
நாணயம் கான்க்ளேவ் : பங்குச் சந்தை... காத்திருக்கும் வாய்ப்புகள்... சிக்கல்கள்!
நாணயம் விகடன் நடத்திய ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ் மற்றும் எக்ஸ்போவில் பிசினஸ் ஜர்னலிஸ்டும், நூலாசிரியரும், ஃபவுண்டிங் ஃப்யல் நிறுவனத்தின் இணை நிறுவனருமான என்.எஸ்.ராம்நாத் பேசினார்.

“இணையம் அறிமுகமானபோது, இணையத்தால் உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் உறவாடுவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அப்படி நடக்கவில்லை. அதேபோல, உலகப் பொருளாதார வளர்ச்சியும் இரு துருவங்களாகவே இருக்கின்றன. ஒருபக்கம் பெருமுதலாளிகள் என்றால், இன்னொரு பக்கம் ஏழைகளின் எண்ணிக்கை அதிக அளவிலேயே இருக்கிறது. பெரிய பெரிய மால்கள் இருக்கும் அதே நாட்டில், நடைபாதைக் கடைகளும் இருக்கின்றன. கிராமப்புறங்கள் இன்றுவரை பெரிய மாற்றமில்லாமலேயே இருக்கின்றன. இந்த மாதிரியான முரண்பாடான வளர்ச்சிதான் உண்மையில் இருக்கிறது.

இங்கு புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் படைப்புகள் அனைத்துமே பெரும்பாலும் வெறும் 10% மக்களுக்காக மட்டுமே உருவாக்கப் பட்டதுபோல்தான் இங்கு நுகர்வும் பயன்பாடும் இருக்கிறது. அனைத்து மக்களுக்கும் பரவலாகச் சேரும்படியாக அவை இல்லை.
இத்தகைய குழப்பங்களைத்தான் டிஜிட்டலை சேஷன் வளர்ச்சியிலும் பெரும்பாலும் பார்க்க முடிகிறது. உலக நாடுகளோடு இந்தியா போட்டி போட வேண்டுமெனில், தொழில்நுட்ப வளர்ச்சி அதற்கேற்ப இருக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி, பெரும்பான்மை இந்தியர்களைச் சென்றடைந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். கல்வி, தொழில் துறை என அனைத்திலும் தொழில்நுட்ப வளர்ச்சியானது பரவலாக்கப்பட வேண்டும்
ஒரு தளம் உருவாக்கப்பட்டு, அந்தத் தளத்தின் வழியாகச் செயல்படுத்தப்படும் தொழில்நுட்ப வளர்ச்சியானது வெகுவிரைவில் மக்களைச் சென்றடையும். இதற்கு உதாரணமாக, ஊபர், ஃப்ளிப்கார்ட், யூ டியூப் போன்றவை அவரவர்களுக்கான தளங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் தங்களது வாடிக்கையாளர்களோடு தங்களை இணைத்துக் கொண்டு, அதன் மூலம் வெற்றிகரமாக வளர முடிகிறது.
ஆனால், இணையத்தில் ஹேக்கிங் என்பது பெரும் பிரச்னையாக இருக்கிறது. இணையதளங்கள் குறித்த நம்பகத்தன்மை என்பதில் சிக்கல்கள் இருக்கின்றன. ஆதார் அட்டையை அறிமுகப் படுத்திய அரசு, அதனை அனைத்துக் கணக்குகளுடன் இணைக்கும் முயற்சியில் இருக்கிறது. ஆனால், ஆதார் மூலம் தனி மனிதர்களின் அந்தரங்கம் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது. ஒருவரைப் பற்றிய தகவல் திருடப்படுகிறது என்றெல்லாம் புகார்கள் எழுகின்றன. இதற்குத் தீர்வு காண வேண்டியது அவசியம்’’ என்று பேசி முடித்தார் அவர்.

அடுத்ததாக, “இந்தியாவில் தொழில் செய்வதற்கான சூழல் மற்றும் அதிலிருக்கும் சவால்கள்’’ பற்றிப் பேசினார் பொருளாதார நிபுணர் விவேக் கவுல்.
“கிரேட்டர் நொய்டாவில் நிறைய ஸ்டார் ஹோட்டல்கள் இருக்கின்றன, ஆனால், அந்த நகரிலோ மக்கள் வசிக்காத வீடுகள் பல இருக்கின்றன. ஆக, மக்கள் அதிகம் வசிக்காத நகரில் நட்சத்திர ஹோட்டல்கள் அதிகம் இருப்பது சற்று விசித்திரமானது.
அதுபோலவே, இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கின்றன. உலக வங்கி, ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கணக்கிடுவதில், ஒரு நாட்டிற்கு ஒரு நகரை கணக்கில் எடுத்துக்கொண்டு கணக்கிடுகிறது. ஆனால், இந்தியாவில் டெல்லி, மும்பை நகரங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதன் மூலம் அளவீடு செய்கிறது. இந்தியா போன்ற பெருமளவு கிராமங்களை உள்ளடக்கிய பெரிய நாட்டில், இப்படிக் கணக்கிடுவது சரியாக இருக்காது.
இங்கு விவசாய நிலப் பயன்பாடு தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது. வேலைவாய்ப்பு, வறட்சி போன்ற பல்வேறு காரணங்களால் கிராமங்களிலிருந்து நகர்ந்து, நகரங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆனால், நம் நாட்டில் தொழில் செய்வதற்கான சூழல் இன்னும் அவ்வளவாக சிறப்படையவில்லை. தொழில் செய்வதற்கு முக்கியமான தேவைகளாக இருக்கும் நிலம், மின்சாரம் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவை சவாலாகவே இருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத் தின் வளர்ச்சியும் இன்னொரு மாநிலத்திலிருந்து மாறுபட்டிருக் கிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு மில்லியன் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லையெனில், அது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தக் காரணமாகிவிடும். குஜராத், தமிழ்நாடு, தெலங்கானா போன்ற மாநிலங்களில் தொழிலாளர் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்தியாவில் பல தொழில் திறமைகளைக்கொண்ட மக்கள் இருப்பதால், அவர்கள் அனைவருக்கும் ஏற்றவாறு தொழில்கள் தொடங்கவோ வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார் அவர்.
இந்த ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவின் இறுதியில், ‘இந்திய பங்குச் சந்தை மற்றும் உலகச் சந்தைகளில் 2018-ல் உள்ள வாய்ப்பு களையும் சிக்கல்களையும் குறித்துப் பேசினார் சர்வதேச பொருளாதார நிபுணர் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன்.

“இதற்குமுன் 2016-ல் நடந்த கான்க்ளேவ் நிகழ்ச்சியில், 2017 பங்குச் சந்தைக்குச் சாதகமான வருடமாக இருக்காது என்று கூறியிருந்தேன். ஆனால் 2017-ல் பங்குச் சந்தைப் பல புதிய உச்சங்களை அடைந்து, பிரமாத மாக ஏற்றம் கண்டது. உண்மையில் 2017-ல், பங்குச் சந்தையின் வளர்ச்சிக்கு நிகரான வளர்ச்சியைப் பொருளாதாரம் அடையவில்லை என்பதே உண்மை.
2017-ம் ஆண்டில், சர்வதேச பொருளாதாரம் கண்ட வளர்ச்சி பெரும்பாலும் செயற்கையான தாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் சந்தைகள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளன. இந்த வளர்ச்சி நிலையற்றதாகவே தெரிகிறது. எனவே, 2018-ல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பங்குச் சந்தைப் பற்றி யார் பேசி னாலும் இந்தியாவுக்குப் பிரகாசமாக இருக்கிறது என்பார்கள். ஆனால், சில உண்மைகளை நாம் கவனிக்க வேண்டும். அமெரிக்கா, தனது பொருளாதாரத்தைச் சீரமைக்க வட்டி விகிதத்தை அதிகரித்தது. ஆனால், மூன்று ஆண்டுகள் கழிந்தபிறகும் பணப்புழக்கம் நன்றாகவே இருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி நினைத்த மாற்றம் நிகழவில்லை. இதனால், இனி என்ன மாதிரியான முடிவுகளை அமெரிக்க மத்திய வங்கி எடுக்கும் என்று தெரியாது, அதன் காரணமாக சந்தையில் என்ன மாற்றம் நிகழும் என்பதும் தெரியாது.
அமெரிக்காவின் எஸ் & பி நிறுவனப் பங்குகள், கடந்த 30 வருடங்களில் எந்தவொரு மாதத்திலும் இறக்கத்தைச் சந்திக்காமல் இருந்தது 2017-ல்தான். அமெரிக்காவின் நிதிநிலை 2017-ல் நல்ல நிலையில் இருப்பதுபோல் தெரிந்ததே இதற்குக் காரணம். அமெரிக்கப் பங்குச் சந்தையின் மார்க்கெட் கேபிட்டலை சேஷன் மற்றும் ஜி.டி.பி இரண்டுக்குமான விகிதம் அதிகமாக இருக்கும் போதெல்லாம் அமெரிக்கப் பொருளாதாரம் சரிவைச் சந்தித்தி ருக்கிறது. அந்த வகையில் தற்போதைய விகிதம் 2000 மற்றும் 2008-ல் இருந்ததைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. மேலும், அமெரிக்க மக்கள் தங்கள் முதலீடுகளில் பெரும் பகுதியைப் பங்குச் சந்தையில் செய்துள்ளனர். பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீடுகள் 2000-ல் இருந்த உச்சகட்ட நிலையை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த முதலீடுகள் வெளியேறும்போது, சந்தை யானது பெரும் சரிவைச் சந்திக்கும்.
மேலும், சீனப் பொருளாதாரமும் 2017-ல் நல்ல வளர்ச்சியைக் கண்டது. சீனாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதமானது 6.8 என்ற விகிதத்தில் உள்ளது. ஆனால், சீனாவின் இந்த வளர்ச்சியானது போலியாக உருவாக்கப்பட்டது. பெருமளவில் கடன் பெறப்பட்டிருப் பதன் மூலம் இந்த வளர்ச்சி உருவாக்கப் பட்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் சீனாவின் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் உலக நாடுகளை நேரடியாகப் பாதிக்கும்.
அமெரிக்கா, சீனா 2017-ல் அடைந்த வளர்ச்சியானது நிலையற்றதாக இருப்பதால், இதை வைத்து இந்தியப் பங்குச் சந்தை வளர்ச்சியடையும் என்று சொல்ல முடியாது. மேலும், அரசும், மக்களும் பணத்தை முதலீடு செய்கிறார் களே தவிர, தனியார் நிறுவனங் கள் பெரிய அளவில் முதலீடு செய்யவில்லை. இதுவும் நம் சந்தையில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கி இருக்கிறது. எனவே, எந்தவொரு முதலீட்டு முடிவையும் எடுக்கும்முன் கவனமாக இருக்க வேண்டும்’’ என்றார் டாக்டர் அனந்த நாகேஸ்வரன்.
நாணயம் ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ் இரண்டு நாள் கருத்தரங்கில் பேசிய நிபுணர்கள் பேசிய விவரங்கள் இத்துடன் முடிந்தன!
ஜெ.சரவணன்
படங்கள் : பா.காளிமுத்து