நடப்பு
தொடர்கள்
Published:Updated:

சி.எஸ்.ஆர்... களத்தில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி!

சி.எஸ்.ஆர்... களத்தில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி!
பிரீமியம் ஸ்டோரி
News
சி.எஸ்.ஆர்... களத்தில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி!

சி.எஸ்.ஆர்... களத்தில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி!

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் கடைசி மூன்று ஆண்டுகளின் சராசரி லாபத்தில் இரண்டு சதவிகிதத்தைச் சமூக நலத் திட்டங்களுக்குச் செலவிட வேண்டும் என்பது அரசின் விதி. அந்த வகையில், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, சென்ற ஆண்டு சுமார் 300 கோடி ரூபாயைச் சமூக நலத் திட்டங்களுக்குச் செலவிட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு 350 கோடி ரூபாயைச் சமூக நலத் திட்டங்களுக்குச் செலவழிக்கப் போகிறதாம்.   

சி.எஸ்.ஆர்... களத்தில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி!

இது தொடர்பான நிகழ்ச்சி ஒன்று மேகாலயா மாநிலத்தில் இருக்கும் உம்பத்தாவ் (Umpathaw) என்ற கிராமத்தில் கடந்த மாதம் நடைபெற்றது. ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் துணை மேலாண்மை இயக்குநர் பரேஷ் சுக்தாங்கர் உள்பட பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வுக்கு, ஹெச்.டி.எஃப்.சி-யின் அழைப்பின் பேரில் நாமும் சென்றிருந்தோம்.

‘பரிவர்த்தன்’ பெயரில் இதுவரை 750 இந்தியக் கிராமங்களுக்கு பல உதவிகளைச் செய்திருப்பதாகவும், இதன் அடுத்தகட்டமாக 2019-ம் ஆண்டுக்குள் 1000 கிராமங்களுக்கு இதை விரிவுபடுத்தவிருப்பதாகவும் ஹெச்.டி.எஃப்.சி சொல்லியிருக்கிறது.
உதவி தேவைப்படும் ஒவ்வொரு கிராமத்தையும் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்து, அந்தக் கிராமங்களுக்குக் கல்வி, திறன் மேம்பாடு, இயற்கை வளங்கள் மேலாண்மை, தண்ணீர் மற்றும் சுகாதாரம், நிதி அறிவு ஆகிய வழிகளில் பல உதவிகள் செய்யப்படுகின்றன.

நிகழ்ச்சி நடந்த உம்பத்தாவ் கிராமத்தில் உதவி பெற்றவர்களையும், செய்யப்பட்ட உதவிகளையும் நேரில் பார்வையிட இந்தியா முழுவதிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மேகாலயா மாநிலத்தில் பல மலைக்கிராமங்கள் குடிநீருக்காக நீண்டதூரம் நடக்க வேண்டியிருக்கிறது. இதற்காக ஊருக்குள் மூன்று குடிநீர்த் தொட்டிகள் கட்டப் பட்டிருக்கின்றன.

“இத்தனை ஆண்டுகாலத்தில் எங்கள் வீட்டுக்குத் தண்ணீர் வருவது இதுதான் முதல்முறை என நெகிழ்கிறது” உம்பத்தாவ் கிராமம்.

மேகாலயா மாநிலத்தில் பன்றிகள், ஆடுகள், கோழிகள் அதிகம் வளர்க்கப்படுகின்றன. வேறு எந்த வருமானமும் இல்லாத குடும்பங்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு இரண்டு பன்றிக் குட்டிகளைத் தந்திருக்கிறது இந்த வங்கி. அவர்கள் அதை வளர்த்து, பெரிதானபின் விற்றால் 30,000 வரை லாபம் கிடைக்கும்.

இப்படி உதவி பெற்றவர்கள் பணம் கைக்கு வந்ததும் அடுத்த குட்டிகளை அவர்களாகவே வாங்கிக்கொள்ள வேண்டும். வங்கி செய்யும் எல்லாம் உதவிகளும் தற்சார்பு சார்ந்த உதவிகளாகவே இருக்கின்றன.

ஒவ்வொரு ஊருக்குள்ளும் விவசாயக் கருவிகள் வங்கி ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது இந்த வங்கி.   விவசாயத்துக்குத் தேவையான பல நவீன கருவிகளை இங்கு  வாங்கி, பயன்படுத்திவிட்டுத் திரும்பத் தந்துவிடலாம்.

உம்பத்தாவ் கிராமத்துக்கும் அருகிலிருக்கும் பல கிராமங்களுக்கும் சேர்த்து ஒரேயொரு அரசுப் பள்ளி இருக்கிறது. அந்தப் பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறைக்குத் தேவையான அனைத்தையும் தந்து உதவியிருக்கிறது ஹெச்.டி.எஃப்.சி.

மேலே சொன்ன அனைத்து விஷயங்களையும் முறையாகப் பராமரிக்க, கிராம நிர்வாகக் குழு ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் குழு இவை சரியாக நடக்க உதவும். இந்த உதவிகளை ‘சச்’ என்ற என்.ஜி.ஓ உதவியுடன் மேகாலயா மாநிலத்தில் இருக்கும் கிராமங்களுக்குச் செய்திருக்கிறது ஹெச்.டி.எஃப்.சி.

“எங்கள் அமைப்பு மூலம் இந்தியக் கிராமங்களின் சமூக மற்றும் நிதி நிலைமைகளை முன்னேற்றவே நாங்கள் விரும்புகிறோம். இதைச் சாத்தியப்படுத்தியமைக்கு எங்கள் என்.ஜி.ஓ பார்ட்னர்களுக்கும் நாங்கள் நன்றி சொல்லிக் கொள்கிறோம்” என்கிறார் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சி.எஸ்.ஆர் தலைவர் நுஸ்ரத் பதான்.

உம்பத்தாவில் நடந்த நிகழ்ச்சி முடிந்ததும்  பரேஷ் சுக்தாங்கரிடம், “இதுபோன்ற உதவிகள் பெறும் கிராமங்களின் தலைவர்கள் கலந்துபேச ஒரு குழுவை அமைக்கலாம். இதன்மூலம் அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமே’’ என்றோம். “நல்ல யோசனை, உடனே நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்றோம்.

சி.எஸ்.ஆர் என்கிற பெயரில் மரம் நடுவிழா, மருத்துவ முகாம் என்று நில்லாமல், சரியான விஷயங்களைச் செய்து, முன்மாதிரியாகத் திகழ்கிறது ஹெச்.டி.எஃப்.சி வங்கி!

- கார்க்கி பவா