
தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in
மென்தா ஆயில்
மென்தா ஆயில் தொடர்ந்து இரண்டு வாரங்களாக பலத்த ஏற்றத்தைக் கொடுத்துவந்தது. இதுபோன்ற ஏற்றம் 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது. அந்த மாதம் அதிகபட்சமாக 1608 என்ற உச்சத்தைத் தொட்டது.

கடந்த இரண்டு வாரங்களின் நகர்வு என்பது இதற்கு இணையாகாது. நாம், கடந்த இரண்டு வாரங்களை மட்டும் கணக்கில் எடுத்துப்பார்த்தால், கடந்த ஐந்து வருடங்களில் இது ஒரு மகத்தான நகர்வு என்று சொல்லலாம். ஆனால், 2012-ம் வருடம் இதைக் காட்டிலும் மிகப் பெரிய நகர்வை மென்தா ஆயில் சந்தித்தது. அடுத்து பிப்ரவரி 2012-ல் அதிகபட்சமாக 2015 என்ற எல்லையைத் தொட்டது. இதுவே ஒரு பிரமாண்டமான ஏற்றம்தான்.
ஆனாலும், அதற்கு அடுத்த மார்ச் 2012-ல் மிக வலிமையாக நகர்ந்து, அதிகபட்சமாக, 2564 என்ற புள்ளியைத் தொட்டது. ஆனால், ஏப்ரல் 2012-ல் மிகப் பெரிய இறக்கம் நிகழ்ந்தது. இந்த ஏற்றம் எப்படி வரலாறு காணாத ஏற்றமாக இருந்ததோ, அதுபோல் இறக்கமும், வரலாறு காணாததாக இருந்தது.
2012-ம் வருடம் பிப்ரவரி மற்றும் மார்ச் என்று இரண்டு மாதங்களில் எந்த அளவுக்கு ஏறியதோ, அந்த அளவுக்கு இறங்கி, குறைந்தபட்ச புள்ளியாக 1501-ஐ தொட்டது. இதோடு நிற்காமல், மே மாதம் 2012-ல் இன்னும் இறக்கம் தொடர்ந்தது. இதனால் குறைந்த பட்சப் புள்ளியாக, 1195-யைத் தொட்டது. அதாவது, இந்த ஏற்றம், எங்கிருந்து தொடங்கியதோ, அங்கேயே வந்து விட்டது. அதன்பின் படிப்படியாக இறங்கவும் ஆரம்பித்துவிட்டது.
ஏன் இந்த வரலாற்றை உங்களுக்கு விளக்கமாகச் சொல்கிறேன் என்றால், இப்போதும் அதுபோன்ற ஒரு நிகழ்வைப் பார்க்கிறோம். ஆகவே, கவனமாக கையாளவேண்டும்.

மென்தா ஆயில் பற்றி நான் சென்ற வாரம் சொன்னது... “இப்படி லோயர் சர்கியூட் ஆனபிறகு, அது மேலும்மேலும் இறங்க வாய்ப்புள்ளது. எந்த அளவுக்கு யூகத்தின் அடிப்படையில் வாங்குகிறார்களோ, அதுவரை இறக்கம் தொடரலாம். கீழே 1570 என்பது அடுத்தகட்ட முக்கிய ஆதரவு நிலையாகும். இங்கு வந்து மீளலாம்.”
மென்தா ஆயில் நாம் கொடுக்கும் எல்லைகளில் சரியாகவே இதுவரை நகர்ந்து வந்துள்ளது. முந்தைய வாரத்தின் முடிவில் ஒரு லோயர் சர்கியூட் வரும்போது, மேலும் இறங்கலாம் என்று கூறியிருந்தேன். அதேபோல் அடுத்த நாள், திங்கள்கிழமையன்று வலிமையான ஒரு கேப் டவுனில் துவங்கியது. அதாவது, 1598 என்ற எல்லையில் தொடங்கி 1581 வரை இறங்கியது. நாம் 1570 வரை என்று கொடுத்திருந்தோம். அதன் பின், அங்கிருந்து வலிமையாக மீள ஆரம்பித்தது. அப்படி மீண்டு, அன்று 1713 வரை ஏறியது. இப்படி மீள வாய்ப்புண்டு என்றும் கூறி இருந்தோம்.
அடுத்து, செவ்வாயன்று காளைகளுக்கும், கரடிகளுக்கும் கடும் போட்டி நிகழ்ந்து கொண்டிருந்தது. அதனால் காளைகள் மென்தா ஆயில் விலையை ஏற்ற முயன்றபோது, முந்தைய உச்சத்தின் அருகில் (1767) சென்று, பின்னர் 1782-ஐ தொட்டு, தொடர்ந்து ஏற முடியாமல் இறங்கி விட்டது. அதன்பின் புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாள்களும் ஒரு குறுகிய நகர்வில் ஸ்பின்னிங் டாப்புகளைத் தோற்றுவித்தது.
இனி என்ன செய்யலாம்? கடந்த ஏழு நாள்களில் நகர்வு, ஒரு முக்கோண வடிவ உருவமைப்பைத் தோற்றுவித்துள்ளது. முக்கோண வடிவத்தின் முக்கிய ஆதரவு எல்லை 1590 ஆகும். இது உடைக்கப்பட்டால், இந்த ஏற்றம் முடிவுக்கு வந்ததாக எடுத்துக்கொள்ளலாம். மேலே உடனடித் தடைநிலை 1705 ஆகும். அதை உடைத்து ஏறினால், முந்தைய உச்சமான 1770-1780 என்ற எல்லையில் தடுக்கப்படலாம். அதை உடைத்தால், மீண்டும் புதிய சரித்திரம் படைக்கப்படலாம்.

காட்டன்
காட்டன் பற்றி சென்ற வாரம் நான் சொன்னதாவது... “இன்னமும் நாம் ஏற்கெனவே கொடுத்த ஆதரவு 18180-ம், தடைநிலையான 18470-யும் நீடிக்கிறது. இந்த இரண்டு எல்லைகளில் மேல் எல்லை உடைக்கப்பட்டால், காளைகளின் கைஓங்கும். கீழ் எல்லை உடைக்கப்பட்டால், கரடிகளின் கைஓங்கும்.”
சென்ற வாரத்தைப் பொறுத்தமட்டில், காட்டன், மேலே 18470-யைத் தாண்டி ஏறவுமில்லை. கீழே 18180 என்ற ஆதரவை உடைத்து இறங்கவுமில்லை. இது ஒரு பக்கவாட்டு நகர்வு வாரமாகவே மீண்டும் முடிந்துள்ளது.
இனி என்ன செய்யலாம்? இன்னும் தடைநிலை 18470- என்பதாகவே உள்ளது. அதை உடைத்தால் நல்ல ஏற்றம் வரலாம். கீழே மெதுவாக உயர்ந்து வருவதாக எடுத்துக்கொள்ளலாம். முன்பு 18180 என்ற ஆதரவு நிலையிலிருந்து 18225 என்ற எல்லைக்கு நகர்ந்துள்ளது. இருந்தாலும் 18180-யை உடைத்தால்தான் பெரிய இறக்கம் வரலாம்.