நடப்பு
Published:Updated:

ஜி.எஸ்.டி மாற்றம்... வணிகர்களுக்குச் சாதகமா?

ஜி.எஸ்.டி மாற்றம்... வணிகர்களுக்குச் சாதகமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.எஸ்.டி மாற்றம்... வணிகர்களுக்குச் சாதகமா?

ஜி.கார்த்திகேயன் ஆடிட்டர், கோவை

றத்தாழ 17 முக்கிய மறைமுக வரிகளை உள்ளடக்கிய சரக்கு மற்றும் சேவை வரியானது நாடு முழுக்க அறிமுகப் படுத்தப்பட்டு மூன்று மாத காலத்துக்கும் மேலாகிவிட்டது. இந்த 135 நாள்களில் 95-க்கும் மேற்பட்ட மாற்றங்களை ஜி.எஸ்.டி கவுன்சில் மூலமாகக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு. பொருள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துபவர் களின் குறைகளைக் கேட்டறிந்து, தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றம் கொண்டுவருவது வரவேற்கத்தக்கது என்றாலும், இந்தப் புதிய வரிமுறையினால் வரிதாரர்கள் அனைவரும் மிகுந்த நடைமுறை சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.   

ஜி.எஸ்.டி மாற்றம்... வணிகர்களுக்குச் சாதகமா?

ஜி.எஸ்.டி-யின் புதிய சட்டத்தைப் புரிந்துகொள்ள ஆடிட்டர்களும், ஜி.எஸ்.டி அதிகாரிகளும் சிரமப்பட்டு வரும் வேளையில், சிறு மற்றும் குறு தொழில் அமைப்பினர் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். 

இந்த நிலையில், சமீபத்தில் கூடிய ஜி.எஸ்.டி கவுன்சிலின் 23-வது கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளன. அந்த முடிவுகளைக் கொஞ்சம் விளக்கமாகவே பார்ப்போம். முதலில் தொகுப்புமுறைத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பார்ப்போம்.

உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கான ஜிஎஸ்டி வரி ஒரு சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் உற்பத்தியாளர்கள் இரண்டு சதவிகித வரியைச் செலுத்த வேண்டியிருந்தது. வர்த்தகர்களுக்கு வரிக்குட்பட்ட பொருள்களுக்கு மட்டுமே மொத்த விற்பனையாகக் கணக்கிடப்படும். உணவகத்துக்கான தொகுப்புமுறைத் திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆண்டுக்கு ரூபாய் ரூ.5 லட்சம் வரை சேவை வழங்கும் வியாபாரி களுக்கு (Dealers) தொகுப்பு முறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி சட்டத்தின்கீழ் தொகுப்புத் திட்டத்தைத் தேர்வு செய்வதற்கான அதிகபட்ச வருவாய் வரம்பு சி.ஜி.எஸ்.டி, எஸ்.ஜி.எஸ்.டி,   யு.டி.ஜி.எஸ்.டி சட்டத்திருத்தம் மூலம் ரூ.2 கோடியாக அதிகரிக்கப்படும்.

 ஜி.எஸ்.டி வரித் தாக்கலில் உள்ள மாற்றங்கள்


ஜி.எஸ்.டி.ஆர்-3B மார்ச் 2018 வரை தொடரும்; அதற்கான கடைசித் தேதி ஒவ்வொரு காலாண்டின் கடைசி மாதத்தில் 20-ம் தேதி ஆகும். ரூபாய் 1.5 கோடி வரை ஆண்டு வருவாய் உள்ள வெளி விநியோகம் செய்பவர்கள், காலாண்டு இடைவெளியில் ஜி.எஸ்.டி.ஆர்-1 படிவத்தை, அட்டவணை 1-ல் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

ஜி.எஸ்.டி மாற்றம்... வணிகர்களுக்குச் சாதகமா?



ரூ. 1.5 கோடிக்குமேல் ஆண்டு வருவாய் உள்ள வெளி விநியோகம் செய்பவர்கள் ஜி.எஸ்.டி.ஆர் 1  படிவத்தை, அட்டவணை 2-ல் குறிப்பிடப் பட்டுள்ள தேதிகளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

ஜி.எஸ்.டி.ஆர்-2 மற்றும் ஜி.எஸ்.டி.ஆர்-3 படிவத்தைச் சமர்ப்பிக்கும் காலம், குழு  அலுவலர் களால் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும். மேலும், அடுத்தடுத்து வரும்காலத்துக்குத் திருத்தப்பட்டக் காலக்கெடுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சிறப்பம்சங்கள்

தங்கும் வசதி அல்லாத உணவு விடுதிகளில் (குளிர்சாதனப் பெட்டி  உள்ள மற்றும் இல்லாத) பார்சல் விற்பனைக்கு 5% ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும். இவர்கள் உள்ளீட்டு வரி வரவு (ITC) எடுக்க முடியாது. வெளியிடத்துக்குச் சென்று உணவு தயாரித்துக் கொடுப்பவர்கள் 18%         ஜி.எஸ்.டி வரிக்கு உட்பட்டவர்களாவர். இவர்கள் உள்ளீட்டு வரி வரவு எடுக்க அனுமதிக்கப் படுவார்கள்.

நாள் ஒன்றுக்கு ரூ.7,500-க்கும் குறைவாக வாங்கும், தங்கும் விடுதிகளுடன் கூடிய உணவகங்கள் ஜி.எஸ்.டி 5% செலுத்த வேண்டும். இவர்களுக்கு உள்ளீட்டு வரிவரவு கிடையாது. அதற்குமேல் உள்ளவர்கள் ஒரு அறைக்கு       ரூ.7.500-க்கு மேல் கட்டணமாக வாங்கினாலும்கூட 18% வரி செலுத்த வேண்டும். இவர்கள் உள்ளீட்டு வரியை எடுத்துக்கொள்ளலாம்.

கைவினைப் பொருள்கள் உற்பத்தி செய்பவர்கள் போன்ற ஜாப் ஒர்க் செய்பவர்களுக்கு சாதாரண வரிதாரர் முறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள் 5% வரிச் செலுத்தினால் போதும் என்பதுடன், இவர்கள் உள்ளீட்டு வரியை எடுக்க முடியாது.

ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான தாமதக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இதுவரை செலுத்திய தாமதக் கட்டணம், கட்டணம் என்ற முறையிலிருந்து பணம் என்ற தலைப்பின் கீழ் மின்னணு ரொக்கப் பதிவேட்டில் மீண்டும் வரவு வைக்கப்பட்டு, அவர்களின் எதிர்கால வரிப் பொறுப்புகளைச் (Tax liability) சமன்செய்யப் பயன்படுத்தப்படும்.

அக்டோபர் 2017-ம் தேதி முதல் தாமதமாகக்  கட்டப்படும் வரிக்கான கட்டணமானது  நாளொன்றுக்கு ரூ. 20-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் இந்தக் கட்டணம் ரூ.200-ஆக இருந்தது. தற்சமயம், முன்கூட்டிய விதிகளின்  படிவங்களைக் கையினால் நிரப்பும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.

நேபாளம் மற்றும் பூடான் நாடுகளுக்குப் பொருள்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதிக்குப் பயன்படுத்தப்படும் பொருள்கள் மற்றும் சேவைகளில் உள்ளீட்டு வரிவரவை எடுத்துக் கொள்ளலாம். இ-காமர்ஸ் மூலம் வழங்குகிற சேவை வழங்குநர்கள், ஜி.எஸ்.டி பதிவுகளைப் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள். அவர்களின் மொத்த வருவாய் ரூ.20 லட்சத்துக்குக் குறைவாக இருப்பது அவசியம்.

 மற்றவர்களுக்கான சிறப்பம்சங்கள்


பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களுக்கு ஜி.எஸ்.டி-யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பீப்பாய், கருவிகள், உதிரிபாகங்கள் மற்றும் சக்கரங்கள் போன்ற வியாபார அபிவிருத்திக்கு அல்லாத உள்மாநில விநியோகங்கள், இனி ‘விநியோகம்’ என வரையறுக்கப்படாது. வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்குவதில் இந்த வகையான இடைவிடாத இயக்கம் அடிக்கடி காணப்படுவதால், இந்த விளக்கமானது தொழில் முறைக்குப் பெரும் இணக்கத்தை அளிக்கிறது.   

ஜி.எஸ்.டி மாற்றம்... வணிகர்களுக்குச் சாதகமா?

விவசாயிகளிடமிருந்து கச்சாப் பருத்தியினை வாங்குவதற்கும், எதிர்முறை வரிவிதிப்பு முறையில் (RCM) ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்ப மென்பொருளைத் தவிர்த்து அறிவுசார் சொத்துரிமையை நிரந்தரமாக மாற்ற   ஜி.எஸ்.டி வரி 12% ஆகும். மறுபுறம், தகவல் தொழில்நுட்ப மென்பொருளில் அறிவுசார் சொத்துரிமையை நிரந்தரமாக மாற்றம் செய்ய     ஜி.எஸ்.டி வரி 18% ஆகும். 

 புதிய வரிவிலக்குகள்

நோயாளிகளின் சிகிச்சைக்கு, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை இலவசமாக வழங்கும் பரிமாற்றத்தில், உயிர்காக்கும் மருந்துகளின் இறக்குமதி, டி.ஜி.ஹெச்.எஸ் (DGHS) மையம் அல்லது மாநில மற்றும் வேறு நிபந்தனைகளின் சான்றளிப்புக்கு உட்பட்டு    ஐ.ஜி.எஸ்.டி-யிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

குத்தகை ஒப்பந்தத்தில் ஐ.ஜி.எஸ்.டி செலுத்தியிருந்தால், குத்தகை ஒப்பந்தத்தின்கீழ் பொருள்கள் இறக்குமதி செய்வதற்கு (மோட்டார் வாகனங்கள் தவிர), ஐ.ஜி.எஸ்.டி செலுத்த வேண்டியதில்லை. விஞ்ஞான அல்லது தொழில் நுட்பக் கருவிகள், மென்பொருள்கள் மற்றும் பொதுநிதி ஆராய்ச்சி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகம் அல்லது ஐ.ஐ.எஸ்.சி அல்லது ஐ.ஐ.டி அல்லது என்.ஐ.டி-க்கு வழங்கப்பட்ட முன்மாதிரி போன்ற குறிப்பிட்ட பொருள்களை வழங்குதல் ஜி.எஸ்.டி-யிலிருந்து விலக்குப் பெறும்.

சில குறிப்பிட்ட நிகழ்வுகளுக்காக இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் செய்யப்படும் அங்கீகாரம் பெற்ற பிரத்யேக உபகரணங்கள், ஒளிபரப்பு உபகரணங்கள், விளையாட்டுப் பொருள்கள், சோதனை உபகரணங்கள் போன்றவை, பயன்படுத்தப்பட்ட பிறகு ஏற்றுமதி செய்யப்படும். அத்தகைய சாதனங்களின் தற்காலிக இறக்குமதிமீது ஐ.ஜி.எஸ்.டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும், மத்திய அரசு சற்று சமயோசிதமாகச் செயல்பட்டு, தொழில் அமைப்புகளிடம் கேட்டறிந்து, இதற்கான மாற்றங்களை முன்னரே கொண்டுவந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அப்படிச் செய்திருந்தால் மத்திய  அரசின்மீது அவநம்பிக்கை ஏற்பட்டிருக்காது.

இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தும்போது  பல சிரமங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தாலும், இவற்றை முன்னரே யூகித்து இந்தச் சட்ட நடைமுறையைக் கொண்டுவந்திருக்கும்பட்சத்தில் இத்தகைய மாற்றங்களினால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சிரமங்கள் தவிர்க்கப்பட்டு, வரிதாரர்களின் வரிச் செலுத்தும் நடைமுறை சற்று எளிமையானதாக அமைந்திருக்கும்.

தற்போது ஜி.எஸ்.டி வரித் தாக்கல் செய்யும்போது பல சிரமங்கள் ஏற்படுகின்றன. எப்போது, எந்தப் படிவங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள மக்களுக்கு அவகாசம்  தேவைப்படுகிறது.

மேலும், ஏராளமான மாற்றங்களை அந்தந்த தேதிகளில் மாற்றுவது அதாவது, ஜூலை 1-ம் தேதியிலிருந்து என்று பின்னோக்கிய அடிப்படை களில் (Retrosepctive Basis) இல்லாமல் அவ்வப்போது மாற்றுவதும் வரி தொடர்பான சச்சரவுகளுக்கே இட்டுச் செல்லும். 

ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டபோது வரிதாரர்கள் தங்களின் மொத்த விற்பனையை    ஜி.எஸ்.டி.ஆர் 1-லும், நமக்கு விநியோகம் செய்தவர்கள் செலுத்திய வரியை ஜி.எஸ்.டி.ஆர்-2-லும் தாக்கல் செய்து, இந்த இரண்டு வரி தொடர்பான படிவங்களையும் ஒப்பிட்டு, சமன் செய்ய ஜிஎஸ்டிஆர்-3 -ஐ தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதான் ஜி.எஸ்.டி வடிவமைப்பு. ஆனால், தற்போது ஜி.எஸ்.டி.ஆர்-2 மற்றும் ஜி.எஸ்.டி.ஆர்-3 ஆகியவற்றைத் தாக்கல் செய்ய வேண்டாம் என்று ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவித்துள்ளது.

மேலும், ஜி.எஸ்.டி.ஆர்-3பி- ஐ மட்டும் மார்ச் 2018 வரை தாக்கல் செய்தால் போதும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், ஜுலை 2017 முதல் மார்ச் 2018 வரை உள்ளீட்டு வரியை ஜி.எஸ்.டி.ஆர்-2-ல் ஒப்பிட்டு, பிறகு தாக்கல் செய்ய வேண்டுமா அல்லது ஏப்ரல் 2017-க்குப் பிறகு தாக்கல் செய்ய வேண்டுமா என்ற தெளிவான முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை.
    
ஏற்றுமதியாளர்கள் யாரும் இதுவரை செலுத்திய ஐ.ஜி.எஸ்.டி வரியை  ரீஃபண்டாக பெறவில்லைமற்றும் இ-வேலட் என்கிற திட்டம் குறித்த தகவல்களிலும் தெளிவு இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

தற்போது ரூ.1.5 கோடி வரை ஆண்டு வருவாய் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள், மூன்று மாங்களுக்கு ஒருமுறை வரித் தாக்கல் செய்தால் போதுமானது என்பதை முன்னரே கூறியிருந்தால், பலரும் நிம்மதியாக இருந்திருப்பார்கள்.

மேலும், இதற்கான கால அவகாசம் 180 நாள்கள் என்பது குறைவாக இருப்பதால், இதனை அதிகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் பலர் முன்வைக்கின்றனர்.

பிற நாடுகளில் அரசு அங்கீகாரம் பெற்ற மென்பொருள்களை அறிவித்துள்ளது போலவே, நம் நாட்டிலும் அத்தகைய மென்பொருள்களை அறிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுகுறித்தும்
அரசு உடனே பரிசீலனை செய்ய வேண்டும்!

ஜி.எஸ்.டி மாற்றம்... வணிகர்களுக்குச் சாதகமா?

‘‘முன்பு அவசரப்பட்டார்கள்... இப்போது குறைக்கிறார்கள்!’’

இளங்கோ,
முன்னாள் தலைவர், கொடீசியா.

“ஹோட்டல்களில் சாப்பிடும் உணவுக்கான வரியை 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைத்திருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. பல்வேறு பொருள்களுக்கான வரியைக் குறைத்தாலும், அது ஒருமித்த நிலையில் இல்லை. அரைவேக்காட்டுத்தனமாக யோசித்துக் குறைத்திருக்கிறார்கள். வாகன உபரிப்பொருள்களில் டிராக்டருக்குப் பயன்படுத்தினால் ஒரு வரி, லாரிக்குப் பயன்படுத்தினால் ஒரு வரி, இதர வாகனங்களுக்குப் பயன்படுத்தினால் ஒரு வரி என்று நிர்ணயித்திருப்பதை என்னவென்று சொல்வது? பேசாமல் இவற்றுக்கு 18% வரி நிர்ணயித்திருக்கலாம். ஜி.எஸ்.டி.யை அவசரமாகக் கொண்டுவந்து, இப்போது  அவசர அவசரமாகக் குறைத்து வருகிறார்கள்.

ஆரம்பத்தில் பொருள்கள் வழங்குவதற்கு அட்வான்ஸ் வாங்கினால் அதற்கு வரி கட்ட வேண்டும் என்றார்கள். சிறுதொழில் நிறுவனங்களுக்கு அட்வான்ஸ் வாங்கினால் வரி கட்ட வேண்டாம் என்றார்கள். இப்போது எல்லா நிறுவனங்களும் அட்வான்ஸ் வாங்கினால் வரி கிடையாது என்கிறார்கள். இதுவே சர்வீஸ் வழங்குவதாக இருந்தால் வரி கட்ட வேண்டும் என்கிறார்கள்.  சேவை மற்றும் பொருள்களை வித்தியாசம் இல்லாமல் பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, இப்போது அரசே வேறுபடுத்திப் பார்ப்பது என்ன நியாயம்? கோவையில் பெரிய நிறுவனங்களுக்குச் சிறு நிறுவனங்கள், சேவைப் பிரிவில் பல பொருள்களைச் செய்துதருகின்றன. அந்த நிறுவனங்கள் வரியிலிருந்து விலக்கு இல்லாமல் இருக்கின்றன.’’

ஜி.எஸ்.டி மாற்றம்... வணிகர்களுக்குச் சாதகமா?

‘‘குழப்பத்தில் இருக்கிறார்கள் வர்த்தகர்கள்!’’

எஸ்.ரத்தினவேலு,
முதுநிலை தலைவர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்.

“பல பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரியை 28% குறைத்திருந்தாலும், 50 பொருள்கள் இன்னும் 28% வரி வரம்பில் உள்ளன. 28% என்பது பொருளின் விலையில் மூன்றில் ஒரு பங்கு. இதனை மக்களால் தாங்க முடியாது. தாவரத்திலிருந்து பெறப்படும் பயோ டீசல் உற்பத்திக்கு ஜி.எஸ்.டியில் 18% வரி போட்டிருக்கிறார்கள். இதனால் பயோ டீசல் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படும். இதுபோலவே, ஆரம்பத்தில் வெட்கிரைண்டருக்கு 28% ஜி.எஸ்.டி வரி விதித்தார்கள். தற்போது 5 சதவிகிதமாகக் குறைத்திருக்கிறார்கள். இன்னமும் பல பொருள்களை 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதத்துக்குக் கொண்டுவர வேண்டும். 12 சதவிகிதத்தில் உள்ள பொருள்கள் 5 சதவிகிதத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டும். மொத்தத்தில், எந்தப் பொருளுக்கு எவ்வளவு வரி என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்கள் வர்த்தகர்கள்!’’

- ஞா.சக்திவேல் முருகன்

ஜி.எஸ்.டி மாற்றம்... வணிகர்களுக்குச் சாதகமா?

“ஏற்றுமதிக்குச் சாதகமானதுதான்!”

உன்னிகிருஷ்ணன்,
துணை இயக்குநர் ஜெனரல், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு (FIEO)

“ஜி.எஸ்.டி கவுன்சில், வரி விகிதத்தை மாற்றி அமைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த அக்டோபரில் ஏற்றுமதிச் செயல்திறன் 1.14% குறைந்ததற்குக் காரணம், ஜி.எஸ்.டி ரீஃபண்ட் காலதாமதத்தினால்தான் என உணர்கிறோம். ஜி.எஸ்.டி ரீஃபண்ட் காலதாமதத்தால் மூலதனங்களையும், மூலப்பொருள்கள் பெறுவதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனை அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றபின், உடனடி நிவாரணம் வழங்கவும், நீண்ட கால நோக்கில் ஏற்றுமதியாளர்கள் பயன்பெறவும் இரு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஏற்றுமதி வணிகம் செய்பவர்கள் சாதாரணமாக ஜி.எஸ்.டி வரி 0.1% மட்டும் செலுத்தி உள்நாட்டில் மூலப் பொருள்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் 45 சதவிகிதத்துக்கு மேற்பட்ட ஏற்றுமதியை ஊக்குவிக்க முடியும். மேலும், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு இ-வே முறையை ஏற்படுத்த பரிந்துரை செய்திருக்கிறது. இது 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வரவிருக்கிறது. விற்பனையில் இழந்த தொகையை மீட்டெடுக்கும் வகையில் விற்பனைக்கான பொருள்களை வாங்கும்போது, ஜி.எஸ்.டி வரியானது 5 சதவிகிதத்திலிருந்து ஜீரோ சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது, இந்தத் துறைக்கு உடனடியாக நிவாரணம் தரவும், போட்டியை அதிகரிக்கவும் உதவும்.’’

- எஸ்.வி.எம்