நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பி.ஏ.சி.எல் மோசடி... பணத்தைத் திரும்பக் கொடுக்க செபி அதிரடி!

பி.ஏ.சி.எல் மோசடி... பணத்தைத் திரும்பக் கொடுக்க செபி அதிரடி!
பிரீமியம் ஸ்டோரி
News
பி.ஏ.சி.எல் மோசடி... பணத்தைத் திரும்பக் கொடுக்க செபி அதிரடி!

பி.ஏ.சி.எல் மோசடி... பணத்தைத் திரும்பக் கொடுக்க செபி அதிரடி!

மோசடி நிறுவனமான பி.ஏ.சி.எல் நிறுவனத்தில் பணத்தைப் போட்டுப் பரிதவித்தவர் களுக்கு இப்போது விடிவுகாலம் பிறக்கத் தொடங்கியிருக்கிறது. அந்த நிறுவனத்தின் சொத்துகளில் ஒருபகுதியை விற்றதன்மூலம் கிடைத்த தொகையைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க, செபி முடிவெடுத்து அறிவித்துள்ளது.

ஈமு கோழி, தேக்கு மர மோசடி போல, குறைந்த தொகைக்கு வீட்டு மனை வழங்குவதாகச் சொல்லி, மக்களிடம் நிதி திரட்டிய நிறுவனம்தான் பி.ஏ.சி.எல். ‘குறைந்த விலையில் மனை’ என்கிற கவர்ச்சிகரமான உறுதிமொழியோடு இந்தியா முழுவதும் தனது கிளைகளைப் பரப்பி, 15 ஆண்டுகளாக சுமார் 5.8 கோடி பேரிடம் ரூ.49,100 கோடி பணத்தை வசூலித்தது.

பி.ஏ.சி.எல் மோசடி... பணத்தைத் திரும்பக் கொடுக்க செபி அதிரடி!

பி.ஏ.சி.எல் நிறுவனம் சொன்னதை நம்பிப் பணம் போட்டவர்களில் பலருக்கு மனை கிடைக்கவில்லை. ஆனால், இவர்களின் முதலீட்டுப் பணத்தை வைத்து நிறுவனத்தின் உரிமையாளர் பாங்கோ, சுமார் 1.83 லட்சம் ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்தார். 

இந்த நிறுவனம் மோசடி செய்துவருவதை அறிந்த அரசு அமைப்புகள் தொடர்ந்து எச்சரித்த போதும், வேறுவேறு பெயரில் நிறுவனங்களைத் தொடங்கி, மக்களை ஏமாற்றி வந்தது. இதனால் இந்த நிறுவனத்தின் நடவடிக்கையை முடக்கியது செபி. (இந்த நிறுவனத்தின் மோசடியை மக்களுக்கு எடுத்துச் சொல்லி எச்சரிக்கை செய்ததில் நாணயம் விகடனுக்கு முக்கியப் பங்கு உண்டு.) 

சொந்த வீடு கனவோடு, தங்களது சேமிப்பையெல்லாம் மாதத் தவணையாகக் கட்டிய சாதாரண மக்கள் தங்கள் பணத்தை இழந்தனர். கமிஷனுக்கு ஆசைப்பட்டு இந்த நிறுவனத்திற்காகத் தெரிந்தவர்களிடமெல்லாம் பணம் வசூல் செய்து தந்த ஏஜென்டுகள் வெளியில் தலைகாட்ட முடியாமல் தவித்தனர்.

ஆனால், செபியானது, பி.ஏ.சி.எல் நிறுவனத்தை மூடியதோடு நின்று விடாமல், 2016, பிப்ரவரி 6-ம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களின் குறைகளைக் கேட்டதுடன், பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் சொத்துகளை அடையாளம் கண்டு, மதிப்பீடு செய்து, விற்பனை செய்யும் வேலையில் தீவிரமாகக் களமிறங்கியது.

இதன் அடுத்தகட்டமாக, பணத்தை இழந்தவர்களுக்குச் சிறிது ஆறுதல் தரும்விதமாக செபி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி அன்று செபி வெளியிட்ட அந்த அறிவிப்பின்படி, பி.ஏ.சி.எல் நிறுவனத்தில் ரூ.2,500 வரை பணம் கட்டியவர்கள் மட்டும் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்.

இப்படி விண்ணப்பிப்பவர்களுக்கு புரோரேட்டா அடிப்படையில் பணம் திரும்ப வழங்கப்படும். 

இந்தத் தொகையைப் பெறுவதற்கு முதலீட்டாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்...

1.  பி.ஏ.சி.எல் சான்றிதழின்படி முதலீட்டாளரின் பெயர்
2. முதலீட்டாளரின் மொபைல் எண்
3. பி.ஏ.சி.எல் முதலீட்டுத் திட்டத்தில் முதலீட்டாளரின் பதிவு எண்
4. பி.ஏ.சி.எல் சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்
5. முதலீட்டாளரின் ஆதார் மற்றும் பான் எண்
6. முதலீட்டாளரின் வங்கிக் கணக்கு எண் மற்றும்  ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு
6. முதலீட்டாளருக்கு பி.ஏ.சி.எல் சார்பில் மனை ஒதுக்கப்பட்டுள்ளதா என்ற விவரம்
7. பான் எண்/ஆதார் எண் மற்றும் சமீபத்திய மூன்று பணப் பரிவர்த்தனைகளைக் காட்டும் வங்கிக் கணக்கின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் (நகலில் முதலீட்டாளரின் பெயர், முகவரி, வங்கிக் கணக்கு எண் மற்றும் ஐ.எஃப்.எஸ்.சி குறியீட்டைத் தெளிவாகக் காட்ட வேண்டும். மேலும், அந்த நகலை விண்ணப்பதாரர்கள் உறுதி செய்ய வேண்டும்.)ஆகியவற்றுடன், விண்ணப்பத்தைக் குறுஞ்செய்தியாக 562632 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். அல்லது http://sebicommitteepaclrefund.com/ இணையதளத்தில் விண்ணப்பத்தை அப்லோடு செய்யலாம். விண்ணப்பத்தை எப்படி நிரப்புவது என்பதற்கான செயல்முறையை விளக்கும் டெமோ வீடியோவையும் மேற்சொன்ன லிங்கில் பார்க்கலாம்.

முதலீட்டாளர்கள், தங்களது விண்ணப்பத்தின் மீதான நடவடிக்கை குறித்துத் தெரிந்துகொள்ள 044-3957 1985 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். தொகையைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை அனுப்ப கடைசித் தேதி பிப்ரவரி 28, 2018 ஆகும்.

பி.ஏ.சி.எல் நிறுவனத்தில் பணம் போட்டவர்கள் இந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளலாமே.

-தெ.சு.கவுதமன்