
நாணயம் புக் செல்ஃப்
புத்தகத்தின் பெயர்: ஹு கேன் யு ட்ரஸ்ட்? (Who Can You Trust?)
ஆசிரியர்: ரேச்சல் போட்ஸ்மென் (Rachel Botsman)
பதிப்பகம்: PublicAffairs

வேலை காரணமாகச் சொந்த ஊரிலிருந்து விலகிப்போய் உலகத்தில் எங்கோ ஒருமூலையில் கிடக்கும் நம்மையெல்லாம் இடையே ஒன்றிணைப்பது தொழில்நுட்பம் தான். அதே தொழில்நுட்பம்தான், நம் எல்லோருக்கும் இடைவெளியை உருவாக்கிப் பிரித்தும் வைத்திருக்கிறது. இந்த நிலையில், எதை நம்புவது, எதை நம்பாமல் விடுவது என்பதைச் சொல்லும் அற்புதமான புத்தகம்தான் ரேச்சல் போட்ஸ்மென் என்னும் பெண்மணி எழுதிய “ஹு கேன் யு ட்ரஸ்ட்?” (யாரைத்தான் நம்புவது?). இந்தப் புத்தகத்தைத் தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.

2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியைக்குத் திருமணம் நடந்தது. அன்றுதான் லெஹ்மென் பிரதர்ஸ் நிறுவனம் திவாலுக்கான படிவத்தை ஃபைல் செய்தது. அமெரிக்கச் சந்தைகளும் உலகச் சந்தைகளும் தாறுமாறாகச் சரிந்ததும் அதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட அமெரிக்க விசாரணை கமிஷன் அளித்த 525 பக்க அறிக்கையில் சம்பந்தப்பட்ட அனைத்து ஒழுங்குமுறை ஆணையங்களும் எப்படி இதைக் கோட்டைவிட்டன என்பது பற்றி விவரிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிக்கை சொன்ன விவரப்படி பார்த்தால், பிரச்னை உருவானது நச்சுப்பொருள் களுக்கு ஒப்பான சிக்கலான அமைப்புடைய நிதி/பங்குப் பத்திரங்களால் அல்ல. கட்டுக்கடங்காத தனிமனித ஆசையும், அதையொட்டி கண்மூடித் தனமாக ரிஸ்க் எடுத்ததும், திறமையின்மை, மூடத்தனம் போன்றவையுமே இந்த விதமான சரிவுக்குக் காரணம் என்று தெளிவாகச் சொன்னது அந்த அறிக்கை.
இதுபோன்ற நிகழ்வுகள் வரும்போது மக்களுக்கு ஏற்படும் நம்பிக்கைக் குறைவு (lack of trust) என்பது சிஸ்டத்தின்மீது வரும் அவநம்பிக்கை யாகிவிடும். ஒரு அமைப்பே (system) தோல்வி யடைந்தால், பின்னர் நாம் யாரைத்தான் நம்புவது, அல்லது எதை நம்புவது?
சரி, இப்படி அரசாங்கம் கண்கொத்திப் பாம்பாய் கவனித்துக்கொண்டிருக்கிறது என்று நாம் நினைக்கும் ஃபைனான்ஷியல் சிஸ்டமே அவநம்பிக்கைக்குரியது என்றாகிவிட்டால், இனி வேறென்ன சிஸ்டமெல்லாம் எந்த அளவுக்குப் பிரச்னையைத் தருமோ என்றெல்லாம் கவலை வருகிறது இல்லையா!
‘‘பயம், அவநம்பிக்கை, ஏமாற்றம் போன்றவை மிகப் பயங்கரமானவை. வேகமாகப் பரவக்கூடிய வைரஸ் போன்றவை. அதனாலேயே மிகவும் உன்னிப்பாகக் கவனித்துச் சரிசெய்யப்பட வேண்டியவை’’ என்கிறார் ஆசிரியை.
நம்பிக்கை என்றால் என்ன? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது சுலபமானதல்ல. ஓர் உதாரணம்மூலம் இதை விளக்கலாம். 2014, செப்டம்பர் 19-ம் நாள் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் அலிபாபாவின் பங்குகள் பட்டியலிடப்பட்டன. அன்றைய நாளின் இறுதியில் 231 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் அந்த நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் இருந்தது. ஒரே நாளில் அலிபாவின் நிறுவனர் ஜாக் மா பெருங்கோடீஸ்வரராக உருவெடுத்தார். ஒரு ராக் ஸ்டாரைப் போன்ற வரவேற்பு அவருக்குப் பங்குச் சந்தை வளாகத்தில் கிடைத்தது. அவர் அப்போது சொன்னதைப் பாருங்கள். ‘‘இன்றைக்கு நாங்கள் பெற்றது பணத்தை அல்ல, நம்பிக்கையை; மக்கள் எங்கள்மீது வைத்துள்ள நம்பிக்கையை’’ என்று சொன்னார்.
அன்றைய டிரேடிங் தினத்தின் மணியை ஒலிக்கச் செய்வது ஐ.பி.ஓ வெளியிடும் நிறுவனத்தின் தலைவராக இருப்பதே வழக்கம். இருந்தபோதிலும், அவரோ அலிபாபா நிறுவனத்தின் எட்டு வாடிக்கையாளர்களையே (ஐந்து பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள்) மணியை ஒலிக்கச் செய்யும் பெருமையை வழங்கி கெளரவித்தார். முதலில் வாடிக்கையாளர், இரண்டாவது பணியாளர், மூன்றாவது பங்கு வைத்திருப்பவர் என்ற அவருடைய வெற்றிக்கான மந்திரத்தை அவர் வெளிப்படையாக அன்று செயல்படுத்திக் காட்டினார். ஜாக் மா யாருக்கு மரியாதையும், முன்னுரிமையும் தருகிறார் என்பதைப் பார்க்கும் மக்களுக்கு அவர்மீது நம்பிக்கை வருவது இயற்கைதானே!
நம்பிக்கை என்றால் என்ன, நம்பிக்கை என்ற சொல்லைக் கேட்டவுடன் என்ன அர்த்தம் உங்களுக்கு மனதில் தோன்றுகிறது என்ற கேள்வியைப் படித்தவர், பாமரர், தொழில்முனைவோர், அரசியல்வாதி, நிறுவனங்களில் பெரும்பதவியில் இருப்பவர்கள், அறிவியல் ஆராய்ச்சி யாளர்கள், வங்கி அதிகாரிகள், டிசைனர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் போன்ற பல்வேறு தரப்பினரிடமும் கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் வெவ்வேறாக இருந்தது. பெரும்பாலானோர், ‘கொஞ்சம் கஷ்டமான கேள்வி’ என்றே சொன்னார்கள். உண்மைதான். நம்பிக்கை என்பது ஒவ்வொருவருக்கும் ஓர் அர்த்தத்தைத் தருவது.
இந்தக் கேள்விக்கு ஒரு நியாயமான பதிலை ஒரு இன்ஷூரன்ஸ் புரோக்கர் தந்தார். ‘‘என்னுடைய போனின் ஹிஸ்டரியை அழிக்காமல் என் மனைவியிடம் தரமுடிவது நம்பிக்கைக்குச் சிறந்த உதாரணம்’’ என்றாராம். சிலருக்குச் சிலரை (கணவன்/மனைவி/மருத்துவர்/நண்பர் போன்ற) முழுமையாக நம்பமுடிவது என்பதே நம்பிக்கை. நமக்குப் பழக்கமான ஒருவரிடம் நாம் வளர்த்துக்கொள்வதே நம்பிக்கை என்கின்றனர். அதாவது, நாள்பட ஒருவரிடம் பழகி அவர் எவ்வாறு எந்த அளவில் நம்பகத்தன்மையுடன் செயல்படுவார் என்பதைப் புரிந்து கொண்டு வளர்வதே நம்பிக்கை என்கின்றனர் சிலர். இது தனிப்பட்ட மனித நம்பிக்கையாகும்.
பொதுவாக, நம்பிக்கை என்பது தெரியாத ஒரு விஷயத்தில் எந்த அளவுக்கு நம்பகத்தன்மையுடன் நாம் காலை வைக்கிறோம் என்பதேயாகும். பொதுவாக, நம்பிக்கை என்பது முகம் தெரியாத ஒரு கூட்டம். அது எந்த விதத்தில் செயல்படும், அதன் நம்பகத்தன்மை என்ன என்பதைக் குறிப்பதாகும். ஜெர்மன் அறிஞர் ஒருவர், நம்பிக்கை என்பது நம்முடைய நியாயமான எதிர்பார்ப்பை அவர் நிறைவேற்றுவார் என்பதே ஆகும்.
நம்பிக்கை பற்றிய நூற்றுக்கணக்கான வரையறைகளைப் (definitions) படித்தால் ஒன்று தெளிவாகப் புரியும். நம்பிக்கை என்பது ஒருவரின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு நாம் எதிர்பார்க்கும்/விரும்பிய விதத்தில் இருந்து மாறாமல் இருக்கும் என்று சொல்லலாம். கொஞ்சம் மாற்றிச் சொன்னால், ஒருவரின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு நாம் எதிர்பார்க்காத/விரும்பாத அளவுக்கு இல்லாமல் இருக்கும் என்பதேயாகும் என்கிறார் ஆசிரியை.
நம்பிக்கை என்பது நம்முடைய அதிகபட்ச எதிர்பார்ப்பையும் ஆழமான பயத்தையும் சேர்த்துக் கலவையாகச் செய்த ஒன்றாகும். சிறுவர்/சிறுமிருக்கு நம்பிக்கை என்பது சுலபத்தில் கைகூடும் கலையாகும். ஏனென்றால், மிக நீண்ட காலம் பற்றியெல்லாம் அவர்கள் சிந்திப்பதில்லை. ஆனால், பெரியவர்களுக்கோ நம்பிக்கை என்பது மூளையும் மனதும் சார்ந்த ஒரு விஷயமாக இருக்கிறது. அதனாலேயே அது ஒரு குழப்பமான விஷயமாகிறது என்கிறார் ஆசிரியை.
சரி, வேறு எதையெல்லாம் நாம் நம்புகிறோம்? தற்போது நாம் வைத்திருக்கும் காரில் ஏறி முன்னே பின்னே சைடில் என எந்தத் திசையிலும் நம்மால் சுலபமாகச் செலுத்த முடியும். பிற்காலத்தில் டிரைவர் இல்லாத கார்களை நாம் வாங்குவோம். அப்போது ரோபோக்களையும் ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜன்ஸையும் நம்பி நாம் காரில் பயணிப்போம். அப்போது நாம் ரோபோக்களை நம்புவோம் இல்லையா? சரி, காரைச் சரியாக ஓட்டாமல் விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை ஒரு ரோபோ ஏற்படுத்துகிறது என்று வைத்துக்கொள்வோம். அதற்கு யார் பொறுப்பு, இன்ஜினீயர்களா அல்லது காரை உருவாக்கிய நிறுவனமா?
இதேபோலத்தான் ப்ளாக் செயின் டெக்னாலஜியிலும் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கின்றன. உலகத்தில் முதலில் தனிநபர்களிடத்தில் நம்பிக்கை, பின்னர் இரண்டாவதாக நிறுவனங்கள் மீதான நம்பிக்கை, மூன்றாவதாக ஆரம்ப நிலையில் இருக்கும் விநியோக அமைப்புகள் (distributed systems) போன்றவற்றின் மீதான நம்பிக்கை போன்றவையே தற்போதைய தேவையாக இருக்கிறது. முதல் இரண்டின் மீதான நம்பிக்கை என்பதற்கான சட்டதிட்டங்கள் தெளிவாக இருக்கிறது. மூன்றாவதாகத் தேவையான சட்டதிட்டங்கள் இனிதான் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று சொல்கிறார் ஆசிரியை.
இருப்பினும், நாம் யாரை நம்புவது என்ற கேள்விக்குப் பதில் சொல்வது ஒன்றும் சுலபமான காரியமில்லை. என்னதான் தொழில்நுட்பம் வேகமாக முன்னேற்றம் அடைந்தாலும், எப்படி எதை நம்புவது என்பதற்கான பதில்கள் இன்னமும் தெளிவாகக் கிடைக்கவில்லை. இருந்தாலும், அனைவரும் பொறுப்புடன் செயல்படுதல் மட்டுமே நம்பிக்கை என்பது வளர்வதற்கு வழிவகுக்கும் என்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியை.
நவீன காலத்தில் நம்பிக்கை குறித்த மிகச் சிறப்பான தகவல்களுடன் வெளிவந்துள்ள இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை கட்டாயம் படித்துப் பலன் பெறலாம்.
- நாணயம் டீம்

ஜன்தன் கணக்கில் ரூ.73,258 கோடி!
எல்லோருக்கும் வங்கிக் கணக்கு என்கிற நோக்கத்தில் மத்திய அரசாங்கம் தொடங்கியது தான் ஜன்தன் வங்கிக் கணக்கு. கடந்த ஆண்டு நவம்பர் தொடங்கி, கடந்த வாரம் வரை இந்தக் கணக்கில் டெபாசிட் ஆன தொகை மட்டுமே ரூ.5,928 கோடி எனச் சொல்லப் படுகிறது. மொத்தம் 30.93 கோடி ஜன்தன் கணக்குகள் இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 10-ம் தேதி வரை இந்தக் கணக்குகளில் டெபாசிட் ஆன தொகை ரூ.73,258 கோடி.
கடந்த ஒரு வருடமாக இந்தக் கணக்கில் அதிக அளவில் பணம் டெபாசிட் ஆகிவருவது, சாதாரண மனிதர்களிடம் அதிகமாகப் பணம் புழங்குவதையே காட்டுகிறது!

1.20 லட்சம் கம்பெனிகளின் பதிவு நீக்கம்!
கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைக்கப் பலரும் பல வழிமுறைகளைக் கையாள்கிறார்கள். பெயருக்கு ஏதோவொரு நிறுவனத்தைத் தொடங்கி, அதில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைக்கப்படுவதைக் கண்ட மத்திய அரசு, இந்த நிறுவனங்கள் தங்களின் கணக்கைச் சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி நடக்காத நிறுவனங்களே இப்போது பதிவு நீக்கம் செய்யப் பட்டுள்ளன. கறுப்புப் பணம் தொடர்பான கேள்வி களுக்குச் சரியான பதில் அளிக்காத 1.20 லட்சம் கம்பெனிகளின் பெயரைத் தற்போது பதிவு நீக்கம் செய்துள்ளது மத்திய அரசு. ஏற்கெனவே இரண்டு லட்சம் கம்பெனிகள் பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!