
செல்லமுத்து குப்புசாமி
கடந்த இதழில் ஐ.பி.ஓ பற்றிப் பேசினோம். பொதுவாகவே பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும்போது தமது பங்குகளைப் பொதுவில் வெளியிட்டு, பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாறுவது நிறைய நிகழும்.ஒட்டுமொத்த சந்தையும் மந்தமாக இருந்தால், ஐ.பி.ஓ வெளியிடும் நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துபோகும். இதுதான் நியதி.

பங்குச் சந்தை வேகமாக வளர்வதும், அதிக விலையில் (PE விகிதம்) விற்பதும் பல்வேறு காரணிகளால் தீர்மானமாகின்றன. குறிப்பிட்ட ஒரு நிறுவனம் அல்லது குறிப்பிட்ட ஒரு துறை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றோடு மட்டுமே தொடர்புடையவையல்ல. வேறு சில காரணிகளும் அவற்றைத் தீர்மானிக்கும்.
அந்த வகையில் எளிதில் பணமாக்கக்கூடிய லிக்விடிட்டி (liquidity) எனப்படும் விஷயம் தவிர்க்க முடியாத காரணி ஆகும். சில நேரங்களில் 100 ரூபாய் மதிப்புள்ள பங்கு வெறும் 70 ரூபாய்க்குக் கிடைக்கலாம். அந்த கம்பெனி ஈட்டும் லாபம், பி.இ விகிதம் எல்லாவற்றையும் வைத்துப் பார்த்தால் மலிவாக கிடைப்பது போல நமக்குத் தோன்றும். ஆனால், நம்மிடம் போதுமான பணம் இல்லையென்றால் வாங்க முடியாமல் போகலாம்.

சில சமயங்களில் நம்மிடம் நிறைய பணமிருக்கும். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றே தெரியாது. அப்படியான சூழலில் நூறு ரூபாய் மதிப்புள்ள பங்கு 150 ருபாய்க்கு விற்றாலும்கூட பரவாயில்லை என்று வாங்கிப் போடுவோம். ‘அப்போதெல்லாம் நடப்பது நடக்கட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்ற மனநிலையில் இருப்போம்.
ஒரு தனிநபராக நமது பணப் புழக்கம் நமது நடவடிக்கையை, முடிவுகளை இவ்வாறு மாற்று மென்றால், ஒட்டுமொத்தமாக சமூகத்தில் நிலவும் பணப் புழக்கம் பங்குச் சந்தையின் செயல்பாட்டைப் பாதிக்கத் தானே செய்யும்! உலகளாவிய அளவில் இப்போது நாடுகள் ஒருங்கிணைந்திருக்கின்றன. சில நிகழ்வுகள் சர்வதேச பணப் புழக்கத்தை மாற்றும் வல்லமை கொண்டவை.அவையும் மார்க்கெட்டின் போக்கைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தவை.
பங்குச் சந்தையில் பல காலம் பழந்தின்று கொட்டை போட்ட முதலீட்டாளர்கள் அனைவருக்கும் ஒரு விஷயம் தெரியும், எப்போதெல்லாம் சந்தை கடுமை யான வீழ்ச்சியைச் சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் பங்குகள் மலிவாகக் கிடைக்கும். ஆனால் யார் கையிலும் காசே இருக்காது. அப்போது பணமிருந்து வாங்கிப் போட்டு வைக்கிறவன் ராஜா.
அதனால்தான், பங்கு முதலீடு வெறுமனே குறிப்பிட்ட நிறுவனம் ஒன்றின் ஷேரில் முதலீடு செய்வதோடு மட்டும் குறுக்கிப் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. பணப்புழக்கம் பற்றாக்குறை சமயத்தில் தவறவிட்ட வாய்ப்புகளைப் பற்றி நிறைய பேர் புலம்புவதைக் கடந்து வருகிறோம் என்பதன் பின்னணியில், நமது போர்ட் ஃபோலியோவில் கணிசமான பகுதியை வெறும் பணமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

மொத்த முதலீட்டில் 80 சதவிகிதத்துக்கு மேல் பங்கில் போடக் கூடாது. எப்போதுமே 20% பணமாக கையில் இருக்க வேண்டும் எனச் சிலர் வலியுறுத்து கிறார்கள். ஆனால், இத்தகைய விஷயங்களைப் பொதுமைப்படுத்தி அனைவருக்கும் பொருந்துகிற மாதிரி டெம்ப்ளேட் போடுவது தவறு. சிலருக்கு 80:20, சிலருக்கு 70:30, சிலருக்கு 50:50 ஆக இருக்கலாம். சிலர் 100:0 கூட பேணலாம்.
லிக்விடிட்டியைப் பற்றிப் பேசும் போது கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட பல பெரிய மனிதர்கள் மனக்கண் முன் வந்துபோவார்கள். அவர்களிடம் பெருமதிப்பிலான சொத்துகள் இருக்கலாம். ஆனால், பணப் புழக்கம் இல்லாமல், செலவுகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போயிருக்கும். ஒரு பிரபலமான நடிகர் - இயக்குநர் வெறும் ரூ.30 லட்சம் கடனுக்காக ரூ.4 கோடி மதிப்புள்ள பங்களாவை விற்றதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
பொதுவாகவே நமது சமூகத்தில் அசையாத சொத்துகள் மீதான மோகம் அதிகம். பல நேரங்களில் அசையாத சொத்துகள் ஒருவிதமான புதைகுழி, நகர முடியாமல் காலைப் பிணைக்கும் இரும்புச் சங்கிலி. அசையும் சொத்துகள், அதிலும் குறிப்பாக நினைத்த மாத்திரத்தில் பணமாக மாற்றக்கூடிய, விற்று காசாக்கக் கூடிய சொத்துகள் தனித்த முக்கியத்துவம் பெறுகின்றன.
மற்ற யாரைக் காட்டிலும் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிற நமக்கு, விற்றுக் காசாகக்கூடிய சொத்துகள் பற்றிய தெளிவான புரிதலும், அதன் மீதான மோகமும் கூடுதலாக இருக்க வேண்டும்.
மிகக் குறுகிய கால அவகாசத்தில் பணமாக மாற்றக்கூடிய அளவில் நம் கைவசம் சங்கதிகள் இருத்தல் அவசியம். அநேக சமயங்களில் அப்படியான ஒரு நிகழ்வு, 20, 30 வருடங்கள் உழைத்துச் சம்பாதிக்கிற பணத்தைவிடக் கூடுதலான லாபத்தைத் தரக்கூடிய முதலீட்டு வாய்ப்பாக அமையலாம்.
இந்தப் பின்னணியில், பணமதிப்பு நீக்கம் உருவாக்கிய தாக்கத்தை நாம் கவனிக்கலாம். முன்பு பெருந்தொகை கறுப்புப் பணமாக இருந்தது. அந்தப் பணத்தை நேரடியாக முதலீடு செய்ய முடியாது, வங்கியில் போட முடியாது. அதனால், ரியல் எஸ்டேட் சந்தையில் போட்டு வைத்திருப்பார்கள். பண மதிப்பு நீக்கம் அந்த மாதிரியான பணத்தையெல்லாம் பேங்கிங் சிஸ்டத்திற்குள் கொண்டு வந்தது.
வங்கிகளில் நிறைய பணம் புரள்கிறது. அதனால் வங்கிகள் வட்டி விகிதத்தைக் கடுமையாகக் குறைத்துவிட்டன. காரணம், எக்கச்சக்கமான பணம் வங்கிக் கணக்கில் வந்துவிட்டது. ஆனால், வங்கிகள் கொடுக்கும் வட்டியோ குறைவு. அதற்குப் பதிலாக ஷேர் மார்க்கெட்டில் போட்டால் என்ன என்ற எண்ணம் பலருக்கும் ஏற்படுகிறது.
வழக்கமாக இந்தியாவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வோரைக் காட்டிலும் வங்கி வைப்பீடுகளில் பணத்தைப் போட்டு வைப்பவர்கள் அதிகம். ஆனால், பணமதிப்பு நீக்கம், வழக்கத்துக்கு மாறான போக்கை ஏற்படுத்தியுள்ளது.
2016-17-ல் வங்கி எஃப்.டி.க்களில் ரூ.3.4 லட்சம் கோடி மட்டுமே புதிதாக கூடியுள்ளது. அதற்கு மாறாக, பங்குச் சந்தை மற்றும் அது தொடர்பான உபகரணங்களில் ரூ.8 லட்சம் கோடி புதிய முதலீடு வந்துள்ளது. இதுவரைக்கும் நடந்திராத அதிசயம் இது.
மேலும், கடந்த நிதியாண்டின் முடிவில் இந்தியர்கள் பங்கு சந்தையில் செய்திருந்த ஒட்டுமொத்த முதலீட்டின் மதிப்பு ரூ.37.6 லட்சம் கோடியாகவும், அதுவரைக்கும் செய்துவைத்திருந்த
எஃப்.டி.களின் மதிப்பு ரூ.40.1 லட்சம் கோடியாகவும் நிலவியது.
ஒருவேளை வட்டி விகிதம் கூடினால் பங்குச் சந்தையிலிருந்து வங்கி வைப்பீடுகளுக்குப் பணம் பாயும். அதன் காரணமாக, பங்கு சந்தை சரிவைச் சந்திக்கும். வட்டி விகிதம் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் எங்கு உயர்ந்தாலும் அதன் பிரதிபலிப்பைப் பங்குச் சந்தையில் உணரலாம்.
உதாரணத்துக்கு, அமெரிக்காவில் வட்டி விகிதம் லேசாக ஏறினாலும், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச் சந்தையில் உள்ள பணத்தை அந்நிய முதலீட்டாளர்கள் (FII – Foreign Direct Investors) எடுத்துச் சென்று அமெரிக்காவில் டெபாசிட் செய்வார்கள்.
‘நமக்கெல்லாம் அசையா சொத்து இருந்தாத்தான் சார் கரெக்ட்.. அசையற சொத்து இருந்தா எடுத்துச் செலவு பண்ணிருவேன்’ டைப்பான ஆளாக நீங்கள் இருந்தால் ஷேர் மார்க்கெட் ABC க்கு வரும் முன், பர்சனல் ஃபைனான்ஸ் ABC க்கு ஒரு விசிட் அடிக்க பரிந்துரை செய்யப்படுகிறது.
(லாபம் சம்பாதிப்போம்)

எல்இடி பல்புக்கு மாறிய ரயில்வே!
தெற்கு மத்திய ரயில்வேயின் தலைமையகம் செகந்தராபாத்தில் உள்ளது. இந்த அலுவலகம் முழுக்க எல்இடி பல்ப் பொருத்தப்பட்டு, இந்தியாவிலேயே முழுக்க எல்இடி பல்ப் பொருத்தப்பட்ட முதல் ரயில்வே அலுவலகம் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது
எல்.இ.டி பல்புகள் பொருத்துவதற்குமுன்பு இந்த அலுவலகத்துக்கு 112.25 கிலோ வாட் மின்சாரம் தேவைப்பட்டது. ஆனால், இப்போது 65.8 கிலோ வாட் மின்சாரம் மட்டுமே தேவைப்படுகிறது. இதன்மூலம் ஆண்டொன்றுக்கு ரூ10.64 லட்சம் மிச்சமாகும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுக்க உள்ள மற்ற ரயில் நிலையங்களும் இதனைப் பின்பற்றலாமே!