
செல்லமுத்து குப்புசாமி
சமீபத்தில் கார்டூனிஸ்ட் ஒருவரின் பேட்டியொன்றை யூடியூபில் காண நேரிட்டது. தான் கார்டூனிஸ்ட் ஆன கதையை அவர் விவரித்திருந்தார். சிறுவனாக இருக்கும்போது காமிக்ஸ் புத்தகங்களின்மீது காகிதத்தை வைத்து அப்படியே ட்ரேஸ் எடுப்பாராம். அதைப் பார்த்த அவரது தாத்தா, “இதில் என்னடா திறமை இருக்கிறது? நீ எப்பவுமே மத்தவங்ககிட்ட இருந்து மாறுபட்டு நிக்கணும். ஒரு சிங்கமும், நரியும் பேசிக்கிட்டு இருக்கிறமாதிரி படம் வரை பார்க்கலாம்” என்றாராம்.

அதை, “சிங்கமும், நரியும் இருப்பதுபோல வரையச் சொல்லியிருந்தால் ஓவியனாகியிருப்பேன். அவையிரண்டும் பேசிக்கொண்டிருப்பதுபோல வரையச் சொன்னதால் கார்டூனிஸ்ட் ஆகி விட்டேன்” என நினைவு கூர்ந்த அவர், நாம் தனித்துவமாக இருக்க வேண்டுமென தன் தாத்தா சொன்ன விஷயத்தை ஆழமாக மனதில் நிறுத்தி வைத்திருக்கிறார்.
மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் தன்மை மனிதனுக்கு அவசியமானது. உலகத்தில் வாழும் 750 கோடி பேரில் ஒவ்வொரு மனிதனின் கைரேகையும், கருவிழியும் தனித்துவமானது. நம்மைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் சங்கதிகளே நமக்கான அடையாளங்களாக விரிகின்றன. பிசினஸ் உலகில் USP (Unique selling Point) என வேறுபடுத்திப் பேசுவார்கள். எளிமையான உதாரணம் என்றால், அறம் படத்தில் நல்ல கதை மற்றும் நல்ல கான்செப்ட் இருந்தாலும் அதன் USP நயன்தாரா என்று கூட குறிப்பிடலாம். இந்த USP எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல்யாணச் சந்தையில் பெண் தேடுவது, தேர்தலில் தோதான வேட்பாளரை அடையாளம் காண்பது, நமக்குப் பழக்கமான டூத்பேஸ்ட்டையே 20-30 வருடங்களாக உபயோகிப்பது, அந்த ஸ்கூலில் படித்தால் நிச்சயம் இன்ஜினீயரிங் ‘சீட்’ கிடைத்துவிடும் என்கிற இமேஜ் என இவை எல்லாமே USP- க்கான உதாரணங்கள்.
பங்கு முதலீடுகளைப் பொருத்தமட்டில் மற்ற எந்தவொரு காரணியைவிடவும் இந்த USP-க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கிறது. மற்ற நிறுவனங்களுக்கு அமையாத ஒரு சிறப்பு அனுகூலம் அமையப்பெற்ற கம்பெனிகள் இத்தகைய USP பெற்றவை. இதை வாரன் பஃபெட் அகழியுடன் ஒப்பிடுவார்.
பண்டைக் காலத்தில் அரண்மனைகளைச் சுற்றி அகழி வெட்டி வைத்திருப்பார் கள். அதில் நிறைய நீரிருக்கும். நீருக்குள் முதலைகளை உலவ விட்டிருப்பார்கள். யாராவது அரண்மனையைத் தாக்க நினைத்தாலோ, உள்ளே நுழைய முற்பட்டாலோ அகழிக்குள் இறங்கியாக வேண்டும். முதலைகள் காவல் காக்கும் அகழிக்குள் யார் இறங்குவார்கள்? அதனால் அரசன் கோட்டையைச் சுற்றி காவல் காப்பதற்கு ஆள்களை நிறுத்துவதற்குப் பதிலாக அந்த ஆள்களை வேறு வேலை களுக்குப் பயன்படுத்தலாம். அகழி இல்லாத கோட்டை களையும், அரண்மனை களையும் கொண்டிருக்கிற ராஜாக்களுக்கு இது சாத்தியமில்லை.
பிசினஸில் அகழி என்பது மற்றவர் எளிதில் நுழைந்துவிட முடியாத அல்லது மற்றவர் எளிதில் செய்து விட முடியாத அம்சங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பது. மற்றவர் களுக்கு எளிதில் வாய்த்திராத, மற்றவர்களால் எளிதில் செய்வதற்கான சாத்தியங்கள் குறைந்த பொருள்களை, சேவையை உருவாக்கும் நிறுவனங்கள் பிசினஸ் அகழி படைத்தவை.

மற்ற கம்பெனிகளுக்கு இல்லாத தொழில்நுட்பம் , கண்டுபிடிப்பு அல்லது ஒரு குறிப்பிட்டத் துறையில் தான் மட்டுமே செயல்படக் கூடிய உரிமம் முதலியன ஒரு வகையான அகழிகள். இந்த அனுகூலம் காரணமாக இதன் விற்பனை, வளர்ச்சி, லாபம் ஆகியன பெரிய சவால்கள் இன்றி உறுதி செய்யப்படும். கண்டுபிடிப்புகளுக்கான உரிமம் பெற்ற மருந்து கம்பெனிகளை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.
அதிக ஆபரேட்டிங் மார்ஜினோடு இயங்குவது ஒரு வகையான அகழி. அப்படிப் பட்ட ஒரு நிறுவனம் ‘cost advantage’ காரணமாக மற்ற நிறுவனங்களைவிடக் குறைவான விலைக்கு விற்று, போட்டியை ஒழித்துக்கட்ட இயலும். இன்னொரு வகையில் இந்த ‘cost advantage’ உடன் தொடர்புடையது சைஸ். ஒரு சில பிசினஸ்களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் வியாபாரம் செய்வது மட்டுமே சாத்தியம். அதில் சின்னச் சின்ன ஆட்கள் புதிதாக நுழைய முடியாது.
பிராண்ட் அல்லது டிரேட் மார்க் என்பது அசைக்க முடியாத இன்னொரு அகழி. சில நேரங்களில் பொருள்களின் பெயரைச் சொல்லிக் கேட்காமல் பிராண்டின் பெயரைச் சொல்லிக் கேட்பதைக் காண்போம். கோல்கேட் பேஸ்ட், பிந்து அப்பளம், அணில் சேமியா, சக்தி மசாலா, மேகி நூடுல்ஸ் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஒரு புதிய ஊருக்குப் போகிறோம். அவசரமாக டூத்பேஸ்ட் வாங்க வேண்டும். ஒரு கடையில் கோல்கேட்டும் உள்ளது, இதற்கு முன் கேள்விப்பட்டிராத இன்னொரு பேஸ்ட்டும் உள்ளதெனில் நாம் எதை வாங்குவோம்? புதிய அந்த பேஸ்ட் கோல்கேட்டைவிடச் சிறந்ததாகக் கூட இருக்கலாம். ஆனால், நமக்குத் தெரியாதல்லவா! கோல்கேட் கூட பரவாயில்லை. நிறைய விளம்பரம் செய்கிறார்கள். பெரிய பிராண்டை உருவாக்கியிருக்கிறார்கள். இன்னும் விளம்பரம் செய்வார்கள். அதே மாதிரியான விளம்பரம் செய்து மற்ற கம்பெனிகளும் வேறு பிராண்டுகளை உருவாக்க இயலும்.
ஆனால், அதே சாத்தியம் சிகரெட் கம்பெனிக்கு இல்லை. இந்திய சிகரெட் சந்தையில் முடிசூடா மன்னனாகத் திகழ்வது ஐ.டி.சி. வில்ஸ், கிங்க்ஸ், கோல்ட் ஃபிளேக், சிசர்ஸ் என அதன் பிராண்டுகள் பிரபலம். அவற்றுக்கு நிகரான பிராண்டை மற்ற கம்பெனிகள் உருவாக்க நிறைய மெனக்கெட வேண்டும். சந்தையில் ஏகப்பட்ட விதிமுறைகள். புகையிலைப் பொருள்களுக்கு விளம்பரம் செய்யவும் முடியாது. அதனால் இன்னொரு பிராண்டை சிகரெட் சந்தையில் உருவாக்குவது சாத்தியமில்லாத ஒன்று. அதன் காரணமாகவே ஐ.டி.சி பேரகழி படைத்த பெருநிறுவனம் ஆகிறது.
இந்த சிகரெட் பிராண்டுகளின் அனுகூலம் என்னவென்றால், அவற்றின் வாயிலாகக் கிடைத்த (கிடைத்து வரும்) நிலையான லாபம் அந்த நிறுவனத்தை மற்ற துறைகளில் விரிவாக்கம் செய்ய உதவியிருக்கிறது. அதன் மூலமும் பல நிலையான பிராண்டுகளை ஐ.டி.சி உருவாக்கியிருக்கிறது. சன்ஃபீஸ்ட் பிஸ்கெட், ஆசீர்வாத் ஆட்டா, யெப்பீ நூடுல்ஸ், கேண்டிமேன், பிங்கோ, கிளாஸ்மேட் நோட்டுப் புத்தகங்கள் என சுவாரஸ்யமான பட்டியல் அது.
வாடிக்கையாளர்கள் நினைத்த மாத்திரத்தில் ஒரு கம்பெனியின் சேவையிலிருந்து இன்னொரு கம்பெனியின் சேவைக்கு மாற முடியாத தன்மையைக் கொண்டிருப்பது இன்னொரு வகையான அகழி. கிஸான் ஜாம் வாங்குவதற்குப் பதிலாக ஆச்சி ஜாம் வாங்குவது நடக்கலாம். அடுத்த முறை கிஸான் ஜாமே வாங்கலாம்.
போட்டிகள் அதிகமின்றி, தனிக்காட்டு ராஜாவாகத் தனக்கென்று ஆழமான அகழியை வெட்டி வைத்துக்கொண்டு ஒரு நிறுவனம் இயங்கும்போது, அந்தத் துறையில் நுழைவதற்குப் பிற நிறுவனங்கள் தயங்கும். அப்படியே நுழைந்தாலும், ஏற்கெனவே இருக்கிற வாடிக்கையாளர்களின் பழக்கத்தை மாற்றி, தனது பொருளைத் தள்ளிவிட மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கும்.
ஆனால், இங்கே கவனிக்க வேண்டிய சங்கதி ஏற்கெனவே இருக்கிற அகழியை நிறுவனம் முறையாகத் தக்க வைத்துக்கொள்கிறதா, அதை மேலும் ஆழமாக்குகிறதா, அது தவிர புதிய அகழிகளை உருவாக்குகிறதா என்பதே. அப்பா வெட்டி வைத்த அகழியில் மகன் தண்ணீரும் விடாமல், முதலையையும் பராமரிக்காமல் விட்டால்?
(லாபம் சம்பாதிப்போம்)

மோடியைப் பாராட்டிய இவாங்கா!
ஹைதராபாத்தில் நடந்த தொழில் முனைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் மற்றும் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவுக்குத் தலைமையேற்று வந்திருந்தார். ‘‘இந்திய மக்கள் எங்களைப் பெரிதும் கவர்ந்துள்ளார்கள்’’ என்ற இவாங்கா, ‘‘படிப்படியாக முன்னேறி நீங்கள் இன்று நாட்டின் பிரதமராகி யிருப்பதன் மூலம், மாற்றம் என்பது நிகழ்ந்து கொண்டே இருக்கும் என நிரூபித்திருக்கிறீர்கள்” என்று பிரதமர் மோடியைப் பாராட்டினார்.