நடப்பு
Published:Updated:

ஃபண்ட் கார்னர் - இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... ஓய்வுக்காலத்துக்கு எதில் முதலீடு செய்ய வேண்டும்?

ஃபண்ட் கார்னர் - இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... ஓய்வுக்காலத்துக்கு எதில் முதலீடு செய்ய வேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபண்ட் கார்னர் - இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... ஓய்வுக்காலத்துக்கு எதில் முதலீடு செய்ய வேண்டும்?

சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

நான் வசதியான குடும்பத்து மருமகள். என் வயது 31. என் மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். என் கணவர் விபத்தில் இறந்து ஓராண்டு ஆகிறது. மறுமணம் செய்துகொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. மாமனாரின் சொத்துகளின் ஒரு பகுதி என் மகனுக்குக் கிடைக்கும். எனவே, பொருளாதார ரீதியாக மகனின் எதிர்காலம் பாதுகாப்பானதாகவே இருக்கும். நான்  என் மகனுடன் தனியாக வசிக்கும் சூழல் உருவாகும் வாய்ப்பு வரலாம். எனவே, என் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். என் கணவர் செய்திருந்த காப்பீட்டுத் திட்டங்களின் மூலம் சுமார் முப்பது லட்சம் ரூபாய் எனக்குக் கிடைத்துள்ளது.   

ஃபண்ட் கார்னர் - இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... ஓய்வுக்காலத்துக்கு எதில் முதலீடு செய்ய வேண்டும்?

எனக்கென்று என் கணவர் மூலம் கிடைத்த சொத்து என்றால் இந்தப் பணம் மட்டுமே. தனியார் பள்ளியில் ஆசிரியர் பணிக்குச் செல்ல நான் முடிவு செய்திருக்கிறேன். இந்த நிலையில் காப்பீட்டுத் தொகைகளை அப்படியே நீண்டகால முதலீடாகச் செய்து வைக்க விரும்புகிறேன். என் 60 வயதுக்குப் பிறகு அதை நான் அனுபவிக்கும்படியான சரியான முதலீட்டு ஆலோசனைகளைக் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

- சரிதா, மெயில் மூலமாக


“உங்களுக்கு இன்னும் 29 வருடங்களுக்குப் பிறகுதான் பணம் தேவைப்படும் என்பதில் நீங்கள் உறுதியாக உள்ளீர்கள். இடைப்பட்ட காலங்களிலும் உங்களுக்கு இந்தத் தொகையிலிருந்து வருமானம் தேவைப்படாது என எடுத்துக் கொள்கிறேன்.

ஃபண்ட் கார்னர் - இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... ஓய்வுக்காலத்துக்கு எதில் முதலீடு செய்ய வேண்டும்?

இரண்டு ஃபண்டுகளில் தலா ரூ.15 லட்சத்தைப் பிரித்து முதலீடு செய்யவும். மிரே இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டில் ரூ.15 லட்சமும், பிரின்சிபல் குரோத் ஃபண்டில் ரூ.15 லட்சமும். சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.டி.பி) முறையில் முதலீடு செய்துகொள்ளுங்கள். உங்கள் ஓய்வுக்காலத்துக்கு இந்த முதலீடு கைகொடுப்பதாக இருக்கக்கூடும்.”

நான் மாதந்தோறும் ரூ.5,000 முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். என் மகன் மற்றும் மகளின் மேற்படிப்பு மற்றும் திருமணத்துக்கு இந்தத் தொகையை முதலீடு செய்ய விரும்புகிறேன். மகனுக்குத் தற்போது ஐந்து வயது, மகளுக்கு ஒரு வயது ஆகிறது. என் முதலீட்டை ஒரே ஃபண்டில்  செய்வதா அல்லது இரண்டு மூன்று ஃபண்டுகளில்  பிரித்து முதலீடு செய்வதா எனச் சற்றுக் குழப்பமாக உள்ளது. எப்படிச் செய்தால் லாபகரமாக இருக்கும்? நான் முதலீடு செய்வதற்கு ஏற்ற ஃபண்டுகளை பரிந்துரை செய்யவும்.  
     
 ஆர்.ரேணுகா, மதுரை


“நீங்கள் இரண்டு ஃபண்டுகளில் தலா 2,500 ரூபாயை முதலீடு செய்துகொள்ளுங்கள். ஒரு ஃபண்டை (மகனுக்கு) சற்று மிதமான ரிஸ்க்கிலும், இன்னொரு ஃபண்டை (மகளுக்கு) சற்றுக் கூடுதலான ரிஸ்க்கிலும் கீழ்க்கண்டவாறு முதலீடு செய்துகொள்ளுங்கள். உங்களுக்கான தேவையின்போது  இந்த ஃபண்டுகள் நல்ல லாபத்தை ஈட்டித் தந்திருக்கும்.

மகனுக்கு : பிரின்சிபல் குரோத் ஃபண்ட் – மாதம் ரூ.2,500.  மகளுக்கு : ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் ஈக்விட்டி ஃபண்ட் - மாதம் ரூ.2,500.”    
   
நான் சமீபத்தில்தான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்கினேன். மோதிலால் ஆஸ்வால் மோஸ்ட் ஃபோக்கஸ்டு மல்ட்டி கேப் 35 ஃபண்டில் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்கினேன். ஆனால், சரியான முன்னேற்றம் இல்லாமல் இருப்பதுபோல தோன்றுகிறது. எனக்கு வேறு நல்ல ஃபண்டாகச் சொல்லுங்கள். 

-சுரேஷ் பாபு, மெயில் மூலமாக


“மோதிலால் ஆஸ்வால் மோஸ்ட் ஃபோக்கஸ்டு மல்ட்டி கேப் 35 ஃபண்ட் நன்றாகச் செயல்பட்டு வரும் ஃபண்டுகளில் ஒன்று. பெயரில் குறிப்பிட்டுள்ளதுபோல இது ஒரு மல்டி கேப் ஃபண்டாகும். இந்த ஃபண்ட் 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும்.

இதன் ஃபண்ட் மேனேஜர் கௌதம் சின்ஹா ராய் ஆவார். இதன் நல்ல செயல்பாட்டினால், இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை தற்போது ரூ.10,000 கோடியை எட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த ஒன்று மற்றும் மூன்று வருடங்களில் முறையே 29.15% மற்றும் 21.50% சி.ஏ.ஜி.ஆர் வருமானத்தைக் கொடுத்துள்ளது.

எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது, மூன்று மாத வருமானத்தையெல்லாம் பார்க்காதீர்கள். குறைந்தது 3 – 5 வருடங்களாவது நீங்கள் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் எதிர்பார்த்த வருமானத்தை அடைய முடியும். இதே ஃபண்டில் உங்கள் முதலீட்டை நீங்கள் தொடரலாம்.”        

நான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குப் புதிது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த அடிப்படையான சில சந்தேகங்களுக்குப் பதில் கூறினால் நன்றாக இருக்கும். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது நேரடியாக முதலீடு செய்வது நல்லதா, மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர்கள் மூலம் முதலீடு செய்வது நல்லதா? புரோக்கரேஜ் கட்டணம் எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது? மொத்த முதலீடு செய்யும்போது ஒரே ஃபண்டில் முதலீடு செய்யலாமா, இரண்டு  அல்லது மூன்று ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்வது நல்லதா?

-சத்ய பாமா, மெயில் மூலமாக


“உங்களுக்கு எழுந்துள்ள குழப்பம், பல புது முதலீட்டாளர்களுக்கு எழும் குழப்பம்தான். நீங்கள் நேரடியாகவும் டாக்ஸ் ஃபைலிங் செய்யலாம் அல்லது ஆடிட்டர் ஒருவர் மூலமாகவும் டாக்ஸ் ஃபைலிங் செய்யலாம்.

அதேபோல் காய்ச்சல், ஜலதோஷத்திற்கு  டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற்று மருந்தை உட்கொள்ளலாம். அல்லது நீங்களாகவே மருந்து கடைக்குச் சென்று மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளலாம். அதுபோல்தான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடும்.

நீங்களாகவே நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களிடம் சென்று உங்களுக்குத் தேவையான ஃபண்டுகளை வாங்கிக்கொள்ளலாம். அல்லது மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர்/ ஏஜென்ட்/ புரோக்கர் மூலமாக ஆலோசனை பெற்று, அவர்கள் மூலமாகவே பரிவர்த்தனையை செய்து கொள்ளலாம்.

 உங்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய அறிவு நன்றாக இருந்து, போதுமான நேரமும் இருந்தால் நீங்கள் நேரடியாக (டைரக்ட்) மியூச்சுவல் ஃபண்டுகளை வாங்கி/ விற்றுக் கொள்ளலாம். 

நீங்கள் நினைவில்கொள்ள வேண்டியது வங்கிகளும் மற்றும் பல ஆன்லைன் நிறுவனங்களும் மியூச்சுவல் ஃபண்ட் புரோக்கர்களே. ஆகவே, நீங்கள் நல்ல ஆலோசனை மற்றும் சேவையை எதிர்பார்த்தால், வங்கிகளைவிட தனிநபர் மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர்களுடன் கைகோத்துக்கொள்வது சிறந்தது.

மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்களுக்கு, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், தனது செலவிற்காக (expense ratio) முதலீட்டாளர்களிடமிருந்து வசூலிக்கும் தொகையிலிருந்து (ஆண்டிற்கு 0.01% - 2.50%) ஒரு பகுதியை கமிஷனாகக் கொடுக்கிறது.

 டிபார்ட்மென்ட் ஸ்டோர் வைத்திருப்பவருக்கு மேரி பிஸ்கட் விற்கும்போது கிடைக்கும் கமிஷனைப்போல மியூச்சுவல் ஃபண்டை விநியோகிப்பவர்களுக்கும் கிடைக்கும். ஒரே வித்தியாசம்  மேரி பிஸ்கட்டில் கமிஷன் விகிதம் அதிகமாக இருக்கும்; மியூச்சுவல் ஃபண்டுகளில் குறைவாக இருக்கும். ரூ.5 லட்சத்தை முதலீடு செய்யும்போது ஒன்று அல்லது அதிகபட்சமாக இரண்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.”   

நான் மியூச்சுவல் ஃபண்டில் ரூ. 2 லட்சம்  மொத்தமாக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். ஆனால், சந்தை கடந்த மூன்று மாதங்களாக உச்சத்தில் இருப்பதால் தற்போது முதலீடு செய்ய எனக்குத் தயக்கமாக உள்ளது. இது முதலீடு செய்ய ஏற்றத் தருணமா?   நான் முதலீடு செய்ய நல்ல ஃபண்டுகளாகப் பரிந்துரை செய்யவும்.

சுதாகர், மெயில் மூலமாக


“ காளையின் பிடியில் சந்தை இருக்கும்போது, நாம் எதிர்பார்த்ததுபோல் இறங்காது. அதேபோல், சந்தை கரடியின் பிடியில் இருக்கும்போது நாம் எதிர்பார்த்ததுபோல் ஏறாது. உங்களுடைய தேவைகள் ஐந்து வருடங்களுக்குப் பிறகுதான் உள்ளது என்றால், நீங்கள் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ளுங்கள்.

கோட்டக் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், டாடா ஈக்விட்டி பி/இ ஃபண்ட் போன்ற இரண்டு ஃபண்டுகளில் உங்கள் முதலீட்டைச் செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்தப் பணம் தேவைப்படாது என்ற அடிப்படையிலேயே எடுத்துக் கொண்டுள்ளேன்.”  

ஃபண்ட் கார்னர் - இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... ஓய்வுக்காலத்துக்கு எதில் முதலீடு செய்ய வேண்டும்?