மற்ற எபிசோடுகள்
Published:Updated:

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - கேமமைல் ஹெல்த்கேர் வென்ச்சர்ஸ்!

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - கேமமைல் ஹெல்த்கேர் வென்ச்சர்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - கேமமைல் ஹெல்த்கேர் வென்ச்சர்ஸ்!

சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 5

ந்திய சுகாதாரத் துறையின் தற்போதைய சந்தை மதிப்பு, ஆண்டுக்குத் தோராயமாக 150 பில்லியன் டாலர்கள். இன்னும் ஐந்து வருடங்களில் இது 250 பில்லியனாக உயரும். எனவே, இந்தத் துறையில் திட்டமிட்டுக் கால்பதிக்கும் ஸ்டார்ட் அப்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. அப்படி ஏற்கெனவே வெற்றிகரமாக இயங்கிவரும் ஸ்டார்ட் அப்களில் ஒன்று கேமமைல் ஹெல்த்கேர் வென்ச்சர்ஸ். இந்நிறுவனத்தின் சுவாரஸ்ய பயணத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் நிறுவனர் ராகவா ராவ்.  

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - கேமமைல் ஹெல்த்கேர் வென்ச்சர்ஸ்!

இன்ஸ்பிரேஷன்

கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக மருத்துவத் துறையில் தொடர்ந்து இயங்கிவருகிறேன். அப்போலோ, மெக்கீசன் உள்பட பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறேன். அவற்றின் வளர்ச்சி, நிறுவனத்தில் நடந்த மாற்றங்கள் எனப் பல விஷயங்களில் உடனிருந்திருக்கிறேன். எனவே, இந்தத் துறையில் இருக்கும் சின்னச் சின்ன பிரச்னைகளைக்கூட என்னால் மிகத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. இந்தியாவில் பெரிய அளவில் வளர்ந்துவரும் துறைகளில் ஒன்று சுகாதாரத்துறை. அதிக முதலீடுகளும் இதில் செய்யப்படுகின்றன. ஆனால், உலகளவில் போட்டிபோடும் அளவுக்கு நம் நாட்டின் தரம் இருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான். ஒரு சில மருத்துவமனைகளால் மட்டுமே உலகத் தரத்திலான சிகிச்சை வழங்கமுடிகிறது. மற்ற மருத்துவ மனைகள் அதிக செலவுசெய்தாலும், அந்தத் தரத்தினை எட்ட முடிவதில்லை. இவற்றைச் சரிசெய்யமுடியும் எனத் தோன்றியது. அப்போது தோன்றியதுதான் இந்த கேமமைல் ஹெல்த்கேர்.

அடித்தளம்


2015-ம் ஆண்டு இந்த நிறுவனத்தைத் தொடங்கினேன். இதற்கு கேமமைல் எனப் பெயர் வைத்ததற்கும் ஒரு காரணம் உண்டு. கேமமைல் என்பது ஒரு மலர். மூலிகையும்கூட. அந்தப் பூவில் தயாரித்த தேநீரை அருந்துவதன்மூலம் மனஅழுத்தம் நீங்கும்; நரம்புகள் புத்துணர்ச்சியடையும். அதேபோல, எங்கள் நிறுவனம்மூலம் சுகாதாரத் துறையில் இருக்கும் சிக்கல்கள் நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பெயரையே தேர்வுசெய்தேன்.

அனைத்து மருத்துவமனைகளிலும் ஒரே தரத்திலான சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். தரம் ஒரே மாதிரியாக இல்லாமல் போனதற்குக் காரணம், எவ்வித தரநிர்ணய முறையும் இல்லாமல் இருப்பதுதான். மருத்துவமனைகளைக் கட்டுவதில் இருந்து பரமாரிப்பது வரைக்கும் எல்லாமே தற்போது தன்னிச்சையாகத்தான் நடைபெற்றுவருகின்றன. ஆனால், சரியான பயிற்சிகள் மற்றும் திட்டமிடல்கள் மூலம் இவற்றை மாற்றலாம். இந்தப் பணியை எப்படி செயல்படுத்தமுடியும் என யோசித்தேன். மருத்துவத் துறையில் தவிர்க்கமுடியாத சக்தியாக வளர்ந்துவருவது டெக்னாலஜி. அதுதான் தற்போதைய மருத்துவத்தின் தரத்தையே உயர்த்துகிறது. எனவே, செயற்கை நுண்ணறிவு மற்றும் பிக்டேட்டா அனலிடிக்ஸ் இரண்டையும் எங்கள் நிறுவனத்திற்குள் கொண்டுவந்தேன். இதன்மூலம் நோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகம் என எல்லா தரப்புமே பயனடைந்தனர். மருத்துவத் துறையில் டேட்டாவின் பங்கு முக்கியமானது.

சவால்

பொதுவாக, புதிய நிறுவனம் தொடங்கும்போது அதிகம்பேர் செய்யும் ஒரு தவறு, தவறான ஆட்களைத் தேர்வு செய்வது. அதுவும் இதுபோல தனித்துவமான தொழில்களில் ஒருவர் இறங்கும்போது அந்தத் தவறுகள் நடப்பதற்கான வாய்ப்பு அதிகம். இத்துடன் எங்களுக்கு இன்னொரு சிக்கலும் இருந்தது; மருத்துவத் துறையில் தகுதியான நபர்கள் கிடைப்பது இன்னுமே கடினம். இவற்றையெல்லாம் என் அனுபவத்தின் மூலம்தான் எதிர்கொண்டேன். இதற்கடுத்த முக்கியமான சவால், நிறுவனத்தைப் பற்றி பிறருக்குத் தெரியவைப்பது. என்னுடைய அனுபவத்தின் காரணமாக சில மருத்துவமனைகள் என்னை நாடிவந்தன; ஆனால், அதைத் தாண்டியும் பலரைச் சென்றடைய வேண்டிய நிர்பந்தம் இருந்தது. இதற்காகப் பல்வேறு கருத்தரங்கங்கள், மாநாடுகள் போன்றவற்றுக்குச் சென்று எங்கள் நிறுவனம் குறித்து விளக்கினோம். இதன்மூலம், சில மாதங்களிலேயே வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள். மற்றவர்களெல்லாம் ‘வேர்ட் ஆஃப் மவுத்’ மூலம் வந்தவர்கள்தான்.

வெற்றி

சுகாதாரத் துறையில் எங்களின் பணி, மருத்துவ நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதும், அதனை அமல்படுத்துவதற்கான செயல்திட்டங்களை வழங்குவதும்தான். உதாரணமாக, ஒரு நிறுவனம் மருத்துவமனை கட்டுகிறது என வைத்துக்கொள்வோம். அதற்கான திட்டம் முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தால் மட்டும் செயல்படுத்தப்படும். இதனால் அதிக செலவு ஏற்படும்; தரத்திலும்  முன்னேற்றம் இருக்காது. அதேசமயம் ஆலோசனைக்காக எங்களிடம் வந்தால் நாங்கள் அந்தத் திட்டத்தை வேறுவிதமாகக் கையாள்வோம்.

மருத்துவமனையின் அறைகளின் அளவு, மருத்துவமனையின் சிறப்பம்சங் களைப் பொறுத்து எதற்காக எவ்வளவு செலவு செய்யவேண்டும், கருவிகளுக்கு எவ்வளவு செலவு செய்யவேண்டும், சிகிச்சைகளின் தரம் உயர்த்துவதற்காக எந்தமாதிரியான விஷயங்களைக் கவனிக்கவேண்டும், மருத்துவமனையின் எல்லாத் துறைகளுக்கும் சீராகச் செலவு செய்வது எப்படி என எல்லா அம்சங் களையும் அலசி ஆராய்ந்து திட்டங் களை வழங்குவோம்.

புதிய மருத்துவமனையைக் கட்டும்போது மட்டுமல்ல; ஏற்கெனவே இருக்கும் மருத்துவமனைகளைச் சீரமைப்புச் செய்யும்போதும் இது பொருந்தும். இதற்காக எங்களுக்குக் கைகொடுப்பது செயற்கை நுண்ணறிவு, டேட்டா அனலிடிக்ஸ் என இந்த இரண்டும்தான். எங்கள் நிறுவனத்தைத் தொடங்கிய சில நாள்களிலேயே பல முன்னணி நிறுவனங்கள் எங்களை நம்பிவந்தன. எங்கள் சேவைமீது ஏற்பட்ட திருப்தி காரணமாக அடுத்தடுத்து நிறைய நிறுவனங்கள் எங்களைத் தேடிவந்தன. தற்போது தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி அரசு நிறுவனங்களோடும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். ஆந்திரா, கர்நாடகா, அஸ்ஸாம், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநில அரசுகளுடனும் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இலக்கு

இந்திய சுகாதாரத்துறையின் தரத்தை உயர்த்தி, தரமான மருத்துவச் சிகிச்சையை எல்லா மருத்துவமனைகளிலும் கிடைக்கச்செய்வதுதான் எங்கள் இலக்கு. எங்களோடு இணைந்து இன்னும் பல நிறுவனங்கள், சுகாதாரத் துறையில் இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தொழில்களைத் துவங்கினால், அந்த இலக்கை அனைவருமாக இணைந்து எளிதாக எட்டிவிடலாம்.

ஞா.சுதாகர்

படங்கள்: தே.அசோக்குமார்

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - கேமமைல் ஹெல்த்கேர் வென்ச்சர்ஸ்!

உணவகத் துறையில் கால்பதிக்கும் ஓலா!

முன்னணி கால்டாக்ஸி நிறுவனமான ஓலா, தற்போது உணவகத் துறையில் கால்பதிக்கிறது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஃபுட்பாண்டா (Foodpanda India) நிறுவனத்தின் இந்தியக் கிளையைக் கையகப்படுத்தி உள்ளது. இந்த ஒப்பந்தத்துக்காக ஃபுட்பாண்டா நிறுவனத் தின் 50 மில்லியன் டாலர் பங்குகளை ஓலா வாங்கி யுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிறுவனத்தை விரிவுப்படுத்தவும், புதுப்பிக்கவும் மேலும் 200 மில்லியன் டாலர்களை ஓலா முதலீடு செய்ய வுள்ளது. ஓலா கார் ஓட்டு நர்கள், ஃபுட்பாண்டா உணவகக் கிளைகளுக்கு வரும் ஆன்லைன் ஆர்டர்களைச் சப்ளை செய்யும் வேலையையும் செய்வார்களாம்.

அனுபவம் நிச்சயம் அவசியம்!

புதிதாக ஸ்டார்ட் அப் தொடங்குபவர்களுக்கான அறிவுரை யாக, ராகவா ராவ் கூறுவது எதைத் தெரியுமா? “அனுபவம்தான் முதல் தேவை. மிகக்குறைந்த வயதில்கூட நீங்கள் பிசினஸ் தொடங்கலாம். அதில் தவறில்லை. ஆனால், அந்தத் துறையில் போதிய அளவிற்கு அனுபவம் இருக்கவேண்டியது அவசியம். அந்த அனுபவம்தான் நமக்கு பிசினஸில் பல வழிகளில் கைகொடுக்கும். எனவே, துறைசார்ந்த நிபுணர்களை ஆலோசகர்களாக நியமித்துக்கொள்வது நிறுவனத்திற்கு மிகவும் பாதுகாப்பானது” என்பதைத்தான்.

சி.இ.ஓ பன்ச் : “வேர்ட் ஆஃப் மவுத் என்பது பிசினஸுக்கு மிகவும் முக்கியம். வாடிக்கையாளர்களை நாம் தேடிச் செல்வதற்கு விளம்பரங்கள் உதவும் என்றால், வாடிக்கை யாளர்கள் நம்மைத் தேடிவர ‘வேர்ட் ஆஃப் மவுத்’தான் உதவும். நம் தரத்தின் மூலமே இதனைச் சாத்தியப்படுத்த முடியும்!”