
செல்லமுத்து குப்புசாமி
நீங்கள் உங்கள் வீட்டுச் சிறுவனை 70 ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்க கடைக்கு அனுப்புகிறீர்கள். அப்போது அவனிடம் வெறும் 70 ரூபாய் மட்டும் கொடுத்து அனுப்பாமல், 100 ரூபாய் கொடுத்து அனுப்புவோம். நாமெல்லாம் தேர்வு சமயத்தில் ஒரு பேனாவுக்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று என எடுத்துச் சென்றிருப்போம். எட்டு மணிக்கு ரயில் என்றால், ஏழரைக்கே ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றுசேரும் வகையில் வீட்டிலிருந்து கிளம்புவோம். புதிதாக வீடு கட்டும்போது 20 லட்சம் ரூபாய் செலவாகுமென பட்ஜெட் போடுவோம். ஆனாலும், ரூ.22 லட்சம் ஏற்பாடு செய்வோம். இதையெல்லாம் ஏன் செய்கிறோம்?

ஒருவேளை நம் வீட்டுப் பையன் கடையில் சென்று நிற்கும்போது பொருளின் விலை 70 ரூபாய்க்குப் பதில் 90 ரூபாயாக உயர்ந்திருந் தால்..? அவன் தர்மசங்கடமாக, “நான் வெறும் 70 ரூபாய்தான் கொண்டு வந்தேன் அங்கிள்” எனக் கையைப் பிசைய வேண்டியிருக்காது. ஒருவேளை நாம் தேர்வுக்கு எடுத்துச் சென்ற பேனா எழுதாவிட்டால், இன்னொரு பேனாவைப் பயன்படுத்திக் குறிப்பிட்ட தேர்வு நேரத்திற்குள் எழுதி முடித்து விடலாம். தேவையில்லாமல் டென்ஷனாகி பதற்றத்தில் எல்லா வற்றையும் மறந்து போகாமல் இருக்க அது உதவும்.
ஒருவேளை எதிர்பாராத விதமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், அதனால் அரை மணி நேரம் தாமதமானால்கூட முன்கூட்டியே கிளம்புவதன் மூலம் ஒருவிதப் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்கிறோம். அதனால் ரயிலைத் தவறவிடாமல் பார்த்துக்கொள்வோம்.

ஒருவேளை செலவுகள் எதிர்பாராத விதமாகக் கூடி ரூ.20 லட்சத்துக்கு மேலே போனால், வீட்டு வேலையைப் பாதியில் நிறுத்தாமல் முடிக்க ஏதுவாக இருக்கும்.
இந்த ‘ஒருவேளை’ இருக்கிற தல்லவா? இது மிகவும் முக்கியமான ஒரு சங்கதி. நம்மையும் அறியாமல் பல விஷயங்களில், தினந்தோறும் இந்த ‘ஒருவேளை’ மேட்டரை மனதில்வைத்து பல செயல்களைச் செய்கிறோம்.
எல்லாத் துறைகளிலும் இதனை நாம் காணலாம். ஒரே சமயத்தில் 50 வாகனங்கள் செல்லுமாறு ஒரு பாலம் கட்ட வேண்டுமென்றால், அதனை வடிவைக்கும் இன்ஜினீயர் 70 - 80 வாகனங்களின் பாரத்தைத் தாங்குமளவுக்கு வலுவாக அந்தப் பாலத்தை வடிவமைப்பார்.
இதனை மார்ஜின் ஆஃப் சேஃப்டி (Margin of Safety) என்கிறார்கள். மற்ற துறைகளைப் போலவே, பங்கு முதலீட்டிலும் இந்த மார்ஜின் ஆஃப் சேஃப்டி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
பொதுவாகவே, ஷேர் மார்க்கெட் முதலீடுகளைச் சில கணிப்புகளின் அடிப்படையில் மேற்கொள்வது வாடிக்கை. உதாரணத்துக்கு, இ.பி.எஸ் (Earning per share) அதாவது, ஒரு பங்கு ஈட்டக்கூடிய லாபம். குறிப்பிட்ட நிறுவனம், அடுத்த வருடம் ரூ.20 இ.பி.எஸ் ஈட்டுமென நாம் கணித்தால், ‘ஒருவேளை’ என்று சில காரணிகளை யோசித்து, யூகித்துப் பார்த்து எதற்கும் இ.பி.எஸ் ரூ.18 எனக் குறைத்து கணித்து, அதன் அடிப்படையில் நம் முடிவுகளை எடுக்கலாம்.
உங்கள் பி.இ வரம்பு 20 என நீங்கள் வகுத்து வைத்திருந்தால், இ.பி.எஸ் ரூ.20 என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் நடப்பு பங்கு விலை ரூ.400 அல்லது அதற்குள் விற்கிறது என்றால் வாங்குவோம். இதுவே ‘மார்ஜின் ஆஃப் சேஃப்டி’யைக் கருத்தில்கொண்டு இ.பி.எஸ் ரூ.18-ல், பி.இ வரம்பு 20-ன் அடிப்படையில் அதிகபட்ச விலை ரூ.18X20=ரூ. 360. மார்ஜின் ஆஃப் சேஃப்டியைப் பற்றி யோசிக்காமல் இருந்தால் ரூ.380 விலை (ரூ.400-க்குள் உள்ளதால்) தோதான விலை என்று வாங்கிப் போடுவோம். ஆனால், இப்போது விலை ரூ.360-க்குள் இருந்தால் மட்டுமே வாங்க யோசிப்போம்.

இன்னொரு விஷயம் பி.இ விகிதம். குறிப்பிட்ட ஒரு நிறுவனம் 15 ரூபாய் இ.பி.எஸ் ஈட்டுகிறது. தற்போது அதன் பி.இ விகிதம் 10 என்ற அளவில் விற்பனையாகிறது. அதாவது, தற்போதைய பங்கு விலை ரூ.15 X10= ரூ.150. அந்தத் துறையில் செயல்படும் மற்ற நிறுவனங்கள் எல்லாம் சராசரியாக பி.இ 18-க்கு விற்பனையாகின்றன. நாம் ஆராயும் நிறுவனம் புதிய கம்பெனி என்பதால், பெரும்பாலான முதலீட்டாளர்களின் கவனத்தைத் தற்போது பெற்றிருக்கவில்லை. ஆனால், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் எட்டிப் பிடிக்கும் என யூகிக்கிறீர்கள்.
ஆனால், 18 என்கிற அந்தத் துறையின் சராசரி பி.இ அதே அளவில் நீடிக்கும் என உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? (கடந்த 5 ஆண்டுகளில், 10 ஆண்டுகளில் அந்தத் துறையின் சராசரி மதிப்பீடு என்னவாக இருந்தது என்றெல்லாம் சிந்திக்க வேண்டியிருக்கும்) ஒரு வேளை இண்டஸ்ட்ரி, சோதனையான காலங்களைக் கடக்கவேண்டி வந்தால், துறை முழுமைக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய நிகழ்வுகள் ஏற்பட்டால்..? அதனால், அதன் துறை சார்ந்த பி.இ-க்கு ஒரு மார்ஜின் ஆஃப் சேஃப்டி போட்டு 18-லிருந்து 14-ஆகக் குறைக்கலாமா?
அப்படிக் குறைத்து பி.இ 14 என வைத்துக் கொண்டால், நாம் எதிர்பார்க்கக்கூடிய விலை ரூ.15X14=ரூ.210. அதாவது, தற்போதைய ரூ.150 விலை ரூ.210-ஆக உயர்வதற்கான சாத்தியங்கள் அதிகம் என நாம் கணிப்போம். இதற்கு மாறாக, இன்றைய ரூ.150 என்பது ரூ.210 அல்லது அதற்கு மேல் வளரக்கூடிய நிச்சயமான முதலீடுகள் வேறு ஏதேனும் தென்பட்டால் நாம் அவற்றைப் பரிசீலிக்கலாம்.
மார்ஜின் ஆஃப் சேஃப்டியை புக் வேல்யூவுக்கும்கூட உபயோகிக்கலாம். ரூ.100 புக் வேல்யூ உள்ள ஷேர் ரூ.80-க்கு விற்கிறதென்றால், அது ரூ.20 தள்ளுபடிக்குக் கிடைக்கிறது. அதனால் வாங்கலாம் என்ற அணுகுமுறையைச் சிலர் கையாள்வதுண்டு.
இப்படி 20% தள்ளுபடி உங்கள் தேர்வு ஃபார்முலா என்று வைத்துக் கொண்டால், அதனை மார்ஜின் ஆஃப் சேப்டிக்குப்பிறகு அப்ளை செய்துபாருங்கள். புக் வேல்யூ ரூ.100 என வைத்துக்கொள்ளுங்கள். மார்ஜின் ஆஃப் சேஃப்டி 20% எனக் கொள்ளுங்கள். அதன்படி நீங்கள் கணக்கில்கொள்ள வேண்டிய புக் வேல்யூ ரூ.80. அதில் 20% தள்ளுபடியில் உங்களுக்கு ஷேர் கிடைத்தால் வாங்குவீர்கள். அதாவது, ரூ.80-ல் 20% ரூ.16 போக, ரூ.64-க்கு கிடைத்தால் என்ன செய்வீர்கள்..?
நாம் இதுவரைக்கும் பார்த்த மார்ஜின் ஆஃப் சேஃப்டியை இ.பி.எஸ், பி.இ, புக் வேல்யூ ஆகியவற்றுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றில்லை. நாம் கணிக்கக்கூடிய காரணிகள், நம் ஃபார்முலாவில் பயன்படுத்தும் எண்கள் எல்லாவற்றுக்கும் பொருத்திப் பார்த்து நம் முதலீட்டைப் பாதுகாப்பான முதலீடாக மாற்றுவதில் கணிசமாக வெற்றியடையலாம்.
(லாபம் சம்பாதிப்போம்)

எஸ்.பி.ஐ : அடிப்படை வட்டி குறைப்பு!
ஆர்.பி.ஐ வட்டியை குறைக்காத நிலையிலும், நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்.பி.ஐ வங்கி அடிப்படை வட்டி (பேஸ் ரேட்) விகிதத்தை அதிரடியாக 0.30% குறைத்துள்ளது. இதன் பேஸ் ரேட் 8.95-லிருந்து 8.65% ஆக குறைந்துள்ளது. இந்த மாற்றத்தால் வங்கியின் 80 லட்சம் வாடிக்கையாளர்கள் லாபமடைகிறார்கள் எனச் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து இந்த வங்கி வழங்கும் வீட்டுக் கடனுக்கான வட்டி 8.35 சதவிகிதத்திலிருந்து 8.30 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. விரைவில் இதர முன்னணி வங்கி களும் தமது அடிப்படை வட்டி விகிதத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.