
ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்
இரண்டு வருடங்களாகச் சரிந்து வர்த்தகமான கச்சா எண்ணெய் விலை, தற்போது 57 டாலர்களுக்கு மேல் அதிகரித்து, இரண்டரை வருட உச்சத்தில் வர்த்தகமாகி வருகிறது. இந்த ஏற்றத்தினால் இந்தியப் பொருளாதாரமும், கச்சா எண்ணெய் துறை சார்ந்த பங்கு நிறுவனங்களும் எத்தகைய மாற்றங்களைச் சந்திக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

ஏன் இந்த விலையேற்றம்?
2015-ம் ஆண்டின் அதிகபட்ச விலைக்குப் பக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது கச்சா எண்ணெய். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 14% அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் ஷேல் எண்ணெய் உலகச் சந்தைக்கு வந்ததன் காரணமாக, ஒபெக் நாடுகள் தங்களது விலையைக் குறைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. தற்சமயம் நிலுவையில் இருக்கிற ஒபெக் நாடுகளின் உற்பத்திக் குறைப்பு நடவடிக்கைகள், அமெரிக்காவின் கச்சா எண்ணெய் கையிருப்புக் குறைந்து காணப்படுவது மற்றும் ஷேல் எண்ணெய் எடுக்கும் இயந்திரங்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவது, மேற்கு ஆசியாவில் நிலவி வருகிற பதற்றமான சூழ்நிலை என எல்லாமும் சேர்ந்துதான் கச்சா எண்ணெய்யின் விலையேற்றத்துக்குக் காரணமாக உள்ளன.

சவுதி அரேபியாவின் உள்நாட்டு விவகாரங்களும் கச்சா எண்ணெய் விலையேற்றத்துக்கு ஒரு முக்கியமான காரணமாக உள்ளது. சவுதி அரேபியா, தனது நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க வேண்டுமெனில், ஒரு பேரல் 70 டாலருக்கு மேல் வர்த்தகம் நடைபெற வேண்டும். மேலும், 2018-ம் ஆண்டில் சவுதி ஆராம்கோ தனது 5% பங்குகளைச் சர்வதேச பங்குச் சந்தைகளில் பட்டியலிட இருக்கிறது. இதை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு சவுதி முக்கியத்துவம் தந்து வருகிறது. எனவே, கச்சா எண்ணெய் விலையை அதிக அளவில் உயர்த்தத் தேவையான முயற்சிகளையும், பல்வேறு உத்திகளையும் பயன்படுத்தி வருகிறது.
கச்சா எண்ணெய்யும் இந்தியப் பொருளாதாரமும்
சென்ற 2014-ம் ஆண்டு தொடங்கி இதுவரையிலும் காணப்பட்ட கச்சா எண்ணெய் விலைச்சரிவு, மத்திய அரசாங்கத்துக்கு நிதிச் சுமைகளைக் குறைத்ததோடு இல்லாமல், பணவீக்கத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவியது. கச்சா எண்ணெய் பாதியாக இறக்கம் கண்டதால், ஜி.டி.பி 0.9% வரை அதிகரிக்க உதவியது. மானியங்கள் குறைக்கப்பட்டது, பெட்ரோலியப் பொருள்கள்மீது அவ்வப்போது வரிகளைச் சீரமைத்தது போன்றவற்றின் விளைவாக அரசு அதிக வருவாய் ஈட்டியது. இதனால், பொது நலத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.

இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பது, இந்தியப் பொருளாதாரத்துக்குப் பெரும் சவாலாக இருக்கும். இவ்வாறு விலை அதிகரிப்பது வருங்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அதாவது, பணவீக்கம் அதிகரிப்பது மட்டுமில்லாமல், டாலருக்கு நிகரான மதிப்புக் குறைவது, நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பது போன்ற கூடுதல் சிக்கல்களை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தும்.
உதாரணமாக, விலை 10 டாலர்கள் அதிகரித்தால், 0.6% முதல் 0.7 % வரை பணவீக்கம் கூடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பணவீக்கம் அதிகரிக்காமல் இருக்க, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான எக்சைஸ் வரியைக் குறைக்க முயற்சி செய்யலாம். (ஏனென்றால், கச்சா எண்ணெய் விலை சரியும் போதெல்லாம், அரசாங்கம் இந்த வரிகளைக் கூட்டியது. இப்போது விலையேற்றம் தொடர்ந்து நீடித்தால் வரிகளைக் குறைப்பதற்குச் சாத்தியக்கூறுகள் உள்ளன) அப்படி பெட்ரோல்/டீசல் விலையில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.1 குறைத்தால், அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும். இது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்.
இந்தியாவின் பரந்துபட்ட பொருளாதாரக் காரணிகளை வைத்துப் பார்க்கும்போது, இந்த விலையேற்றம் தற்போதைய நிலையில், கவலைதரும் விஷயமாகப் பார்க்கப்படவில்லை. என்றாலும், ஏற்கெனவே ஜி.எஸ்.டி-யால் நிறுவனங்கள் சுணக்கம் கண்டுள்ளன. அதிலிருந்து மீண்டு எழுந்து சாதாரண நிலைக்குத் திரும்புவதற்குள், அரசுக்கு வருவாய் இழப்பு, நிறுவனங்களுக்கு நிகர லாபம் குறைவது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிற அச்சம் முதலீட்டாளர்களிடையே தோற்றுவிக்கும்.

நம் ரிசர்வ் வங்கியின் கடந்த நிதிக்கொள்கை அறிவிப்பின் படி, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பாதியில், நம் நாட்டின் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் விலை சராசரியாக 55 டாலர்களாக இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், நவம்பர் 8-ம் தேதி 62.4 டாலர்களாகக் காணப்படுகிறது. இதனால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, பணவீக்கம் போன்றவை அரசுக்குப் பெரும் சவாலாக இருக்கக்கூடும் என ரிசர்வ் வங்கி கருதலாம்.
இவையெல்லாம் எதை உணர்த்துகிறது எனில், இவ்வாறான விலை ஏற்றம் தொடரும்பட்சத்தில், அரசாங்கமும், நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியிடம் பெரிதும் எதிர்பார்க்கிற வட்டிக் குறைப்பு நடவடிக்கைகள் காலதாமதமாக வாய்ப் பிருக்கிறது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உடனடியாகக் குறைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஏற்கெனவே பங்குச் சந்தைகள் உச்சத்தில் இருக்கும்போது, சென்டிமென்ட் சரியில்லை என்ற காரணத்தினால் பங்குகள் விற்கப்பட்டு வரும் நிலையில், சந்தைக் குறியீடுகள் இறக்கம் காண வாய்ப்புள்ளன.
மேலும், சர்வதேச அளவில் அமெரிக்க ஃபெடரல், வருகிற டிசம்பர் கூட்டத்தில் வட்டி விகிதங்களை உயர்த்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிற சமயத்தில், இங்கு ரிசர்வ் வங்கி அவசரப்பட்டு வட்டி விகிதத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடாது என்று நம்புவதற்கு முகாந்திரங்கள் இருக்கின்றன. ஒபெக் நாடுகளின் கூட்டம், இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கிறது. அனைத்தையும் பங்குச் சந்தைகள் கூர்ந்து கவனித்து வருகின்றன.

நிறுவனங்களுக்கு என்ன சாதகம்?
கச்சா எண்ணெய் பயன்படுத்தும் நிறுவனங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று, அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதாவது, கச்சா எண்ணெய் உற்பத்தி / துரப்பணப் பணியில் ஈடுபட்டுள்ள ஓ.என்.ஜி.சி மற்றும் ஆயில் இந்தியா போன்ற நிறுவனங்கள். மற்றொன்று, பெட்ரோலியப் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள். அதாவது, பொதுத்துறை நிறுவனங்களான ஐ.ஓ.சி, பி.பி.சி.எல், ஹெச்.பி.சி.எல், சி.பி.சி.எல், எம்.ஆர்.எல் மற்றும் தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
இனி இந்த நிறுவனங்களைப் பற்றி கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.
ஓ.என்.ஜி.சி
கச்சா எண்ணெய்யின் சமீபத்திய விலை யேற்றம் இந்த நிறுவனத்துக்குச் சாதகமாக அமைந்துள்ளது. கச்சா எண்ணெய் துரப்பணப் பணிகளுக்குச் செலவிடப்படும் தொகையானது, கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும்போது ஒரு நாளைக்கு 30,000 டாலர்கள் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனால், முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் அதிகரித்துள்ளது.
முந்தைய காலகட்டத்தில், இதே செலவீனங்கள் கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருக்கும்போது, ஒரு நாளைக்கு 1,00,000 டாலர்களாகவும் இந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதால், லாப - நஷ்டம் என்பது ஒப்பந்தம் செய்தபிறகு இருக்கக்கூடிய விலைகளைப் பொறுத்து அமைகிறது.
இதன் செயல்பாடுகள் பங்கு விலைகளிலும் எதிரொலித்துள்ளன. மூன்று மாதங்களுக்கு முன்பாக ரூ.160-ல் வர்த்தகமான பங்கின் விலை அதிகபட்சமாக ரூ.195 வரை அதிகரித்து, தற்போது ரூ.185-க்கு அருகில் வர்த்தகம் நடைபெறுகிறது.
ஆயில் இந்தியா
இந்த நிறுவனமும், செலவினங்களைக் குறைத்துக்கொண்டதன் விளைவாக நிகர லாபத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
இரண்டு வருடங்களுக்குமுன் செலவிட்ட தொகையில் தற்போது நான்கில் ஒரு பங்கு மட்டுமே, எண்ணெய் எடுக்கும் இயந்திரங்கள் என்று சொல்லக்கூடிய ‘ரிக்’-க்கு (rig) செலவிட்டுள் ளது. அடுத்துவரும் நாள்களில் இதே நிலை நீடிக்குமா என்பது கச்சா எண்ணெய்யின் விலைப்போக்கு மட்டுமில்லாமல், சர்வதேச அளவிலான தேவை பற்றிய செய்திகள் மற்றும் உற்பத்தியில் தொய்வில்லாமல் இருப்பது போன்ற பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மூன்று மாதங்களுக்குமுன், இதன் பங்கு விலை ரூ.280-ஆக வர்த்தகமானது, தற்போது ரூ.350-க்கு மேலாக வர்த்தகம் நடைபெறுகிறது.
மேற்சொன்ன நிறுவனங்கள் சில சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது, கூடவே எண்ணெய் எடுப்பதற்கான செலவினங்களும் அதிகரிக்கின்றன.ரிக் இயந்திரங்களுக்குச் செலவிடப்படும் தொகை, அவ்வப்போது நிறுவனங்கள் செய்துகொள்கிற ஒப்பந்தங்களின் அடிப்படையில் நடப்பதால், செயல்பாட்டில் அதன் தாக்கமானது பிரதிபலிக்கின்றன.
எண்ணெய் சுத்திகரிப்பு / விற்பனை செய்யும் நிறுவனங்கள்
கச்சா எண்ணெய்யிலிருந்து பெட்ரோலியப் பொருள்களைப் பிரித்தெடுத்தெடுத்து விற்பனை செய்வதால், இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் ஜி.ஆர்.எம் என்ற வகையில் கணக்கிடப்படுகின்றன.
ஜி.ஆர்.எம் என்பது (கிராஸ் ரிஃபைனரி மார்ஜின்) ஓர் அளவுகோல். ஆகையால், நிறுவனங்கள் இறக்குமதி செய்கிற மூலப்பொருளான கச்சா எண்ணெய் விலைக்கும், அதிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பெட்ரோலியப் பொருள்களாக விற்பனை செய்யப்படுகிற விலைக்குமான வித்தியாசம், டாலரின் மதிப்பில் கணக்கீடு செய்யப்படுகிறது.

இந்த வித்தியாசம் அதிகரிக்கும்போது நிறுவனங்களின் நிகர லாபம் கூடுகிறது. வித்தியாசம் குறையும்போது நிகர லாபம் சரிகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதாலும், உள்நாட்டில் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறைக்கப் படாமல் இருப்பதாலும், இந்த நிறுவனங்கள் நல்ல லாபத்தை ஈட்டின.
முந்திய காலங்களில், சர்வதேச அளவில் விலை அதிகரித்தாலும், சுத்திகரிப்பு நிறுவனங்களால் விலையேற்றத்தைப் பெட்ரோலியப் பொருள்களில் திருப்பிவிட முடியவில்லை. அதனால், இரண்டு வருடங்களுக்கு முன்புவரை இந்த நிறுவனங் களின் பங்குகளிலும் பெரிய ஏற்றத்தைப் பார்க்க முடியவில்லை. தற்சமயம் இந்தப் பங்குகளின் விலைகளில் நல்ல முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது.
அதேசமயம், அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலையில் காணப்படுகிற ஏற்ற இறக்கங்கள் மற்றும் நிறுவனங்களின் கச்சா எண்ணெய் கையிருப்பின் மதிப்பு (இன்வென்டரி) ஆகியவையும் லாப, நஷ்டத்துக்குக் காரணமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, இந்தத் தொழிலைச் செய்து வரும் நிறுவனங்கள் நடப்புக் காலாண்டில் 57 டாலருக்கு இறக்குமதி செய்துவிட்டு, ஓரிரு மாதங்கள் கழித்து 45 டாலருக்கு வர்த்தமாகும்போது, கையிருப்பின் மதிப்பானது குறைந்து விடும்.
இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க இயலாது என்பதால், முதலீட்டாளர்கள் இத்தகைய பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன்பு தற்போதைய கச்சா எண்ணெய் விலையேற்றம் என்பது தற்காலிகமானதா அல்லது தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளதா என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
ஐ.ஓ.சி
நம் நாட்டில் இருக்கிற 57,000-த்துக்கும் அதிகமான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெரும்பான்மையானவற்றை ஐ.ஓ.சி, ஹெச்.பி.சி.எல், பி.பி.சி.எல் போன்றவை நிர்வகித்து வருகின்றன. ஐ.ஓ.சி-யின் எண்ணெய் சுத்திகரிப்புப் பணிகள் மதுரா, பானிபட், குஜராத், பாரயுனி போன்ற இடங்களில் நடைபெற்று வருகின்றன.
முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் இதன் ஜி.ஆர்.எம், 8 டாலர்களாக (ஒரு பில்லியன் பேரலுக்கு) அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் ரூ.300-ஆக வர்த்தகமானது, அதிகபட்சமாக ரூ.450 வரை சென்று, தற்போது ரூ.385 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
பி.பி.சி.எல்
இந்த நிறுவனத்தின் மொத்தப் பங்குகளில், அரசாங்கத்தின் கையில் 54.93% இருக்கின்றன. முடிவடைந்த இரண்டாவது காலாண்டை 2016-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது, நிகர லாபம் 80% அதிகரித்துள்ளது. இதேபோல்
ஜி.ஆர்.எம்., சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில் 3.08 டாலர்களாகக் காணப்பட்டது. தற்போது 7.97 டாலர்களாக அதிகரித்துள்ளது. ஒரு வருடம் முன்பு பங்கு விலை ரூ.400 என்ற அளவிலிருந்து, அதிகபட்சமாக ரூ.540 வர்த்தகமாகி, தற்போது ரூ.490-ஆக வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
ஹெச்.பி.சி.எல்
எண்ணெய் சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ள பொதுத்துறை நிறுவன மான ஹெச்.பி.சி.எல் நிறுவனத்தின் ஜி.ஆர்.எம்., முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் வருடாந்திர அடிப்படையில் ஒப்பிடும்போது 136% அதிகரித்துள்ளது. ஒரு வருடத்துக்கு முன், ஜி.ஆர்.எம் 3.23 டாலர்களாக இருந்தது; தற்போது 7.61 டாலர்களாக அதிகரித்துள்ளது. இந்தப் பங்கின் விலை சென்ற வருடம் ரூ.300-ல் வர்த்தகமானது. அதிகபட்சமாக ரூ.480 வரை சென்று, தற்சமயம் ரூ.420-க்கு அருகில் வர்த்தகமாகி வருகிறது.
சி.பி.சி.எல்
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தின் நிகர லாபம், சென்ற நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.98 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இது, ரூ.315 கோடியாக அதிகரித்துள்ளது. பங்கு விலை சென்ற வருடம் இதே காலாண்டில் ரூ.250-ஆக வர்த்தகமானது. இந்த வருடத்தில் அதிகபட்சமாக ரூ.475-ஆக உயர்ந்து, தற்சமயம் ரூ.432-ஆக வர்த்தகமாகி வருகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் பிரமிக்கத்தக்க அளவில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜி.ஆர்.எம் அதிகரித்துள்ளது. நடப்பு இரண்டாவது காலாண்டில் ஜி.ஆர்.எம் 12 டாலர்களாக அதிகரித்துள்ளது. டாகேஜ், ஹஜீரா இடங்களின் வர்த்தகத்தின் அளவு மற்றும் லாப சதவிகிதம் ஆகிய இரண்டும் சாதனை அளவை எட்டி, நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பேருதவி செய்துள்ளது. குறிப்பாக, பெட்ரோ கெமிக்கல் வர்த்தகம், வருடாந்திர அடிப்படையில் 10% ஏற்றம் கண்டுள்ளது.
ஒரு வருடத்துக்குமுன், இந்தப் பங்கு விலை ரூ.500-ல் வர்த்தகமானது. தற்போது ரூ.900 என்ற அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது.
ஆக மொத்தத்தில், கச்சா எண்ணெய்யின் விலையேற்றமானது உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஓரளவுக்குச் சாதகமாகவும், எண்ணெய் விற்பனை மற்றும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துவதை உணர்த்துகிறது. பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலைப்போக்கு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முதலீடுகளைச் செய்ய வேண்டியது அவசியம்.
கச்சா எண்ணெய்யின் எதிர்காலம்
ஒபெக் நாடுகள், ஏற்கெனவே ரஷ்யா உள்ளிட்ட நாடுகளையும் சேர்த்து உடன்படிக்கை செய்துள்ள உற்பத்திக் குறைப்பு நடவடிக்கைகளினால் மட்டும் இந்த விலையேற்றம் காணப்படவில்லை. ஆகையால், இந்த ஒப்பந்தத்தை மேலும் கால நீடிப்பு செய்வது என்கிற நிலைப்பாட்டால், விலைச் சரிவைத் தடுத்து விடுவதற்கு வாய்ப்பில்லை. இதைத் தவிர, பிற காரணங்களும் சாதகமாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே இந்த விலையேற்றம் நீடிக்கும். எடுத்துக்காட்டாக, ஆசியப் பிராந்தியத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் வர்த்தகம் முழுமையாக மாறிவிட்டது.
அமெரிக்காவின் ஷேல் எண்ணெய், ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபரில் அமெரிக்க எண்ணெய் ஏற்றுமதி ஒரு நாளைக்கு 4,27,000 பேரல்களாக இருந்தது, நவம்பரில் ஒரு நாளைக்கு 6,57,000 பேரல்களாக அதாவது, 50 சதவிகிதத்துக்குமேல் அதிகரித்துள்ளது. வரும் டிசம்பரில் இந்த ஏற்றுமதி சாதனை அளவாக அதிகரிக்கக்கூடும் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சந்தைப் போட்டியின் காரணமாக ஒபெக் நாடுகளுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சவால்களை ஒபெக் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் எவ்வாறு கையாள இருக்கின்றன என்பதைச் சந்தைகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. சவால் நிறைந்த இந்தக் காலகட்டத்தில், அனைத்து நாடுகளும், தாங்கள் வர்த்தகம் செய்யும் நாடுகளின் சந்தைப்பங்களிப்பை இழப்பதற்குத் தயாராக இல்லை. விலையைக் குறைத்தாவது வர்த்தகத்தைத் தொடர நினைப்பதால், விலைச்சரிவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.
சீனாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் முதலிடத்தில் இருக்கிற சீனா, 2017 முதல் ஒன்பது மாதங்களில் அமெரிக்காவிலிருந்து ஒரு நாளைக்கு 1,27,000 பேரல்களை இறக்குமதி செய்துள்ளது. 2016 ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த இறக்குமதி அளவு சுமார் 880% அதிகமாகும். இதன் அர்த்தம், அரபு நாடுகள் உற்பத்திக் குறைப்பு செய்வதன் காரணமாக, இந்த வர்த்தகம் அமெரிக்க ஷேல் எண்ணெய் ஏற்றுமதியால் பூர்த்தி செய்யப்படுகிறது. சீனா, சவுதியிலிருந்து இறக்குமதி செய்வதை 2016-ன் இதே ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடும்போது 0.6% குறைந்துவிட்டது.
கடந்த காலத்தில் எண்ணெய் பணிகளின் மீதான முதலீடுகள் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், தற்போது 2007-ம் ஆண்டுக்குப்பின் எண்ணெய் வளம் கண்டறியப்படுதல் மற்றும் எடுப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் குறைந்தபட்ச நிலைக்கு வந்துள்ளன.
ஒருபுறம் சுற்றுப்புற மாசுபடுதலைத் தவிர்க்கும் பொருட்டு மாற்று எரிசக்திக்கு மாறுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பேட்டரி மூலம் இயங்கக்கூடிய வாகனங்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கான அறிகுறிகள் முழுமையடையும் நிலையில் இருக்கும்போது, கச்சா எண்ணெய்யின் விலை இனிவரும் ஆண்டுகளில், மிகப் பெரிய ஏற்றம் காண்பது என்பது எட்டாத ஒன்றாக இருக்கும்.