மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 28 - உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்க வேண்டும்?

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 28 - உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்க வேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 28 - உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்க வேண்டும்?

வேல்யூ இன்வெஸ்டிங் - குரோத் இன்வெஸ்டிங்செல்லமுத்து குப்புசாமி

ம் வீட்டுப் பெண்ணுக்கு வரன் பார்க்கிறோம். ஒரு மாப்பிள்ளை வசதியான குடும்பம். சொத்து மதிப்பு நான்கைந்து கோடி சேரும். பரம்பரை நிலம், வீடு எனச் செல்வாக்கோடு வாழும் குடும்பம்.பையன் ஓரளவுக்குப் படித்திருக்கிறார். மாதம் இருபதாயிரம் சம்பாதிக்கிறார். இன்னொரு மாப்பிள்ளைக்குப் பெரிய பின்புலம் கிடையாது. பரம்பரை சொத்து கிடையாது. வாடகை வீடுதான். நன்றாகப் படித்திருக்கிறார். வேலை கிடைத்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. மாதம் ஒன்றரை லட்சம் சம்பளம். வரும் ஆண்டுகளில் படிப்படியாக முன்னேறி வருமானத்தையும், பதவியையும் மேம்படுத்துவதற்கான சாத்தியங்கள் ஏராளம். 

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 28 - உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்க வேண்டும்?

இந்த இரண்டு மாப்பிள்ளைகளில் யாரைத் தேர்ந்தெடுப்போம் நாம்? சிலர் பாரம்பர்யமான, குடும்பச் சொத்துகள் கொண்ட குடும்பத்தை நாடுவார்கள்.இன்னும் சிலர் நல்ல வேலையில் இருக்கிற, வேகமாக முன்னேறுகிற பையனை நாடுவார்கள். ஆனால், பொதுவாகவே கடந்த காலத்தில் என்னவாக இருந்தார்கள் என்பதைத் தாண்டி வருங்காலத்தில் என்னவாக இருப்பார்கள் என்பதிலேயே நமக்கு ஆர்வம். இதே அணுகுமுறை பங்கு முதலீட்டிலும் பிரதிபலிக்கிறது. வேல்யூ இன்வெஸ்டிங் (Value investing) எனப்படும் மதிப்பு முதலீடு ஒரு பக்கம். குரோத் இன்வெஸ்டிங் (Growth Investing) எனப்படும் வளர்ச்சி முதலீடு இன்னொரு பக்கம்.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 28 - உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்க வேண்டும்?எதிர்காலம் நிச்சயமற்றது. அதனைத் துல்லியமாகக் கணிக்க முடியாது. அதனால் தற்போது நிறுவனங்களின் சொத்து மதிப்பு, அவற்றின் சம்பாதிக்கும் திறன் ஆகியவற்றை மட்டும் அளவீடாகக் கொண்டு பங்குகளைப் பிரித்தெடுத்து, அவற்றில் எது குறைவான விலைக்குக் கிடைக்கிறதோ, அதை வாங்குவது ஒருவித அணுகுமுறை.  ‘மிகக் குறைவான பி.இ விகிதம். புக் வேல்யூவைவிட ஷேர் விலை குறைவாக நிலவுகிறது’ என்ற மனநிலையோடு இம்மாதிரியான நிறுவனங்களைத்  தேடிப்பிடித்துப் பாதுகாப்பாக முதலீடு செய்கிற ரகத்தினர் இவர்கள். ரூ.100 மதிப்புள்ள பொருளை ரூ.80-க்கு வாங்குகிறோம் என்பவர்களுக்குப் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படாது. இவர்களை வேல்யூ இன்வெஸ்ட்டர்கள் என்கிறோம்.

இன்னொரு பக்கம் குரோத் இன்வெஸ்ட்டர்கள். இவர்கள் வருங்காலம் எப்படியிருக்குமென்ற கணிப்பை முன்வைக்கிறவர்கள்.  குறிப்பிட்ட நிறுவனம் எவ்வளவு சம்பாதிக்கிறது (EPS), அதன் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதைத் தாண்டி அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கான தன்மைகள் குறித்து அக்கறை செலுத்துவோர் இவர்கள். இவர்களின் அணுகுமுறை குரோத் இன்வெஸ்டிங் எனப்படுகிறது.

ஷேர் மார்க்கெட்டில் பெரும் பணம் ஈட்டியவர்களில் அநேகர் வளர்ச்சிக்கான அம்சங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிற நிறுவனங்களை அவற்றின் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அவற்றில் முதலீடு செய்து நீண்ட காலம் அவற்றோடு கூடவே, பயணித்தவர்கள். அதனால் பொதுவாகவே வளர்ச்சி முதலீடு அல்லது வளர்ச்சிப் பங்குகள் குறித்துப் பேசுகிறவர்கள் முற்போக்கான அணுகுமுறை உடையவர்கள் என்றும், மதிப்பு முதலீடு அல்லது மதிப்புப் பங்குகள் குறித்துப் பேசுவோர் பிற்போக்கான அணுகுமுறை அல்லது எண்ணம் கொண்டவர்கள் என்றும் கருதுகிறவர்கள் இருக்கிறார்கள்.

மதிப்புப் பங்குகளில் நாம் என்ன வாங்குகிறோம் என்பதும், நாம் செலுத்துகிற பணத்திற்கு என்ன கிடைக்கும் என்பதும் தெரியும். ஆனால், வளர்ச்சிப் பங்குகள் என்று முத்திரையிடப் படும் நிறுவனங்களில் எத்தனை விழுக்காடு வெற்றி பெற்றன அல்லது பெறுகின்றன? ஒரு துறை வளர்ச்சித் துறையாக அமைந்தாலும், அதில் இயங்கும் நூற்றுக்கணக்கான நிறுவனங்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலவற்றைத் தவிர்த்து மற்றவை எல்லாம் காலப்போக்கில் காணாமல் போய்விடும்.   

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 28 - உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்க வேண்டும்?

இந்த வளர்ச்சிப் பங்குகளை நாம் அளவுக்கு அதிகமான விலை கொடுத்து வாங்கியிருப்போம். நாம் எதிர்பார்த்த வளர்ச்சியை அந்த நிறுவனம் எய்தினால் அருமை. ஆனால், அப்படி எட்டவில்லை யென்றால் பங்கு விலை தாறுமாறாக இறங்கிவிடும். நம் முதலீடு பெரும் நஷ்டத்தை நல்கும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. அதற்கான சாத்தியம் வேல்யூ இன்வெஸ்டிங்கில் குறைவு. ஒரு வேளை பன்மடங்காகப் பெருகுவதற்கான தன்மை மதிப்புப் பங்குகளில் இல்லாமல் போகலாம். ஆனால், முறையாக ஆராய்ந்து தேர்ந்தெடுத்த மதிப்புப் பங்குகள் நஷ்டம் தருவதில்லை.

எப்போதெல்லாம் பங்குச் சந்தைகள் வேகமாக உயர்கின்றனவோ அப்போதெல்லாம் புதிய வளர்ச்சிப் பங்குகள் முளைக்கும். வேல்யூ இன்வெஸ்ட்டிங் அல்லது மதிப்புப் பங்குகள் உதாசீனம் செய்யப்படும். வருங்காலத்தின் நிறுவனங்கள் அல்லது துறைகள் அமோகக் கவனம்பெறும். அவற்றின் பங்கு விலை துரிதமாக உயரும். வேல்யூ இன்வெஸ்டிங் எல்லாம் கடந்த காலத்தின் சங்கதிகள், அவை காலாவதியாகி விட்டன என்று பேசுவார்கள்.

இதற்கு மாறாகப் பங்குச் சந்தை சரியும்போது வளர்ச்சிப் பங்குகள் என அடையாளம் காணப்பட்டவை வெகு வேகமாகச் சரியும். முதலீட்டாளர்களுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். மதிப்புப் பங்குகளின் விலையோ குறைவாகவே இறங்கியிருக்கும் அல்லது ஸ்திரமாக நின்றிருக்கும். அப்போதெல்லாம் வேல்யூ இன்வெஸ்ட்டிங் பற்றி எல்லோரும் வகுப்பெடுப்பார்கள். வாட்ஸ் அப்பில் வந்து குவியும். ஒவ்வொரு முறை மார்க்கெட் ஏறும்போதும், ஏறிய சந்தை சரியும் போதும் இது வாடிக்கையாக நடப்பதுதான்.

எனினும், குரோத் இன்வெஸ்டிங் தன்மையை முழுமையாக உணர்ந்து அதில் ஈடுபடுவோர் மிகவும் குறைவு. எல்லோரும் ஒரு துறையை அல்லது நிறுவனத்தை நம்புவதால் அது வளர்ச்சிப் பங்கு ஆகி விடாது. அதன் பிசினஸை, அந்த பிசினஸுக்கான வருங்காலத் தேவையை, அந்தத் தேவை அசாத்தியமாக வளர்வதற்கான காரணிகளை, அப்படியே தேவை வளர்ந்தாலும் மற்ற போட்டி நிறுவனங்களைக் காட்டிலும் இந்த நிறுவனத்திடம் என்ன வேறுபாடு உள்ளதென்ற USP-ஐ எல்லாம் ஆராய்ந்து, தனிப்பட்ட முறையில் நிச்சயப்படுத்திக்கொண்ட பிறகு ஒரு முதலீட்டாளர் ஈடுபடுவதே அறிவுடமை.

அதேபோலத்தான் மதிப்பு முதலீடும். பொதுவாகவே, ஒரு விஷயம் மலிவாகக் கிடைக்கிறது என்றால், அதில் ஏதாவது ஒரு சிக்கல் இருக்கலாம். என்ன காரணத்திற்காக அது மலிவாகக் கிடைக்கிறது என்ற சந்தேகக் கண் கொண்டு ஆராய்ந்த பிறகே இறங்க வேண்டும். இல்லையென்றால் குப்பையைத்தான் வாங்கிச் சேகரிப்போம்.

நம் அணுகுமுறை வளர்ச்சி முதலீடாக இருந்தாலும் சரி, மதிப்பு முதலீடாக இருந்தாலும் சரி, நாம் தேர்ந்தெடுக்கும் பிசினஸ் அல்லது கம்பெனியின் தரம் முக்கியம். நிறைய சொத்திருக்கிற குடும்பத்துப் பையனாக இருந்தாலும், பெரிய பின்புலமற்றவனாயினும், நிறைய சம்பாதிக்கிறவனாக இருந்தாலும் பையனின் தரம் அதாவது குணம் முக்கியத்துவம் பெறுகிறதல்லவா, அப்படித்தான்!

இன்னொரு பக்கம் ‘வளர்ச்சி முதலீடா, மதிப்பு முதலீடா’ என்று பேசுகிறபோது வளர்ச்சிக்கான கூறுகளும் மதிப்பு முதலீட்டில் ஒரு காரணி என்ற புதிய அணுகுமுறையும் சந்தையில் நிலவுகிறது.

(லாபம் சம்பாதிப்போம்)

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 28 - உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்க வேண்டும்?

திறந்த மனதுடன் காத்திருக்கும் லண்டன்!

ந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான புதிய வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தியா வந்த லண்டன் மாநகரின் மேயர் சாதிக் கான், இங்குள்ள சில தொழிலதிபர்களையும் அரசியல்வாதிகளையும் சந்தித்துப் பேசினார்.

“கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்புக்குப் பிறகு, லண்டன் மாநகரமானது, வர்த்தகத் தொடர்பு களுக்காக திறந்த மனதுடன் காத்திருக்கிறது என்ற செய்தியை இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளோடு பகிர்ந்து கொள்ளவே வந்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார் அவர்.