மற்ற எபிசோடுகள்
Published:Updated:

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - சுற்றுலாவை இன்பமாக்கும் பிக் யுவர் ட்ரெயில்! (Pickyour Trail)

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - சுற்றுலாவை இன்பமாக்கும் பிக் யுவர் ட்ரெயில்! (Pickyour Trail)
பிரீமியம் ஸ்டோரி
News
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - சுற்றுலாவை இன்பமாக்கும் பிக் யுவர் ட்ரெயில்! (Pickyour Trail)

சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 7

ன்மிக சுற்றுலா, கல்விச் சுற்றுலா, ஹனிமூன் பேக்கேஜ் என விதவிதமான சுற்றுலா பேக்கேஜ்களை விளம்பரங்களில் பார்த்திருப்போம். இதுமாதிரியான சுற்றுலாக் களில் நம்மூரிலிருந்து கிளம்புவது முதல் மீண்டும் வந்து இறங்குவது வரை எல்லா பொறுப்பும் டிராவல் ஏஜென்ட்களிடம்தான் இருக்கும். அவர்கள் போட்ட திட்டப்படிதான் நாம் நடந்துகொள்ள வேண்டும். இதற்கு மாறாக, நாம் செல்லும் விமானம், தங்கும் ஹோட்டல், செல்ல வேண்டிய இடங்கள் வரை நாமே முடிவு செய்யமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?     

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - சுற்றுலாவை இன்பமாக்கும் பிக் யுவர் ட்ரெயில்! (Pickyour Trail)

இந்த ஐடியாவையே ஒரு  ஸ்டார்ட்அப்பாக மாற்றி வெற்றி கண்டுள்ளனர் ஹரி கணபதி மற்றும் ஸ்ரீநாத் ஷங்கர் ஆகிய இருவரும். இவர்களின் நிறுவனமான பிக் யுவர் ட்ரெயிலின் வெற்றிக்கதையைப் பார்ப்போம்.

இன்ஸ்பிரேஷன்

“நாங்கள் இருவருமே பயணம் செய்வதில் அதிக விருப்பமுடையவர்கள். இதுவரைக்கும் 45 நாடுகளுக்குச் சென்று வந்திருப்போம். சில ஆண்டுகளுக்குமுன், நாங்கள் இருவருமே வெவ்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தோம். இருவருக்குமே ஒரு தனி நிறுவனத்தைத் தொடங்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அப்போதுதான்  நமக்குப் பிடித்தச் சுற்றுலா துறையையே நாம் ஏன் தேர்வு செய்யக்கூடாது என முடிவு செய்தோம்.

நம் நாட்டைப் பொறுத்தவரை,  வெளிநாடு களுக்குச் சுற்றுலா செல்வது அரிது.  ஒருமுறைகூட வெளிநாடுகளுக்குச் செல்லாதவர்கள்தான் நம் நாட்டில் பலர். அதிகப்படியான செலவுக்குப் பயந்துதான் பலரும் அதை நினைத்துக்கூட பார்ப்ப தில்லை. ஆனால், செலவு செய்யத் தயாராக இருந்தாலும்கூட சுவாரஸ்யமான வெளிநாட்டுப் பயணம் பலருக்கும் அமைவ தில்லை. செலவு குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக டிராவல் ஏஜென்ட்கள் குழுவாக அழைத்துச் செல்கிற பேக்கேஜ்கள் மூலம்  சுற்றுலா செல்ல வேண்டியிருக் கிறது. இதனை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கியது தான் பிக் யுவர் ட்ரெயில்.

அடித்தளம்

முழுக்க முழுக்க ஆன்லைன் சேவையாகவும், வெளிநாட்டு சுற்றுலாவுக்கான மார்க்கெட் பிளேஸாகவும் பிக் யுவர் ட்ரெயில் இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்தோம். விமானச் சேவை நிறு வனங்கள், ஹோட்டல்கள், அரசின் சேவைகள், டாக்ஸி போன்ற அனைத்துத் தேவை களையும் ஆன்லைன் மூலம் ஒன்று சேர்த்தோம். விமான முன்பதிவு, ஹோட்டல் முன்பதிவு போன்றவற் றிற்கு நாட்டின் முன்னணி நிறுவனங்கள் பயன்படுத்தும் API-யைத்தான் நாங்களும் பயன்படுத்து கிறோம். இதன்மூலம் எங்கள் தரத்தை இன்னும் மேம்படுத்தி னோம்.   

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - சுற்றுலாவை இன்பமாக்கும் பிக் யுவர் ட்ரெயில்! (Pickyour Trail)

பயணி ஒருவர், சுற்றுலா செல்ல வேண்டிய இடம், நாள் போன்றவற்றைக் குறிப்பிட்டால் மட்டும் போதும். எங்களின் சிஸ்டமே அவரின் பயணத்திட்டம் முழுவதையும் திட்டமிட்டு விடும். தேவைப்படும் பட்சத்தில் அதனை மாற்றிக்கொள்ளவும் முடியும். நாங்கள் எங்கேயுமே விலை மலிவான சேவை அல்லது விலை குறைவான சேவை என விளம்பரம் செய்வதில்லை.

எங்கள் நோக்கமே ‘கொடுக்கும் பணத்திற்குத் தரமான’ சேவையை வழங்கவேண்டும் என்பதுதான். இந்தியக் குடும்பங்களைப் பொறுத்தவரை, வெளிநாட்டுச் சுற்றுலா என்பது மிகவும் உணர்வு பூர்வமான ஒன்று. குழந்தைகளின் விடுமுறை நாள்கள், குடும்ப விசேஷம், தேனிலவு என ஒவ்வொரு பயணமுமே அவர் களுக்கு உணர்வுபூர்வ மானது. அதனை எங்களை நம்பி ஒப்படைக்கும்போது, அதில் எங்கேயும் சொதப்பிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.

சவால்கள்

விமான டிக்கெட்டுகள், ஹோட் டல் அறைகள் போன்றவை நேரத்தைப் பொறுத்தும், டிமாண்டைப் பொறுத்தும் மாறு பவை. விமான டிக்கெட் விலை ஏறலாம்; ஹோட்டல் அறைகள் கிடைக்காமல்கூடப் போகலாம். இதுதான் எங்களுக்குச் சவாலாக இருந்தது. 14 நாள் பயணமாக லண்டனுக்குப் போக வெளி நாட்டினர் ஒருவர் திட்டமிட்டால், அவர் சராசரியாக 123 நாள்களுக்கு முன்பாகவே திட்டமிடு கிறார். ஆனால், இந்தியர் ஒருவர் சராசரியாக இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் திட்ட மிடுகிறார். இதனால் சேவைகளைப் போட்டி போட்டுக்கொண்டு வழங்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது. உலகின் முன்னணி சுற்றுலாத் தலங்களுக்கு ஏற்பாடு செய்யும்போது இதுமாதிரியான சவால்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அடுத்தது சர்வதேச சூழ்நிலைகள். உதாரணமாக, சமீபத்தில் நிகழ்ந்த பாலி எரிமலை வெடிப்புச் சம்பவத்தைக் குறிப்பிடலாம். இதனால் சுமார் 50 பேர் அங்கேயே சில நாள்கள் தங்கவேண்டி யிருந்தது. அப்போதெல்லாம் நாங்கள் இங்கிருந்தே அவர்களுக்கு உதவி செய்தோம். இதுபோன்ற பிரச்னைகள் அடுத்த சவால். 

வெற்றி

இதுவரைக்கும் சுமார் 6,000 பயணங்களை வெற்றிகரமாக கடந்து விட்டோம். மொத்தம் 14 நாடுகளில் இருந்து எங்கள் சேவைகளைப் பயன்படுத்திப் பயணிகள் சுற்றுலா சென்றுவருகின்றனர். உதாரணமாக, ஒருவர் பாலி தீவுக்குச் சுற்றுலா செல்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் இங்கிருந்து கிளம்புவதிலிருந்து, பாலி தீவில் இரவு எங்கே தங்குவது என்பது வரைக்கும் எல்லா முடிவுகளை யும் அவரே எடுக்கமுடியும். எந்த விமானச் சேவை, எந்த ஹோட்டல், எந்த டாக்ஸி, எந்த இடத்தில் எத்தனை நாள்கள், ஓய்வு எடுக்க வேண்டுமா அல்லது சுற்றிப் பார்க்க வேண்டுமா, அருகில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டுமா எனப் பயணத்தின் அத்தனை அம்சங்களையும் ஒரே ஒரு ஆப் மூலமாக நிர்வகிக்க முடியும். பயணிகளின் பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் ஆன்லைன் ரியல்டைம் சப்போர்ட் இருக்கிறது. எனவே, எங்கள் ஆப் மூலம் எப்போது வேண்டுமானாலும் எங்களைத் தொடர்புகொண்டு பேசமுடியும். அவசர உதவிகள், வழிகாட்டுதல்கள், முக்கியமான தகவல்கள் அனைத்தும் இதன்மூலமே நடக்கும். முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமே நடப்பதால், அனைத்துவிதமான சேவைகளும் தடங்கலின்றி கிடைக்கும்.

முதன்முதலில் உங்கள் பயணத்தைத் திட்டமிடும்போதே எல்லா அம்சங்களையும் முடிவு செய்துவிடலாம் என்பதால், முன்கூட்டியே எவ்வளவு பட்ஜெட் என்பதையும் திட்டமிட்டுக் கொள்ளலாம். விசா வாங்கவும் நாங்கள் உதவி செய்வோம். வெளிப்படைத்தன்மை, ரியல்டைம் சப்போர்ட் போன்றவையே எங்கள் வெற்றிக்கான  சூத்திரம். இந்தியாவில் வெளிநாட்டுப் பயணங்களுக்கான சந்தை மதிப்பு மட்டுமே 3 - 4 பில்லியன் டாலர்கள். இந்தச் சந்தையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதும், பெரும்பாலான மக்களின் பயணங்களில் நாங்கள் பங்கு வகிக்கும் அளவுக்கு முன்னேறவேண்டும் என்பதே எங்கள் இலக்கு” என்றார்கள் இருவரும்.

- ஞா.சுதாகர்

படங்கள் : ப.பிரியங்கா 

இந்தியா Vs பாங்காக்

உலகின் பல்வேறு நாடுகளுக்கு பிக் யுவர் ட்ரெயில் மூலமாகப் பயணம் செய்யமுடியும். ஆனால், இந்தியாவிற்குள் பயணம் செய்யமுடியாது. ஏன், என்ன  காரணம்?


“பாங்காக் மற்றும் சென்னை ஆகிய இரு நகரங்களையும் ஒப்பிட்டு ஒரு சின்னப் புள்ளிவிவரம் ஒன்றை சொல்கிறேன். பாங்காக்கில் இருக்கும் ஹோட்டல்களில் 95%  ஹோட்டல்கள் முழு இணைய வசதியோடு ஆன்லைனில் இருக்கின்றன. ஆனால், நம் சென்னையில் வெறும் 33% ஹோட்டல்கள்தான் ஆன்லைனில் இருக்கின்றன. மற்ற நகரங்களிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். எனவேதான் இங்கே இன்னும் எங்கள் சேவையைத் தொடங்க முடியவில்லை.

தெற்காசிய நாடுகள், ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் சுற்றுலாத்துறை அதிகளவில் வருமானம் கொடுக்கும் துறை. எனவே, அங்கு அதற்காக அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால், நம் நாட்டில் சுற்றுலாத் துறைக்கு அந்தளவு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. வருங்காலத்தில் இந்த நிலை மாறலாம்” என்கிறார் ஹரி கணபதி. மாறினால் எல்லோருக்கும் நன்மைதான்!