
செல்லமுத்து குப்புசாமி
ஷேர் மார்க்கெட்டில் பட்டியலாகும் ஒரு நிறுவனத்தின் பங்குகள் என்ன விலைக்கு விற்பனையாகின்றன என்பது பல காரணிகளால் தீர்மானமாகிறது. அதில், எளிதில் பணமாக்கக் கூடிய அம்சம் (liquidity) ஒரு முக்கியமான காரணி என்பதை முன்பே பார்த்தோம். அதைத் தாண்டியும் சில விஷயங்களை இப்போது கவனிக்கலாம்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், மார்க்கெட் நிலவரத்துக்கேற்ப மாறும் நம் மனநிலை. ஒரு நபர் தன்னை வேல்யூ இன்வெஸ்டர் எனக் கருதிக்கொள்ளும் மனநிலையை மார்க்கெட் நிலவரம் புரட்டிப் போட்டுவிடும். எப்படி இது நடக்கிறது? பொதுவாக பங்குச் சந்தையைப் பற்றிக் குறிப்பிடும்போது, அதனை அதிக மதிப்பு (Overvalued) அல்லது குறைந்த மதிப்பு (Undervalued) என்று குறிப்பிடுவார்கள். அதிக மதிப்பு என்றால், ஒரு பொருள் அதன் உள்ளார்ந்த மதிப்பைக் காட்டிலும் அதிக விலைக்கு விற்கிறது என்று பொருள். எளிமையாகச் சொன்னால், வழக்கமாக ரூ.20-க்கு விற்கும் ஒரு முழம் பூவானது, பண்டிகை நாளில் ரூ.50-க்கு விற்பது போல. இதற்கு நேரெதிர் குறைந்த மதிப்பு என்பது. ஒரு பொருளின் உண்மையான மதிப்பைவிட குறைந்த விலைக்கு நம்மால் வாங்க முடிகிற நிலை. அவசர பணக் கஷ்டம் காரணமாக ஒருவர், ரூ.50,000 மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தை வெறும் ரூ.30,000-க்கு விற்பது போல.
இது எல்லாப் பொருள்களுக்கும் பொருந்தும். ஷேர் மார்க்கெட்டில் விற்கும் பங்குகளை மட்டும் எடுத்துக்கொண்டால், அவை ஒருபோதும் அவற்றின் உண்மையான மதிப்பில் விற்பனையாவதில்லை. ஒன்று, அதிக மதிப்பில் விற்பனையாகும் அல்லது குறைந்த மதிப்பில் விற்பனையாகும். கடிகார பெண்டுலம்போல, அங்கும் இங்குமாக ஊசலாடியபடியே இருக்கும். ‘ஷேர் மார்க்கெட் நிச்சயமில்லாத ஒன்று; அது ஒரு சூதாட்டம் மாதிரி. பேங்க்ல போட்டு வெச்சிருவோம்’ என்றெல்லாம் பலரும் நம்மைப் பயமுறுத்துவதற்கு இதுவும் ஒரு காரணம்.

பங்குச் சந்தை பெண்டுலம்போல, அங்குமிங்கும் அலைவுறும் இந்தத் தன்மையானது உண்மையில் நாம் பயந்து நடுங்கவேண்டிய விஷயமே கிடையாது. நமக்குச் சாதகமாக ஷேர் மார்க்கெட்டை எப்போதெல்லாம் பயன்படுத்த முடியுமோ, அப்போது பயன்படுத்தத் தயாராக இருங்கள் என்ற அறிவிப்பாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் அடிக்கடி துணிமணி வாங்குகிற ஆளாக இருந்தால், எப்போதெல்லாம் ஜவுளிக்கடை தள்ளுபடி அறிவிப்புகள் வருகிறதோ, அப்போதெல்லாம் குதூகலமாவீர்கள். நகை வாங்குகிற ஆளாக இருந்தால், ஒரு மாதம் மட்டும் செய்கூலி சேதாரமில்லை எனச் சொல்லும் ஜுவல்லரி ஷாப்பை முற்றுகையிடுவோம். கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும், எல்லா பொருள்களையும் வாங்குவோருக்கும் இது பொருந்தும்.
ஆனால், ஷேர் மார்க்கெட்டில் மட்டும் இதற்கு நேரெதிரான மனநிலையை நாம் கைக்கொள்கிறோம். நகை வாங்குவதில் ஆர்வமுள்ள, நகை வாங்கிச் சேமிக்க ஆசைப்படுகிற சில பெண்களைக் கேட்டுப் பாருங்கள். அவர்களது நோக்கம், வாங்குகிற நகையை விற்பதாக இருக்காது. எப்படியும் 20 - 30 வருடங்கள் வைத்திருப்பார்கள். ஆனாலும், விலை ஏறினால் பதறுவார்கள். விலை குறைந்தால் மகிழ்வார்கள். ஒரு நல்ல பங்கு முதலீட்டாளரின் நோக்கமும் இப்படித்தானே இருக்க வேண்டும். நல்ல நிறுவனங்களின் பங்குகளைக் குறைந்த விலைக்கு வாங்கி நீண்ட காலம் வைத்திருப்பதுதானே சரி. ஆனால், நாம் நடைமுறையில் காண்பது இதற்கு நேரெதிர். விலை உயர்ந்தால் எல்லோருக்கும் குஷி. மார்க்கெட் தொய்வடைந்தாலோ அத்தனை பேருக்கும் கவலை.
ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆணும், பெண்ணும் இந்தப் பூமியில் வாழ்ந்து வந்தாலும் ஒவ்வொரு தம்பதியினரும் ‘இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்’, ‘இந்த பொம்பளைங்களே இப்படித்தான்’ எனப் புதிய அனுபவம் பெறுவது போல, எத்தனையோ வருடங்கள் பங்குச் சந்தை பல ஏற்ற இறக்கங்களைக் கண்டிருந்தாலும் ஒவ்வொரு ஏற்ற இறக்கத்திலும் ஒரே மாதிரியான மன வெளிப்பாடுகள், கூக்குரல்கள், குமுறல்கள், கும்மாளங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
‘மார்க்கெட் சரியும்போது நான் கொண்டாட்ட மனநிலைக்குச் சென்றுவிடுவேன்’ என்று சொல்வேன் நான். நான் இப்படிச் சொல்வதைக் கேட்டு என் நண்பர் என்னைக் கடிந்துகொள்வார். ‘‘நீர் ஒரு சாடிஸ்ட். மற்றவர்கள் லாபத்தை இழக்கும்போது உமக்கு மட்டும் என்ன சந்தோஷம்?’’ என்பார். மற்றவர்கள் நஷ்டமடைகிறார்கள் அல்லது லாபம் குறைகிறது என்பதில், அவர்களுக்கு மகிழ்வதில்லை.
சந்தை ஒட்டுமொத்தமாக 20% சரிவடையும் கால இடைவெளியில் எனது ஒரு இலட்ச ரூபாய் முதலீடு (சும்மா ஒரு உதாரணத்திற்கு) எண்பதாயிரம் ரூபாய் ஆகியிருக்கும். தனிப்பட்ட முதலீட்டாளராக எனக்கும் நஷ்டமே. அதாவது, மார்க்கெட் சரிந்திருக்கும் அந்தக் குறுகிய காலத்தில் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டால்தான் நஷ்டம். மற்றபடி நஷ்டம் என்பது காகித அளவில்தான்.
போன வாரம் ரூ.100-க்கு பங்கு வியாபாரமானது. அப்போது நாம் விற்கவில்லை. ஏனென்றால், அந்த ஷேரின் மதிப்பு ரூ.100-க்கும் மேல் என வலுவாக நம்பியிருப்போம். அல்லது இன்னும் ஒரு வருடம் வைத்திருந்தால், ரூ.150-ஆக உயரும் எனக் கணித்திருப்போம். அதன் அடிப்படையிலேயே ரூ.100-க்கு விற்காமல் வைத்திருப்போம். அப்படியிருக்கும்பட்சத்தில் இந்த வாரம் அதன் விலை ரூ.80-ஆகக் குறைவதால் என்ன பிரச்னை? நூறு ரூபாயே கம்மி விலை என நினைத்த நாம் எண்பது ரூபாயை நினைத்து மகிழ்ந்து இன்னும் கூடுதலாக வாங்கிச் சேகரிக்க வேண்டாமா?
நமது நோக்கம் குறைவான விலைக்கு வாங்கிச் சேகரிப்பதுதான் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டால், மார்க்கெட் சரிவுகளைக் கொண்டாடக் கற்பது மட்டுமல்லாமல், அந்தச் சரிவுகளிலிருந்து லாபகரமான முதலீடுகளை அள்ளவும் பழகலாம்.
சிலர் ஒரு பங்கை ரூ.50-க்கு வாங்கியிருப்பார்கள். அவர்களைப் பொருத்தமட்டில் ரூ.100-ஆக இருந்தாலும் சரி, ரூ.80-ஆக இருந்தாலும் சரி, இரண்டும் லாபமே. ஷேர் விலை ரூ.100-லிருந்து ரூ.80-ஆகச் சரிந்தபோது பெருமளவு கவலைப்பட மாட்டார்கள். ஆனால், ரூ.100-க்கு வாங்கியவர்கள் ரூ.80-ஆகச் சரியும்போது நிச்சயம் வேதனைப்படுவார்கள்.
ஆனால், நிதானமாக யோசித்துப் பார்த்தால், இழப்பு என்பது இருவருக்கும் ஒரே அளவுதான். அவர்களது முதலீட்டின் சந்தை மதிப்பு 20% குறைந்திருக்கும். இதனை விளங்கிக் கொள்ள தனியாக சைக்காலஜி படிக்க வேண்டும்.
பங்குச் சந்தை உயரும்போது, அல்லது உயர்ந்துகொண்டே செல்லும்போது, உயர்ந்த நிலையில் அப்படியே சில காலம் தாக்குப் பிடித்து நிற்கும்போது எல்லோருமே நீண்ட கால முதலீட்டாளர்கள். அதாவது, நாங்கள் எல்லாம் நீண்ட கால முதலீட்டாளர்கள் என நம்மை நாமே அழைத்துக்கொள்வோம். ஆனால், சந்தையின் சரிவுகள் நீண்ட கால முதலீட்டாளர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிவிடும்.
தங்க வேட்டை தேடிச் சென்றவர்கள், தாம் வெட்டியெடுத்த உலோகம் தங்கம்தானா எனக் கண்டறிய அமிலச் சோதனை மேற்கொள்வார்கள். அந்த அமிலத்தில் மற்ற உலோகங்கள் கரைந்துபோகும். தங்கம் மட்டும் கரையாமலிருக்கும்.
ஷேர் மார்க்கெட் சரிவுகளில் தம்மை முதலீட்டாளர் என்றும், நீண்ட கால முதலீட்டாளர் என்றும் கருதிக்கொண்டவர்கள் காணாமல் போவார்கள். உண்மையான முதலீட்டாளர்கள் நிலைப்பார்கள். அந்த வகையில் ஷேர் மார்க்கெட் சரிவுகள் அவசியமான அமிலச் சோதனை; தங்கங்களே நம்மைத் தகரத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டும்!
(லாபம் சம்பாதிப்போம்)

ஜெர்மனியின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்!
பாஸ்போர்ட் வழங்குவ தன் நிலை குறித்து ஹென்லே அண்டு பார்ட் னர்ஸ் நிறுவனம் பட்டிய லிட்டுள்ளது. உலக அளவில் ஜெர்மனி நாடு வழங்கும் பாஸ்போர்ட் மிக சக்தி வாய்ந்ததாக அந்த நிறுவனம் சொல்லியிருக் கிறது.
உலக அளவில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடத்தில் ஜெர்மனியும், இரண்டாம் இடத்தில் சிங்கப்பூரும், மூன்றாம் இடத்தில் பிரான்ஸ், இத்தாலி, ஜப் பான், நார்வே, டென்மார்க், ஸ்வீடன், இங்கிலாந்து, ஃபின்லாந்து நாடுகளும் இருக்கின்றன. 177 நாடுகள் இடம்பெறும் இந்தப் பட்டியலில் சீனா 75-வது இடத்திலும், இந்தியா 86-வது இடத்தி லும் உள்ளன.

எஸ்.எம்.இ ஐ.பி.ஓ: ஜீரோவில் தமிழகம்!
கடந்த 2017-ம் ஆண்டில் பல பெரிய நிறுவனங்கள் ஐ.பி.ஓ வெளியிட்டது தெரிந்த விஷயம்தான். ஆனால், இதுவரையில்லாத அளவுக்குக் கிட்டத்தட்ட 132 எஸ்.எம்.இ நிறுவனங் கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.1,785 கோடியை மூலதனமாகத் திரட்டியுள்ளன. மகாராஷ்ட்ராவிலிருந்து 39,மத்தியப் பிரதேசத்திலிருந்து 11, டெல்லியிலிருந்து 8, ராஜஸ்தானிலிருந்து 6, தெலங்கானாவிலிருந்து 4, மேற்கு வங்காளத்திலிருந்து 3 எஸ்.எம்.இ நிறுவனங்கள் பங்கு வெளியிட்டு உள்ளன. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எஸ்.எம்.இ நிறுவனம்கூட கடந்த ஆண்டு பங்கு வெளியீட்டில் இறங்கவில்லை.