மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 29 - ஐ.பி.ஓ-வில் பங்கு வாங்கினால்தான் லாபம் கிடைக்குமா?

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 29 - ஐ.பி.ஓ-வில் பங்கு வாங்கினால்தான் லாபம் கிடைக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 29 - ஐ.பி.ஓ-வில் பங்கு வாங்கினால்தான் லாபம் கிடைக்குமா?

செல்லமுத்து குப்புசாமி

டிஸ்ரப்சன் (disruption) என்ற வார்த்தையை நாம் தற்போது அடிக்கடி கேட்க நேர்கிறது. புதிய தொழில் நுட்பங்கள், பாரம்பர்யமாக பிசினஸ்கள் நடந்தேறிய விதத்தை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போடுகின்றன. அது ஓலாவாக இருக்கட்டும், ஊபராக இருக்கட்டும், பாலிசி பஜாராக இருக்கட்டும்.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 29 - ஐ.பி.ஓ-வில் பங்கு வாங்கினால்தான் லாபம் கிடைக்குமா?

அது என்ன பாலிசி பஜார்? சமீபத்தில், என் கார் இன்ஷூரன்ஸ் காலாவதியாகி விட்டது. பாலிசி நடப்பில் இருக்கும்போதே புதுப்பிப்பது பெரிய காரியமில்லை. பணம் மட்டும் செலுத்தினால் போதும். ஆனால், காலாவதியாகிவிட்டால் வாகனத்தை இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அங்கே உள்ள ஆய்வாளர் அதைப் பார்வையிட்டு ஒப்புதல் அளிப்பார். அதன்பின்னரே பாலிசி வழங்குவார்கள். அரை நாள் விடுமுறை போட்டு இதைச் செய்து முடித்தால் சாகசம். சில சமயம் இரண்டு, மூன்று நாள்கூட விடுமுறை போட வேண்டி வரலாம்.

அப்படியொரு நடைமுறை இருந்தது. ஆனால், பாலிசி  பஜார் எல்லாவற்றையும் மாற்றி உள்ளங்கையில் தருகிறது. நமது குறிப்பிட்ட இன்ஷுரன்ஸ் தேவைக்கு பல நிறுவனங்களின் பிரீமியம் தொகையை ஒப்பிடுவதற்கு மட்டும் அது உதவுவதில்லை. அப்படி ஒப்பிடும் நிறுவனங்களில் எதைத் தேர்ந்தெடுத்துப் பணம் செலுத்துகிறோமோ, அந்த நிறுவனத்தில் வாகனக் காப்பீடு சுலபமாகக் கிடைக்க ஆவண செய்கிறார்கள்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது மொபைல் போனில் ஒரு ஆப் (app) இன்ஸ்டால் செய்வதும், அந்த ஆப் சொல்லும் காரின் பாகங்களை வீடியோ எடுத்து அப்லோடு செய்வதும் மட்டுமே. அதை இன்ஷூரன்ஸ் கம்பெனி நபர் ஒருவர் தணிக்கை செய்துவிட்டு ஒப்புதல் அளித்தவுடன், பாலிசி நமக்கு மின்னஞ்சலில் வந்து சேர்ந்துவிடும்.

பொது இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகளெல்லாம் இப்போது காணாமல் போய் விட்டார்கள். பங்குச் சந்தையில் கோலோச்சிய பல சப்-புரோக்கர்கள் ஆன்லைன் ஷேர் டிரேடிங் வந்தபிறகு காணாமல் போன மாதிரித்தான் இதுவும். ஆயுள்காப்பீட்டிலும்கூட ஒரே ஒரு நிறுவனத்தை மட்டுமே நம்பியிருந்த வாடிக்கையாளர்கள், தற்போது பல இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை ஒப்பீடுசெய்து, தமக்கு ஏற்ற பாலிசியைத் தேர்ந்தெடுக்க பாலிசி பஜார் உதவுகிறது. (இதேபோல இங்கிலாந்தில் மணிசூப்பர் மார்க்கெட்.காம் பிரபலம்).

அந்த பாலிசி பஜார், கூடிய சீக்கிரத்தில் ஐ.பி.ஓ (IPO) வெளியிடப் போகிறது. ‘Initial     Public Offering’ என்பதன் சுருக்கமே ஐ.பி.ஓ. ஒரு பிரைவேட் நிறுவனத்தின் பங்குதாரர்கள், குறிப்பிட்ட சில நபர்கள் அல்லது அமைப்புகள் மட்டுமே. அவர்கள் அந்தப் பங்குகளை மற்றவர்களுக்கு விற்கும்போது தனியாரிடம் விற்கலாம். அப்படிச் செய்யாமல் அதன் பங்குகளைப் பொது வெளியில்விட்டு, அதன்பிறகு பங்குச் சந்தையில் விற்பனையாகச் செய்யும் நிகழ்வையே ஐ.பி.ஓ குறிக்கிறது.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 29 - ஐ.பி.ஓ-வில் பங்கு வாங்கினால்தான் லாபம் கிடைக்குமா?பொதுவாக ஐ.பி.ஓ இரு வகைப் படும். முதலாவது, ஏற்கெனவே இருக்கிற பங்குதாரர்கள் தமது ஷேரை பொதுமக்களுக்கு விற்று, அந்தப் பணத்கை தம் கணக்கில் எடுத்துக்கொள்வது. உதாரணத்துக்கு, நாம் ஒரு தனியார் நிறுவனத்தின் 100 பங்குகளை வைத்திருக்கிறோம். அதில் 80 பங்குகளை நம் வசமே வைத்துக் கொண்டு, மீதி 20 பங்குகளை மட்டும் ஐ.பி.ஓ மூலம் வெளியிடலாம். இவ்வாறு நடக்கும் வெளியீடுகளில் வசூலாகும் தொகை முழுவதும், யார் பங்கை விற்கிறார்களோ  அவர்களுக்குப் போகும்;வெளியிடும் நிறுவனத்துக்குப் போய்ச் சேராது. இந்த நடைமுறைக்கு ‘offer for sale’ என்று பெயர்.

இன்னொரு முறை ‘fresh issue’ எனப்படுகிறது. அதாவது, புதிய பங்குகளை உருவாக்கி பொதுஜனத்திடம் விற்பது. ஏற்கெனவே சில பிரைவேட் ஓனர்கள் 100 பங்குகளை வைத்திருக்கிறார்கள். புதிதாக 20 பங்குகளை உருவாக்கி அவற்றை ஐ.பி.ஓ-வில் வெளியிடுகிறார்கள். அந்த 20 பங்குகள் விற்பனை மூலம் கிடைக்கும் பணம், நிறுவனத்தின் கணக்கில் சென்று சேரும். அதன் ஒட்டு மொத்த பங்குகளின் எண்ணிக்கை    120-ஆக உயரும்.

பொதுவாக, நிறுவனத்தின் விரிவாக்க திட்டங்களுக்காக ‘fresh issue’ முறையில் பணம் திரட்டுவதற்குக் காரணம் காட்டுவார்கள். இதற்கு மாறாக, ‘offer for sale’ மூலம் வெளியிடப்படும் பங்குகள், அதன் புரமோட்டர்களின் தேவைக்காக விற்பதாகப் பொதுவில் ஒரு கருத்துண்டு. இன்னும் எளிமையாகச் சொன்னால் ‘offer for sale’ என்பது நிறுவனத்தின் புரமோட்டர்களுக்கும், ‘fresh issue’ நிறுவனத்திற்கும் சாதகமாக அமையுமென்ற கூட்டு மனநிலை நிலவுகிறது.  

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 29 - ஐ.பி.ஓ-வில் பங்கு வாங்கினால்தான் லாபம் கிடைக்குமா?

இந்த இரண்டில் எதுவாக இருந்தாலும், அது புரமோட்டர்களுக்குச் சாதகமான ஒன்றுதான். Offer for sale-ல், அவர்கள் குறைவான விலைக்கு ஷேரை வாங்கி அதிக விலைக்கு நம்மிடம் விற்கிறார்கள். Fresh issue-ல், அவர்கள் குறைவான விலைக்கு வாங்கிய ஷேரில் புதிதாக சிலவற்றை உருவாக்கி அதை அதிக விலைக்கு  விற்கிறார்கள். அதற்குப்பிறகு எல்லாம் ஒன்றுதான். ஐ.பி.ஓ-வுக்குப் பிறகான நாள்களில் பங்குச் சந்தையில் அவர்கள் மறுபடியும்கூட விற்கலாம். பொதுவாகவே,ஷேர் மார்க்கெட் மந்தமாக உள்ளபோதும், தொடர்ச்சியாகச் சரியும்போதும் நிறுவனங்கள் ஐ.பி.ஓ வெளியிடாது.

ஐ.பி.ஒ-வில் பங்குகளுக்கு விண்ணப்பித்து அவற்றைப் பெறுவது முதன்மைச் சந்தை (Primary market) என அறியப்படுகிறது. அதேபோல, ஷேர் மார்க்கெட்டில் வியாபாரமாகும் பங்குகளை விற்று, வாங்குவது இரண்டாம் நிலைச் சந்தை (Secondary market) எனப்படுகிறது. பெரும்பாலான முதலீட்டாளர்கள் முதன்முதலாக ஷேர் மார்க்கெட்டில் நுழைந்தது ஐ.பி.ஓ வாயிலாகத்தான் இருக்கும். சில பேர் ஐ.பி.ஓ-வில் மட்டும் விண்ணப்பித்து ஷேர்களைப் பெறுவது பாதுகாப்பானது என நினைக்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட காலகட்டத்தில் இரண்டாம் நிலைச் சந்தையும், முதன்மைச் சந்தையும் பகுத்துப் பார்க்க இயலாதவை. செகண்டரி மார்க்கெட் மலிவாக இருந்தால் ஐ.பி.ஒ-விலும் பங்குகள் மலிவாகக் கிடைக்கும். செகண்டரி மார்க்கெட்டில் எல்லாம் கிராக்கி என்றால் ஐ.பி.ஓ-விலும் கிராக்கி நீடிக்கும். எல்லா கம்பெனிகளுமே ஒரு காலத்தில் ஐ.பி.ஓ வெளியிட்டிருக்கும். ஐ.பி.ஓ பாதுகாப்பானது, லாபம் தரக்கூடியது என்ற நம்பிக்கை உண்மையானால், எல்லா கம்பெனிகளுமே பாதுகாப்பானதாக, லாபகரமாக இருந்திருக்க வேண்டுமல்லவா?

கல்யாணம் ஆகும் வரைதான் லவ் மேரேஜா, அரேஞ்டு மேரேஜா என்பதெல்லாம். கல்யாணம் நடந்தேறிவிட்டால் எல்லாம் ஒன்றுதான். அதன்பிறகு நல்லவனாக, பொறுப்பானவனாக, குடும்பத்துக்கு ஏற்றவனாக இருப்பதே முக்கியம். பங்குகளை வாங்கிச் சேகரிக்கிற வரைக்கும்தான் ஐ.பி.ஓ-வில் வாங்கியதா, செகண்டரி மார்க்கெட்டில் வாங்கியதா என்பதெல்லாம். அதன் பிறகு எல்லாமே ஒன்றுதான். அதன் பிசினஸ், நிர்வாகம், இயங்கும் சந்தை ஆகிய காரணிகள் தீர்மானிப்பதுதான்.

அதனால், பொதுவாக ஷேர்களை வாங்கும்போது எப்படி ஆராய்வோமோ அதேபோல ஐ.பி.ஒ-வில்  பங்குகளையும் ஆராய்வோம். 2018-ல் வெளிவரப்போகும் பாலிசி பஜார் ஐ.பி.ஓ-வுக்கு விண்ணப்பிப்பதும் அப்படித்தான். ஆராய்ந்து விண்ணப்பிப்பது அவசியம்.

(லாபம் சம்பாதிப்போம்)

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 29 - ஐ.பி.ஓ-வில் பங்கு வாங்கினால்தான் லாபம் கிடைக்குமா?

பதஞ்சலியின் சோலார் ஆலை!

பா
பா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், சூரிய மின்சக்தி மின் உற்பத்திக்கான உபகரணங்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளது. கிரேட்டர் நொய்டா பகுதியில், வரும் ஜனவரியில் தொடங்கவுள்ள தொழிற்சாலைக்காக 100 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளது. “சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் பேனல்கள், சோலார் செல்கள், சிப்புகள் இங்கு  தயாரிக்கப்படவுள்ளன. இதற்கான மொத்த முதலீடு 100 கோடி ரூபாயாக இருக்கும்” என அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.