நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நாணயம் ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ்... கொண்டாட்டமாக மாறிய கருத்தரங்கம்!

நாணயம் ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ்... கொண்டாட்டமாக மாறிய கருத்தரங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ்... கொண்டாட்டமாக மாறிய கருத்தரங்கம்!

நாணயம் ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ்... கொண்டாட்டமாக மாறிய கருத்தரங்கம்!

நாணயம் விகடன் சார்பில் டிசம்பர் 16 மற்றும் 17-ம் தேதிகளில் ‘பிசினஸ் &  ஃபைனான்ஸ் கான்க்ளேவ் மற்றும் எக்ஸ்போ’ நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. இந்தக் கருத்தரங்கில் நிதித் துறை மற்றும் பிசினஸ் சார்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், பெங்களூரூ உள்பட நாட்டின் இதர பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் வந்து கலந்துகொண்டனர்.   

நாணயம் ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ்... கொண்டாட்டமாக மாறிய கருத்தரங்கம்!

நிகழ்ச்சியின் தொடக்கமாக, சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றிக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தனர். ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர்  பா.சீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார். விருந்தினர்கள், பேச்சாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவரையும் வரவேற்று பேசியவர், “வாசகர்களே எங்கள் பலம், வாசகர்களே எங்கள் வரம்” என்று கூறியதோடு நாணயம் விகடன், தமிழ் வாசகர்களிடம் ஏற்படுத்திவரும் தாக்கத்தைப் பட்டியலிட்டுப் பேசினார்.

“இந்தியாவில் ஒரு ரூபாய் தாள் வெளியிடப்பட்டு நூறாண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. நாணயம் விகடன் தனது 12 ஆண்டுகளை நிறைவு செய்து, பதின்மூன்றாவது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடியிருக்கிறது. பணம் நம் வாழ்க்கையில் இன்றியமையாததாக இருக்கிறது. பணத்தைப் பற்றி படிக்கும் வாசகர்களுக்கு நாணயம் விகடன் இன்றியமையாததாக மாறியிருக்கிறது. நாணயம் விகடன் 2005 டிசம்பரில் தனது பயணத்தைத் தொடங்கியபோது, சென்செக்ஸ் 8700 புள்ளிகளில் இருந்தது. இன்று 33,000 புள்ளிகளாக உயர்ந்திருக் கிறது.  

நாணயம் ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ்... கொண்டாட்டமாக மாறிய கருத்தரங்கம்!

நாம் நேர்மையோடு, நாணயத்தோடு சம்பாதிக்கும் பணத்தைச் சேமித்து வைத்தால் மட்டும் போதாது. நம்முடைய வருமானத்தைக் கூட்டவும், செலவுகளைக் குறைக்கவும், சேமிப்பை அதிகப்படுத்தவும், சரியான முதலீட்டைத் தேர்ந்தெடுக்கவும், தேவையான காப்பீட்டை எடுக்கவும், அதிகப்படியான சலுகைகளைப் பயன்படுத்தி வருமான வரியை மிச்சப்படுத்தவும், ஒவ்வொரு தனிமனிதனும் நிதி மேலாண்மை செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் இது சொல்லித் தரப்படுவதில்லை. அந்த அவசியமான காரியத்தைக் கண்ணும்கருத்துமாக நாணயம் விகடன் இத்தனை ஆண்டுகளாகச் செய்து வருகிறது. நிபுணர்களின் ஒத்துழைப்புடன் நாணயம் விகடன், தொடர்ந்து அதன் வாசகர் களுக்குத் தேவையான நிதி மேலாண்மை ஆலோசனைகளை வழங்கி வருகிறது. அதுவும் வாசகர்களின் நிதி நிலைமை, குடும்பச் சூழல் போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பிரத்யேகமாகவும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது. ‘நிதி மேலாண்மை தொடர்பாக நுணுக்கமான ஆலோசனைகளை இவ்வளவு எளிதாகப் புரியும்படி வேறு யாரும் சொல்ல முடியாது’ என இல்லத்தரசிகள் நாணயம் விகடனைப் புகழக் காரணம் இதுதான்.   
எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் நாணயம் விகடன் சார்பில் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ஃபண்டமென்டல் அனாலிசிஸ், டெக்னிக்கல் அனாலிசிஸ், கமாடிட்டி சந்தை  என நானுற்றுக்கும்  மேற்பட்ட நிகழ்ச்சிகளைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தி  வாசகர்களை நேரிடையாகச் சந்தித்து, அவர்களின் கருத்துகளைப் பெற்று அதன்படி செயல்பட்டு வருகிறோம்.   

நாணயம் ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ்... கொண்டாட்டமாக மாறிய கருத்தரங்கம்!

ஒரே ஓர் உதாரணம் போதும். ஈரோட்டில் நான்கு வருடங்களுக்கு முன்பு நாணயம் விகடன் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரசுப் போக்குவரத்து ஊழியர் ஒருவர், அந்த நிகழ்ச்சிக்குப்பின் மாதாமாதம் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார். தற்போது அந்த முதலீடு அவருடைய மகளின் உயர்கல்விக்குப் பெரிய அளவில் உதவியாக இருந்திருக்கிறது. இதுதான் எங்களுக்குப் பெருமை. இந்தப் பணியை மேலும் மேலும் சிறப்பாகச் செய்ய நாணயம் விகடன் காத்திருக்கிறது” என்று மேலும் பேசினார் ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர்  பா.சீனிவாசன். தொடக்க விழா நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றும் வாய்ப்பு இரண்டு வாசகிகளுக்கு அளிக்கப்பட்டதைக் கண்டு, கருத்தரங்குக்கு வந்திருந்த வாசகர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
    
தற்போது  ஏற்றத்தாழ்வுகள் (Volatile) நிறைந்த, நிலைத்தன்மையற்ற (Uncertain), சிக்கல் (Complex) மற்றும் தெளிவற்ற (Ambiguous) நிலையிலுள்ள ‘VUCA world’ என்று சொல்லப்படும் சூழலில் இருக்கிறோம். இந்த நிலையில், நாம் நமது நிதி மேலாண்மை குறித்த முடிவுகளை எப்படி எடுப்பது என்பதை ஃபைனான்ஸ் மற்றும் பிசினஸ் துறையின் தலைசிறந்த நிபுணர்கள் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து இந்தக் கருத்தரங்கில் ஆலோசனைகளை வழங்கினர்.

இந்தக் கருத்தரங்கின் தொடக்க விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச்  செயல் அதிகாரி
ஆர்.சுப்பிரமணியகுமார், ஆதித்ய பிர்லா சன் லைஃப் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி         ஏ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேசியதை இனி பார்ப்போம். 

 எல்லோரிடமும் பொறுப்பு உணர்வு அவசியம்!

 “நான் ஐ.ஓ.பி-யின் சி.இ.ஓ-வாகப் பொறுப்பேற்று ஆறு மாதம் கழித்து, என்னுடைய பேட்டி நாணயம் விகடனில் வெளியான பின்புதான் தமிழகத்துக்கே நான் பிரபலம் ஆனேன். நாணயம் விகடன் ஃபைனான்ஸ், பிசினஸ் மற்றும் எக்னாமிக்ஸ் குறித்த சரியான தகவல்களைத் தொடர்ந்து வழங்கிவருகிறது. அதனால், இப்போது நானும் நாணயம் விகடனின் வாசகனாகிவிட்டேன்’’ என்று பேச ஆரம்பித்தார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆர்.சுப்பிரமணியகுமார். 

‘‘சமீபத்தில் Financial Resolution and Deposit Insurance bill (FRDI) குறித்து வாட்ஸ் அப்களில் தவறான செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் ஒரு விஷயத்தைப் பகிரும்முன் அது சரிதானா என்று பார்க்கும் பழக்கம் நம்மிடம் வரவேண்டும். இதனால் வீண்பயம் உண்டாக்கப்படுவது குறையும். உதாரணத்துக்கு, 2007-08-ம் ஆண்டில் மிகப்பெரிய வங்கியை மூடவிருக்கிறார்கள் என்ற செய்தி பரவியது. முதலீட்டாளர்கள் தங்களின் சேமிப்பை எடுக்க முயற்சி செய்ய, அந்த வங்கியின் கடன் பத்திரங்கள்தான் அந்த வங்கியைக் காப்பாற்றியது. தற்போது, மற்ற நாடுகளைவிட இந்தியாவில் உள்ள வங்கிகள் பலம் பெற்றவையாக இருக்கின்றன. அதிலும் தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. எனவே, வங்கிகள் திவாலாகும் நிலை அவ்வளவு எளிதில் ஏற்பட்டுவிடாது. 

நாணயம் ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ்... கொண்டாட்டமாக மாறிய கருத்தரங்கம்!

கடந்த காலத்தில் பல்வேறு தனியார் வங்கிகள் பொதுத்துறை வங்கிகளுடன் இணைந்தன. ஒரே ஒரு பொதுத்துறை வங்கிதான் இன்னொரு பொதுத்துறை வங்கியுடன் இணைந்தது. அதனால், எந்த ஒரு வாடிக்கையாளரும் பாதிக்கப்படவில்லை. எனவே, FRDI மசோதா  குறித்துப் பொதுமக்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. ஒவ்வொரு வங்கியும் வாடிக்கையாளரின் நலனுக்காகவே செயல்படுகிறது.

மேலும், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் ஒரு செய்தியைப் பகிர்வதற்குமுன் அந்தச் செய்தி உண்மைதானா, அதைப் பகிர வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறதா என்பதையெல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டும். எல்லோரிடமும் பொறுப்புணர்வும், நாணயமும் இருக்க வேண்டும்” என்றார்.

 மாற்றங்கள் அவசியம்!

“2012-ம் ஆண்டு முதல் நாணயம் விகடனுடன் இணைந்து, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கான விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளைத் தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறோம். இதன்மூலம், பெரும்பாலான நாணயம் விகடன் வாசகர்களைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்’’ என்று பேசத் தொடங்கினார் ஆதித்ய பிர்லா சன் லைஃப் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின்  தலைமைச் செயல் அதிகாரி ஏ.பாலசுப்பிரமணியன் . அடுத்து, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் எதிர்காலம் குறித்துப் பேசினார். 

“மியூச்சுவல் ஃபண்ட், கடந்த    20 வருடங்களாக நன்றாக வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தியப் பங்குச் சந்தையில் வெளிநாட்டினரின் முதலீடுகள்தான் பெரும்பாலும் இருக்கும். இதனால், அமெரிக்கச் சந்தை சரிவைச் சந்தித்தால் இந்தியச் சந்தையும் சரிவைச் சந்திக்கும். இரண்டுக்கும் நேரிடை யான தொடர்பு இல்லை எனினும், பாதிப்பு இருக்கும். ஆனால், தற்போது நிலைமை மாறி வருகிறது. இந்தியச் சந்தைகள் வெளி நாட்டினரை நம்பி இல்லை எனச் சொல்லுமளவுக்கு இந்தியர்களின் முதலீடு அதிகரித்து உள்ளது. அதற்கு ஒரு முக்கியக் காரணம், மியூச்சுவல் ஃபண்ட்.

தற்போது  இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் தொகை ரூ.22.76 லட்சம் கோடி. 2012-13-ம் ஆண்டில் மும்பையில் நடந்த மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனங் களின் கூட்டமைப்பின் கூட்டத்தில், 2020-ல்  இந்தியர்களின் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ரூ.20 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணித்தோம். ஆனால், 2017-ல், அதாவது மூன்று ஆண்டு களுக்கு முன்பே அதை  அடைந்துள்ளோம். இதிலும், பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் மட்டுமே ரூ.7.55 லட்சம் கோடி முதலீடு செய்யப் பட்டிருக்கிறது.

சந்தை ஏற்றத்தாழ்வுகளுக்கும், பொருளாதார நிலைக்கும் தகுந்தாற்போல் நிறுவனங்கள் தங்களது பிசினஸ் உத்திகளை மாற்றி வருகின்றன. இதைப் போலவே, தனிநபரும் தங்களது உத்திகளையும் சந்தைக்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும்.     2006-ல் உலகளவில் முதலிடத்தில் இருந்த நிறுவனங்கள், 2016-ல் அந்த இடங்களைப் புதிய நிறுவனங் களிடம் பறிகொடுத்திருக்கின்றன. பங்குச் சந்தையில் இன்று ஏறும் பங்கு, நாளை இறங்கலாம். சந்தையில் இந்த மாற்றம் இயற்கை யானது. சந்தையின் மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் முதலீட்டு முடிவுகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்” என்றார்.

நிபுணர்களின் கருத்துகளை ஆர்வத்துடன் கேட்ட பங்கேற் பாளர்கள் அடுத்தடுத்த நிகழ்ச்சிக்குத் தங்களைத் தயார் படுத்திக்கொண்டார்கள். அடுத்தடுத்து பேசிய நிபுணர்களின் உரைகள், அடுத்தடுத்த  வாரம் நாணயம் விகடனில் வெளியாகும். படிக்கத் தயாராகுங்கள்.

-ஞா.சக்திவேல் முருகன்

படங்கள்: பா.காளிமுத்து, ஜெ.வேங்கடராஜ், தே.அசோக்குமார்

நாணயம் ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ்... கொண்டாட்டமாக மாறிய கருத்தரங்கம்!

வழிகாட்டிய முதலீட்டுக் கண்காட்சி!

நாணயம் விகடன் டிசம்பர் 16 மற்றும் 17-ம் தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நிதி மற்றும் முதலீட்டுக் கண்காட்சியை நடத்தியது. வங்கிகள், நிதி ஆலோசனை நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், பங்குத் தரகு நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் எனப் பலதரப்பட்ட நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில்  ஆலோசனை மையங்களை அமைத்திருந்தன. நாணயம் விகடனில் தொடர்ந்து எழுதும் நிதி ஆலோசகர்கள் பலர் முகாமிட்டு, நாணயம் விகடன் வாசகர்களுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். நிதி ஆலோசனையைச் சலுகைக் கட்டணத்தில் சில நிறுவனங்களும், இலவசமாகவே சில நிறுவனங்களும் வழங்கின. இந்தக் கண்காட்சியைக் காணவந்திருந்தவர்கள், இங்கு  முகாமிட்டிருந்த பல பங்குத் தரகு நிறுவனங்களிடம் டீமேட் கணக்கைத் தொடங்கினர். இன்ஷூரன்ஸ் ஆலோசனை நிறுவனங் களிடம் பல வாசகர்கள் தங்களுக்கு அவசியமான பாலிசிகளை எடுப்பது குறித்த ஆலோசனைகளைப் பெற்றார்கள். முதல்முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என ஆர்வமுடன் கண்காட்சிக்கு வந்திருந்த பல வாசகர்களுக்கு, மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசனை நிறுவனங்கள் வழிகாட்டி உதவின. ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு முதலீட்டுச் சூட்சுமங்களைச் சொல்லிக் கொடுத்த இந்தக் கண்காட்சியை, ‘அடுத்த ஆண்டு இன்னும் விரிவாக நடத்துங்கள்’ எனச் சிலர் கோரிக்கை வைத்தார்கள்.

நாணயம் ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ்... கொண்டாட்டமாக மாறிய கருத்தரங்கம்!

வாராக் கடன் சுமைக்கு  என்ன காரணம்..?

“வங்கிகளின் முக்கியமான பிரச்னையாக இருப்பது வாராக் கடன் பிரச்னை. கடன் வாங்கும் போது ஆர்வமாகவும், பவ்யமாகவும் கடனை வாங்கும் பலர், கடனைத் திரும்பச் செலுத்த வேண்டும் என்கிறபோது காணாமல் போய் விடுகிறார்கள்.

வங்கியில் கடனை வாங்கி, அதைச் சரியாகப் பயன்படுத்திப் பலன் அடையும் அனைவருமே,  கடனை சரியாகத் திரும்பச் செலுத்தினால் எந்த வங்கியும் இன்று வாராக் கடன் சுமைக்கு ஆளாகியிருக்காது” என்றார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆர்.சுப்பிரமணிய குமார்!

நாணயம் ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ்... கொண்டாட்டமாக மாறிய கருத்தரங்கம்!

மியூச்சுவல் ஃபண்டில்  சிறு முதலீட்டாளர்கள்!

“முன்பெல்லாம் வங்கிகளும், நிதிசார் நிறுவனங்களும், பெரும் பணக்காரர்களும்தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்வார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது சிறுமுதலீட்டாளர் கள் ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகிறார்கள். வங்கியின் ரெக்கரிங் டெபாசிட் இன்று மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி-யாக மாறி யிருக்கிறது. சந்தையில் ஏற்றத்தாழ்வுகள் குறைந் திருப்பதற்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும், பங்குச் சந்தை முதலீடு களும் ஒரு முக்கியக் காரணம்” என்றார் ஆதித்யா பிர்லா சன் லைஃப் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஏ.பாலசுப்பிரமணியன்.