எவ்வளவு... லாபம் எவ்வளவு?

முதலீட்டுக்குக் கைகொடுக்கும் சூட்சுமக்கணக்கு...செல்லமுத்து குப்புசாமி

நீங்கள் புத்தகக் கடை வைத்திருக்கிறீர்கள். பல பதிப்பகங்களிலிருந்து புத்தகங்களை வாங்கி அடுக்கிவைத்திருக்கிறீர்கள். உங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவற்றை வாங்கிச் செல்கிறார்கள். ஏற்கெனவே நீங்கள் வாங்கிய விலைக்கும், இப்போது நீங்கள் விற்ற விலைக்குமான வித்தியாசம் உங்களுக்கு லாபமாக மிஞ்சுகிறது. எளிமையான ஒரு பிசினஸ் மாடல் இது.  

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 25 - கையிருப்பு எவ்வளவு... லாபம் எவ்வளவு?

ஆனால், புத்தகங்களை வாங்கி அடுக்கி வைக்க நேரிடுகிறது அல்லவா? அது உற்றுநோக்க வேண்டிய ஒரு சங்கதி. உதாரணத்துக்கு, 70,000 ரூபாய்க்குப் புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறீர்கள். அதெல்லாம் விற்றால் ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும். ரூ.30,000 லாபம். 100 ரூபாயில் 30 ரூபாய் லாபமென்றால் 30% லாபம் என்றில்லை. 70 ரூபாய்க்கு வாங்கி அதில் ரூ.30 லாபம் ஈட்டுவதால் (30/70)X100=42.86% லாபம். மேலோட்டமாக இந்தக் கணக்கைப் பார்த்தால், அட என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா? 

இதனை ஆழமாக ஆராய, 70,000 ரூபாய் சரக்கை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கும் சுழற்சி எவ்வளவு சீக்கிரம் நடக்கிறது என்ற கேள்விக்கு நகர்வோம். ஒரு வருடத்தில் நடக்கிறதா, ஆறு மாதத்தில் விற்றுத் தீர்கிறதா, அல்லது மாதாமாதம் வந்த வேகத்தில் விற்கிறதா, இல்லையென்றால் மூன்று வருடங்கள் பிடிக்கிறதா? இந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் மிக மிக முக்கியம்.

70,000 ரூபாயை மூன்று வருடங்களுக்கு முடக்கிப்போடுவது முறையாக இருக்காது. எதற்காக நிறைய புத்தகங்களை வாங்கிப்போட்டு அடுக்கி வைக்க வேண்டும்?

ஒரு குறிப்பிட்ட புத்தகம் சராசரியாக மாதம் பத்துப் பிரதிகள் மட்டுமே விற்குமென்றால் வெறும் பத்துப் பிரதிகளை மட்டும் வாங்கி வைக்கலாமே! தீரத் தீர மறுபடி வரவழைத்துக்கொள்ளலாம். எதற்காக நூறு பிரதிகளை ஒரேசமயத்தில் வாங்கி அடுக்க வேண்டும்?

நூறு ரூபாய்க்கு வியாபாரம் நடப்பதற்கும், அதில் 30 ரூபாய் லாபமாக ஈட்டுவதற்கும் எத்தனை ரூபாய் மதிப்புள்ள சரக்கினை அடுக்கி வைக்கிறோம் என்பதற்கான பதிலில்தான், நாம் செய்யும் பிசினஸை நாம் எவ்வளவு திறம்படப் புரிந்துவைத்திருக்கிறோம் என்கிற சூட்சுமம் இருக்கிறது.

பணத்தைத் தேவையில்லாமல் முடக்கிவைக்காமல் இருக்கிறோமா என்பதை எடுத்துக்காட்டும் அளவுகோலும் இதுதான். இதனை பிசினஸ் மொழியில் ‘இன்வென்டரி டேர்னோவர் விகிதம்’ (Inventory Turnover Ratio) என்று குறிப்பிடுகிறார்கள். 

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 25 - கையிருப்பு எவ்வளவு... லாபம் எவ்வளவு?



ஒரு வருடத்தில் எவ்வளவு ரூபாய்க்கு பிசினஸ் நடக்கிறது என்பதற்கும், கையிருப்பில் உள்ள சராசரியான சரக்கு மதிப்புக்குமான விகிதமே இது. நம் கணக்கில் இருப்பது ரூ.1,00,000/ரூ.70,000 =1.43. அதாவது, ஒரு ரூபாய் சரக்கு இருந்தால், ரூ.1.43-க்கு வியாபாரம் செய்ய முடிகிறது.

இதை ஒப்பிடும்போது, இன்னொரு கடை வருடத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் செய்கிறது. ஆனால், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களைப் பார்வைக்கு அடுக்கியுள்ளது. அப்படியானால் அதன் இன்வென்டரி டேர்னோவர் விகிதம் 2/5 = 0.40 அல்லது 40%.

ஒரு ரூபாய் சரக்கை ஸ்டாக்கில் வைத்து வெறும் 40 காசுக்கு மட்டுமே வியாபாரம் செய்யும் இந்தக் கடையைவிட முதலில் நாம் பார்த்த கடையே பரவாயில்லை.

இந்த இரண்டோடு, இன்னொரு புத்தகக் கடையை ஒப்பிடுவோம். அங்கே புத்தகங்கள் எதையும் ஸ்டாக் வைப்பதில்லை. வெறும் பட்டியலை மட்டும் வைத்திருப்பார்கள். நாம் ஆர்டர் செய்தால் அடுத்த நாள் பதிப்பகத்திலிருந்து (எழுபது ரூபாய்க்கு) வாங்கிவந்து நமக்குத் (நூறு ரூபாய்க்கு) தருவார்கள். அந்தக் கடையும் அதே புத்தக வியாபாரம் செய்தாலும், ஜீரோ இன்வென்டரியில் செயல்படுகிறது. அது, அந்தக் கடையின் பிசினஸ் மாடல்.

பெரும்பாலான ஆன்லைன் புக்‌ஷாப்கள் இப்படி ஜீரோ இன்வென்டரி மாடலில் செயல்படுபவையே. அவர்களுக்குக் கடை தேவையில்லை. அடுக்கி வைக்க அலமாரி தேவை யில்லை. இணையதளத்தில் புத்தகங்களை வரிசையாகக் காட்டினாலே போதும்.

அதிகமான இன்வென்டரி டேர்னோவர் செய்யும் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெறும். உதாரணத்துக்கு, அன்றைய சரக்கு அன்றே விற்கும் பிசினஸில், இன்வென்டரி மதிப்பு ரூ.70 மற்றும் வியாபார மதிப்பு ரூ.100. வருடாந்திர வியாபாரம் ரூ.100X 365 =ரூ.36,500. சராசரியாக 70 ரூபாய் ஸ்டாக்கைப் பராமரித்து, 36,500 ரூபாய்க்கு பிசினஸ் செய்ய முடியும். அதன் இன்வென்டரி டேர்னோவர் விகிதம் = ரூ.36,500/ரூ.70=521.

ஒரேமாதிரியான துறையில் இயங்கும்  நிறுவனங்களின் இன்வென்டரி டேர்னோவர் விகிதத்தைத்தான் ஒப்பிட வேண்டுமே தவிர, வெவ்வேறு துறைகளில் இயங்குபவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியல்ல. உதாரணமாக,  ஒரு காய்கறிக் கடையின் இன்வென்டரி டேர்னோவர் விகிதமும், நகைக் கடையின் இன்வென்டரி டேர்னோவர் விகிதமும் வெவ்வேறானவை.

ஆனால், இரு புத்தகக் கடைகளை ஒப்பிடலாம். பேக்கரிகளை ஒப்பிடலாம். ஜவுளிக் கடைகளை ஒப்பிடலாம். கார் கம்பெனிகளை ஒப்பிடலாம்.

மார்ச் 2017-உடன் முடிவடைந்த நிதியாண்டில் மாருதி சுஸூகி கம்பெனியின் இன்வென்டரி டேர்னோவர் விகிதம் 20.86%. அதன் போட்டி நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் இன்வென்டரி டேர்னோவர் விகிதம் 16.12%. ஆக, நூறு ரூபாய் ஸ்டாக்கை வைத்து மாருதி கம்பெனி ரூ.20.86-க்கு வியாபாரம் செய்கிறது. அதே நூறு ரூபாய் ஸ்டாக்கை வைத்து மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ரூ.16.12 அளவுக்கு விற்கிறது. ஆனால், இதை இன்ஃபோசிஸ் கம்பெனியோடு ஒப்பிட முடியாது. அப்படி ஒப்பிட்டால் அது தவறு. வேண்டுமானால், இருக்கிற ஊழியர்களில் எத்தனை பேர் புராஜெக்ட்டில் உள்ளனர், எவ்வளவு பேர் பெஞ்சில் உள்ளனர் என  (Utilization) விப்ரோவுடன் ஒப்பிடலாம்.  இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம், புது யுக பிசினஸ்களெல்லாம் இன்வென்டரி அதிகம் தேவைப்படாதவையாக உள்ளன. டாக்ஸி சந்தையை ஆக்கிரமிக்கும் ஊபரும், ஓலாவும் சொந்தமாக கார்களை வைத்திருக்கவில்லை. அமேசான் நிறுவனம், பெருமளவில் யார் வேண்டுமானாலும் தமது பொருள்களை விற்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பிளாட்பாரமாகச் செயல்படுகிறது.

உலகமே குறைவான சரக்குக் கையிருப்பைக் கொண்டு கூடுதலான பிசினஸ் செய்யவே விரும்புகிறது; அந்தத் திசையை நோக்கியே நகர்கிறது. மாதக்கணக்கில் வாங்கிச் சமையலறையை அடைத்து வைக்கும் மேல்தட்டு மக்களைப் போலல்லாமல், அன்றைய சமையலுக்குத் தேவை யானதை அன்றைக்கு வாங்கும் அன்றாடங் காய்ச்சியின் நடைமுறையையே பிசினஸ் சமூகம் பின்பற்றும்.

ஒரு பிசினஸைப் புரிந்துகொள்ள இன்வென்டரி டேர்னோவர் நமக்குப் பெருமளவில் உதவும். ஒரு கம்பெனியை அதே துறையிலுள்ள இன்னொரு கம்பெனியோடு ஒப்பிட மட்டுமல்லாமல், அந்த கம்பெனியின் இன்வென்டரி டேர்னோவர், கடந்த ஆண்டுகளில் இருந்ததைவிட தற்போது முன்னேற்றம் கண்டுள்ளதா எனவும் ஆராயலாம்.

ஒரு நிறுவனம், லாபகரமாக இயங்குவது என்பது, அந்த நிறுவனம் எவ்வளவு தொகையைச் செலவிடுகிறது என்பதைப் பொறுத்திருக்கிறது.

மேலும், குறைவான முதலீட்டில் அல்லது குறைவான செலவில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களே சிறந்த நிறுவனங்கள். நீங்கள், பங்கு வாங்கப்போகிற நிறுவனம் இப்படி செயல்படு கிறதா என்பதை இந்த விகிதத்தை வைத்து முடிவு செய்யலாம்.

(ஜெயிப்போம்)