
கேள்வி - பதில்

என் மகளின் திருமணத்துக்கு பி.எஃப் பணத்தை எடுக்க என்னென்ன விதிமுறைகள் என்பதைச் சொல்ல முடியுமா?

சதாசிவம், தென்காசி
சலீல் சங்கர், பி.எஃப் மண்டல ஆணையர்- I, சென்னை.
“ஓர் உறுப்பினர் தன் திருமணம், மகள் / மகன் மற்றும் தன் சகோதரர் / சகோதரியின் திருமணத்துக்காக தன் பி.எஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். உறுப்பினருடைய பி.எஃப் பங்கிலிருந்து 50% வரை அனுமதிக்கப்படும். ஓர் உறுப்பினர் அதிகபட்சமாக மூன்று முறை இவ்வாறு பணம் எடுக்கலாம். உறுப்பினர், தன் UAN எண்ணில் ஆதார் எண்ணைப் பதிவு செய்திருப்பின், இந்த வசதியை ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துப் பெறலாம். இல்லையெனில், படிவம் எண் 31-ஐ பூர்த்தி செய்து பி.எஃப் அலுவலகத்தில் சமர்ப்பித்துப் பெறலாம்.”
1995-ல் கிராமப் பெரியோர்களால் முறைப்படி பங்கிட்டு எழுதிக்கொண்ட இடம் 5 ரூபாய் பத்திரத்தில் எழுதப்பட்டது. ஆனால், பதிவு செய்யப்படவில்லை. அந்த இடத்துக்கு வட்டாட்சியரால் தரப்பட்ட கூட்டுப் பட்டா இருக்கிறது. பதிவு செய்யப்படாத இடத்தில் 5 ரூபாய் பத்திரத்தை வைத்துக்கொண்டு வீடு கட்டலாமா?

விஷ்ணு (முகநூல் வழியாக)
கே.அழகுராமன், வழக்கறிஞர், உயர் நீதிமன்றம்
“கிராமப் பெரியோர்கள் முன்னிலையில் முறைப்படி பங்கிட்டு எழுதிக்கொண்ட ஆவணமானது குடும்ப உடன்படிக்கை (Family Arrangement) எனப்படும். அந்த ஆவணம் எழுதப்பட்ட பத்திரத்தின் மதிப்பை இதில் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை. பதிவு செய்யப்படாத ஆவணமாக இருப்பினும், அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட கூட்டுப் பட்டா என்பது, அந்த சொத்தின்மீதான உங்களது உரிமையை நிலை நாட்டுவதாகும். மேலும், 1995-ம் வருடத்திலிருந்து உங்களது அனுபவமும் இதன்மூலமாக நிச்சயிக்கப்படுகிற சூழ்நிலையில், கூட்டுப் பட்டா, காலி மனைக்கு வரி கட்டிய ரசீது ஆகியவற்றின் அடிப்படையில் அந்தச் சொத்தில் கட்டப்போகும் கட்டுமானத்திற்கான அங்கீகாரம் பெற்று வீடு கட்டலாம்.”
தீவிரக் குடிப்பழக்கம் அல்லது தொடர்ச்சியான சிகரெட் பழக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவரின் குடும்பத்தினர் இழப்பீடு பெறுவதில் சிக்கல் இருக்குமா?

ராஜேஷ், சென்னை-08
வி.குருநாதன், தலைமை செயல் அதிகாரி, டிவிஎஸ் இன்ஷூரன்ஸ்
“கண்டிப்பாகச் சிக்கல் இருக்கும். மரணத்திற்கான காரணமும் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் முக்கியக் காரணியாக இருக்கும். காப்பீட்டு ஒப்பந்தத்தின் முன்மொழிவுக் கட்டத்தில் எழுத்துபூர்வமாகச் சொல்லப்படும் உறுதிமொழியானது, மிகுந்த நம்பிக்கையின் அடிப்படையிலானதாகும். அதன் அர்த்தமே, கொடுக்கப்படும் தகவல்கள் அனைத்தும் உண்மையே என்பதாகும். அவருக்குக் குடிப்பழக்கம் இருக்கும் செய்தி, ஒப்பந்தம் போடப்படும் முன்பே சொல்லப்பட்டிருக்க வேண்டும். அப்படிச் சொல்லியிருந்தால் அந்த ஒப்பந்தமே போடப்பட்டிருக்காது.
அப்படிச் சொல்லாமல், உண்மையை மறைத்திருந்தால், ‘காப்பீடு எடுத்த நபர், தவறான தகவல்களைக் கொடுத்து ஒப்பந்தத்தை, நம்பிக்கையை மீறியிருக்கிறார்’ என்று அர்த்தமாகிறது. காப்பீட்டுத் தொகைக்கு விண்ணப்பிக்கும்போது அதோடு ஒப்படைக்கும் மருத்துவ விவரங்களின் மூலமாகவோ அல்லது மருத்துவரின் மூலமாகவோ அந்த நபருக்குக் குடிப்பழக்கம் இருந்தது தெரியவந்தால், காப்பீட்டுத் தொகையைப் பெறுவது சிக்கலாகும். ஆனால், இது சூழலுக்குத் தக்கவும், வெவ்வேறு நிறுவனங்களின் அப்போதைய நிலையைப் பொறுத்தும் மாறுபடக்கூடியதாகும்.
ஒருவேளை, காப்பீட்டு ஒப்பந்தம் போடும்போது குடிப்பழக்கம் இல்லாதிருந்து, ஒப்பந்தம் போட்டபிறகு, பணிநிமித்தமாக குடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்காகக் காப்பீட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க முடியாது. ஒப்பந்தம் போடப்பட்டது, போடப்பட்டதுதான். ஆனால், மரணத்திற்கான காரணம், குடிப்பழக்கம் என்று தெரியவந்தால் காப்பீட்டுத் தொகையைப் பெறுவது சிக்கலாகும். ஆக, அப்படியொரு பழக்கம் வராமல் வைத்துக்கொள்வதே உடல்நலத்திற்கும் காப்பீட்டு ஒப்பந்தத்திற்கும் நல்லது.”
28 வயதாகும் எனக்கு ஆக்சிடென்ட் பாலிசிதான் பயனுள்ளதாக இருக்குமென்று இன்ஷூரன்ஸ் ஏஜென்டாக இருக்கும் உறவினர் கூறுகிறார். ஆக்சிடென்ட் பாலிசி அல்லது டேர்ம் பாலிசி, இரண்டில் எது எனக்குச் சரியாக இருக்கும்?

ஷ்யாம், மணப்பாறை
எஸ்.ஸ்ரீதரன், வெல்த்லேடர்
“ஆக்சிடென்ட் பாலிசி எடுப்பதன் மூலம் எதிர்பாராத விபத்தில் உயிரிழந்தால் மட்டுமே பாலிசிதாரரின் குடும்பத்திற்குக் காப்பீட்டுத் தொகை சென்றடையும். ஆகவே, இந்த பாலிசியின் பிரீமியமும் குறைவாக இருக்கும். ஆனால், டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது, பாலிசிதாரர் உடல்நலக் குறைவு, திடீரென வரும் வியாதி, விபத்து போன்ற எந்தக் காரணத்தில் உயிரிழப்பு ஏற்பட்டாலும் பாலிசிதாரரின் குடும்பத்திற்கு காப்பீட்டுத்தொகை சென்றடையும். மேலும், வயது குறைவான காலத்தில் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது, டேர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியமும் குறைவாக இருக்கும். ஆகவே, டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பதே சிறந்ததாகும்.”
எனக்குக் கிடைத்த பி.எஃப் தொகை ரூ.2 லட்சத்தை இரண்டாண்டுகளுக்குள் அதிக லாபம் தருவதுபோல் எதில் முதலீடு செய்யலாம்?

உதயசங்கர், கோவை
ச.ராமலிங்கம், நிதி ஆலோசகர்
“அதிக லாபத்தை இரண்டு வருடங்களுக்குள் அடைய முயற்சி செய்வது கடினமான ஒன்று . கடந்த சில வருடங்களாக வங்கி வைப்பு நிதி வட்டி விகிதம் குறைந்துகொண்டே வருவதால், உங்களைப் போன்ற முதலீட்டாளர்களின் கவனம் மியூச்சுவல் பண்ட் பக்கம் திரும்பியுள்ளது.
குறைந்த ரிஸ்க் கொண்ட லிக்விட் பண்டில் (ஆண்டுக்கு 6.5 - 7% கிடைக்க வாய்ப்புள்ளது) முதலீடு செய்தபிறகு எஸ்.டி.பி (Systematic Transfer Plan) மூலம் ஒரு குறிப்பிட்ட தொகையை லிக்விட் பண்டிலிருந்து தினசரி எஸ்.டி.பி மூலம் ரூ.1,000, வார எஸ்.டி.பி மூலம் 7,000, மாத எஸ்.டி.பி மூலம் 25,000, பேலன்ஸ்டு அல்லது ஈக்விட்டி டைவர்சிஃபைடு ஃபண்டுக்கு சுமார் இரண்டு வருடங்களுக்கு மாற்ற வேண்டும். சந்தையின் ஏற்ற இறக்கத்தில் சராசரியாக (Rupee Cost Averaging) அதிக யூனிட்டுகள் கிடைக்கும்போது கணிசமான லாபத்தை அடையலாம்.”
தொகுப்பு : தெ.சு.கவுதமன், படம் : தே.அசோக்குமார்
கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.

சவுத் இந்தியன் பேங்க் பங்கு... என்ன செய்யலாம்?
@ கணேசகுமார்
சவுத் இந்தியன் பேங்க் பங்குகளை ரூ.33-க்கு வாங்கியுள்ளேன். இதனை நீண்ட காலத்துக்கு வைத்துக்கொள்ளலாமா?
ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்
“சவுத் இந்தியன் பேங்க் பங்கு 2017 ஜூன் முதல் ரூ.27- 33 என்ற அளவில் தான் இருந்து வருகிறது. இந்தப் பங்குகள் அதிகபட்சம் ரூ.33.80 என்ற அளவை எட்டி யிருக்கின்றன. 2017 செப்டம்பர் காலாண்டு முடிவுகள், அந்நிறுவனப் பங்குகளை வாங்க உத்வேகம் கொடுப்பதாக இல்லை. வரும் காலாண்டு முடிவுக்குப் பின்னர், பங்கு விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கக்கூடும்.

பிட்காயின் முதலீடு... மீண்டும் எச்சரிக்கை!
அதிரடியாக லாபம் சம்பாதிக்க விரும்பும் முதலீட்டாளர்கள் மத்தியில் பிட்காயின்களில் முதலீடு செய்யும் மோகம் தற்போது பெருகி வருகிறது. ஆனால், இந்த பிட்காயின்களுக்கு மத்திய அரசோ அல்லது ரிசர்வ் வங்கியோ அல்லது எந்தவொரு முதலீட்டு ஒழுங்குமுறை அமைப்போ அனுமதி அளிக்கவில்லை என்பதால், இதில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென மத்திய நிதியமைச்சகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
பெயரளவில் பிட்கா யின்கள் என்று அழைக் கப்பட்டாலும், உண்மை யில் இவை காயின்களே கிடையாது என்று அழுத் தமாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.