நடப்பு
தொடர்கள்
Published:Updated:

உறவுகளை மேம்படுத்தும் மன்னிக்கும் கலை!

உறவுகளை மேம்படுத்தும் மன்னிக்கும் கலை!
பிரீமியம் ஸ்டோரி
News
உறவுகளை மேம்படுத்தும் மன்னிக்கும் கலை!

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர் : ஃபைன்டிங் பர்கிவ்னெஸ் (Finding Forgiveness)

ஆசிரியர் : ஏலீன் ஆர் போரிஸ் டன்ச்ஸ்டங்

பதிப்பாளர் :  McGraw Hill Education

மன்னிப்பு ஏன் அவசியம்..? எப்போது அவசியம்..? ஏலீன் ஆர் போரிஸ் டன்ச்ஸ்டங் எழுதிய ‘ஃபைன்டிங் பர்கிவ்னெஸ்’ எனும் புத்தகம், மன்னிப்பு என்பது பற்றியும் அதன் அவசியத்தையும் சொல்கிறது. 

உறவுகளை மேம்படுத்தும் மன்னிக்கும் கலை!

மன்னிப்பு என்றவுடனே உங்களை ஏதோ மகானாக மாற்றப்போகிறேன் என்று நினைத்து விடாதீர்கள். எல்லாத் தவறுகளுக்கும் மன்னிப்பு என்பது மருந்து இல்லை. சட்டப்படியான தண்டனை கொடுக்கப்பட வேண்டிய குற்றச் செயல்களுக்கு அது தரப்பட்டேயாக வேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். அதுவும் தவிர மன்னிக்கச் சொல்வது மறுபடியும் மகானாக்க அல்ல. இந்த பாழாய்ப்போன உலகத்தில்  மன்னிக்கமாட்டேன் என்று சொல்லித் தண்டிக்கவும் தட்டிக்கேட்கவும் கிளம்பி, மேலும் அவமானப்படுவதைத் தவிர்க்க முடியுமே என்பதனாலும்தான். அப்படியானால், பயத்தினால்தான் மன்னிப்புக்கு வக்காலத்து வாங்குகிறீர்களா என்கிறீர்களா?  ஒரு போதும் இல்லை. மன்னிப்பு என்பது மிகவும் பவர்ஃபுல்லான விஷயம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மன்னித்தல் என்பது ஒருவரை பலமானதாக ஆக்குகின்றதே தவிர, பலகீனமாக ஆக்குவதில்லை என்கிறார் ஆசிரியை.

மன்னித்தல் என்பது ஒருவர், கடந்த காலத்தில் அவருக்கு நிகழ்ந்த நிகழ்வு குறித்து எந்தவிதமான நடவடிக்கையை எடுக்கிறார் என்பது குறித்ததொரு தன்னிச்சையான செயலாகும். ஒருவர், ஒரு கெட்ட செயலைச் செய்து கணக்கை ஆரம்பிக்கிறார்.  அதற்குப் பழிக்குபழியாக எதிர்வினை செய்து அந்தக்கணக்கை நேர் செய்கின்றோமா? அல்லது அந்தச் செயலை மன்னித்து, அந்த நிகழ்வு ஏற்படுத்திய பாதிப்பைக் கழித்து விடுகிறோமா என்பதுதான் தண்டிப்புக்கும் மன்னிப்புக்கும் உள்ள வித்தியாசமே.

உறவுகளை மேம்படுத்தும் மன்னிக்கும் கலை!



மன்னிப்புப் பற்றி முதன் முதலாகப் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம், அது இரண்டு தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயமாகும். அது, இரண்டு தனிநபர்களுக்கு இடையே மட்டுமே நடக்கக்கூடிய விஷயமாகும்.ஓர் இயற்கை பேரழிவையோ அல்லது ஒரு போரையோ நாம் மன்னித்து விடுவோம் என்று சொல்வதில் அர்த்தம் ஏதும் இல்லை. மேலும், மன்னித்தல் என்பது ஒரு உறவைச் சரிசெய்து கொள்ள மேற்கொள்ளும் முயற்சி என்றே நாம் நினைத்துக் கொள்கின்றோம். இது, ஒருவகையில் உண்மை யென்றாலும் அவரையும் சரி செய்து நம்மையும் நாம் சரிசெய்து கொள்வதற்கான செயல்தான் மன்னிப்பு.

மன்னித்தல் என்பது நம்முடைய நடப்பு மனப்பான்மையை  மாற்றியமைத்துக்கொள்வதற்கான வழியாகும். குறிப்பாகச் சொன் னால், மனதில் ஒருவர் ஏற்படுத்திய ஆழமான வடுவை ஆற்றுவதற் கான மருந்தே  மன்னிப்பாகும். மன்னித்தல் என்பதின் மகத்து வத்தைப் புரிந்துகொள்ள, நாம் முதலில் மற்றவர்களால் காயப்பட் டிருக்க வேண்டும். அப்படி காயப் பட்டிருந்தால் மட்டுமே மன்னித் தல் என்பது எவ்வளவு உயர்ந்த தொரு விஷயம் என்று நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

உலகத்தை நாம் எந்தக் கண்ணாடி வழியாகப் பார்க் கிறோம் என்பதைப் பொறுத்தே நாம் மன்னிக்கிறோமா அல்லது தண்டிக்கிறோமா என்ற நிலைப் பாட்டை எடுக்கிறோம்.   இன்னும் சொல்லப்போனால், ஒருவரின் மனநிலையிலான பார்வையே அவருக்கு ஒரு பாதிப்பு வரும்போது, அவர் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறார் என்பதை முடிவுசெய்கி றது. ஒரு நிகழ்வில், சிலர் பாதிக்கப் பட்டவராக ஆகின்றனர். ஆனால், ஒரு சிலரோ அந்த நிகழ்வை எதிர்கொண்டு, அவற்றைக் கையாளும் திறமையைப் பெற்றிருக்கின்றனர். இதற்குக் காரணம் என்னவென்றால், மனநிலையேயாகும். அதே போல்தான் மன்னித்தலும் ஒரு மனநிலை என்கிறார் ஆசிரியை.  

உறவுகளை மேம்படுத்தும் மன்னிக்கும் கலை!

நம்மிடம் எத்தனை கெட்ட குணங்கள் இருக்கின்றன? எவ்வளவு விவரமாக அதை நாம் மறைக்க முயல்கிறோம். அப்படி மறைக்க முயன்ற கெட்ட குணங்களை மூளையில் ஓரிடத்தில் ஒளித்து வைத்துக்கொண்டு, அதை லென்ஸாக்கி நாம் உலகத்தை பார்த்துப்பழகுகிறோம். இந்தக் குணங்கள் நம்முடைய தன்னுணர்வற்ற  செயல்நோக்கமாக மாறிவிடுவதாலேயே (Unconscious Motivation) நாம் எதிர்கொள்ளும் அனைவரையும் அந்தக் குணம் இருப்பவராகவே பார்க்கிறோம். ‘தான் திருடி பிறரை நம்பான்’ என்ற பழமொழியைப்போல என உதாரணத்துக்குச் சொல்லலாம். இதனாலேயே, நமக்குச் சிலரைப் பார்த்தவுடனேயே பிடிக்காமல் போய்விடுகிறது. ஒரு ஹோட்டல் லாபியில் நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கும்போதுகூட நமக்குச் சம்பந்தமில்லாத, நம்மைக் கடந்துசெல்லும் ஒரு நபரைக்கூட நமக்குப் பிடிக்காமல் போகிறது என்கிறார் ஆசிரியை. மன்னித்தலுக்கு இதற்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்கலாம். நாம் நம் மனதிற்குள் நம்மைப்பற்றி வெளியே தெரிந்தால் வெட்கக்கேடு என ஒளித்து வைத்திருக்கும் இந்தக் குணாதிசியத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவமே மன்னித்தல் எனும் கலையைக் கற்றுக்கொள்வதின் முதல்பாடியாகும்.

மன்னிப்பு என்பதைப் பற்றிய மேலும் பல தவறான கருத்துகளையும் விளக்கமாகச் சொல்லியுள்ளார் ஆசிரியை. அலுவலகம், அரசாங்கம் மற்றும் கோர்ட் தரும் மன்னிப்பு போன்றவை எல்லாம் பொதுச் செயல்களில் தரப்படும் மன்னிப்பு. அதையும் தனிமனித மன்னிப்பையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. அவையெல்லாம் நிர்ணயிக்கப்பட்ட சட்டம் சார்ந்த விஷயங்கள். நாம் பேசிக்கொண்டிருக்கும் மன்னிப்பு, உணர்ச்சி சார்ந்த விஷயமாகும். அதேபோல் பொறுத்தருள்வதும்  மன்னிப்பு இல்லை.  இதில், நாம் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சரி விட்டுத்தொலைவோம் என்பதே நம்முடைய நிலை. ஆனால், மன்னிப்பு என்பதில் நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சிகளையும் எடுத்துக்கொண்டே செய்யும் ஒரு விஷயமாகும். அதேபோல் மன்னிப்பு என்பது சமரசம் செய்துகொள்வதும் இல்லை. சமரசம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனிதர்கள் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து இறங்கிவந்து,  சரிபோனால் போகுது என்று நடந்துகொள்வது. மன்னிப்பு என்பது தனிஒருவர் தானாக உணர்ந்து செய்யும் ஒரு பர்சனலான விஷயம். சிலரை நாம் மன்னித்துவிடலாம். ஆனால், சமரசம் செய்துகொள்ளத் தேவையில்லை.

மன்னிப்பு என்பது ஒரு நொடியில் நடக்கிற விஷயமில்லை.  நாள்பட செய்யப்படுவதே மன்னிப்பாகும். ஏனென்றால், ஒருவர் செய்த கெட்ட செயல் நமக்கு வலியையும் கோபத்தையும் உண்டுபண்ணுவதாகும். நம்மை இப்படி செய்துவிட்டானே! நமக்கு இப்படி செய்துவிட்டானே எனப் பொருமுவோம். சிலசமயம், நாம் மனதுக்குள் அந்த நிகழ்வை மறு ஒலிபரப்பு செய்து வேறு பார்த்துக்கொள்வோம். இதனாலேயே மன்னிப்பு என்பது நாள்பட நடக்கும் ஒரு செயலாகும். மன்னிக்கப் பழகுவது எப்படி, பொறுமையை வளர்த்தெடுப்பது எப்படி, கோபத்தைக் கையாள்வது எப்படி, குற்ற உணர்வினாலான குறுகுறுப்பில் இருந்து மீள்வது மற்றும் அதை எதிர்கொள்வது எப்படி,  நம்முடைய வலியைக் குறைத்துக்கொள்வது எப்படி, அன்பைக்கொண்டு அனல்பறக்கும் கோபத்தைச் சரிசெய்வது எப்படி என்பதையெல்லாம் மிகவும் விரிவாகப் புரியும் வகையில் சொல்லியிருக்கிறார் புத்தக ஆசிரியை.

எங்கும் எதிலும் பிரச்னை நிறைந்த இந்த உலகில், சுகமாக வாழ வழிசொல்லும் மன்னிக்கும் கலையைக் கற்றுக்கொள்ள நினைக்கும் அனைவரும் இந்தப் புத்தகத்தை ஒருமுறை படிக்கலாம்.

- நாணயம் டீம்

உறவுகளை மேம்படுத்தும் மன்னிக்கும் கலை!

மன்னிப்பு தைரியம் இல்லாதவரின் செயலா?

மன்னிப்பது என்பது மகத்தான மனித குணம், அதற்கெல்லாம் மிகப் பெரிய மனது வேண்டும் எனச் சொல்பவர்கள் ஏராளம். ஆனால், ஒரு சிலர் மன்னிப்பு என்பது தைரியமற்றவர்களும்,  பயந்தவர்களும் செய்யும் செயல் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

எவ்வளவு அடித்தாலும்  பொறுத்துக்கொள்வதும், தாங்கிக்கொள்வதும்  மன்னிப்பு இல்லை. தைரியமில்லாதவர்களே மன்னிக்கிறார்கள் என்ற பொதுப்புத்தியில் இருந்து வெளியே வரவேண்டியது அவசியம். மன்னிப்பது மனித மாண்பு, அது ஒரு மகத்தான செயல் என்று புரிந்து கொள்ளவேண்டும் என்று சொல்கிறார்  இந்தப் புத்தகத்தின் ஆசிரியை.