
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரம்!
நாணயம் விகடன் இதழும், ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனமும் இணைந்து நடத்திய ‘செல்வம் சேர்க்கும் செயல் திட்டம்’ என்னும் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சி, சமீபத்தில் சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன் மற்றும் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மண்டல மேலாளர் (விற்பனை) வி.பாலாஜி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், முதலில் பேசிய வி.பாலாஜி, சொத்துகளை எப்படிப் பிரித்து நிர்வகிப்பது, முதலீடு செய்வது என்பது குறித்து விளக்கினார். மேலும், கேப்பிட்டல் மார்க்கெட்டில் முதலீடு செய்வதில் இருக்கும் சவால்கள் குறித்து விவரித்தார். சில பங்குகளின் விலை ஏற்றம் குறித்துக் குறிப்பிட்டு, எதிர்காலத்தைக் கணிப்பதில் இருக்கும் நுட்பங்கள் மற்றும் நீண்ட காலப் பங்கை நிர்வகிப்பதன் பலன்கள் குறித்தும் விளக்கிக் கூறினார்.

அடுத்து சொக்கலிங்கம் பழனியப்பன் பேசியபோது, “இந்தியப் பொருளாதாரம் சரிந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டாலும், உலகளவில் ஒப்பிடும்போது நாம் நல்ல நிலையில்தான் இருக்கிறோம்” என்றார். மேலும் அவர், இன்னும் சில ஆண்டுகளில் நம் பொருளாதாரச் சூழல் உயரக்கூடும் என்பதால், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய தற்போது நல்ல சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டார். மற்ற சில முதலீடுகளோடு ஒப்பிடுகையில் மியூச்சுவல் ஃபண்ட் நம்பகமானதாகவும் லாபகரமானதாகவும் இருப்பதை விளக்கினார். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் செபி, ஆர்.பி.ஐ அமைப்புகளின் செயல்பாடு குறித்தும் விளக்கினார்.
நிகழ்ச்சியின் இறுதியில், பார்வையாளர்களின் கேள்விகளுக்கு நிபுணர்கள் இருவரும் பதில் அளித்ததோடு நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
தெ.சு.கவுதமன்
படங்கள்: தே.அசோக்குமார்