நிம்மதி தரும் நிதித் திட்டம் - 21 - வெளிநாட்டில் வருமானம்... இந்தியாவில் எதிர்காலம்!

ஓவியம்: பாரதிராஜா
வெளிநாடு சென்று கைநிறையச் சம்பாதிக்கும் பலரில், சிலர் மட்டுமே சரியாகத் திட்டமிட்டு முதலீடு செய்கிறார்கள். அந்தச் சிலரில் செந்தில்குமாரும் ஒருவர் எனலாம். துபாய்க்குச் சென்று நன்றாகச் சம்பாதிக்கும் செந்தில்குமார் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்...

“எனக்கு 36 வயது. என் மனைவியும் என்னுடன் துபாயில்தான் வசிக்கிறார். அடுத்த இரண்டு வருடங்களில் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
அனைத்து மாதாந்திரச் செலவுகளும், தற்போது செய்துவரும் முதலீடுகளும் போக எனக்கு மாதம் ரூ.1.5 லட்சம் மீதம் உள்ளது. இதற்கான முதலீட்டுத் திட்டங்கள் தேவை. நான் ரூ.18 லட்சத்துக்கு சென்னையில் மனை ஒன்றும், சென்னை புறநகரில் ரூ.50 லட்சத்துக்கு வீடு ஒன்றும் வாங்கியுள்ளேன். மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் ரூ.10,000 முதலீடு செய்துவருகிறேன். யூலிப் திட்டத்தில் வருடத்துக்கு ரூ.25,000 முதலீடு செய்துவருகிறேன். இதுவரை 7 ஆண்டுகள் முடிந்துள்ளன. இதில் தற்போது ரூ.2,80,000 உள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகள் இதில் முதலீடு செய்ய வேண்டும்.

நான் இதுவரை டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கவில்லை. ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என நினைக்கிறேன். அடுத்த ஐந்தாண்டுகளில் சென்னையில் ரூ.1 கோடி மதிப்பிலான இன்னொரு வீடு வாங்க வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ள என் குழந்தைக்கான மேற்படிப்புக்கு, அடுத்த 18 வருடங்களில் இன்றைய மதிப்பில் ரூ.15 லட்சம் தேவை. குழந்தையின் திருமணத்துக்கு அடுத்த 25 வருடங்களில் இன்றைய மதிப்பில் ரூ.20 லட்சம் தேவை.
அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகள் வரை வெளிநாட்டில் பணிபுரியத் திட்டமிட்டுள்ளேன். பிறகு சென்னைக்கு வர உள்ளேன். என் 50 வயதில் சென்னைக்கு வந்த பிறகு அப்போது பணியில் சேருவதா, பிசினஸ் செய்வதா எனத் திட்டமிடவில்லை. ஆனாலும், மாதம் ரூ.2 லட்சம் வருமானம் வரும் வகையில் என் செயல்பாடுகள் இருக்கும். எனக்கு ஓய்வுக்காலத்துக்காக என் 65-வது வயதில் ரூ.10 கோடி சேர்க்க வேண்டும்” என்றார் செந்தில்குமார்.
இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.
“நீங்கள் சற்றுத் தாமதமாக நிதித் திட்டமிடல் செய்ய ஆரம்பித்துள்ளீர்கள் என்றாலும், உங்களுக்கு எல்லா செலவுகளும் போக மீதமாகும் தொகை ரூ.1.5 லட்சம் உள்ளதால் உங்களின் எல்லா இலக்குகளையும் சுலபமாக அடையலாம்.

நீங்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு பிசினஸ் தொடங்க இருப்பதாகவே வைத்துக்கொண்டு, பிசினஸ் செய்வதற்கான மூலதனமாக ரூ.75 லட்சம் சேர்க்க வேண்டும் என ஓர் இலக்கைக் கூடுதலாக நிர்ணயம் செய்தே திட்டமிட்டுத் தந்துள்ளேன். இன்றைய காலகட்டத்தில் 55 வயது வரை பணிபுரிவதே சிரமமாக இருக்கிற நிலையில், 65 வயது வரை பணிபுரிவது என்பதைத் தற்போதே தீர்மானிக்க இயலாது. எனவே, 60 வயதில் ஓய்வு பெறுவதாகக் கணக்கில் எடுத்துக்கொள்வோம். ஓய்வுபெறும் போது ரூ.10 கோடி சேர்த்திருக்க வேண்டும் என்பது சற்று அதிகம் என்றாலும், உங்களுக்கு வாய்ப்பு இருப்பதால் உங்கள் விருப்பப்படி ரூ.10 கோடி சேர்த்துக்கொள்ளலாம்.
அடுத்த ஐந்து வருடங்களில் ஒரு கோடி ரூபாய்க்கு வீடு வாங்க வேண்டும் என விரும்புகிறீர்கள். இன்னும் 10-15 வருடங்கள் கழித்து நீங்கள் இந்தியாவுக்கு வரும்போது வேண்டுமானால் இதுபற்றி யோசிக்கலாம். ஆனாலும், அதற்கான வாய்ப்புள்ளது என்பதால் நீங்கள் கேட்டபடியே திட்டமிட்டுத் தந்துள்ளேன். ஒரு கோடி ரூபாய்க்கு வீடு வாங்க வேண்டுமானால் மாதம் ரூ.1.25 லட்சம் ஐந்தாண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும்.
அடுத்த இரண்டாண்டுகளில் பெற்றுக் கொள்வதாகத் திட்டமிட்டுள்ள உங்கள் குழந்தையின் மேற்படிப்புக்கு அப்போதைய காலகட்டத்தில் ரூ.50 லட்சம் தேவையாக இருக்கும். அதற்கு மாதம் ரூ.6,700 முதலீடு செய்ய வேண்டும். அடுத்து குழந்தையின் திருமணத்துக்கு அன்றைய நிலையில் ரூ. 1.08 கோடி தேவையாக இருக்கும். யூலிப் மூலம் கிடைக்கும் முதிர்வுத் தொகையை மறுமுதலீடு செய்வதன் மூலம் 12% வருமான அடிப்படையில் ரூ.36 லட்சம் கிடைக்கும். இன்னும் ரூ.72 லட்சம் சேர்க்க மாதம் ரூ.3,800 முதலீடு செய்ய வேண்டும்.

உங்கள் குழந்தையின் மேற்படிப்பு மற்றும் திருமணத்துக்கு நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் ஏற்கெனவே முதலீடு செய்துவரும் 10,000 ரூபாயைப் பயன்படுத்திக்கொள்ளவும். இத்துடன் இன்னும் கூடுதலாக ரூ.500 மட்டும் சேர்த்து முதலீடு செய்தால் போதுமானதாக இருக்கும்.
அடுத்து, ஓய்வுக்கால முதலீட்டை உங்களின் 41-வது வயதில் ஆரம்பிக்கவும். மாதம் ரூ.1.01 லட்சம் 20 வருடங்களுக்கு முதலீடு செய்தால் 61- வது வயதில் நீங்கள் விரும்பியபடி ரூ.10 கோடி என்ற இலக்கை அடையலாம்.
அடுத்து, தொழில் மூலதனத்துக்கான ரூ.75 லட்சம் சேர்க்க மாதம் 32,300 ரூபாயை 10 வருடங்களுக்கு முதலீடு செய்வதன் மூலம் அடையலாம். இந்த முதலீட்டை 2023-ம் ஆண்டு முதல் தொடங்கினால் உங்களின் 51- வது வயதில் ரூ.75 லட்சம் சேர்க்க முடியும்.
உங்கள் இலக்குகள் விசாலமாக இருப்பதால் உங்களுக்கான டேர்ம் இன்ஷூரன்ஸை ரூ.3 கோடிக்கு எடுத்துக்கொள்வது நல்லது.
பரிந்துரை... பங்கு சார்ந்தவை : ஐ.சி.ஐ.சிஐ புரூ ஃபோகஸ்டு புளூசிப் 9,000, மோதிலால் ஆஸ்வால் மோஸ்ட் ஃபோகஸ்டு 25 ஃபண்ட் 9,000, கோட்டக் செலக்ட் ஃபோகஸ் 18,000, ஃப்ராங்க்ளின் இந்தியா ஹை குரோத் கம்பெனீஸ் 18,000, மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் 18,000, ஹெச்.டி.எஃப்.சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் 18,000.
கடன் சார்ந்தவை : ஹெச்.டி.எஃப்.சி கிரெடிட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் 20,000, ஃப்ராங்க்ளின் இந்தியா ஷார்ட் டேர்ம் இன்கம் பிளான் 20,000, ஃப்ராங்க்ளின் இந்தியா டைனமிக் அக்ரூவல் ஃபண்ட் 10,000, என்.ஆர்.ஐ பேங்க் டெபாசிட்டுகள் 10,000”
குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்கு மானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.
Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878
- கா.முத்துசூரியா
