மற்ற எபிசோடுகள்
Published:Updated:

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ஸ்நாக் எக்ஸ்பெர்ட்ஸ் வேதிப்பொருள் சேர்க்கப்படாத நொறுக்குத் தீனிகள்!

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ஸ்நாக் எக்ஸ்பெர்ட்ஸ் வேதிப்பொருள் சேர்க்கப்படாத நொறுக்குத் தீனிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ஸ்நாக் எக்ஸ்பெர்ட்ஸ் வேதிப்பொருள் சேர்க்கப்படாத நொறுக்குத் தீனிகள்!

சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 9

ந்தியாவில் உணவுப்பொருள்களுக்கான சந்தையில் நொறுக்குத் தீனிகளுக்கு முக்கிய இடமுண்டு. இதற்கான சந்தை மதிப்பு மட்டும் ஆண்டுக்கு ரூ.70,000 கோடி. ஆனால், இந்த நொறுக்குத்தீனிகள் அனைத்துமே ஆரோக்கியமானதுதானா என்று கேட்டால், அதற்கு உறுதியான பதில் எதுவுமில்லை. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு தரும் வகையில் இயங்கிவருகிறது ஸ்நாக் எக்ஸ்பெர்ட்ஸ் (Snackexperts) ஸ்டார்ட் அப். இதைத் தொடங்கியவர், அருள்முருகன் மற்றும் அருண் பிரகாஷ் இருவரும்.   

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ஸ்நாக் எக்ஸ்பெர்ட்ஸ் வேதிப்பொருள் சேர்க்கப்படாத நொறுக்குத் தீனிகள்!

இன்ஸ்பிரேஷன்

“இந்தியாவில் உணவுப்பொருள்களுக்கான சந்தையைப் பொறுத்தவரை,  உணவுப்பொருளைத் தயாரித்துவிட்டு அதை வாடிக்கையாளர்களிடம் கொண்டுபோய் விற்கும் விற்பனை முறைதான் இருக்கிறது. இது உணவுப்பொருள்களின் இயல்புத் தன்மைக்கு எதிரான ஒன்று. காரணம், உணவுப்பொருள்களின் இயல்பே விரைவில் கெட்டுப் போவதுதான். ஆனால், அப்படி இருந்தால் சந்தையில் வைத்திருந்து விற்பது கடினம். எனவே, இந்தச் சவாலைச் சமாளிக்க உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள், வேதிப்பொருள்கள் மற்றும் பதப்படுத்தும் பொருள்களைச் சேர்க்கின்றனர். இது உணவின் தன்மையை மாற்றுவதோடு வாடிக்கையாளரின் நலனுக்கும் தீங்கு செய்கிறது.

இந்தப் பிரச்னையை எப்படிச் சரிசெய்யலாம் என யோசித்தோம். அப்போதுதான், பொருளைத் தயாரித்துவிட்டு அதை வாடிக்கையாளரிடம் விற்காமல், வாடிக்கையாளரிடம் பணம் வாங்கிவிட்டுப் பின்னர் பொருளைத் தயாரித்தால் என்ன என்று தோன்றியது. தற்போது இருக்கும் மார்கெட்டிங் முறையின் தலைகீழ் மாதிரி. அந்த நோக்கத்தில் நாங்கள் தொடங்கியதே ஸ்நாக் எக்ஸ்பெர்ட்ஸ்.

அடித்தளம்

வேதிப்பொருள்கள் கலக்காத சத்துள்ள உணவுகளை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. ஆனால், எல்லா உணவுப்பொருள்களையும் உடனே அப்படித் தயார் செய்துவிட முடியாது. எனவே எங்களுடைய நோக்கத்திற்கு ஏற்றவற்றை மட்டும் தேர்வு செய்ய நினைத்தோம். அப்படித்தான் நொறுக்குத் தீனிகளைத் தேர்வு செய்தோம். முறுக்கு, உலர் பழங்கள் போன்றவை இயல்பாகவே நிறைய நாள்களுக்கு நீடிக்கும். அவற்றில் வேதிப்பொருள்கள் கலக்க வேண்டிய அவசியமும் வராது. குரியர்மூலம் கொண்டுபோய் சேர்ப்பதும் எளிது. எனவே, நொறுக்குத் தீனிகளை மட்டும் இலக்காக வைத்து இணைய தளத்தைத் தொடங்கினோம்.     2015-ம் ஆண்டில் சோதனை முறையில் செய்துபார்க்க எங்கள்  இணையதளத்தில் 20 வகையான நொறுக்குத்தீனிகளை மட்டும் பட்டியலிட்டோம். சிறிய அளவில் ஒரு கிச்சன் தொடங்கி உணவுப் பொருள்களைத் தயாரிக்க ஆரம்பித்தோம். 

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ஸ்நாக் எக்ஸ்பெர்ட்ஸ் வேதிப்பொருள் சேர்க்கப்படாத நொறுக்குத் தீனிகள்!நாங்கள் இருவருமே உணவு பதப்படுத்துதல் தொடர்பான நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தோம். இந்தத் தொழிலைத் தொடங்க அந்த அனுபவம்தான் எங்களுக்குக் கைகொடுத்தது. இதெல்லாம் நாங்கள் பணியில் இருந்தபோதே ஒருபகுதியாகச் செய்தோம். சில நாள்களிலேயே நல்ல வரவேற்பு இருந்தது. இதன் மீது ஒரு நம்பிக்கையும் பிறந்தது. பின்னர் எங்கள் பணியை விட்டு விட்டு முழுமையாகக் களத்தில் இறங்கிவிட்டோம்.

சவால்கள்

பெரும்பாலான தொழில்களில் செய்யும் முதல் தவறு ஆரம்ப முதலீடுகள் முழுவதையும் உள்கட்டமைப்புகளுக்காகவே செலவிடுவது. உணவுத்துறையிலும் இதுதான் நிலை. யார் புதிதாக உணவுப்பொருள் தயாரிப்பில் இறங்கினாலும் உடனே பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேக்கரி, கிச்சன் போன்றவற்றைத் தொடங்குவார்கள். உற்பத்திக்கு இது நமக்கு நல்லதுதான் என்றாலும், இதில் நிறைய சிக்கல் களும் இருக்கின்றன. இதற்கு ஆரம்ப முதலீடு அதிகளவில் தேவைப்படும். ஏதேனும் காரணத்திற்காக உற்பத்தி குறைந்தாலோ நின்றாலோ நமக்குத்தான் நஷ்டம் ஏற்படும். இதைச் சமாளிக்க நாங்கள் அவுட்சோர்ஸிங்கைத் தேர்வு செய்தோம். உணவுப்பொருள் களின் தயாரிப்புமுறைகளை மற்ற உணவு உற்பத்தியாளர்களிடம் தந்து விடுவோம். அவர்கள் எங்களுக்குத் தயாரித்துத் தருவார்கள். இது எங்களுக்கு லாபகரமாகவும் அமைந்தது.

அடுத்த சவால், வாடிக்கையாளர் களைப் பிடிப்பது. முதலில் 800 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் என இரண்டே இரண்டு திட்டங்கள்தான் இருந்தன.  இதில் கொஞ்சம் குறைவான வாடிக்கை யாளர்களே வந்தனர். 800 ரூபாய் கொடுத்து ஒரு புதிய உணவை அவர்கள் சோதித்துப் பார்க்க விரும்பவில்லை. அதுவும் நாங்கள் முழுக்க முழுக்க ஆன்லைனில் மட்டுமே இயங்கினோம். டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் எங்கள் இணையதளம் இரண்டும்தான் எங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கு மான உறவு. எனவே, சோதனை முயற்சி யாக 150 ரூபாய்க்கு மாதிரி பெட்டி ஒன்றை உருவாக்கி அதை விநியோகம் செய்தோம். உடனே நிறைய பேர் ஆர்டர் செய்யத் தொடங்கினர். அவர் களுக்கு எங்கள் சுவை பிடித்துப்போக, மற்றவர்களுக்கும் எங்கள் உணவுகளைப் பரிந்துரைத்தனர்.

வெற்றி

இந்தச் சமயத்தில், ஒரு நிறுவனத்தின் அதிகாரி எங்களை அழைத்திருந்தார். எங்களுடைய உணவு அவருக்குப் பிடித்திருந்ததாகவும், தன் நிறுவன ஊழியர்களுக்கும் அதையே வழங்க விரும்புவதாகவும் கூறினார். இப்படி நிறுவனங்களுக்கு உணவுகளை விநியோகிப்பது குறித்து முதலில் நாங்கள் திட்டமிடவில்லை. அவர் கேட்டதும்தான் அதைத் தொடங்கி னோம். ஊழியர்களிடமும் நிர்வாகத் திடமும் அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதை மற்ற நிறுவனங்களிடமும் எடுத்துச்சொல்லி ஆர்டர்களைப் பெற்றோம். இந்த ஸ்நாக்ஸ்களைச் சாப் பிட்ட ஊழியர்கள் தங்கள் வீடுகளுக்கும் ஆர்டர் செய்ததால், எங்கள் விற்பனை இன்னும் பெருகியது. இன்று இந்தியாவில் எங்கிருந்து ஆர்டர் செய்தாலும் அவருக்கு எங்களால் ஸ்நாக்ஸ் அனுப்பமுடியும். இதுவரை சுமார் 8 லட்சம் ஸ்நாக்ஸ் பெட்டிகளை வெற்றிகரமாக அனுப்பியிருக்கிறோம்.

இலக்கு


தரமற்ற ஜங்க் ஃபுட்களுக்குப் பதிலாக ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களை மக்கள் உண்ணவேண்டும் என்றுதான் இந்தத் தொழிலில் இறங்கினோம். அதைத் தொடர்ந்து செய்வதும், நிறுவனத்தை அடுத்த கட்டத்தை நோக்கி விரிவுபடுத்துவதுமே எங்கள் இலக்கு” என்கின்றனர் நம்பிக்கையுடன்.

ஞா.சுதாகர்

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

நிறுவனங்களின் முடிவுகளைத் தீர்மானிக்கும் பிக்டேட்டா!

இன்று நிறைய ஸ்டார்ட் அப்கள் தங்கள் நிறுவனங்களில் எடுக்கும் முக்கியமான முடிவுகளை பிக்டேட்டாவின் அடிப்படையிலேயே முடிவு செய்கின்றனர். இது மிகச்சிறந்த ஓர் அணுகுமுறையும்கூட. ஸ்நாக் எக்ஸ்பெர்ட் நிறுவனத்தில் எப்படி பிக்டேட்டா பயன்பட்டது என்பது குறித்துப் பகிர்ந்துகொள்கிறார் அருள்முருகன்.

“கடந்த டிசம்பர் மாதம் எங்கள் விற்பனை திடீரென 40 சதவீதம் உயர்ந்தது. எங்களுக்கு என்ன காரணம் என்று முதலில் தெரியவில்லை. பின்னர் டேட்டாவைக்கொண்டு ஆய்வு செய்தபோது ஒரு விஷயம் தெரியவந்தது. அதாவது, நாங்கள் தீபாவளியின் போது சுமார் 75,000 இலவச மாதிரிகளை விநியோகித்திருந்தோம். அவர்கள் எல்லாரும் டிசம்பரில் எங்கள் பொருள்களை வாங்கியிருக்கிறார்கள். அதனால்தான் இந்த உயர்வு. எனவே நாங்கள் இதேபோல இன்னும் மாதிரிகளை விநியோகிக்கலாம் என முடிவு செய்தோம். பிக்டேட்டாவின் பயன் இதுதான். நிறுவனத்தின் ஒவ்வொரு தகவலையும் நம்மால் நிறுவனத்தின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்க்கமுடியும். அதற்கேற்ப சரியான முடிவுகளையும் எடுக்கமுடியும்.

எனவே, பிக்டேட்டா சேகரிப்பு என்பது ஒரு நிறுவனத்திற்கு மிகவும் முக்கியம். அதைவிடவும் முக்கியம் அவற்றை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது. அதில்தான் நம் நிறுவனத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது.”