
டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்
“ஒரு நிமிஷம் அப்படியே நில்லு” என்ற குரலைக் கேட்டுத் திடுக்கிட்டு நின்றான் அஜெய். அஜெய் 27 வயது மதிக்கதக்க இளைஞன். பிரபல ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான். கடந்த நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்துவிட்டு இப்போது சென்னைக்கு வந்துள்ளான். கிராமத்தில் இருக்கும் அவனது தாய் தந்தையை அவனுடனே வைத்துக்கொள்வதற்காக அழைத்துச் செல்ல கிராமத்திற்கு வந்துள்ளான்.

குரல் வந்த திசையில் பார்த்தபோது அவனது அம்மா கையில் சொம்புடன் நின்றுகொண்டிருந்தாள். “என்னமா நீங்க இப்படி பண்றீங்களேம்மா” என்றான் அஜெய். அவன் அம்மாவோ, “தம்பி மஞ்சள் தண்ணி ஊத்தி காலைச் சுத்தம் பண்ணிட்டுதான வீட்டுக்குள்ள வரணும்” என்றாள். “இதையெல்லாம் நீங்க இன்னும் செய்றீங்களா? கைகால் கழுவ சோப்பு, கிரீம் எல்லாம் வந்துடுச்சே” என்றான்.
அப்பா சொன்னார். “கெமிக்கல் கலந்த கிரீமும், சுத்தமான மஞ்சளும் ஒண்ணாப்பா... சரி சரி உள்ளே வா” என்றார். சகஜமான நல விசாரிப்புகள் முடிந்தபிறகு “நீ போய்க் குளித்துவிட்டு வா, சாப்பிடலாம்” என்றாள் அம்மா. குளித்துவிட்டுத் திரும்பியவன், “என்னம்மா இது பாத்ரூம்ல கடலமாவு பயத்தமாவு டப்பா எல்லாம் வெச்சிருக்க... கிச்சன்ல வைக்க வேண்டியதை மறந்துபோய் அங்கே வெச்சுட்டியாம்மா” எனக் கேட்டான்.
அவன் அம்மா சிரித்துக் கொண்டே “ஓ! அதுவா, கடலமாவு முகத்துக்கும், பயத்தமாவு உடம்புக்கும் போட்டு குளிக்கறதுக்கு” என்றாள். “நீ இந்தப் பழக்கத்தையெல்லாம் விட்டுட்டபோல?” எனக் கேட்டாள்.
அஜெய், “அடப் போம்மா இப்பல்லாம் இதை யாரு ஃபாலோ பண்றா, நீங்க வெளில வந்து பாருங்க... எவ்வளவு சோப், கிரீம் வகைகள் இருக்கு தெரியுமா?” என்று சொல்லிவிட்டு, “ சரிம்மா எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பாடு எடுத்து வை” என்றான்.

அவன் அப்பா, “என்ன வந்தாலும் அதுலேயும் இந்தப் பொருள்களையெல்லாம் கலந்துதான் தயாரிக்கறோம்னு விளம்பரத்துல காட்டுறாங்களே” என்றார். அதற்கு அஜெய், “அதனாலதான்ப்பா சொல்றேன்... நீங்க கடலமாவைப் பயன்படுத்தினா அதுக்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். இதே கிரீம் பயன்படுத்தினா இரண்டு நிமிஷம்கூட ஆகாது” என்றான்.
“நீ சொல்றது சரிதான், நேரத்தை மிச்சம் செய்றோம்ன்னு தேகத்தை பாழ் பண்ணிக்கிறதா?” என்றார். அவன் அதற்குமேல் பதில் பேச முடியவில்லையா, இல்லை தெரியவில்லையா என்று தெரியவில்லை. அவன் அம்மா, “தம்பி... நீ சாப்பிட வாப்பா” என்றார். அவன், “அப்பா நீங்களும் வாங்க” என்று சொல்லிவிட்டுச் சாப்பிடும் அறைக்குச் சென்றான். சாப்பிட்டு முடித்தபோது அவன் வயிறு முற்றிலும் உணவாலும், வாய் முற்றிலும் மணத்தாலும் நிறைந்திருந்தது.

“அம்மா சாப்பாடு செம டேஸ்ட்” என்றான். “அம்மாவோட கைபக்குவமும், அம்மியில அரைச்சா கிடைக்கற சுவையும் எந்த அம்பானி ஹோட்டல்லேயும் கிடைக்காது தம்பி” என்றார் அப்பா. அம்மா, “என்ன புள்ளகிட்ட வந்ததும் வராததுமா எதைஎதையோ பேசிக்கிட்டு... நீ போய்ப் படு தம்பி, காலையில பேசிக்கலாம்” என்றாள்.
அவனோ, “விடும்மா... அப்பா கரெக்டாதான் சொல்றார். ஆமா தேவையானதையெல்லாம் பேக் பண்ணிட்டீங்களா” என்றான்.
“ உங்க அப்பா எல்லாம் எடுத்து வெச்சிருக்காங்க, நாளைக்கு எது தேவை தேவையில்லைன்னு நீ பார்த்திட்டீனா பேக்கர்ஸுக்குச் சொல்ல சரியாயிருக்கும் தம்பி” என்றாள். சரிம்மா என்று சொல்லிவிட்டு உறங்கச் சென்றான்.
காலையில் சேவல் கூவ, சோம்பல் முறித்து எழுந்தான். அவன் அப்பா வேப்பங்குச்சியில் பல்துலக்கிக்கொண்டிருந்தார். அவன் அவசரமாக எழுந்து சென்று தன் பேக்கில் இருந்து பேஸ்ட் எடுத்து வந்து தன் அப்பாவிடம் சொன்னான். “அப்பா இது புது பிராண்ட் பேஸ்ட். இதை யூஸ் பண்ணுங்க. ரொம்ப நல்ல வாசனையா இருக்கும்” என்றான்.
அவன் அப்பா பொறுமையாக பல்துலக்கி வாய்கொப்பளித்து விட்டு, “தம்பி இது எப்பயிருந்து பயன்படுத்துற” என்றார். அதற்கு அவன் “இப்ப ஒரு நாலு மாசமாதான்ம்பா” என்றான். “அதுக்கு முன்னாடி” என்றார். “வேறஒரு பிராண்ட் யூஸ் பண்ணினேன். அது எனக்குச் சரியா வரலை. அப்பறம் என் ஃபிரண்ட்ஸ் சொன்னாங்க... இது ரொம்ப நல்லாயிருக்குன்னு... அதான் இதை வாங்கினேன்” என்றான்.
“தம்பி, போன வாரம் பல் டாக்டர்கிட்ட போனியே என்னாச்சுப்பா” என்றார். “கடவாய் பல்லுலதான் வலி. க்ளீன் பண்ணிட்டு சரி பண்ணனும். நீங்க அங்கே வந்த பிறகு போகலாம்ன்னு இருக்கேன்” என்றான். “தம்பி, மரத்துக்கு மட்டுமில்ல பல்லுக்கும் வேர் ரொம்ப முக்கியம். ஃப்ரண்ட்டுக்காகவும், பிராண்டுக்காகவும் பேஸ்ட் மாத்தினோம்னா இப்படித்தான்.

எனக்கு இப்ப 55 வயசு ஆகுது. இதுவரைக்கும் நான் ஒருதடவ கூட டாக்டர்கிட்ட போனது இல்ல. தினம் காலையில நல்லெண்ணெய் விட்டு வாய்கொப்பளிச்சோம்னா எந்தக் கிருமிகளும் வாய்ல தங்காது; அத்தோட வாய் புண்ணும் வராம இருக்கும்” என்றார்.
மேலும், “நான் அங்க வந்தும் வேப்பங்குச்சியில பல்விளக்கினா என்னைய கிராமத்தான்னு சொல்லிடுவாங்கன்னு பயந்துதான எனக்காக பேஸ்ட் வாங்கிட்டு வந்த” என்றார்.
அஜெய், “ இல்லப்பா... அது வந்து...” என்று விழுங்கினான். பிறகு “ஆமாம்ப்பா, ஆனா நீங்க சொல்றது கரெக்ட்டுதான்” என்று சொல்லிக்கொண்டிருந்தபோது அவன் அம்மா அழைத்தாள். “அஜெய், வாப்பா சாப்பிட, ஏங்க நீங்களும் வாங்க” என்றாள்.
அதற்குள் அவள் அம்மா வந்து அவனுக்கு காபியும், அப்பாவிற்கு நீராகாரமும் கொடுத்தாள். அஜெய்க்கு நீராகாரம் சாப்பிட ஆசை வந்தது. “அம்மா எனக்கும் கொடேன்” என்றான். “ஓ தர்றேனே” என்று எடுத்துவர உள்ளே சென்றாள்.
அப்பா கேட்டார் “ தம்பி, நீ இதெல்லாம் குடிக்கிறியாப்பா” என்றார். அவனோ, “இல்லைப்பா, உடம்புக்கு ஒப்புக்காதுன்னு சாப்பிடறதில்ல; இப்ப நீங்க குடிக்கவும் எனக்கு ஆசையா இருக்குப்பா” என்றான்.
“உண்மையைச் சொல்லப்போனா இதெல்லாம் குடிச்சா ரொம்ப நல்லது. இதுல கிடைக்கக்கூடிய ஊட்டமும் தெம்பும் வேறெதுலேயும் கிடைக்காது. யாருக்குத் தெரியுது இதோட அருமை” என்றார்.
“அப்பா... காலம் மாறிக்கிட்டு இருக்குதுப்பா... அதனால் நாமும் காலத்துக்குத்தக்க மாறிதான் ஆகணும்” என்றான். அம்மா வந்து “ஏன் தம்பி, நீ ஏதோ வாங்கணும்னு ஞாபகப்படுத்த சொன்னியே” என்றாள்.
“ஆமாம்மா, நீங்க அங்க வரப்போறீங்கள்ல... கிரைண்டர், மிக்ஸி, கட்டில் இதெல்லாம் ஆன்லைன்ல புக் பண்ணணும்” என்றான் அஜெய். அதற்குள் அம்மா, “தம்பி அதெல்லாம் பண்ணி டாத... எனக்கு அதைப் பயன் படுத்தத் தெரியாதுன்னு இல்ல, கிரைண்டர், மிக்ஸியில அரைச்சி சாப்பிட்டா ஆரோக்கியம் இல்லை. என் காலம் வரைக்குமாவது உனக்கு ஆரோக்கியமானதைக் கொடுக்கணும்னு பார்க்கிறேன்” என்றாள்.
“தம்பி, சுவர் இருந்தா மட்டும்தான் சித்திரம் வரைய முடியும். ஆனா, நாம அந்தச் சுவத்தை ஜெ.சி.பி மெஷினை வெச்சு இடிச்சாதான் இடிந்து விழும்னு நினைச்சிக்கிட்டு, சின்னச் சின்ன விஷயங்களால் சின்ன உளி வெச்சி பெரிய மலையைச் சிதைக்கறதைப்போல சிதைச்சிக்கிட்டு இருக்கோம்” என்றார். அந்த வார்த்தைகளில் இருந்த ஆழமான அன்பும், அவன் ஆரோக்கியத் தின் மீதான அக்கறையும் அவனுக்குப் புரிந்தது. அவன் கலங்கிய கண்களுடனும், தெளிந்த மனதுடனும் சொல்லத்தொடங்கினான். “அப்பா, இனி வரும் நாள்களில் என் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, என் அடுத்த சந்ததியினரின் ஆரோக்கியத்தையும் கருத்தில்கொண்டு, சிறு சிறு மாற்றங்களைத் தொடங்குகிறேன்” என்றான்.
ஒரு அஜெய் மாறியது பெரிதல்ல. நாம் அனைவருமே மாறவேண்டியது மிக முக்கியம். நம் முன்னோர்கள் உணவிலேயே மருந்துகள் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். ஆனால், நாம் இன்று மருந்து மாத்திரைகளுக்கிடையே சிறிது உணவுகளை உண்கிறோம். அந்தக் காலத்தில் சூழலுக்கு ஏற்றவாறு உணவுப் பழக்கங்கள் இருந்தன. ஆனால், இன்று நாம் எந்த நேரத்திலும் எவ்வகை உணவையும் உட்கொள்கிறோம். முதலில் அதிலிருந்து மாற்றங்களைத் தொடங்குங்கள்.
நாம் வாங்கும் பொருள்களில் எந்தெந்தப் பொருள்களைக் கொண்டு தயாரித்துள்ளனர் என்பதைப் பார்த்திருக்கிறோமா? தயாரித்த நாளையும், காலாவதி நாளையும் பார்த்திருக்கிறோமா? பல சமயங்களில் மலிவு விலையில் கிடைக்கிறது என்பதற்காகவும், இலவசங்களை நம்பியும் ஏமாந்துவிடுகிறோம். இனியேனும் மாற்றுவோமா?
நல்ல பொருள்களுக்குத் தரச்சான்று தேவையில்லை.தரமான பொருள்களைத் தேடுங்கள். அது உங்கள் அருகிலேயே இருக்கும்.
அறிவியலையே ஆன்மிக வழியில் பயிற்றுவித்தனர். ஆனால், இடையில் ஏற்பட்ட குழப்பங்களினால் நாம் அதையெல்லாம் மூடநம்பிக்கை என்று ஒதுக்கிவிட்டோம். உதாரணத்துக்கு காலையும், மாலையும் கோயிலை வலம் வருதல் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆனால், இன்று உடற்பயிற்சிக்கென தனியாகச் செலவழிக்கிறோம்.
நாம் நாகரிகம் என்கிற பெயரில் நம் நன்மைகளைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். நம்மால் உடனடியாக முழுமையாக மாறுவது இயலாத காரியம். ஆனால், முயன்றால் சிறு சிறு விஷயங்களால் மாற்றங்கள் கொண்டுவர முடியும். நமக்கு அடுத்தத் தலைமுறையினரிலாவது பலர் விழிப்புடன் இருப்பார்கள்.
மஞ்சள் துணிப்பை வேண்டாமென்று பாலித்தீன் பைகள் கொண்டு பூமியின் நுரையீரலை அடைத்துக்கொண்டிருக்கிறோம். மாற்றங்களை நாம் செய்துவிட்டு இயற்கை மாறிவிட்டதாகப் புலம்புகிறோம். ஆம், மாறுங்கள்... ஆரோக்கியம் நோக்கி மாற்றுங்கள்... பசுமையான உலகமாக, வளமான சமுதாயம் சமைத்திட இயற்கையோடு இயம்பி வாழுங்கள். வாழ்த்துகள்!
மனம் மாறுவோம்! மணம் மாற்றுவோம்!
(காலம் வெல்லும்)
படம்: ப.சரவணக்குமார்

வருமான வரித் தாக்கல் விவரங்கள்!
2015 - 16-ம் ஆண்டுக் கான வருமான வரித் தாக்கல் விவரங்களை வரு மான வரித்துறை வெளியிட் டுள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 1.2 பில்லி யன் இந்திய குடிமக்களில் 4.07 கோடிப் பேர் மட்டுமே வருமான வரித் தாக்கல் செய்துள்ளார்கள். இவர் களில் 8.2 லட்சம் பேர், வருமானத்தை 2.5 லட்சம் வரைக் காட்டியுள்ளதால் அவர்களுக்கு வரி ஏதும் இல்லை. மேலும், 1.33 கோடி நபர்கள், தங்களது வருமானமாக ரூ.2.5 - 3.5 லட்சம் வரை காட்டி, குறைந்தபட்ச வரியைச் செலுத்தியுள்ளார்கள். மாத வருமானம் ஒரு கோடிக்கு மேல் காட்டியுள்ளவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட 23.5% உயர்ந்து 59,830 நபர்களாக உள்ளது. இதன்மூலம் நாட்டில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை உயர்ந்தி ருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது.