நிம்மதி தரும் நிதித் திட்டம் - 25 - குவைத் டு இந்தியா... சரியான முதலீட்டுத் திட்டங்கள்!

ஓவியம்: பாரதிராஜா
“என் பெயர் இப்ராஹிம். வயது 35. நான் ஐ.டி துறையில் பணியாற்றி வருகிறேன். என் சொந்த ஊர் சேலம். இரண்டு ஆண்டுகளாகக் குவைத்தில் பணியாற்றி வருவதால், குடும்பத்துடன் அங்கு வசிக்கிறேன். எனக்கு ஆறு வயது மற்றும் இரண்டு வயதில் இரண்டு மகள்கள். என் அம்மா சொந்த ஊரில் வசித்து வருகிறார்.

என் மாதச் சம்பளம் ரூ.2,95,000. மொத்தச் செலவுகள் ரூ.1,09,000. மாதம் ஒன்றுக்கு எனக்கு ரூ.1,86,000 மீதமாகிறது. ரூ.30 லட்சம் மதிப்பில் சொந்த ஊரில் வீடு ஒன்றை வாங்கியுள்ளேன். நண்பர்களிடமும் உறவினர் களிடமும் அதற்காக ரூ.12 லட்சம் வாங்கி யிருக்கிறேன். இந்தக் கடனை வரும் மே மாதத்துக்குள் அடைத்து முடித்துவிடுவேன்.
நான் இதுவரை எந்த முதலீட்டையும் தொடங்கவில்லை. நான் குவைத்தில் 2020-ம் ஆண்டு வரை பணியாற்ற உள்ளேன். அதன் பிறகு இந்தியாவுக்கு வந்தாலும், என் சம்பளம் ரூ.1.5 லட்சம் இருக்கக்கூடும்.
நான் இஸ்லாமியக் கோட்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடிப்பதால், வங்கி மற்றும் நிதித்துறை, இன்ஷூரன்ஸ், பொழுது போக்குத்துறை, புகையிலை, மதுபான நிறுவனங்கள், கடன் சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்ய விரும்பவில்லை. 100% ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள், தங்கம், ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளில் முதலீடு செய்ய விரும்புகிறேன். எனக்கேற்ற முதலீட்டுத் திட்டங்களைப் பரிந்துரை செய்யவும்” என்றவர் தன் இலக்குகளையும், தேவைபடும் தொகைகளையும் குறிப்பிட்டு மெயில் அனுப்பி வைத்தார்.

இலக்குகள்: முதல் மகளுடைய மேற்படிப்புக்கு 10 ஆண்டுகளில் ரூ.20; இரண்டாவது மகளுடைய மேற்படிப்புக்கு 12 ஆண்டுகளில் ரூ.20 லட்சம்; முதல் மகளுடைய திருமணத்துக்கு 14 ஆண்டுகளில் ரூ.25 லட்சம்; இரண்டாவது மகளுடைய மேற் படிப்புக்கு 18 ஆண்டுகளில் ரூ.25 லட்சம்; என் ஓய்வுக்காலத்துக்கு மாதம் ரூ.1 லட்சம் (அனைத்தும் இன்றைய மதிப்பில்)
இனி இவருக்கான நிதித்திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மை அஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.
“நீங்கள் குவைத்துக்குச் சென்று இரண்டு வருடங்களே ஆகின்றன. உங்கள் கணக்குப்படி மாதம் 1.86 லட்சம் மீதமாகும் தொகையே சுமாராக இதுவரை ரூ.28 லட்சம் இருக்க வேண்டும். ஆனால், இதுவரை எந்தச் சேமிப்பையும் நீங்கள் செய்யாமல் இருப்பது ஆச்சர்யமளிப்பதாக உள்ளது. சேமிக்கும் பழக்கத்தை உடனே ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்களின் எல்லா இலக்குகளுக்கான முதலீட்டையும் வெளிநாட்டில் இருக்கும்போதே முடித்துவிடுவதே நல்லது. ஆனால், நீங்கள் 2020-ல் இந்தியாவுக்கு வந்துவிட விரும்புவதால், எல்லா இலக்குகளையும் பூர்த்தி செய்ய இயலாது. எனவே, வெளிநாட்டில் இருக்கும்போது எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், இந்தியா வந்தபிறகு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என இரண்டுவிதமாகத் திட்டமிட்டுக் கொடுத்துள்ளேன்.
உங்கள் முதல் குழந்தையின் மேற் படிப்புக்கு ரூ.39.3 லட்சம் தேவையாக இருக்கும். மாதம் ரூ.17,100 முதலீடு செய்தால், மூன்று ஆண்டுகளில் ரூ.7.3 லட்சம் கிடைக்கும். இதை மறுமுதலீடு செய்வதன்மூலம் ரூ.16.3 லட்சம் கிடைக்கும். மீதம் தேவைப்படும் ரூ.23 லட்சத்துக்கு இந்தியா வந்தபிறகு மாதம் ரூ.17,600 முதலீடு செய்ய வேண்டும்.
இரண்டாவது குழந்தையின் மேற் படிப்புக்கு ரூ.45 லட்சம் தேவை. மாதம் ரூ.15,700 முதலீடு செய்தால், மூன்று ஆண்டு களில் ரூ.6.72 லட்சம் கிடைக்கும். இதை மறுமுதலீடு செய்து ரூ.18.6 லட்சம் கிடைக்கும். மீதம் ரூ.26.4 லட்சத்துக்கு இந்தியாவுக்கு வந்தபிறகு மாதம் ரூ.13,700 முதலீடு செய்ய வேண்டும்.
அடுத்து, முதல் குழந்தையின் திருமணத்துக்கு ரூ.64.5 லட்சம் தேவை. மாதம் ரூ.17,800 முதலீடு செய்தால் மூன்று ஆண்டுகளில் ரூ.7.7 லட்சம் கிடைக்கும். இதை மறுமுதலீடு செய்தால் ரூ.26.8 லட்சம் கிடைக்கும். மீதம் தேவைப்படும் ரூ.37.6 லட்சத்துக்கு இந்தியாவுக்கு வந்தபிறகு மாதம் ரூ.13,800 முதலீடு செய்ய வேண்டும்.

அடுத்து, இரண்டாவது குழந்தையின் திருமணத்துக்கு ரூ.84.5 லட்சம் தேவை. மாதம் ரூ.14,800 முதலீடு செய்துவந்தால் மூன்றாண்டுகளில் ரூ.6.4 லட்சம் கிடைக்கும். இதை மறுமுதலீடு செய்தால், ரூ.35 லட்சம் கிடைக்கும். மீதம் தேவைப்படும் ரூ.49.3 லட்சத்துக்கு இந்தியா வந்தபிறகு மாதம் ரூ.9,900 முதலீடு செய்ய வேண்டும்.
ஓய்வுக்காலத்துக்கு இன்றைய மதிப்பில் ரூ.1 லட்சம் தேவைப்படாது. மாதம் ரூ.40,000 போதுமானதாக இருக்கும். அப்படியானால் உங்கள் ஓய்வுக்காலத்தின்போது மாதம் ரூ.1.9 லட்சம் தேவைப் படும். இதற்கு கார்ப்பஸ் தொகையாக ரூ.5.36 கோடி சேர்க்க வேண்டும். மாதம் ரூ.1.20 லட்சம் முதலீடு செய்துவந்தால், மூன்றாண்டுகளில் ரூ.51.7 லட்சம் கிடைக்கும். இதை மறுமுதலீடு செய்தால், ரூ.4.8 கோடி கிடைக்கும். மீதம் ரூ.50 லட்சத்துக்கு இந்தியா வந்தபிறகு நீங்கள் பணியாற்றுவதன் மூலமாகக் கிடைக்கும் பி.எஃப் தொகையைக்கொண்டு ஈடுசெய்யலாம்.

பரிந்துரை: எஸ்.பி.ஐ புளூசிப் 25,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ போகஸ்டு ரூ.25,000, கோட்டக் செலக்ட் ஃபோகஸ் ரூ.22,000, ஃப்ராங்க்ளின் ஹை குரோத் கம்பெனீஸ் ரூ.22,000, எஸ்.பி.ஐ மல்டிகேப் ரூ.22,000, ரிலையன்ஸ் ஸ்மால்கேப் அண்டு மிட்கேப் ரூ.25,000, மோதிலால் ஆஸ்வால் மோஸ்ட் ஃபோகஸ்டு 30 ரூ.25,000, ஹெச்.டி.எஃப்.சி கோல்டு ஃபண்ட் ரூ.18,500.”
குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.
Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878
- கா.முத்துசூரியா
உங்களுக்கும் நிதி ஆலோசனை வேண்டுமா?

inplan@vikatan.com என்கிற மெயில் முகவரிக்கு உங்கள் குடும்ப நிதி நிலவரங்களை குறிப்பிட்டு குடும்ப புகைப்படங்களுடன் அனுப்புங்கள்.
உங்கள் செல்போன் நம்பரை தவறாமல் குறிப்பிடவும்.
தொடர்புக்கு: 9940415222