மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 26 - வெறுங்கையில் முழம் போடும் கம்பெனிகள்!

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 26 - வெறுங்கையில் முழம் போடும் கம்பெனிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 26 - வெறுங்கையில் முழம் போடும் கம்பெனிகள்!

செல்லமுத்து குப்புசாமி

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 26 - வெறுங்கையில் முழம் போடும் கம்பெனிகள்!

ம் வீட்டுப் பெண்ணுக்கு  மாப்பிள்ளை பார்க்கிறோம். நல்ல  குடும்பம்; மாப்பிள்ளை மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்; சொந்தமாக வீடு இருக்கிறது. அதன் மதிப்பே ரூ.40 லட்சம்  வரும்; வாடகைச் செலவு இல்லை எனப் பல நல்ல விஷயங்களைச் சொன்னால் சம்மதித்து விடுவோமா? அந்தக் குடும்பத்துக்கு எவ்வளவு கடன் இருக்கிறது என்று பார்ப்போமா இல்லையா?   

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 26 - வெறுங்கையில் முழம் போடும் கம்பெனிகள்!

அவரைப் படிக்க வைக்க, சகோதரிகள் கல்யாணச் செலவுக்கு, வீடு கட்ட என அவ்வப்போது வாங்கிய கடன்கள் மொத்தம் ரூ.80 லட்சம் வருகிறது. அவர் வாங்கும் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் குடும்பத்தையும் நடத்தி, இந்தக் கடனையெல்லாம் கட்டி முடிப்பது இயலாத காரியம். இன்றைக்கு இல்லையென்றாலும் என்றாவது ஒரு நாள் வீடு ஜப்தி செய்யப்படலாம் என்பது அந்தக் குடும்பத்துக்கு மட்டுமே தெரிந்த விஷயம். அந்த விஷயம் நமக்கும் தெரிந்தால் நாம் கல்யாணத்துக்கு சம்மதிப்போமா?

இதே அணுகுமுறையைத்தான் ஷேர் மார்க்கெட்டில் பங்குகளை வாங்கும் முன்னரும் நாம் கையாள வேண்டும். ஒரு நிறுவனம் ரூ.100 கோடிக்கு வியாபாரம் செய்கிறது. அதில் ரூ.20 கோடி லாபம் என்று வைத்துக்கொள்வோம். கடன்கள் ஏதுமில்லாதபட்சத்தில் அந்த ரூ.20 கோடி முழுவதும் நிறுவனத் துக்கு மிஞ்சும். ஒருவேளை, அந்த நிறுவனம் கடன்களை வாங்கியிருந்து அதற்கான வட்டியாக ரூ.10 கோடி ஒதுக்க வேண்டியிருந்தால், அந்த நிறுவனத்துக்கு வெறும் ரூ.10 கோடி மட்டுமே மிஞ்சும்.

பிசினஸ் சூழல் சிறப்பாக இருக்கும்பட்சத்தில் விற்பனை ரூ.150 கோடிக்கு நடந்து, அதில் ரூ.30 கோடி லாபம் ஈட்டினால், கடனுக்கான வட்டி ரூ.10 கோடி போக நிறுவனத்துக்கு ரூ.20 கோடி  மிஞ்சும். அதாவது, விற்பனையை ரூ.100 கோடி யிலிருந்து ரூ.150 கோடிக்கு  (வெறும் 50%) உயர்த்தும்போது நிகர லாபம் ரூ.10 கோடி ரூபாயிலிருந்து ரூ.20 கோடியாக (100%) உயர்கிறது.     

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 26 - வெறுங்கையில் முழம் போடும் கம்பெனிகள்!

இதுவே விற்பனை ரூ.200 கோடிக்கு உயர்ந்து வட்டி  செலுத்துவதற்கு முந்தைய லாபம் ரூ.40 கோடி என்றால் வட்டிக்கான ரூ.10 கோடி போக நிகர லாபம் ரூ.30 கோடி. விற்பனை இரு மடங்காக (100%) உயர்வதால், நிகர லாபம் மூன்று மடங்காக (300%) உயரும். பல நிறுவனங்கள் ஏன் கடன் வாங்குகின்றன என்பதற்கான பதில் இதுதான்.

பிசினஸ் லாபகரமாக இயங்கும் வரை கடன்கள் சாதகமானவை. வியாபாரம் கொஞ்சம் மேம்பட்டாலும் லாபம் அதைவிட வேகமாக உயரும் சாத்தியத்தை அவை உருவாக்குகின்றன. 

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 26 - வெறுங்கையில் முழம் போடும் கம்பெனிகள்!ஆனால், வியாபாரம் எப்போதும் ஒரேமாதிரி இருக்காதல்லவா? கடன்கள் லாபத்தை ஊதிப்பெருக்கும் வல்லமை கொண்டிருப்பது போல, நஷ்டத்தையும் பெருக்கிவிடும்.

நாம் மேலே குறிப்பிட்ட உதாரணத்தில் உள்ள நிறுவனம் ரூ.100 கோடி வியாபாரம் செய்வதற்குப் பதில், ரூ.90 கோடிக்கு (10% குறைவு) வியாபாரம் செய்து, ரூ.15 கோடி (25% குறைவு) லாபம் ஈட்டினால் அதன் நிகர லாபம் வட்டிகள் போக ரூ.5 கோடியாகக் (50%) குறையும். ரூ.60 கோடி வியாபாரம் செய்து செலவுக்கும், வரவுக்கும் சரியாக இருந்து லாபமே இல்லையென்றாலும்கூட கடனுக்குச் செலுத்தும் ரூ.10 கோடி வட்டி நஷ்டமாகும். ஒருவேளை பிசினஸ் நஷ்டம் ரூ.10 கோடி  என்றால், அதனோடு வட்டி ரூ.10 கோடி சேர்ந்து நிகர நஷ்டமானது ரூ.20 கோடியாக மாறிவிடும்.

ஆக லாபமென்றாலும் சரி, நஷ்ட மென்றாலும் சரி, கடன் வாங்கி தொழில் நடத்தும் கம்பெனிகளில் அந்த லாபமும், நஷ்டமும் கூடுதலாகத் தெரியும். திறம்பட இயங்கி லாபமீட்டும் நிறுவனங்களுக்கும் கடன் ஒரு வரம். தொழில் சரியாகப் போகாத நிறுவனம் அல்லது துறைகளுக்குக் கடன் என்பது சாபம். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு, கடன்களுக்கான வட்டியைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை சமீபத்தில் ஏற்பட்டது.  

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 26 - வெறுங்கையில் முழம் போடும் கம்பெனிகள்!

ஒரு பங்கு முதலீட்டாளராக நாம் நிறுவனங்களை ஆராய்கிற போது, அவற்றின் பேலன்ஸ்ஷீட் மற்றும் லாப - நஷ்டக் கணக்குகளை ஆராய்வோம். அவற்றின் மூலமாகக் குறிப்பிட்ட அந்த கம்பெனியின் கடன் பற்றிய விவரங்களை அறியலாம். கடன்களும், வட்டியும் ஒரே அளவில் உள்ளனவா அல்லது வருடா வருடம் உயர்ந்திருக்கிறதா, காலப்போக்கில் பிசினஸ் மேம்பட்டிருக்கிறதா, அடுத்த 10 - 20 ஆண்டு களுக்கு வெற்றிகரமாக இயங்குமளவு அந்தத் துறை பற்றிய தீர்க்கதரிசனமும், தெளிவும் நமக்கிருக்கிறதா, குறிப்பிட்ட அந்தத் துறையில் மற்ற நிறுவனங்களின் கடன் நிலவரத்துக்கும், இந்த நிறுவனத்துக்குமான ஒப்பீடு எப்படியிருக்கிறது என்பதையெல்லாம் பார்க்க வேண்டும்.

இதற்கு ஒரு நிறுவனத்துக்கு, வட்டி மற்றும் வரிகள் செலுத்தும்முன் உள்ள பிசினஸ் லாபம் (PBIT - Profit before interest and tax), வட்டி மற்றும்  வரி செலுத்துவதற்குமுன் உள்ள லாபம் (PBT - Profit before tax) மற்றும் வரிகள் செலுத்திய பின் உள்ள லாபம் (PAT - Profit after tax) எவ்வளவு என்பதைப் பார்த்தால் பல உண்மைகள் தெரியவரும்.

மாருதி சுஸூகி கம்பெனியின் வரிகள் செலுத்துவதற்கு முன்பான பிசினஸ் லாபம் 14.74%, வட்டி செலுத்தியபின்  14.61%; வரி செலுத்தியபின்  10.78%. இதுவே சன் டிவி நிறுவனத்தை எடுத்துக் கொண்டால், அதன் வரிகள் செலுத்துவதற்கு முன்பான பிசினஸ் லாபம் 58.29%, வட்டி செலுத்தியபின் 58.25%, வரி செலுத்தியபின்  38.28% ஆகும். வட்டிகளின் தாக்கம் இவற்றின் லாபத்தில் பெரிய மாறுதலை ஏற்படுத்தவில்லை. ஆனால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷனை எடுத்துக்கொண்டால், எல்லாமே மைனஸில்  இருக்கிறது.

வெறுங்கையில் முழம் போடுவது பிசினஸ் ஓனர்களுக்கு ஒரு கலை. வெறுங்கையில் முழம் போடும் ஓனர்களை கண்டறிவதும் ஒரு கலை. நாம் அந்தக் கலையைக் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!

(லாபம் சம்பாதிப்போம்)