
ஓவியம்: பாரதிராஜா
“என் பெயர் திருமால். வயது 34. என் மனைவிக்கு வயது 28. என் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர். நான் ஆயத்த ஆடை உற்பத்தி துறையில் தற்போது வெளிநாட்டில் வேலை செய்கிறேன். என் குடும்பத்தினர் என்னுடன் உள்ளனர். என் மகனுக்கு இப்போது இரண்டு வயது ஆகிறது. நான் நாணயம் விகடனின் ஆன்லைன் வாசகர். என்னுடைய எதிர்காலப் பணத் திட்டமிடலுக்கு உதவினால் மகிழ்ச்சியாக இருக்கும்.

நான் வெளிநாட்டில் உள்ளதால் மாதச் சம்பளம் ரூ.2,83,000 கிடைக்கிறது. நான் இப்போது இருக்கும் வேலையில் குறைந்தது ஐந்து வருடங்கள் பணியாற்றுவேன். பின்னர் வெளிநாடு வேலை கிட்டுமா அல்லது மீண்டும் இந்தியாவில் வேலைக்குச் சேர்வேனா என இப்போது தெரியவில்லை. இதுவே இந்தியாவில் வேலைக்குச் சேர்ந்தாலும் எனக்கு மாதம் ரூ.1,50,000 வரை சம்பளம் கிடைக்கும்.
எனக்கு எந்தக் கடனும் இல்லை. என் அப்பா மாதம் ரூ.20,000 பென்ஷன் பெறுகிறார். என் பெற்றோர் அவர்களுடைய செலவைச் சமாளித்துக்கொள்கிறார்கள். ஊரில் சொந்த வீடு, நிலம் உள்ளது. அதன் மதிப்பு ரூ,1 கோடி. அதனை விற்கும் எண்ணம் இல்லை” என்றவர், தன் வரவு செலவு மற்றும் தற்போது செய்துவரும் முதலீடுகள் உள்ளிட்ட நிதி விவரங்களை மெயிலில் அனுப்பி வைத்தார்.
வரவு செலவு
மாதச் சம்பளம் : ரூ.2,83,000
மாதச் செலவுகள் (முதலீடுகளையும் சேர்த்து) : ரூ.1,03,000
மீதம் : ரூ.1,80,000
தற்போதைய முதலீடு
பி.பி.எஃப் மாதம் : ரூ.5,000
என்.பி.எஸ் மாதம் : ரூ.5,000
எஸ்.ஐ.பி முதலீடு : ரூ.4,000
தங்கத்தில் முதலீடு ஆண்டுக்கு : ரூ.1,25,000
இலக்குகள்
* அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.30 லட்சம் மதிப்பில் சொந்த வீடு தேவை (இடம் உள்ளது).
* என் மகனின் மேற்படிப்புக்கு ரூ.20 லட்சம், திருமணத்துக்கு ரூ.10 லட்சம் இன்றைய மதிப்பில்.
* இரண்டாவது குழந்தைக்கான மேற்படிப்புக்கு ரூ.20 லட்சம், திருமணத்துக்கு ரூ.10 லட்சம் இன்றைய மதிப்பில்.

* ஓய்வுக்காலத்துக்கு எவ்வளவு தேவை?
இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.
“பணம் அதிகமாகச் சம்பாதிக்கும்போதே எதிர்காலத் தேவைகளுகான முதலீட்டு வாய்ப்புகளை நிறைய பேர் ஏற்படுத்திக்கொள்ளத் தவறிவிடுகிறார்கள். வெளிநாடுகளில் பணிபுரிபவர்களில் பலர், முதலீட்டுக்கான சூழலைத் தவறவிட்டு விட்டு, பிறகு இந்தியாவுக்கு வந்த பின்னர் ரிஸ்க் எடுக்கிறார்கள்.
இந்தியா வந்தபிறகு அதிகளவில் சம்பாதிக்கும் வாய்ப்பு இருந்தாலும், வெளிநாட்டில் சம்பாதிக்கும்போதே எதிர்காலத் தேவைகளுக்கான முதலீடுகளைச் செய்துகொள்வது நல்லது.
வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவில் சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வந்தால், வங்கிக் கணக்குக்கான வட்டி வருமானமே கிடைக்கும் என அரசு நிர்ணயித்துள்ளது. எனவே, அத்தகைய முதலீடுகளை நிறுத்திவிடலாம்.

அடுத்து உங்கள் இலக்குகளுக்கான முதலீடுகளைப் பார்ப்போம். சொந்த வீடு குறித்த இலக்கை இந்தியாவுக்கு வந்த பிறகு திட்டமிட்டுக்கொள்ளலாம்.
முதல் குழந்தையின் மேற்படிப்புக்காக உங்களுக்கு 16 ஆண்டுகள் கழித்து ரூ.59 லட்சம் தேவைப்படும். அதற்கு ரூ.10,300 மாதம் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் 5 ஆண்டுகளுக்குள்ளாகவே இலக்குகளைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பு இருப்பதால், அதற்கேற்ப திட்டமிட்டுத் தருகிறேன். மாதம் ரூ.21,100 முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் ரூ.17,15,000 கிடைக்கும். இதனை மறு முதலீடு செய்தால் அடுத்த 11 ஆண்டுகளில் ரூ.59.65 லட்சம் கிடைக்கும்.
இரண்டாவது குழந்தையின் மேற்படிப்புக்கு 18 ஆண்டுகளில் ரூ.67.6 லட்சம் தேவை. மாதம் ரூ.8,900 முதலீடு செய்ய வேண்டும். மாறாக, மாதம் ரூ.19,000 முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் ரூ.15.5 லட்சம் கிடைக்கும். இதை மறுமுதலீடு செய்தால் ரூ.67.7 லட்சம் கிடைக்கும்.

அடுத்து முதல் குழந்தையின் திருமணத்துக்கு 24 ஆண்டுகள் கழித்து ரூ.50.7 லட்சம் தேவை. அதற்கு மாதம் ரூ.3,000 முதலீடு செய்ய வேண்டும். ஆனால், மாதம் ரூ.8,000 முதலீடு செய்தால் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.6.5 லட்சம் கிடைக்கும். இதை மறு முதலீடு செய்தால் திருமணத்தின்போது ரூ.56.4 லட்சம் கிடைக்கும்.
அடுத்து, இரண்டாவது குழந்தையின் திருமணத்துக்கு 26 ஆண்டுகளில் ரூ.58 லட்சம் கிடைக்கும். அதற்கு மாதம் ரூ.2,700 முதலீடு செய்ய வேண்டும். மாறாக, மாதம் ரூ.6,500 முதலீடு செய்தால் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5.3 லட்சம் கிடைக்கும். இதை மறுமுதலீடு செய்தால் திருமணத்தின்போது ரூ.57.3 லட்சம் கிடைக்கும். இரண்டாவது குழந்தை இன்னும் பிறக்காத நிலையில் திட்டமிட்டுத் தந்துள்ளோம். பெண் குழந்தை பிறக்கும்பட்சத்தில் திருமணத்துக்கான முதலீட்டுத் தொகையை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து, ஓய்வுக்காலத்துக்கு தற்போது மாதம் ரூ.30 ஆயிரம் தேவையெனில், 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1.52 லட்சம் தேவையாக இருக்கும். அப்படியானால் ரூ4.3 கோடி கார்ப்பஸ் தொகையாகச் சேர்க்க வேண்டும். எல்லா முதலீடுகளுக்கும் போக, உங்களிடம் மீதம் இருக்கும் ரூ.1.3 லட்சத்தை 5 வருடங்களுக்கு முதலீடு செய்தால் ரூ.1.06 கோடி கிடைக்கும். இதனை மறுமுதலீடு செய்தால் ரூ.3.7 கோடி கிடைக்கும். இன்னும் ரூ.70 லட்சம் மட்டும் சேர்த்தால் போதுமானது.
இந்தியா வந்த பிறகு 19 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.8,000 மட்டும் முதலீடு செய்தால் ரூ.70 லட்சம் கிடைக்கும். இந்தியா வந்த பிறகு டேர்ம் பாலிசி ரூ.3 கோடி அளவுக்கு எடுத்துக்கொள்ளவும்.
பரிந்துரை : ஐ.சி.ஐ.சி.ஐ புரூ ஃபோகஸ்டு புளூசிப் 11,000, ஃப்ராங்க்ளின் ஃபோகஸ்டு 25 ஃபண்ட் 11,000, ஆக்ஸிஸ் ஃபோகஸ்டு 25 ஃபண்ட் - ரூ.15,000, மோதிலால் ஆஸ்வால் ஃபோகஸ்டு மல்டி கேப் 35 ஃபண்ட் - ரூ.20,000, கோட்டக் செலக்ட் ஃபோகஸ் ஃபண்ட் - ரூ.20,000, ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்ட் -ரூ.11,000, மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் ரூ.11,000, எடெல்வைஸ் மிட் அண்டு ஸ்மால் கேப் ரூ.11,000, ஃப்ராங்க்ளின் இந்தியா டைனமிக் அக்ரூவல் ரூ.20,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ லாங்க் டேர்ம் பிளான் ரூ.20,000, டி.ஹெச்.எஃப்.எல் பிரைமெரிக்கா கிரெடிட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் - ரூ.20,000, கோட்டக் லோ டியூரேஷன் ஃபண்ட் -ரூ.14,000”
குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.
Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878
- கா.முத்துசூரியா
