
தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in
தங்கம் மினி
பொதுவாக, எந்தவொரு பொருளின் விலையும் பக்கவாட்டு நகர்வில் இருக்கும்போது, காளைகளுக்கும், கரடிகளுக்கும் இடையே சண்டை சம அளவில் நடப்பதாக அர்த்தம். அதன்பின் பக்கவாட்டு நகர்விலிருந்து மேலே விலை திரும்பினால், சந்தை, காளைகள் கட்டுப்பாட்டுக்கும், கீழே திரும்பினால், கரடிகள் கட்டுப்பாட்டுக்கும் மாற வாயப்புண்டு. அதுதான், தங்கத்திலும் நடந்து வருகிறது. செப்டம்பர் 2017 முதல் அக்டோபர் முதல் வாரம்வரை ஒரு டவுன் டிரெண்ட் சேனலில் இருந்துவந்த தங்கம், மேலே உடைத்துக் காளைகளின் கட்டுப்பாட்டுக்கு மாறியது. ஆனால், நவம்பர் மாதம் மூன்றாம் வாரம் வரை காளைகள் தொடர்ந்து சந்தையை ஏற்ற முயன்று முடியாமல், விலை, பக்கவாட்டு நகர்வுக்கு மாறியது. நவம்பர் முடிவில், பக்கவாட்டு நகர்விலிருந்து கீழ்நோக்கி இறங்கியது. சந்தை கரடிகள் கைகளுக்கு மாறியது.

கடந்த இதழில் சொல்லப்பட்ட தங்கத்தின் முக்கிய ஆதரவான 29100 உடைக்கப்பட்டது. இறக்கம் வந்தது. சென்ற வாரம் திங்களன்று 29100 உடைக்கப்பட்டது. செவ்வாயன்று, காளைகள் மீண்டும் ஒரு ஏற்றத்திற்கு முயன்று தோற்றுப்போயின. அதன் பின் கரடிகளின் கைகள் மேலோங்கின.
புதனன்று ஒரு ஸ்பின்னிங் டாப்பில் முடிந்தாலும், வியாழனன்று பெரும் இறக்கம் நிகழ்ந்து, தங்கம் 28653 என்ற குறைந்தபட்ச எல்லையைத் தொட்டது. வெள்ளியன்றும் அந்த இறக்கம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இனி என்ன நடக்கலாம்? தங்கம் அடுத்த முக்கிய ஆதரவான 28670-ஐ உடைத்து இறங்க ஆரம்பித்துள்ளது. இந்த இறக்கம் தொடர்ந்தால், அடுத்த ஆதரவான 28280 என்ற எல்லையை நோக்கி நகர ஆரம்பிக்கலாம். இந்த எல்லை வலிமையான ஆதரவாகும். இந்த எல்லை உடைக்கப்படாதவரை, ஒரு புல்பேக்ரேலி வரலாம். இந்த புல்பேக் ரேலி மேலே 28670 என்ற எல்லை வரை ஏற ஆரம்பிக்கலாம். அங்கு தடுக்கப்பட்டு, மீண்டும் இறக்கம் தொடரலாம். கீழே முக்கிய ஆதரவான 28280 உடைக்கப்பட்டால், மிக வலிமையான தொடர் இறக்கம் வரலாம்.
வெள்ளி மினி
வெள்ளி, தன் அகண்ட பக்கவாட்டுநகர்வின் கீழ் எல்லையை உடைத்து வலிமையாக இறங்க ஆரம்பித்தது. தங்கம் எப்படி முக்கிய ஆதரவைத் திங்களன்று உடைத்து இறங்க ஆரம்பித்ததோ, அதே நாளில் வெள்ளியும் வலிமையாக இறங்க ஆரம்பித்தது. வெள்ளி, ஆகஸ்ட் 2017-லிருந்து நவம்பர் வரை 38700 என்ற ஆதரவைத் தக்க வைத்திருந்தது. இந்த ஆதரவை உடைத்த பிறகு, வெள்ளி ஒரு தொடர் இறக்கத்தில் இருக்கிறது.
நாம் கடந்த வாரம் கொடுத்த முக்கிய ஆதரவான 38150-ஐ சென்ற வாரம் திங்களன்றே உடைத்து வெள்ளி இறங்க ஆரம்பித்தது. இந்த இறக்கம், செவ்வாய், புதன், வியாழன் என்று தொடர ஆரம்பித்தது. தங்கம் கொஞ்சம் தடுமாறி இறங்கிய காலகட்டத்தில், வெள்ளி ஒரு திசையில் இறங்கியது, கரடிகளின் வலிமையைக் காட்டுகிறது. இந்த இறக்கம் 36963 வரை தொடர்ந்தது.

இனி என்ன நடக்கலாம்? வெள்ளி தொடர்ந்து இறங்கிய நிலையில் அடுத்த மிக முக்கிய ஆதரவு, 36800 ஆகும். இந்த எல்லை உடைக்கப்பட்டால், மீண்டும் 800 - 1000 புள்ளிகள் வரை இறங்கலாம். தற்போது ஆதரவான 36800-ஐ எடுத்து மேலே போனால், புல்ரேலியின் எல்லைகள் 37730 மற்றும் 38200 ஆகும்.
கச்சா எண்ணெய் மினி
கச்சா எண்ணெய் ஒரு தொடர் ஏற்றத்தில் இருந்துவருவதைப் பார்த்தோம். கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் கூட்டமைப்பு நாடுகள், தங்கள் உற்பத்தியை டிசம்பர் 2018 வரை குறைப்போம் என்று சொன்னது.இது, இன்னும் காளைகளுக்கு வலு சேர்த்தது.
எனவே, அடுத்தகட்ட ஏற்றத்திற்கு முயற்சி செய்தன. ஆனால், சென்ற வாரம், அமெரிக்கா தனது கச்சாஎண்ணெய் உற்பத்தியைக் கூட்டிக் காட்டியது. இதனால், கச்சா எண்ணெய் விலை தடாலடியாக இறங்க ஆரம்பித்தது. கரடிகள் சந்தைக்குள் புகுந்தன.
சென்ற இதழில், இன்னும் 3570 என்ற ஆதரவுநிலை வலுவாகவே உள்ளது என்று சொன்னேன் அல்லவா! அது இன்னும் வலுவாகத்தான் உள்ளது. கரடிகள் களத்தில் இறங்கி, கச்சா எண்ணெய் விலையை 3800-லிருந்து 3605 வரை இறக்கின.
ஆனால், அது ஒரு தற்காலிக இறக்கமாகவே முடிந்துள்ளது. கீழே 3605 என்ற எல்லையைத் தொட்டபிறகு, கச்சா எண்ணெய் மீண்டும் சடசடவென்று ஏற ஆரம்பித்துள்ளது. காளைகள் மீண்டும் ஆட்டத்தில் இறங்கியுள்ளன.
இனி என்ன நடக்கலாம்? தற்போது கச்சா எண்ணெய் ஒரு வலுவான ஏற்றத்தில் உள்ளது. உடனடித் தடை நிலை 3750 ஆகும். இதை உடைத்தால் மீண்டும் முந்தைய உச்சமான 3815-ஐ நோக்கி நகரலாம். கீழே 3570 என்பது மிக மிக வலுவான ஆதரவு ஆகும்.