
தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in
தங்கம் (மினி)
தங்கத்தின் நகர்வு இன்னும் டவுன் டிரெண்ட் சேனலுக்கு உட்பட்டுதான் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால், இதில் ஒரு மாற்றம் உண்டு. அதாவது, தங்கம் டவுன் டிரெண்ட் சேனலின் கீழ்எல்லையை ஆதரவாக எடுத்து மேலே நகரத் தொடங்கியதைப் பார்த்தோம். அதேபோல், சேனலின் மேல் எல்லையில் இன்னும் தடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அதை உடைப்பதற்கான ஒரு முயற்சி நடைபெற்றது. ஆனால், அது தற்காலிகமாக வெற்றி பெறவில்லை.

சென்ற வாரம் சொன்னது... “நாம் கொடுத்த டவுன் டிரெண்டில் மேல் எல்லையான 29500-யை உடைத்து, தங்கம் வலுவாக ஏற ஆரம்பித்துள்ளது அதாவது, சந்தை காளைக்கு அடங்க ஆரம்பிக்கிறது. தற்போது 29800 என்பது உடனடித் தடைநிலையாகும்.”

தங்கம் டவுன் டிரெண்ட் சேனலின் மேல் எல்லையை உடைத்து வலுவாக ஏற ஆரம்பித்தது. நாம் கொடுத்த அடுத்தத் தடைநிலையான 29800-க்கு அருகில் சென்றது (29740 வரை). ஆனால், அதற்குமேல் தங்கத்தால் தொடர்ந்து ஏற முடியவில்லை. இந்த ஏற்றம் தற்போது சிரமத்துக்குள்ளாகி இருக்கிறது. அதாவது, தொடர்ந்து ஏறமுடியாமல், இறங்க ஆரம்பித்து, படிப்படியாக 29350-யை நோக்கி நகர்ந்துள்ளது.
இனி என்ன நடக்கலாம்? தங்கம் ஒரு நல்ல ஏற்றத்துக்குப்பின், ஒரு பக்கவாட்டு நகர்வில் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். அதாவது, கீழே தற்போது 29350 என்ற எல்லையை உடனடி ஆதரவாக எடுத்துள்ளது. இது உடைக்கப்பட்டால் இறக்கம் தொடரலாம். மேலே 29800 என்பது இன்னும் வலுவான தடை நிலையாக உள்ளது.
வெள்ளி (மினி)
தங்கம் எவ்வழியோ, வெள்ளி அவ்வழி என்பது, கடந்த வாரம் நிரூபணமாகியுள்ளது. முந்தைய வாரமும் வெள்ளியானது ஒரு பக்கவாட்டு நகர்வில் இருந்தது. சென்ற வாரமும் ஏறக்குறைய அதே மாதிரிதான் நகர்ந்துள்ளது. ஆக, வெள்ளி யானது காளைகளுக்கும், கரடிகளுக்கும் இடையே மாட்டிக்கொண்டு திணறி வருகிறது. ஆனால், இதுபோன்ற சூழலில், யார் வெற்றி பெற்றாலும், அந்த நகர்வு மிகவும் வலிமையானதாக இருக்க வாய்ப்புள்ளது.

சென்ற வாரம் சொன்னது... ‘‘நாம் தந்துள்ள தடைநிலையான 40,000 என்பது இன்னும் வலிமையான தடைநிலையாகவே உள்ளது. இருந்தாலும் தற்போது ஏற்றத்துக்கான முயற்சி நடைபெறுவதால், தடையை 40150 என்ற எல்லைக்கு வைக்கிறோம். கீழே 39450 என்ற எல்லை முக்கிய ஆதரவாக உள்ளது. இனி எல்லா வாங்குதலுக்கும் 39,450-க்குக் கீழே ஸ்டாப்லாஸ் வைத்து வியாபாரம் செய்யலாம். மேலே 40150-யைத் தாண்டினால் வலிமையான ஏற்றம் வரலாம்.’’
வெள்ளி சென்ற வாரம், நாம் கொடுத்த இரண்டு எல்லைகளுக்கு இடையேதான் சுற்றி வந்தது. நாம் சொன்ன படி, கீழே 39,450 -ஐ ஸ்டாப் லாஸாக வைத்து வாங்கி விற்றவர்களுக்கு, 400 புள்ளிகள் வரை லாபம் கிடைத்திருக்கும். ஏனெனில், சென்ற வாரத்தின் இறக்கம் 39,476 வரை இறங்கி நம் ஸ்டாப்லாஸைக் காப்பாற்றி உள்ளது. இன்னும் மேலே 40,150 தடைநிலையாகவே உள்ளது.
இனி என்ன நடக்கலாம்? சென்ற வாரம் கடைப்பிடித்த அதே பாணியில்தான், வரும் வாரத்திலும் வியாபாரம் செய்யவேண்டியுள்ளது. தற்போதைய முக்கிய ஆதரவு நிலை 39,450 ஆகும். உடைத்தால் நல்ல இறக்கம் வரலாம். மேலே 40,150-ஐ உடைத்தால் பெரிய ஏற்றம் வரலாம்.

கச்சா எண்ணெய் (மினி)
கச்சா எண்ணெய், கடந்த வாரம் கடைசி நான்கு நாள்களும் மேலே 3765 என்ற உச்சத்தைத் தொட்டபிறகு, பக்கவாட்டு நகர்விலேயே இருந்து வந்தது. சென்ற வாரம் சொன்னது... “கச்சா எண்ணெய் தற்போது கீழே 3660 என்ற ஆதரவு நிலையையும், மேலே 3780 என்ற தடைநிலையையும் கொண்டு நகர்ந்து வருகிறது.”
கச்சா எண்ணெய் ஒரு குறுகிய எல்லைக்குள்தான் சுழன்று வந்தது. சென்ற வாரம் திங்களன்று நாம் கொடுத்த அந்த குறுகிய எல்லைக்குள் இருந்தது. செவ்வாயன்று மெள்ள இறங்க ஆரம்பித்தது. எனவே, நாம் கொடுத்த 3660 என்ற ஆதரவு உடைக்கப்பட்டது. எனவே, நாம் விற்றுவாங்கும் நபராக மாற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டுள்ளோம். அடுத்த அந்த இறக்கம் 3579 வரை தொடர்ந்தது. அதன்பின் 3579 என்ற எல்லை ஒரு ஆதரவாக மாறியுள்ளது.
இனி என்ன நடக்கலாம்? கச்சா எண்ணெய்யின் தற்போதைய ஆதரவு 3579 ஆகும். இருந்தாலும் நாம் இன்னும் கொஞ்சம் தள்ளி 3570 என்று வைத்துக்கொள்ளலாம். அதாவது, நம் எல்லா வாங்குதலுக்கும் 3570-ஐ ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளலாம். மேலே 3680 என்பது வலிமையான தடைநிலையாக உள்ளது.