
10 நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்!

பிர்லா கார்ப்பரேசன்
எம்பி பிர்லா குழுமத்தைச் சேர்ந்த பிர்லா கார்ப்பரேஷனின் தொகுப்பு நிகர லாபமானது 98% குறைந்து ரூ.1.5 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டின் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.65 கோடியாக இருந்தது. மொத்தச் செலவீனங்கள், இதர வருவாய் குறைந்ததன் காரணமாக இதன் நிகர லாபம் பெரிய அளவில் குறைந்துள்ளது. கடந்த காலாண்டின் மொத்தச் செலவானது 18% உயர்ந்து, ரூ.1,060 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் இதர வருவாய் 73% குறைந்து ரூ.45 கோடியாக உள்ளது.

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் என்டர்பிரைசஸ்
இதன் நிகர லாபம் 23% குறைந்து ரூ.71 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.91.99 கோடியாக இருந்தது. ஆனால், இந்த நிறுவனத்தின் வருமானம் 13% உயர்ந்து ரூ.1,852 கோடியாக உள்ளது.

ரிலையன்ஸ் இன்ஃப்ரா
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் ஓர் அங்கமான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் நிகர லாபம் 4.6% குறைந்து ரூ.543.8 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.571 கோடியாக இருந்தது. இதன் மொத்த வருவாய் ரூ.7,735 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.7,476 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் மின் உற்பத்தி யூனிட்டின் சில பகுதிகள் அதானி குழுமத்துக்கு ரூ.1,000 கோடிக்குக் கைமாறியுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
கடந்த செப்டம்பர் காலாண்டில் அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ரூ.2,709 கோடி நிகர இழப்பைச் சந்தித்துள்ளது. இதனால் காலாண்டு நிதி நிலை முடிவு வெளியான அன்று இந்த நிறுவனப் பங்கின் விலை ஒரே நாளில் 13.5% வீழ்ச்சி கண்டுள்ளது.

லார்சன் & டூப்ரோ
உள்கட்டமைப்பில் பிரபலமான லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் வருவாய், கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 6% உயர்ந்து ரூ.26,447 கோடியை எட்டியுள்ளது. அதேபோல், நிகர லாபமானது 26.2% உயர்ந்து, ரூ.1,820 கோடியை எட்டியுள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1,435 கோடியாக இருந்தது. இந்த நிறுவனம் ரூ.28,732 கோடி மதிப்புள்ள பணிகளைச் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 8% அதிகம். மொத்தப் பணி ஆணைகளில் சுமார் 36% அதாவது, ரூ.10,420 கோடி மதிப்புள்ளவை வெளிநாடுகளைச் சார்ந்தது.

கோல் இந்தியா
கோல் இந்தியா நிறுவனத்தின் வருவாய் 4% உயர்ந்து ரூ.18,148 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.17,418 கோடியாக இருந்தது. எனினும், நிகர லாபமானது 40% குறைந்து ரூ.369 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபமானது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.612 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் செயல்பாட்டுச் செலவு அதிகரித்துள்ளதால், வருவாய் அதிகரித்தாலும் லாபம் குறைந்துள்ளது.

டாடா கெமிக்கல்ஸ்
கடந்த செப்டம்பர் காலாண்டில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 43% அதிகரித்துள்ளது. அதாவது, நிகர லாபம் ரூ.293 கோடியிலிருந்து ரூ.419 கோடியாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், செயல்பாட்டு வருவாய் ரூ.3,486 கோடியிலிருந்து ரூ.3,462 கோடியாகக் குறைந்துள்ளது.

அதானி பவர்
மின் உற்பத்தி நிறுவனமான அதானி பவர், நிகர லாபமாக ரூ.256.5 கோடியை ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இது, ரூ.335.14 கோடி நிகர இழப்பாக இருந்தது. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாயானது 22% உயர்ந்து ரூ.3,460 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் இதே காலாண்டில் இது, ரூ.2,828 கோடியாக இருந்தது.

பி.ஜி.ஆர் எனர்ஜி
முடிந்த செப்டம்பர் காலாண்டில் பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனத்தின் நிகர லாபம் 89% குறைந்து ரூ.1.13 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.10.70 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.837.50 கோடியிலிருந்து ரூ.517.78 கோடியாகக் குறைந்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட்
விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 78% அதிகரித்து, ரூ.104.53 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது, ரூ.58.61 கோடியாக இருந்தது. இந்த நிறுவனம் தொடர்ந்து 11-வது காலாண்டாக லாபம் ஈட்டி வருகிறது. செப்டம்பர் காலாண்டில் வருமானம் 30% அதிகரித்து ரூ.1,798.44 கோடியாக உள்ளது.
தொகுப்பு: தெ.சு.கவுதமன்