நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நிதி ஆலோசகர்கள் ஃபண்டுகளை விற்க தடை... யாருக்கு என்ன பாதிப்பு?

நிதி ஆலோசகர்கள் ஃபண்டுகளை விற்க தடை... யாருக்கு என்ன பாதிப்பு?
பிரீமியம் ஸ்டோரி
News
நிதி ஆலோசகர்கள் ஃபண்டுகளை விற்க தடை... யாருக்கு என்ன பாதிப்பு?

நிதி ஆலோசகர்கள் ஃபண்டுகளை விற்க தடை... யாருக்கு என்ன பாதிப்பு?

மியூச்சுவல் ஃபண்ட் துறையில் ஃபண்டுகளை விற்பனை செய்வதையும்  ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்க ஆலோசனை வழங்குவதையும் தனித்தனியே பிரிக்கும் முயற்சியில் கடந்த சில வருடங்களாகவே செபி ஈடுபட்டு வருகிறது. தற்போது, அது தொடர்பான மூன்றாவது வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, மியூச்சுவல்  ஃபண்ட் திட்டங்களை விநியோகிப்பவர்கள், எந்த ஃபண்டை வாங்கலாம் என்று ஆலோசனை வழங்கக்கூடாது; அதேபோல, ஆலோசனை வழங்குபவர் ஃபண்டுகளை விற்கக்கூடாது. இந்தப் புதிய நடைமுறையைக் கொண்டுவருவதன் மூலம் செபி என்ன செய்ய நினைக்கிறது, இதனால்  யாருக்கு என்ன பாதிப்பு என நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதியிடம் கேட்டோம்.

“செபியின் இந்த முடிவு நடைமுறைக்கு வந்தால், மியூச்சுவல் ஃபண்ட் துறையின் வளர்ச்சி குறையும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் வங்கிகள் மூலமாக மட்டுமே 40% மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் விற்கப்படுகின்றன. இதன் மூலம் பல நூறு கோடி வருமானம் ஈட்டுகின்றன. புதிய நடைமுறை அமலுக்கு வந்தால், வங்கி மாதிரியான நிறுவனங்கள் ஆலோசனை  தருவதை விட்டுவிட்டு, ஃபண்ட் விற்பனையில் மட்டுமே முழுக்கவனம் செலுத்தும். ஃபண்ட் ஆலோசனை வழங்க முடியாததால் வரும் வருமான இழப்பை ஈடுசெய்ய இன்ஷூரன்ஸை அதிக அளவில் விற்பனை செய்யும்.

நிதி ஆலோசகர்கள் ஃபண்டுகளை விற்க தடை... யாருக்கு என்ன பாதிப்பு?

நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, தனிநபர்களுக்கும் இந்த புதிய நடைமுறையால் சில பாதிப்புகள் ஏற்படும். அதாவது, நிதி ஆலோசகர்கள் ஃபண்ட் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும்.  இன்றைய தேதியில், நம் நாட்டில் கட்டணம் கட்டி ஆலோசனை பெற பலரும் தயாராக இல்லை. நம் நாட்டில் சுமார் 1.5 கோடி பேர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறார்கள். ஆனால், நாடு முழுக்க 500 நிதி ஆலோசகர்கள்தான் இருக்கிறார்கள். முன்பு நிதி ஆலோசகர்கள் (கார்ப்பரேட்) ரூ. 5 லட்சம் பணம் கட்டி உரிமம் வாங்கி ஃபண்டுகளை விற்பனை செய்யலாம் என்றது செபி. தற்போது  இந்த நிதி ஆலோசகர்கள் ஃபண்ட் திட்டங்களை விற்கக்கூடாது எனில், நிதி ஆலோசகர்கள் (கார்ப்பரேட்) தங்கள் உரிமத்தை ரத்து செய்ய வேண்டிய நிலைதான் வரும்.

ஏற்கெனவே ஜி.எஸ்.டி-யால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற நிதிச் சேவைகளில் ஜி.எஸ்.டி-யைச் சேவை நுகர்வோர் கட்டுகிறார். ஆனால், இதில் ஃபண்ட் விற்பனையாளர்கள்தான் ஜி.எஸ்.டி வரியைக் கட்ட வேண்டும். இதனால் 18% வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில், இந்த முடிவினால் மேலும் சிக்கல் உருவாகியுள்ளது.

 முதலீட்டாளர்களின் மியூச்சுவல் ஃபண்ட் செலவைக் குறைக்க செபி இந்த முடிவை எடுக்கிறது எனில், இதற்குப் பதிலாக வேறு சில வழிகளை முயற்சி செய்யலாம். செலவு விகிதத்தைக் (எக்ஸ்பென்ஸ் ரேஷியோ) குறைக்கலாம். நிதி ஆலோசகர்கள் விற்பனை செய்யும்  ஃபண்டு களுக்கு அவர்களே பொறுப்பேற்றுக் கொள் வதாகவும், கமிஷன் வாங்குவதில்லை என்றும் ஓர் உறுதிமொழி கடிதம் வாங்கலாம். இப்படி செய்வதன் மூலம் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணலாம்” என்றார்.

ஃபண்ட்ஸ் இந்தியா இயக்குநர் ஸ்ரீகாந்த் மீனாட்சியிடம் இது குறித்து பேசினோம். “செபியின் இந்த முடிவினால் மியூச்சுவல் ஃபண்ட் துறையின் வளர்ச்சி பாதிக்கும் எனப் பலர் சொல்கிறார்கள். இது இன்னும் ஆலோசனை நிலையில்தான் உள்ளது என்பதால்,  இது குறித்து தெளிவானதொரு முடிவுக்கு வர முடியவில்லை.

ஆனால், செபிக்கு ஒரு கேள்வி. நிதி ஆலோசனை வழங்கும் ஒருவரின் உறவினர் ஃபண்ட் விற்பனை செய்பவராக இருந்தால், அவரை அதைச் செய்யக் கூடாது என்று நிர்ணயம் செய்ய யாருக்கு உரிமை இருக்கிறது? தொழில்கள், உறவுகளுக்கு அப்பாற் பட்டது. இங்கு யார் வேண்டுமானாலும், எந்தத் தொழிலையும் செய்யலாம். அப்படி யிருக்க அதை எப்படித் தடுக்க முடியும்?

நிதி ஆலோசகர்கள் ஃபண்டுகளை விற்க தடை... யாருக்கு என்ன பாதிப்பு?

ஆலோசனை வழங்குவதையும், ஃபண்ட் விற்பனை செய்வதையும் ஒருவரே செய்வது சரியாக இருக்காது என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்று  தெரியவில்லை. இப்படிப் பல கேள்விகள் உள்ளன. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எதிர் காலத்திலாவது பதில் கிடைக்க வேண்டும். ஆனால், முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, இதைப் பற்றியெல்லாம் கவலைப் பட வேண்டிய அவசியமில்லை” என்றார்.

ஒருவர் நிதி ஆலோசனை வழங்குவதில் வல்லுநராகவும், திட்டங்கள் பற்றி நன்கு அறிந்தவராகவும் இருந்தால் மட்டுமே சரியான நிதி ஆலோசனை வழங்க முடியும். அந்த வகையில், ஆலோசனை சொல்வது, விநியோகிப்பது ஆகிய இரு வேலைகள் பற்றியும் நன்கு தெரிந்தவர்கள் மட்டுமே நிதி ஆலோசனை வழங்க வேண்டும்; மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை விநியோகம் செய்ய வேண்டும் என இந்த நடைமுறையை மாற்ற வேண்டும்.  அப்போதுதான் முதலீட்டாளர் களுக்குச் சரியான ஆலோசனை கிடைக்கும், இந்தத் துறை மேலும் வளர்ச்சி பெறும்.

- ஜெ.சரவணன்