
நாணயம் புக் செல்ஃப்
புத்தகத்தின் பெயர் : அல்காரிதம் டு லிவ் பை (Algorithms to Live By)
ஆசிரியர் : ப்ரையன் கிரிஸ்டியன் மற்றும் டாம் கிரிபின்ஸ்
பதிப்பாளர் : Henry Holt and Co.
சிலர் சிக்கலான பல விஷயங்களுக்கு மிக எளிதாக முடிவெடுத்து வெற்றிபெறுவதைப் பார்க்கலாம். எப்படிச் சிலரால் மட்டும் அது முடிகிறது? ப்ரையன் கிரிஸ்டியன் மற்றும் டாம் கிரிபின்ஸ் எனும் இருவர் இணைந்து எழுதிய ‘அல்காரிதம் டு லிவ் பை – த கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆஃப் ஹியூமன் டிசிசன்ஸ்’ என்னும் புத்தகம், முடிவெடுத்தல் குறித்துச் சொல்லித் தருகிறது.

இதை ஏதோ கணினி சார்ந்த புத்தகம் என நினைத்துவிடவேண்டாம். அல்காரிதம் (வழிமுறை) என்ற சொல்லைக்கேட்டவுடன் பிக்-டேட்டா, பெரிய நிறுவனங்கள், அரசுத் துறைகள் போன்றவை அன்றாடம் உருவாக்கும் டேட்டாக்களை ஆய்வு செய்து முடிவெடுத்தல் என்று நாம் உடனடியாக உருவகப்படுத்திக்கொள்கிறோம். அல்காரிதம் என்பதை நாலாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே மனித மூளை உபயோகித்துக்கொண்டுதான் வருகிறது.
நம் அன்றாட செயல்பாடுகளைச் சிறப்பாக்கிக்கொள்ள கம்ப்யூட்டர்கள் எப்படி அல்காரிதத்தை உபயோகிக்கின்றனவோ அதேபோல் நாமும் உபயோகித்துப் பலனடைவது எப்படி என்பதைத்தான். வீடு வாடகைக்குப் பார்க்கிறோம், அலுவலகத்தில் யாருக்கு எங்கே சீட் ஒதுக்குவது என்று சிந்திக்கிறோம், எந்த வேலையை எந்த நேரத்தில் செய்வது என்று சிந்திக்கிறோம். இவை எல்லாவற்றுக்குமே கணினியின் மூலம் முடிவெடுக்க வேண்டியிருந்தால் இடம் ஒதுக்க சார்ட்டிங் தியரி, நேரம் ஒதுக்க ஷெட்யூலிங் தியரி என ஒவ்வொன்றுக்கும் அல்காரிதங்களையே உபயோகிக்கிறோம்.
கணினிகள், பல முடிவுகளை எடுக்கத்தூண்டும் வேலையைச் செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இவற்றைச் செய்ய, கம்ப்யூட்டர் சயின்ஸ் விஞ்ஞானிகள் கம்ப்யூட்டர்களுக்கு எப்படிச் சொல்லித் தருகின்றனர் என்று ஆராய்ந்தால், அவை அல்காரிதங்களின் மூலமாகவே சொல்லித்தரப்படுகின்றன. இருக்கிற தகவல்களைக் கொண்டு, இல்லாத தகவல்களை யூகித்து எப்படி முடிவெடுப்பது, பரிந்துரைப்பது என்றெல்லாம் சொல்லித்தருவது இந்த அல்காரிதங்களே. கம்ப்யூட்டருக்கு இந்த அல்காரிதங்களைப் படிப் படியாகச் சொல்லிக்கொடுத்தது மனிதர்களே. அதே அல்காரிதங் களை உபயோகித்து நாம் நம் வாழ்வின் நிகழ்வுகளில் முடிவெடுப்பது எப்படி என்பதைத்தான் இந்தப் புத்தகம் சொல்கிறது. அப்படி முடிவெடுப்பதன் மூலம் மனிதனால் சிறப்பாகச் செயல்படமுடியும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

நாம் எதிர்கொள்ளும் ஒரு பிரச்னையில், நாம் எடுக்கும் முடிவு என்பது நம் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்கிறது. ஒரு பிரச்னையை நாம் எதிர்கொள்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். பின்வரும் விஷயங்கள் பலவும் அதில் இருக்கும். நிச்சயமற்ற பல விஷயங்கள், நேரத்தட்டுப்பாடு, அரைகுறை தகவல்கள் மற்றும் முடிவு எடுக்கும் நேரத்திற்கும் அதன் விளைவுகள் வரும் நேரத்திற்கும் இடையேயான உலகத்தில் ஏற்படும் மாறுதல்கள் போன்றவை. இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவே.. கம்ப்யூட்டர்களின் பார்வையைக்கொண்டு இந்தப் பிரச்னைகளை அணுகினால் எப்போதும் வெற்றிகிடைக்குமா? என்று கேட்டால், அப்படிப்பட்ட அல்காரிதங்கள் இதுவரை உருவாக்கப்படவில்லை என்றே சொல்லவேண்டியிருக்கும். சில சூழ்நிலைகளுக்கு இன்னமும் அல்காரிதங்கள் உருவாக்கப் படவேயில்லை என்பதே உண்மை. அப்புறம் எதற்கு கம்ப்யூட்டர்கள் முடிவெடுக்கும் வழிகளில் நாம் முடிவெடுக்க வேண்டும், பேசாமல் நான் மனிதர்கள் முடிவெடுப்பதைப் போன்றே எடுத்துக்கொள்கின் றேன் என நீங்கள் சொல்லலாம்.
முழுவதுமாக அல்காரிதங்கள் கண்டறியப்பட்ட விஷயங்களில் உலக நடப்புக்கும் கையில் இருக்கும் பிரச்னைக்கும் இடையேயுள்ள நுணுக்கங்களை ஆராய்ந்தால் பல நுண்ணறிவுகள் நமக்குக் கிடைக்கவே செய்கின்றன. கணினி விஞ்ஞானிகளும், கணிதமேதைகளும்கூட சொல்வது பின்வருவனவற்றைத்தான்.
கையில் இருக்கும் பிரச்னைக்கு எல்லா வழிகளிலுமான விடையைத் தேடிய பின்னரே முடிவெடுப்பேன் என்று கிளம்பாதீர்கள். எப்போதும் எந்தப் பாதையில் அதிக லாபம் இருக்கிறதைப்போல் தெரிகின்றதோ அதில் செல்லாதீர்கள். ஒரு குழப்பமான சூழலிலேயே இருக்கப் பழகிக்கொள்ளுங்கள். பலகோணங்களில் ஒரு விஷயம் குறித்துச் சிந்திக்காமல் கொஞ்சம் உங்களுடைய உள்ளுணர்வுகளை மதித்து நடந்து பழகுங்கள். மன்னித்துப் பழகுங்கள். ஆனால், அதே சமயம் மறந்து விடாதீர்கள். மனசாட்சிக்குப் பயப்படுங்கள். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு நடக்க முயற்சி செய்யும்போது கணினிகள் முடிவெடுக்கும் விதத்தில் நம் முடிவெடுக்கும் பாணியை மாற்றிக்கொள்வதில் தவறேதும் இல்லை.
ஏனென்றால், வாடகைக்கு ஒரு ப்ளாட் நாம் பார்க்கும்போதுகூடத் தேவையான சரியான முடிவை, 37 சதவிகித அளவுக்கே நாம் எடுக்கும் அளவிலேயே நம் சூழல் இருக்கிறது.
முடிவெடுக்கும் விஷயத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதே என்பார்கள். எத்தனை நேரம்தான் ஆழம் பார்ப்பீர்கள்..? ‘பல மரம் பார்த்த தச்சன் ஒரு மரத்தையும் வெட்டமாட்டான்’ என்ற மூத்தோர் சொல் நிஜமாகிவிடும் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள் என்கின்றனர் ஆசிரியர்கள்.
உதாரணத்துக்கு ஒரு வேலைக்கு ஆள் எடுக்கிறீர்கள். 100 பேர் விண்ணப்பிக்கின்றனர். 37 சதவிகித ஆள்களைப் பார்த்து முடிவுசெய்வதே போதுமானது. அதற்குள் கிடைக்கின்ற ஆளே அதிகபட்ச நல்லவராக இருக்க வாய்ப்புள்ளது. அதைத் தாண்டிச் சென்றால் அதைவிட மோசமான ஆள் தேர்ந்தெடுக்கப்படவோ அல்லது ஒரு பயலும் சரியில்லை என்று வேலையைக் காலியாக வைக்கவோ வாய்ப்புள்ளது. எப்போது வீட்டை விற்பது, எப்போது பார்க் செய்வது, எப்போது வேலையை விடுவது போன்ற முடிவுகள் அனைத்திலுமே இந்த 37 சதவிகித விதி சூப்பராய் செயல்படும்.
பிரச்னைகளை டீல் செய்யும் அனைவருக்கும் ஆசிரியர்கள் சொல்வது ஒன்றைத்தான். உங்களுக்கு வேண்டியவர்களுக்குப் பிரச்னை வந்தால் நீங்கள் என்னென்ன அறிவுரைகளை யெல்லாம் சொல்கின்றீர்கள்..? பயப்படாதீர்கள், ஆண்டவன் விட்டவழி, விதிவசம், நாம எடுக்கிற முயற்சியை எடுப்போம். பிறகு ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும் எனப் பல்வேறு சொற்றொடர்களை உபயோகித்து அவர்களைத் தேற்ற முற்படுகிறோம். பிரச்னை என்று வரும்போது அடுத்தவர்களிடம் அன்பு செலுத்துவதைப்போல் உங்களிடமும் கொஞ்சம் அன்பு செலுத்திப்பழகுங்கள்.
அதாவது, ஒரு பிரச்னை குறித்து ஒரேயடியாய் யோசித்து உடலையும் மூளையையும் மனதையும் கசக்கிப் பிழியாதீர்கள். நாம் என்னதான் சிந்தித்துச் செயல்பட்டாலும் முடிவெடுக்கும் வேளையில் நமக்குத் தெரியாதது மற்றும் முடிவுகள் நடைமுறைப் படுத்தப்படுகின்றபோது, புதியதாக முளைப்பவைதான் நம் வெற்றியைத் தீர்மானிப்பதாக இருக்கின்றன. அல்காரிதங்கள் சுலபமான தீர்வை நோக்கி நகர்பவையாகவும், தவறான முடிவெடுக்க இருக்கும் வாய்ப்புகளால் வரும் நஷ்டங்களை, காலம் தாழாமையால் வரும் லாபங்களினால் சரிசெய்பவையாகவும், தற்செயல் நிகழ்வுகள் நல்லதாக நடக்கலாம் என்ற மதிப்பீட்டோடு செயல்படுபவையாகவும் இருக்கின்றன. அதேபோன்றே எளிமையாகச் சிந்தித்துச் செயல்பட்டு வெற்றிபெற முயலுங்கள் என முடிக்கின்றனர் ஆசிரியர்கள்.
முடிவெடுத்தல் குறித்த பல்வேறு புதிய கோணங்களைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் நிச்சயம் படிக்கலாம்.
நாணயம் டீம்

சரியான முடிவை எடுப்பது எப்படி?
எந்த விஷயத்திலும் சரியான முடிவை எடுக்க எந்த அளவுக்குக் களம் இறங்கினால் சரியாக இருக்கும் என ஆசிரியர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். வீடு தேடுதலோ, வேலைக்கு ஆளெடுப்பதோ என எதுவானாலும் சரி. ஒருசிலவற்றையோ, ஒருசிலரையோ பார்த்துவிட்டு முடிவெடுத்தால் நல்லவற்றையோ, சரியான நபரையோ பார்க்காமலே விட்டுவிட வாய்ப்புள்ளது; இருக்கின்ற எல்லாவற்றையும் பார்த்துவிடுவோம் எனக் களமிறங்கினால் நல்லது எது எனக் குழம்பி, கண்டுபிடிக்க முடியாமலேயே போய்விடுவது என்பது போன்ற சிக்கல்களையும் நாம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். மிகவும் குறைவாக இல்லாமலோ, மிகவும் அதிகமாக இல்லாமலோ ஏதாவது ஓர் இடத்தில் நாம் முடிவை எடுக்கவேண்டியுள்ளது. எல்லாவற்றையும் ஒரு முறை பார்த்துவிடுவோம் என்று கிளம்பிவிட்டீர்கள் என்றால் நீங்கள் வேலையை முடிக்காமல் (முடிவெடுக்காமல்) திரும்பவே வாய்ப்புள்ளது என்கிறார்கள் ஆசிரியர்கள்.