
ஏ.கே.நாராயண் முதலீட்டு ஆலோசகர்
முதலீட்டுத் திட்டங்களில் பணம் போடுபவர்களுக்குப் பெரும்பாலும் அந்த முதலீடுகள் குறித்த விழிப்பு உணர்வு இருப்பதில்லை. பலரும் நம்பிக்கையோடும், ஆர்வத்தோடும் முதலீடு செய்துவிட்டு, பின்னர் முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுக்க முடியாமல் கஷ்டத்துக்கு உள்ளாகிறார்கள். இத்தகைய சிக்கலில் மாட்டாமல் இருக்க, அந்த முதலீட்டுத் திட்டம் முறைப்படுத்தப்பட்ட (Regulation) திட்டம்தானா என்பதைத் தெரிந்து கொண்டு, அதன் பின்னர் முதலீடு செய்வது நல்லது.

எந்தவொரு முதலீடாக இருந்தாலும், அந்த முதலீட்டின் பாதுகாப்பு அம்சங்களில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். செய்யப்படும் முதலீட்டிற்கு ஏதேனும் சிக்கல் வரும்பட்சத்தில் அதனைச் சரிசெய்து, முதலீட்டைத் திரும்பப் பெறுவதில் இந்தத் திட்டம் எந்த அளவுக்கு நம்பகமாக இருக்கிறது எனப் பார்க்க வேண்டும். வெறுமனே லாபத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு முதலீட்டை முடிவு செய்யக்கூடாது.
பதிவு செய்யப்படாத, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (NBFC) பல, தமிழ்நாடு முழுக்க ஏராளமான முதலீட்டாளர்களை ஏமாற்றியதை நிறையவே பார்த்திருக்கிறோம். இந்த நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் தங்கள் முதலீட்டைத் திரும்பப் பெற முடியாமல் தவித்ததையும் பார்த்திருக்கிறோம். இவர்களில் பெரும்பாலானோர், அவர்களின் எல்லா சேமிப்புகளையும் இழந்தவர்களாக உள்ளனர்.
கவர்ச்சிகரமான அதிக வட்டி அறிவிப்புகளை வெளியிடும் சீட்டு நிறுவனங்கள், தங்க முதலீட்டுத் திட்டங்கள் போன்றவற்றை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாறுவது இன்னமும் தொடர்கிறது.
சில நிறுவனங்கள், தொடக்கத்தில் அதிக வட்டி வழங்கும். முதலீட்டாளர்கள் நீண்ட காலத்திற்கு இது தொடருமா என்பதை ஆராய்ந்து பார்க்காமல் முதலீடு செய்கிறார்கள். இந்த அவசரம்தான் இவர்கள் செய்யும் பெருந்தவறு. முதலீட்டாளர்கள், முதலீடு செய்யும்முன் அதிலுள்ள ரிஸ்க்கைப் புரிந்துகொள்வது மிக அவசியம். நிதி நிறுவனங்களை நெறிப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் ஆர்.பி.ஐ, செபி, ஐ.ஆர்.டி.ஏ.ஐ போன்ற வலிமையான அமைப்புகளை நாம் கொண்டிருக்கிறோம். இவற்றில் எந்த அமைப்பின் கீழ் உங்களின் முதலீடு நெறிமுறைப்படுத்தப்படுகிறது என்பதை முதலில் கண்டறிய வேண்டும். நெறிமுறைப்படுத்தப்பட்ட நிதித் திட்டம் என்றால் தயக்கம் தேவையில்லை. அப்படி இல்லையென்றால் அதில் செய்யப்படும் முதலீடு அபாயகரமானது என்பதை உணர்ந்து அதைத் தவிர்க்க வேண்டும்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களால் நடத்தப்படும் நிதி நிறுவனங்களோ, சீட்டுக் கம்பெனிகளோ லாபகரமாகவும், ஒழுங்காகவும் நடத்தப்படுவதாகத் தெரியலாம். அந்தமாதிரியான நிறுவனங்கள் எந்த நேரத்திலும் சிக்கலுக்கு உள்ளாகலாம் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

சரியான உதாரணம் சொல்வதென்றால், கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது பெரிதும் பாதிப்புக்கு உள்ளானவை தனியார் சீட்டுக் கம்பெனிகளாகும். வருமான வரி உள்ளிட்ட கணக்கு வழக்குகள் எதுவும் முறையாகப் பின்பற்றப்படாமல் நடத்தப்பட்டதால் பெரும்பாலான நிறுவனங்கள், அவற்றின் பணத்தைச் செல்லுபடியாக்க முடியாமல் பெரும் சிக்கலுக்கு உள்ளாகின. அப்படியான சூழல் வரும்போது பாதிக்கப்படுவது முதலீட்டாளர்களே.
சென்னையில் அண்மையில் தங்கத்தில் முதலீடு செய்யும் திட்டம் சிக்கலுக்கு உள்ளானது அனைவருக்கும் தெரியும். இதனால் வரும் சட்டச் சிக்கல்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இருக்கலாம்.
ஆனால், சிக்கல் என்பதே சிரமம்தானே? பொதுமக்களின் பணத்தை வாங்கியபின், அவர்கள் மோசடி செய்வதாகப் பிடிபட்டபின், தங்களால் அந்தப் பணத்தைக் கட்ட வசதியில்லை என வாங்கியவர் கையை விரித்துவிட்டால் முதலீட்டாளர்கள் என்ன செய்யமுடியும்? சொத்து இருந்தால் விற்றுத் தர அரசாங்கம் முயற்சியெடுக்கும். அதுவும் இல்லையென்றால் முதலீடு கிணற்றில் போட்ட கல்தான்.
தங்க நகைக்கான சீட்டுகளில் முதலீடு செய்கிறபோது, அந்த நிறுவனத்தின்மீது எந்தக் கெட்ட பெயரும் இல்லாத வரை சிக்கலில்லாமல் போகும். ஏதேனும் கெட்ட பெயர் ஏற்பட்டு, முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழக்கும்பட்சத்தில், ஒரே நேரத்தில் அனைத்து முதலீட்டாளர்களும் பணத்தைத் திரும்பக் கேட்கும்போது, அவர்களால் அனைவருக்கும் மொத்தமாகத் திரும்பத் தர முடியாது. அப்படித் தர முடியாது என்று சொன்னதும், முதலீட்டாளர்களிடம் பதற்றம் அதிகமாகி, அந்த நிறுவனத்தையே சூறையாடும் சம்பவங்களெல்லாம் நடந்திருக்கின்றன. இந்த அளவுக்கு நிலைமை மோசமாவதற்கு, அந்த நிறுவனங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் முதலீடு செய்வதே காரணம்.
தங்க நகைகளுக்காக, தங்கக் காசுக்காக முதலீடு செய்யும் திட்டங்களை செபி அமைப்போ அல்லது ரிசர்வ் வங்கியோ நெறிமுறைப்படுத்துவது இல்லை.
ஆக, இந்த நிறுவனங்கள் ஏதேனும் தவறு செய்தால், நிறுவன பதிவுச் சட்டத்தின் மூலமாக (ROC) மட்டுமே அவர்களின்மீது முதலீட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வழிவகை இருக்கிறது. இது போன்ற நிறுவனங்களை முறையாகப் பதிவு செய்திருக்கமாட்டார்கள். பதிவு செய்தாலும், செய்தபடி செயல்படமாட்டார்கள்.
நிதி நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடம் பெறும் பணத்தை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதை யாரும் அறிந்து வைத்திருப்பதில்லை. அதை வைப்புத் தொகையாகக் கணக்கில் காட்டியிருந்தால் ஓரளவுப் பாதுகாப்பு இருக்கும். அப்படியில்லாமல் அதை முன்பணம்போல காட்டியிருந்தாலும் சிக்கலாகும். டெபாசிட் செய்யப்பட்ட கால அளவும் கவனத்திற்குரியது. உதாரணமாக, தங்க நகை சேமிப்புத் திட்டத்தை 11 மாதக் கணக்கிற்கு நடத்தினால், 12-வது மாதத்தின் இறுதியில் அந்த முதலீட்டாளர், தங்க நகையை வாங்கியிருக்க வேண்டும். அப்படியில்லாமல் 13-ஆவது மாதத்தில் நகையை வாங்கினால் அது ஆர்.பி.ஐ நெறிமுறைக்குள் வராது. அது சிக்கலுக்கு உரிய முதலீடாகும்.
செபி அமைப்பானது, அனைத்து நிதி நிறுவனங்களையும் தனது குடைக்குக்கீழ் கொண்டு வர முயன்றது. ஆனால் இந்த தங்க நகை திட்டம் மட்டும் அதற்குக் கீழ் வரவில்லை. எனவே முதலீட்டாளர்கள் இந்த உண்மையைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் முதலீட்டைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
இந்தப் பிரச்னைக்காக நுகர்வோர் நீதிமன்றங்களை நாடினால், அங்கே தேவையான ஆவணங்களைக் காட்ட வேண்டி இருக்கும். ஆனால் நெறிமுறைப்படுத்தப்படாத நிதி நிறுவனங்களின் முதலீடுகளில் இத்தகைய ஆவணங்கள் பெரும்பாலும் கொடுக்கப்படுவது இல்லை.
இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் தீர்வு, அரசாங்கம் நடத்தும் தங்கப் பத்திர முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்வதுதான். இந்த முதலீடுகளில் தங்கக் காகிதங்களாக வாங்கி வைத்துக் கொள்வதால் முதலீடு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.
தங்கத்தை வாங்கி லாக்கர்களில் வைப்பதை விட இது மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாகும். இ.டி.எஃப் தங்கப் பத்திரம் மற்றும் சவரன் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு ரிசர்வ் வங்கியும், செபியும் நெறிமுறைப்படுத்தி திட்டங்களை வழங்கியுள்ளன.
தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வதைப் போலவே, நெறிமுறைப்படுத்தப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதும் பாதுகாப்பானதாகவும், நல்ல பலனைத் தரும் சேமிப்பாகவும் இருக்கும்.
வெளிப்படைத் தன்மையுள்ள, வருமானத்திற்கு வழிவகையுள்ள, பாதுகாப்பு நெறிமுறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும். வெறுமனே கவர்ச்சிகரமான அறிவிப்புகளைப் பார்த்து முடிவெடுக்கக்கூடாது.
தவறுகளிலிருந்து பாடம் கற்று நம்மை நாமே திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் திரும்பத் திரும்ப சிக்கல்களுக்கு உள்ளாகவே நேரிடும்.
இனியாவது, முதலீட்டாளர்கள் சரியான திட்டங்களில் முதலீடு செய்வார்கள் என நம்புவோம்.
தொகுப்பு: தெ.சு.கவுதமன்