மற்ற எபிசோடுகள்
Published:Updated:

டெக்ஜாம்பவான்கள்! - எக்ஸ்கோடு (Xcode)

டெக்ஜாம்பவான்கள்! - எக்ஸ்கோடு (Xcode)
பிரீமியம் ஸ்டோரி
News
டெக்ஜாம்பவான்கள்! - எக்ஸ்கோடு (Xcode)

சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! -3

மிகவும் சவாலான பயோடெக்னாலஜி துறையில் களமிறங்கி சிக்ஸர் அடித்துக்கொண்டிருக்கிறது எக்ஸ்கோடு (Xcode) நிறுவனம். இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ் துறையின்கீழ் இயங்கும் முன்னணி ஸ்டார்ட்அப் இது. நம்முடைய டி.என்.ஏ-வை வைத்து நம் உடலின் ஒட்டுமொத்த ஜாதகத்தையும் அலசுவதுதான் இந்த நிறுவனத்தின் பணி. மரபியல் துறையின் வளர்ச்சி பற்றியும் எக்ஸ்கோடு நிறுவனத்தின் சக்சஸ் சீக்ரெட்டையும் நம்மிடையே பகிர்ந்துகொள்கின்றனர் இதன் நிறுவனர்களான அப்துர் ரப் மற்றும் சலீம் முகமது ஆகிய இருவரும்.  

டெக்ஜாம்பவான்கள்! - எக்ஸ்கோடு (Xcode)

இன்ஸ்பிரேஷன்

“நாங்கள் இருவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள்தான். இங்கே படிப்பை முடித்துவிட்டு, மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்குச் சென்றிருந் தோம். அப்போதுதான் மனிதர்களின் டி.என்.ஏ-வைப் புரிந்துகொள்வதற்கான தொழில்நுட்பம் வெளியானது. நாம் எல்லோருமே மனிதர்கள்தான். ஆனால், ஒவ்வொருவருக்குள்ளும் நிறம், எடை, உயரம், குணம் எனப் பல வேறுபாடுகள் நிறைந்திருக்கின்றன.

எல்லா மனிதர்களுக்கும் 99 சதவிகித டி.என்.ஏ-க்கள் ஒரே மாதிரியானவை தான். ஒரேயொரு சதவிகிதம்தான் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாறுபடும். ஆனால், இந்த ஒரு சதவிகிதத்திற்குள் மட்டுமே சுமார் 3 மில்லியன் வேறுபாடுகள் இருக்கின்றன. இதுதான் ஒவ்வொரு மனிதரையும், இன்னொரு வரிடத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

ஒருகட்டடத்தின் புளூபிரின்ட்போல, மனிதனுக்கு ஜீன். அதன் அடிப்படையில்தான் நம் உடலின் ஒவ்வொரு அம்சமும் இருக்கும். நாம் பிறக்கும்போதே நம் குணங்கள் ஜீனில் மறைந்திருக்கும். எனவே, அவற்றை நாம் புரிந்துகொண்டாலே, பல நோய்களை நம்மால் முன்கூட்டியே தடுக்க முடியும். நம் உடலின் செயல்பாடுகளைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியும். இந்த முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்தத் துறையில் நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மக்களிடமும் கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புஉணர்வு உருவாகத் தொடங்கியது. அப்போதுதான் நாங்கள் எங்கள் மேற்படிப்பை முடித்திருந்தோம். வேறு ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிவதைவிடவும், நாமாகவே ஒரு பிசினஸ் தொடங்கினால் என்ன என்று நாங்கள் சிந்தித்தோம். ஒரு பல்கலைக்கழகத்திலோ, ஆய்வு மையத்திலோ பணிபுரிந்தால் நம் விருப்பத்திற்கேற்ப செயல்பட முடியாது. ஆனால், ஒரு தொழிலதிபராக, என்ன ஆராய்ச்சி செய்யவேண்டும், எந்தப் பொருளை உருவாக்கவேண்டும், என்ன விலைக்கு விற்கவேண்டும் என்பது போன்ற அனைத்தையும் எங்களால் முடிவு செய்யமுடியும் என்பதை உணர்ந்தோம். எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி, எங்களுக்கான இலக்கை நாங்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என்பது எங்களுக்குப் பெரிய சுதந்திரமாகத் தெரிந்தது. அப்படி உருவானதுதான் இந்த எக்ஸ்கோடு நிறுவனம்.

அடித்தளம்


நம் உடலின் அனைத்துக் குணங்களுக்கும் காரணம், நம் ஜீன்கள்தான். எனவே, அவற்றைப் பகுப்பாய்வு செய்வதன் மூலமாக, நம்முடைய மொத்த உடலையும் துல்லியமாகக் கணிக்க முடியும்; பல்வேறு நோய்களையும் தீர்க்க முடியும். இதற்காக உலகளவில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், இந்தியாவில் இந்த முயற்சிகளை யாருமே முன்னெடுக்கவில்லை. அந்தச் சமயத்தில்தான், நாங்கள் உள்ளே வந்தோம். நாங்கள் இருவருமே பயோடெக்னாலஜி துறையில் ஆராய்ச்சிப் படிப்பை முடித்தவர்கள் என்பதால், இந்தத் துறையின் எல்லா விஷயங்களும் அத்துப்படி. எனவே, தைரியமாக களமிறங்கினோம். ஒருவர் தனக்கேற்ற சரியான டயட்டைக் கண்டுபிடிக்க, சரியான உடற் பயிற்சிகளைச் செய்ய, நீரிழிவு மற்றும் இதயநோய்கள் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிய, சரியான அழகுக் குறிப்புகளைப் பின்பற்ற என நிறைய சோதனைகளை அறிமுகம் செய்தோம்.

சவால்கள்

இவையனைத்தும் வேகமாக நடந்தாலும், நாங்கள் நிறைய சவால்களை அப்போது எதிர் கொள்ள வேண்டியிருந்தது. இந்தத் துறை குறித்தும், சோதனைகள் குறித்தும் மருத்துவ உலகிற்கே புதிதாக இருந்தது. மக்களுக்குக் கேட்கவே வேண்டாம். மேலும், டி.என்.ஏ-வைப் பகுப்பாய்வு செய்ய ஆகும் செலவும் மிக அதிமாக இருந்தது. டி.என்.ஏ ஆராய்ச்சிகளின்போது, அவற்றைப் பகுப்பாய்வு செய் வதற்காக பல மில்லியன் டாலர்கள் செலவானது. ஆனால், இன்று இந்தப் பரிசோதனைகளை வெறும் 100 டாலர்களுக்கும் குறைவாகவே செய்துவிடமுடியும். இதுபோன்ற சிக்கல்களால், எங்களுக்கான வாடிக்கையாளர்களைக் கண்டறி வதிலும், அவர்களைச் சென்றடை வதிலும் நிறைய சிரமங்களை எதிர்கொண்டோம்.

வெற்றி


அப்போது எங்கள் மார்க்கெட்டிங்கில் சில மாறுதல் களைச் செய்தோம். தனிநபர் களிடம் இதுகுறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதைவிடவும், இதேதுறையில் இருப்பவர்களிடம் எங்கள் சேவைகளைக் கொண்டு செல்லலாம் என நினைத்தோம். அதன்படி, மருத்துவர்கள், ஊட்டச் சத்து நிபுணர்கள்,ஜிம் ஆலோசகர்கள், அழகுக்கலை நிபுணர்கள் போன்றவர்களுடன் இணைந்தோம். எங்களின் சோதனைகள் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் அவர்களுக்கு விளக்கினோம். இப்படிச் செய்த தால், அவர்களின் மூலமாக எங்களுக்கு நிறைய வாடிக்கை யாளர்கள் வந்தார்கள். நாங்கள் 10 வாடிக்கையாளருக்கு இதுகுறித்துச் சொன்னால், ஒருவர்தான் ஜீன் பரிசோதனைகளுக்குத் தயாராக இருப்பார். ஆனால், ஒரு மருத்துவமனைக்குச் சென்று சொன்னால், அவர்கள் எங்களுக்கு 100 வாடிக்கையாளர்களை அனுப்புவார்கள். மேலும், அவர்களே எங்கள் ரிப்போர்ட் குறித்து வாடிக்கையாளருக்குத் தெளிவாக விளக்கியும் விடுவார்கள். எனவே, எங்கள் வாடிக்கையாளர் மற்றும் மருத்துவர் ஆகிய இருவருக்குமே எங்கள் பரிசோதனை முடிவுகள் பயன்படும். அமெரிக்காவிலும் சில நிறுவனங்களுடன் நாங்கள் கைகோத்துள்ளோம். எங்கள் வருமானத்தில் 40% வருமானம் அமெரிக்காவில் இருந்துதான் வருகிறது.   

டெக்ஜாம்பவான்கள்! - எக்ஸ்கோடு (Xcode)

WHO கூற்றின்படி, முன்கூட்டியே வரும் இதயநோய்கள், நீரிழிவு நோய், பக்கவாதம் போன்றவற்றை வரும் முன்னரே தடுக்கமுடியும். இதற்காகச் சரியான உணவுப்பழக்கங்களும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அவசியம். நம்முடைய டி.என்.ஏ-வை சோதனை செய்வதன் மூலமாக, நமது மரபணுவில் நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா எனக் கண்டறியலாம். புற்றுநோய்க்கும் இது பொருந்தும்.

இலக்கு

ஆய்வுக்கான செலவும், அதற்காக எடுத்துக்கொள்ளப்படும் நேரமும் முதலில் மிக அதிகமாக இருந்தது. ஆனால், அறிவியல் முன்னேற்றத்தால் அவை வெகுவாகக் குறைந்துவிட்டன. வருங்காலங்களில் இந்தத் துறை இன்னும் முன்னேற்றமடையும். எப்படி ஐ.டி.(IT) எனப்படும் இன்பர்மேஷன் டெக்னாலஜியில் இந்தியா வளர்ந்த ஒரு நாடாக இருக்கிறதோ, அதைப்போல பி.ஐ.டி (BIT) என்னும் பயோ இன்ஃபர்மேடிக்ஸ் டெக்னாலஜியில் இந்தியாவை வலிமையாக மாற்ற வேண்டும். அதற்கான வழியில் தொடர்ந்து இயங்குவதே எங்கள் இலக்கு” என உற்சாகமாகக் கூறுகின்றனர் இருவரும்.

கற்றுக்கொண்ட விஷயம்

பிசினஸில் கற்றுக்கொண்ட முக்கியமான பாடத்தைப் பகிர்ந்துகொள்கிறார் அப்துர் ரப். “உன்னுடைய பொருளைப் பற்றி உன்னைத் தவிர வேறு யாருக்கும் நன்றாகத் தெரியாது; எனவே, அதனை உன்னைவிட வேறு யாரும் சிறப்பாக விற்கமுடியாது” எனச் சொல்வார்கள். இறுதியாக நாங்களும் அந்த முடிவுக்கே வந்தோம். இதன்மூலம் நாங்கள் கற்றுக்கொண்ட விஷயம் இதுதான். பிசினஸில் ஒரே ஃபார்முலா, எல்லா இடங்களிலும் வெற்றியைத் தராது. நமக்கான ஃபார்முலாவை நாம்தான் கண்டறிய வேண்டும்.”

பன்ச்


“இந்தியாவிற்கு மிகவும் புதுமையான நிறுவனம் என்பதால், எங்கள் பிசினஸில் இருந்த ரிஸ்க் மிக அதிகம். இதனைப் பலவீனமாகக் கருதாமல், பலமாகக் கருதினோம். காரணம், நாங்கள்தான் இந்தத் துறையில் புதியவர்கள் என்பதால் எங்களுக்குப் போட்டியாளர்களும் இல்லை. எனவே, வேகமாக முன்னேறினோம், சந்தையை வசப்படுத்தினோம், சாதித்தோம்!”

- ஞா.சுதாகர்

படம்: ஜே.வேங்கடராஜ் 

டெக்ஜாம்பவான்கள்! - எக்ஸ்கோடு (Xcode)

எப்படி நடக்கிறது சோதனை?

ருத்துவப் பரிசோதனை என்பது தற்போது நவீன காலத்தில் மிகமிகத் துல்லியமாகக் கண்டுபிடித்துச் சொல்லும் வகையில் டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. டி.என்.ஏ பரிசோதனை மூலமான ஆய்வில் முன்னோடி நிறுவனமாகத் திகழும் எக்ஸ்கோடு நிறுவனத்தில் சோதனை முறையும் புதுமையாகச் செய்யப் படுகிறது. சோதனைக்காக ரத்த மாதிரிகள் இங்கே எடுக்கப்படுவதில்லை. நம் உமிழ்நீர் மட்டுமே போதுமானது. அவற்றைச் சேகரித்து, ஆய்வகத்தில் ஒப்படைத்துவிட்டால் போதும்; அவற்றை ஆய்வுக்குட்படுத்தி சில நாள்களில் முடிவுகளைத் தந்துவிடுவார்கள். அதிலிருக்கும் மருத்துவ விஷயங்களும் எடுத்துக் கூறப்படும்.